﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>

<author>இரா.நாகசாமி</author>
<book>சொல்மாலை</book>

<title><line>புவனம் யாவினுக்கும் கண்ணாவான்</line></title>

<para>
<text>
அண்மைக்காலம்வரையில் சுமர் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகக் கோயில்களில் சிறப்பாக மஹாபாரதம் வாசிக்கப்பட்டு வந்தது. ஊர்களில் மஹாபாரதம் வாசிக்க தனி மான்யங்களே இருந்தன. மஹாபாரதத்தின் தலைவர்களாகத் திகழும் கண்ணனும், அர்ச்சுனனும் பசுபதியைப் போற்றி பெரும் பேறு பெற்றனர், என்று மஹாபாரதம் கூறும். பசுபதியை வனங்குவோர் பாசுபதர்கள். கண்ணனும் அர்ச்சுனனும் பாசுபதர்களிலே மிகச்சிறந்தோர்களாக மஹாபாரதமும் புராணங்களும் கூறுகின்றன.
</text>
</para>

<para>
<text>
தமிழில் மஹபாரதத்தை வடித்தவர்களில் வில்லிப்புத்தூரார் சிறந்தவர். அவரது பாரதத்தில் அர்ச்சுனன் தவம் புரிந்தது பாசுபதாஸ்திரம் பெற்றது ஒரு சருக்கத்தில் இடம் பெறுகிறது. அங்கு அர்ச்சுனன் பாசுபத விரதம் மேற்கொண்டு கடும் தவம் மேற்கொண்டதும், சிவபெருமான் கிராதனாக தோன்றி போரிட்டு இறுதியில் அவனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுத்ததும் இடம் பெறுகின்றன.
</text>
</para>

<para>
<text>
அவ்விடத்தில் இருந்து பாடல்களைப் பார்ப்போம். அர்ச்சுனன் அகோரத்தவம் புரிகிறான். அவனை அசையாத கல் எனக்கருதி யானைகள் தங்கள் உடலை அவன் மீது தேய்த்துக் கொள்கின்றனவாம்.அவனைச் சுற்றி கரையான் புற்றுகள் தோன்றுகின்றன. அவற்றில் பாம்புகள் ஊர்கின்றன. இது ஒரு மரம் என இவனைச் சுற்றி கொடிகள் வளர்கின்றன. வெய்யில் மழை பனி என்று பாராது இவன் புரியும் தவத்திற்க்கு ஈடாக வேறு யாருடைய தவத்தைக் கூறமுடியும் என்கிறார் வில்லிப்புத்தூரார்.
</text>
</para>

<para>
<verse>
<line>கருந்துரு கல் எனக்கருதி பிடியும் கன்றும்</line>
<line>	களிற்றினமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி</line> 
<line>பொருந்து முழை புற்றது எனப் புயங்கம் ஊர</line>
<line>	பூங்கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற</line>
<line>பரிந்து வெயில் நாள் மழை நாள் பனிநாள் என்று</line>
<line>	பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில்</line>
<line>அருந்தவம் புரிந்தோரில் இவனைப்போல் மற்று</line>
<line>	ஆர் புரிந்தார் சிவ சிவ என்றறியவாறே.</line>
</verse>
</para>

<para>
<text>
சிவனை நோக்கி புரிந்த தவமல்லவா? பாடலை சிவசிவ என்று முடித்துள்ள பாங்கே அழகு.
</text>
</para>

<para>
<text>
அர்ச்சுனனின் கொடும் தவத்தை கண்ட சூரியன் கோடையிலும் நிலா எனக் குளிர்ந்து விளங்கினனாம். ஏன் தெரியுமா. சூரியன் உலகு முழுவதற்கும் கண்போன்றவன். அவனது கண் நோக்கம் என்றால் அது கருணை அன்றோ என்கிறார் வில்லிப்புத்தூரார்.
</text>
</para>

<para>
<verse>
<line>"பண்ணுக்கு வம்பரித்தேர் ஆதபனும் பணித்து பசுபதியை நோக்கி</line>
<line>மண்ணுக்கு தவஞ்செய்யும் தனஞ்செயற்கு கோடையிலும் மதியம் போன்றான்</line>
<line>எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ</line>
<line>கண்ணுக்கு புணை மணிப் பூண் கண்ணோட்டம் என்பதெல்லாம் கருணை அன்றோ"</line>
</verse>
</para>

<para>
<text>
இங்கு இரண்டு கருத்துக்கள் காணுதல் வேண்டும். சூரியன் உலகங்களுக்கு எல்லாம் கண் போன்றவன் என்பது ஒன்று. இரண்டாவது அவன் கருணையே வடிவானவன் என்பது. சூரியனை ஸவிதா என்று வணங்குகிறோம். அவன் தேவர்களையும் மனிதர்களையும் விழிப்புறச்செய்கிறான். பல் தொழில்களிலும் ஈடுபடச் செய்கிறான். அவனே இவ்வுலகம் முழுவதையும் கண்ணோக்கால் அருள் பாலிப்பவன் என்பது வேதம்.
</text>
</para>

<para>
<verse>
<line>"ஆஸத்யேன ரஜஸா வர்த்தமானோ நிவேஸயன் </line>
<line>அம்ருதம் மர்த்யஞ்ச ஹிரண்யயேன</line>
<line>ஸவிதா ரதேன ஆ தெவொ யாதி புவனானி பஸ்யன் "</line>
</verse>
</para>

<para>
<text>
புவனங்களைப் பார்த்துக்கொண்டு ஸவிதா பொன்மயமான தேரில் வருகிறான் என்கிறது வேதம். "புவனானி பஸ்யன்" என்ற வேதத்தொடரை வில்லிபுத்தூராரும் "புவனம் யாவினுக்கும் கண் ஆவான்" என்று கொடுத்துள்ளதைக் காண்கிறோம். சூரிய பகவானுடைய பார்வை கருணையே வடிவானது என்பது இரண்டாவது கருத்தல்லவா. வேதங்களிலும், மஹபாரதத்திலும் புராணங்களிலும் "கருணை வடிவு" என்பது சிவபெருமானே என்று காணலாம். ஆதலின் இங்கு சூரியன் சிவபெருமானே என்பது கருத்து.
</text>
</para>

<para>
<text>
சைவ மரபுக்கு இன்றியமையாத வேதப்பகுதி ஸ்ரீருத்திரம் என்பதாம். ருத்திரம் சிவ பெருமானைப்ப் போற்றுகிறது. அதில் ஏழாவது, எட்டாவது மந்திரங்கள் சூரியனைப் போற்றும் முகத்தால் சிவபெருமானைப் போற்றுகின்றன.
</text>
</para>

<para>
<verse>
<line>"அசெள யஹ தாம்ரஹ அருண உத பப்ருஹ் சுமங்கலஹ"</line>
</verse>
</para>

<para>
<text>
என்று அது சூரியனைப் போற்றுகிறது. ஸ்ரீ ருத்ரத்துக்கு உரை எழுதிய பட்டபாஸ்கரர்,  "அகில கர்ம சாக்ஷி பகவான் எல்லாச் செயல்களையும் காண்பவனாகிய சூரியனே சிவபெருமான். அவரைக் குறித்து பாடப்பெற்றது இத்தோத்திரம் என்று கூறுகிறார். அனைத்துலகுக்கும் கண்ணாக விளங்குபவன் சூரியன். அவனே கருணை வடிவானவன். அவனே சிவபெருமான் என்ற வேதக்கருத்தையே வில்லிபுத்தூராரும் தமது பாடலில் கொடுத்துள்ளார். அதுவும் பாசுபதம் மேற்கொண்ட அர்ச்சுனனுக்கு கருணை வடிவாகிய சிவபெருமான் அருள்பாலிக்க தோன்றுமிடத்து இப்பாடல் உள்ளது.
</text>
</para>

<para>
<text>
இங்கு மற்றொன்றும் குறிக்கலாம். திருவள்ளுவர் திருக்குறளில் "கண்ணோட்டம்" என ஓர் அத்தியாயமே வைத்துள்ளார். "கண்ணோட்டம்" என்பதற்கு உரை எழுதிய மனக்குடவரும் பரிப்பெருமாளும் "கண்ணோட்டமாவது கண்ணால் காணப்பட்டாரை அருள் செய்தல்" என்று குறிப்பர். பரிதியார் தமது உரையில் "கண்ணோட்டமாவது அரசர்க்கு கிருபையாகிய பார்வை வேண்டும் என்றது" எனக் குறிப்பார். "அருள்", "கிருபை" என்னும் பொருள்களில் கண்ணோட்டம் என்ற சொல் திருக்குறளில் வந்துள்ளதைக் காண்கிறோம்.
</text>
</para>

<para>
<text>
அது மட்டுமா? கீழ் வரும் குறளை காணுங்கள். 
</text>
</para>

<para>
<verse>
<line>"கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்</line>
<line>புண் என்று உணரப்படும்."</line>
</verse>
</para>

<para>
<text>
என்பது அக்குறள். 
</text>
</para>

<para>
<text>
கண்ணுக்கு அணிகலன் என்கிறதல்லவா குறள்? இதையே தான் வில்லிப்புத்தூரார் சூரியனைப்பாடிய செய்யுளில் "கண்ணுக்கு புனை மணிப்பூண் கண்ணோட்டம்" என்று கூறியுள்ளா. குறளுக்கு விளக்கம் கூறுவார் போலே அது "கருணை" அன்றோ எனக்குறிக்கிறார். சூரியன் புவனங்களுக்கு எல்லம் கண் ஆவான். அவன் புவனங்களை கண்ணோட்டம் புரிகிறான். அவன் சிவனே அன்றி வேறில்லை. அதுவே அவன் அருளும் கருணை எனக் கூறுகிறார். வேதமாகிய நான்மறையும் குறளாகிய தமிழ் வேதமும் எதைக்கூறினவோ அதே கருத்துக்களையே தமது பாரதத்துக் கருப்பொருளாக கொள்கிறார் வில்லிப்புத்தூரர். 
</text>
</para>

</article>
