﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>

<author>இரா.நாகசாமி</author>
<book>சொல்மாலை</book>

<title><line>கயிலாய நாதனையே காணலாமே!</line></title>

<para>
<text>
அப்பர் பெருமான் ஒரு பதிகத்தில், பதினொரு பாடல்களிலும் கயிலாய நாதனையே காணலாமே என்று கூறுகிறார். இப்பதிகத்தை "க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம்" என்று அழைப்பர். அதாவது பல சிவக்ஷேத்திரங்களைத் தொகுத்து இவ்வாறு இறுதியில் முடிக்கிறார். இருநூறுக்கும் மேற்பட்ட சிவ க்ஷேத்திரங்கள் இவ்வாறு குறிக்கப்படுகின்றன. இறுதியில் கூறும்போது எந்த சிவத்தலமாயினும் பெருங்கோயிலானாலும் சரி, அங்கு சென்றால் கயிலாயநாதனைக் காணலாகும் என்று பாடுகிறார். "கடல் நாகைக் காரோணத்தும் கயிலாய நாதனையே காணலாமே" என்பதிலிருந்து இப்பாட்டில் குறிக்கப்பட்டிருக்கும் எந்த ஊருக்குச் சென்று அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றால் அங்கு கயிலாய நாதனைக் காணலாம் என்பது பொருள்.
</text>
</para>

<para>
<text>
இந்தியாவின் வட எல்லையாக, மிக உயர்ந்த மலையாகத் திகழ்வது கயிலைமலை. அதன் உச்சியில் பரமன் உறையும் இடம் கயிலாயம். இது நாம் அனைவரும் அறிந்ததே. ஆதலின்தான் அங்கு மலை உச்சி செல்வதை "கயிலை யாத்திரை" என்கிறோம். தமிழ் நாட்டில் எங்கோ ஒரு சிற்றூரில் உள்ள கோயிலுக்குப் போனால் அங்கு கயிலாய நாதனை எவ்வாறு காணமுடியும்? என்று ஐயம் எழலாம். என்ன? அப்பர் பெருமான் இவ்வாறு சொல்லிவிட்டாரே என்று கூட எண்ணத்தோன்றும்!
</text>
</para>

<para>
<text>
நமது இந்து சமயத்தில் தெய்வ உருவங்களை இரண்டு வகையாக மூர்த்தங்களாக உருவகிப்பது மரபு. ஒன்று பிம்ப மூர்த்தி என்பது. சிலையாலோ, உலோகத்தாலோ, மரத்தாலோ சிற்பமாக வடித்து அமைப்பது பிம்பமூர்த்தி. இவற்றைத்தான் கோயில்களில் ஸ்தாபிக்கிறோம். இவை சிற்ப வல்லுநர்களாலே வடித்து அமைக்கப்படுபவை. இரண்டாவது மந்திரங்களாலே உருவகித்து வணங்கப்படுவது. இதை மந்திரமூர்த்தி என்பர். இவற்றை குருக்கள் மந்திரங்கள் கூறி பிரதிஷ்டை செய்து பூசிப்பர். சிற்பங்களைக் கருப்பகிருஹத்தில் பீடத்தில் பொருத்தி நிறுத்துவதை ஸ்தாபனம் என்றும், சிற்பங்களுக்கு மந்திரங்களால், தெய்வ உரு வடித்து உருவகிப்பதை "பிரதிஷ்டை செய்தல்"  என்றும் கூறுவர். 
</text>
</para>

<para>
<text>
கும்பாபிஷேகத்தின்போது குருக்கள் பிரதிஷ்டை செய்கிறார்கள். இவ்வாறு செய்யும் பிரதிஷ்டையில், சைவசித்தாந்த தத்துவங்கள் அனைத்துமே உருவக வடிவம் பெறுகின்றன. சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்போது அத்தனை தத்துவங்களும் மந்திரத்தால் ஆவாஹணம் செய்யப்படுகின்றன. இவற்றை ஆகம நூல்களும் பத்ததி நூல்களும் கூறுகின்றன. 36 தத்துவங்கள் இவ்வாறு மந்திர உருவமாக அமைக்கப்படுகின்றன. இதற்கு "மந்திரந்யாஸம்" என்றும் பெயர். தியானத்தினால் பல தத்துவங்களும் சிவலிங்கத்தில் இருப்பதாக பாவித்தல்.
</text>
</para>

<para>
<text>
அகோரசிவாசாரியார் என்ற பெரியவர், இரண்டாவது இராஜராஜசோழன் காலத்தில் கி.பி.1150-ல் வாழ்ந்தவர். அவர் ஒரு "பத்ததி" எழுதியிருக்கிறார். அதுதான் பெரும்பாலான சிவாலயங்களில் இன்றும் கும்பாபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. அதில் சிவலிங்கத்தை எவ்வாறு பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். அது மிகவும் விரிவான பகுதி. அதன்படி ஆகாச தத்துவத்தில் "கோகர்ணம், மஹாபலம், அவிமுக்தம் (காசி) ருத்ரகோடி" முதலிய இடங்களை தியானிக்க வேண்டும். வாயு தத்துவத்தில் "பீமேச்சுரம், மாஹேந்திரம், விமலேச்சுரம், நகுளேச்சுரம், குருக்க்ஷேத்திரம், கயை" ஆகிய தலங்களை தியானிக்க வேண்டும். தீயாகிய தத்துவத்தில் "கேதாரம், மகாகாளம், மத்யமேச்சுரம், ஜல்பேச்சரம் " ஆகியவற்றையும் மற்றும் "அரிச்சந்திரம், லகுளீச்சுரம்" முதலிய தலங்களையும் ஆவாஹிக்கவேண்டும் என்று கூறுகிறார். 
</text>
</para>

<para>
<text>
ஆவாஹனம் என்றால் தியானத்தால். இங்கு எழுந்தருள வேண்டுதல். சுருங்கச் சொன்னால், நம் ஊரில் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்யும் போது, எத்தனை புண்ணிய சிவக்ஷேத்திரங்கள் உண்டோ  அவை அனைத்தையும் இங்கேயே இருப்பதாக தியானித்தல்தான் பிரதிஷ்டையின் தத்துவம்.
</text>
</para>

<para>
<text>
இந்த தத்துவங்கள் எல்லாம் அப்பர் காலத்தில் இருந்தனவா? அப்பர் இந்த கோயில்களை எல்லாம் கூறியிருக்கிறாரா? என்று ஐயம் தோன்றலாம்.
</text>
</para>

<para>
<text>
தத்துவங்களைப் பற்றி அப்பர் பெருமான் பல இடங்களில் பாடியுள்ளார். அதேபோல் கயிலாயமலை, காரோணம், கந்தமாதனம், மாகாளம் முதலிய தலங்களையும் பல இடத்தில் பாடுகிறார். கீழ்வரும் அவரது பாடலைப் பாருங்கள்.
</text>
</para>

<para>
<verse>
<line>"நாடகம் ஆடிடும் நந்திகேசுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கான</line>
<line>கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்</line>
<line>ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம் சித்திச்சுரம் அந்தண் கானல்</line>
<line>ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்று ஏத்தி இறைவனுறை சுரம் பலவும் ஏத்துவோமே."</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பாடுகிறார். எங்கு சிவபெருமான் உறைகிறாரோ அதுதான் கயிலாயம். எல்லாத் தலங்களும் அதுவே. ஆதலின் உங்கள் ஊரிலேயே, சிற்றூராயினும் சரி, பேரூராயினும் சரி, சிவாலயம் இருக்குமானால் அங்கு கயிலாய நாதன் திகழ்கிறார் என்னும் மகத்தான சிவநெறியைக் கூறுகிறார் அப்பர் பெருமான். எவ்வூராயினும் அங்கு க்ஷேத்திரக் கோவையைப் படியுங்கள். அத்தனை புண்ணியச் க்ஷேத்திரமும் இங்கேயே உள்ளன. கயிலாய நாதனைக் காணலாம் என்பதுதான் நமது சிறப்பு.
</text>
</para>

</article>
