﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>பொய்யிலி மாலை</book>

<title><line>பிள்ளையார் நாட்டிய ஜயக்கொடி</line></title>

<para>
<text>
திருஞானம்  பெற்ற பிள்ளையாகிய  திருஞானசம்பந்தரின்  புகழாகிய செயத்தம்பத்தைத்தான்  இக்கட்டுரை ஆய்கிறது. "சயத்தம்பம்" என்றால் "வெற்றித் தூண்" என்பது பொருள். வெற்றிக்கொடியை ஏந்தி நிற்கும் இத்தூண் ஈடிலா வெற்றியின் சின்னமாகத் திகழ்வது. அவ்வாறு ஞானசம்பந்தப்பிள்ளையின் புகழ்ச் செயத்தம்பமாகத் திகழ்ந்த தூணை சேக்கிழார் குறித்துள்ளார்.  
</text>
</para>

<para>
<text>
சம்பந்தர் மங்கையர்க்கரசியின் அழைப்பை ஏற்று மதுரை வருகிறார். அங்கு சமணம் மேலோங்கி நிற்கிறது. சம்பந்தர் திருநீறு பூசி பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்க்கிறார்.. சமணர்கள் அவரை விடுவதாயில்லை. அனல் வாதத்திற்கும், புனல் வாதத்திற்கும் இழுக்கின்றனர். இறுதியாக நடைபெற்றது புனல் வாதம். இதில் தோற்றால் என்ன செய்வது என்று குலச்சிறையார் கேட்டார். பொறாமை  தம் கண்களை மறைக்க, சமணர்     
</text>
</para>

<para>
<text>
"தோற்றோமாகில் இவ்வேந்தன் கழுவில் ஏற்றுவான்"
</text>
</para>

<para>
<text>
என்று தம் வாயினாலேயே சொன்னார்கள்.
</text>
</para>

<para>
<verse>
<line>அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று</line>
<line>பொங்கிய வெகுளி  தூர பொறாமை காரணமேயாக</line> 
<line>தங்கள் வாய்  சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோமாகில்</line>  
<line>வெங்கழு ஏற்றுவான் இவ்வேந்தனே என்று சொன்னார்.</line>
</verse>
</para>

<para>
<text>
ஞானசம்பந்தர் "எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்" என்று எழுதிய ஏடு புனலை எதிர்த்துச் சென்றது. சமணரது ஏடு அடித்துச்செல்லப்பட்டது. சமணர் தோற்றனர். அப்பொழுது சமணர் தங்கள் வாயாலேயே முன்னர் கூறியபடி அவர்களை கழுவில் ஏற்றிட பாண்டியன் மன்னன் சொன்னான். அதைகேட்டு சம்பந்தர் மன்னனை தடுத்து அவ்வாறு நடவாதிருக்க  ஏதும் சொல்லவில்லை. ஏன்? சேக்கிழாரே கூறுகிறார். சைவர் இருந்த மடத்துக்கு முன்னர் சமணர் தீ மூட்டினர். அதற்காக  அரசன் இடும் தண்டனை இது என்று வாளாய் இருந்துவிட்டாராம். 
</text>
</para>

<para>
<verse>
<line>புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக்கேட்டும்</line>
<line>இகலிலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு</line> 
<line>தகவிலார் சமணர் செய்த தன்மையால்  சாலும் என்றே</line>
<line>மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாது இருந்த வேலை</line>
</verse>
</para>

<para>
<text>
என்பது சேக்கிழார் வாக்கு.
</text>
</para>

<para>
<text>
நான் முன்னர் குறிப்பிட்டிருந்த கட்டுரைகளின் வாயிலாக சேக்கிழாரின் பெரியபுராணம், சம்ஸ்கிருத மொழியில் 300 ஆண்டுகளுக்கும் முன்னமேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது  என்றும் அதற்கு "உபமன்யு பக்த விலாசம்" என்றும், அம்மொழிபெயர்ப்பு  சேக்கிழாரின் பாடலுக்குப் பாடல் மொழிபெயர்ப்பு என்பதையும், அதன் வாயிலாக பெரியபுராணத்தின்  நுணுக்கமான பல செய்திகளுக்கு விளக்கம் கிடைக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வகையில் சம்பந்தர் சமணர்களை வாதில் வென்றது, சமணர் கழுவேறியதுமான இடத்தில் உள்ள பல நுணுக்கங்களூக்கு தெளிவான விடைகள் கிடைக்கின்றன. முதலில் சமணர்கள் "தோற்றால் எங்களை இவ்வேந்தன் கழுவில் ஏற்றுவான்" என்றார்களல்லவா? அதை உபமன்யு பக்த விலாசம் பின்வருமாறு கூறுகிறது.
</text>
</para>

<para>
<verse>
<line>நிச்சித்ய வாத: க்ரியதாம் இதி அமாத்ய: அவதத் ச தான்</line> 
<line>அத உக்ரா: ஆக்ரஹவ்யக்ரா:  ஆகதா: ப்ராஹு: ஆர்ஹதா:</line>
<line>அஸ்மான் பராஜிதான் அத்ர சூலம் ஆரோபயது இதி</line>
</verse>
</para>

<para>
<text>
நிச்சித்ய = நிச்சயம் செய்துவிட்டு,  வாத: க்ரியதாம் = வாதம் செய்யப்படட்டும், இதி = என்று, அமாத்ய: = அமைச்சன்   தான் = அவர்களை, அவதத் ச = கூறினார். அத: = பிறகு, உக்ரா = ஆவேசம் கொண்டவர்களாக, ஆக்ரஹவ்யக்ராஹ = பொறாமையால் பீடிக்கப்பட்டவர்களாக, ஆர்ஹதா: = சமணர்கள், ஆகதா = வந்தவர்கள், ப்ராஹு: = கூறினார்கள். அத்ர = இங்கு, பராஜிதான் = தோற்கடிக்கப்பட்ட, [தோற்றோமாகில்] அஸ்மான் = எங்களை, சூலம் ஆரோபயது = கழுவில் ஏற்றட்டும், இதி = என்று [கூறினார்கள்.]
</text>
</para>

<para>
<text>
சமணர்கள் - பொறாமையினால் "நாங்கள் தோற்றால் கழுவில் ஏற்றட்டும்" என்று தாமே கூறினார்கள் என்பதை உ.ப.வி உறுதி செய்கிறது. அவர்கள் தோற்றதும் அரசன் மந்திரியிடம் பின்வருமாறு கூறினான் என்று உ.ப.வி கூறுகிறது
</text>
</para>

<para>
<verse>
<line>சூலேஷு கீலய ஸ்தூலேஷு இதி ராஜா ஆஹ மந்திரிணம்</line>
<line>மாஹேஸ்வர மடாக்ஷிப்த ஜ்வலநாநாம்  துராத்மநாம்</line>
</verse>
</para>

<para>
<text>
ஸ்தூலேஷு கீலேஷு = நீண்ட கழுவில், கீலய = ஏற்றவும், இதி = என்று, ராஜா = அரசன், மந்திரினம் = மந்திரியிடம், ஆஹ = கூறினான். மாஹேஸ்வர மடாக்ஷிப்த = சைவர்கள் மடத்தில், ஜ்வலநாநாம் = தீவைத்தவர்களாகிய, துராத்மாநாம் = துஷ்டர்களை [ஏற்றவும்], என்று அரசன் கூறினான்.  அப்பொழுது சம்பந்தர் யாதும் சொல்லவில்லை என்பதை      
</text>
</para>

<para>
<verse>
<line>சூலாரோஹண கர்மாபி: சிக்ஷாம் ஸேஹே ஸ தேசிகம்</line> 
<line>மஹாபராதீனாம் பும்ஸாம் ராக்ஞா தந் நிஷ்கிரியா கிரியா</line> 
<line>தேஷாம் ஸ்ரேய்ஸ்கரீ இதி ஏவ தயாளு: ஸ: அந்வமந்யத</line>
</verse>
</para>

<para>
<text>
ஸ: தேசிக: அந்த ஞானப்பிள்ளை, சூலாரோஹண கர்மாபி = கழுவேற்றும் செயலைக்கூட  ஸேஹே = பொறுத்துக் கொண்டார். மஹா அபராதினாம் = பெருந்தீங்கிழைக்கும், பும்சாம் = மனிதர்களை, ராக்ஞா = அரசனால், நிஷ்கிரியா = மரணதண்டனை அளிப்பது, [இல்லாமல் செய்வது] கிரியா = உரிய செயலாகும்,[ஆட்சியாகும்], [இது] தேஷாம் = அந்த அமணர்களுக்கு, ஸ்ரேயஸ்கரீ ஏவ = நன்மையே பயக்குமென்று, தயாளு ஸ: = கருணையே வடிவான சம்பந்தர் அந்வமந்யத = எண்ணிணார்.   
</text>
</para>

<para>
<text>
பெருங்குற்றம் புரிவோர் பெரும்பாவம் செய்தவர்களாவார்கள். அரசனால் கொடுக்கப்படும் தண்டனையை ஏற்பதால் அவர்கள் பாவம் கழிகிறது. அது மரணதண்டனையே ஆனாலும் அறத்தின்பாற்பட்டது. ஆதலின் அது அவர்களைத் தூய்மையாக்கி, மறுமைக்கு நல்வழி காட்டுகிறது. அவர்கள் வீடுபேறு பெறும் வாய்ப்பும் பெறுகிறார்கள் என்பது நமது அறம். நம்பிக்கையும் கூட. அதைத்தான் உ.ப.வி. காட்டுகிறது. சைவ மடத்துக்குத் தீ வைத்ததால், அவர்கள் தண்டனக்குரியவர்கள் என்று அரசன் ஆணையிட்டான். [வாதத்தில் தோற்கலாம், ஜெயிக்கலாம். அதற்காக அளித்த தண்டனை அல்ல.]  உயிரோடு சைவர்களை  மடத்தே கொளுத்தச் செய்த பெருங்குற்றத்திற்காகவே  அமணர்கள் தண்டனைக்கு உரியவர்களானார்கள். 
</text>
</para>

<para>
<text>
அமணர்கள் கழுவில் ஏற அரசன் சொன்னதும், சம்பந்தர் ஏன் வாளாவிருந்தார் என்பதன் நுணுக்கத்தையும், உ.ப.வி. கூறுகிறது. பெருங்குற்றத்திற்கு அரசன் தண்டனை அளிப்பது அறமே. அது அமணர்களையே தூய்மையாக்கி உய்விக்கும் என்ற கருணையில்தான்  சம்பந்தர் வாளாவிருந்தார்  என்கிறது உ.ப.விலாசம். அமணர் மீது அப்போது காழ்ப்புணர்ச்சி சம்பந்தருக்குத் தோன்றவில்லை. அவர்கள் உய்யவேண்டும் என்னும் கருணை உள்ளமே மேலோங்கியிருந்தது என்ற நுண்ணிய செய்தியை உ.ப.வி. வெளிப்படையாகக் கூறியுள்ளது.             
</text>
</para>

<para>
<text>
இந்நிலையில் சமணர்கள் ஏறிய கழுமரம் தான் சம்பந்தர் ஜெயக்கொடி என்கிறார் சேக்கிழார்.	
</text>
</para>

<para>
<verse>
<line>தோற்றவர் கழுவில் ஏறி தோற்றிடத் தோற்றும் தம்பம்</line>
<line>ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்ந்த தம்பம்</line>
<line>வேற்றொரு தெய்வமின்மை விளக்கிய பதாகைத் தம்பம்</line>
<line>போற்றுசீர் பிள்ளையார்தம் புகழ்ச்சயத் தம்பமாகும்</line> 
</verse>
</para>

<para>
<text>
இதை உபமன்யுபக்தவிலாசம் கூறுமிடத்து குலச்சிறையார் அமணர் எண்ணாயிரவரும் கழுவில் ஏற முறை செய்தார். அவை சம்பந்தரின் ஜயத்தம்பம் போல் தோன்றின.
</text>
</para>

<para>
<verse>
<line>குரோ: ஜயஸ்தம்ப நிபெஷு சக்ரே</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பெரியபுராணப்பாடலை அப்படியே குறிப்பதைக் காண்கிறோம். இதுகாறும் அச்சாகியுள்ள பெரிய புராணத்தில் இல்லாத ஒரு செய்யுள் உபமன்யுவிலாசத்தில் காணப்படுகிறது/ அவ்வாறு கழுவில் ஏற்றப்படும்போது அவர்களில் சிலர் திருநீறு தரித்து தப்பினர்.மேலும் சிலர் சிவநாமத்தைப் படித்து பிழைத்தனர். மேலும் சிலர் சிவாலயங்களை அடைந்து உய்ந்தனர் என்று
</text>
</para>

<para>
<text>
	ஆரோப்யமானேஷு ததா அர்ஹதேஷு குலேஷு கேசித் ததிரே விபூதிம்
</text>
</para>

<para>
<text>
	கேசித் பரே சங்கர நாம பேரு: ப்ரபேதிரே கேரபி சிவஸ்ய தாம
</text>
</para>

<para>
<text>
எண்ணாயிரவரும் கழுவில் ஏற்றப்பட்டார்கள் என்னும்போது  அவர்களில் பலர் சைவசமயத்தைப் பின்பற்றி பிழைத்தனர் என்ற செய்தி குறிப்பிடத்தகுந்தது. உ.ப.வி. பெரிய புராணத்தையே மொழிபெயர்த்துள்ளதால் இந்தச் செய்தியும் பெரிய புராணத்தில் இருந்திருக்கவேண்டும்.இல்லாத செய்தியை உ.ப. வி. குறிப்பதில்லை.ஆதலின் இந்த செய்தியைக் கூறும் செய்யுள் மறைந்து போயிற்றோ என ஐயுற வேண்டியுள்ளது.
</text>
</para>

<para>
<text>
சம்பந்தர் நாட்டிய ஜயக்கொடி சமணர்களைக் கழுவேற்றியதல்ல.அவர்களை சைவர்களாக மாற்றியதேயாம் என இதனால் தெளியலாம்.
</text>
</para>

<para>
<text>
சம்பந்தரின் கருணையுள்ளத்திற்கு  மேலும் இரண்டு நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டலாம்.திருவாலவுடையார் புராணத்தில், சமணர் தோற்றவுடன் சம்பந்தர் அவர்களை கழுவேற வேண்டாம். நீங்களும் திருநீறு பூசி ஈசனை ஏற்றுமின். கன்மம் என்னும் மாசு அறக் கூடி வாழலாம் என்று கூறுகிறார். சமணர்கள் அதை ஏற்கவில்லை. கழுவேறினர் என்பர்.
</text>
</para>

<para>
<text>
இது இவ்வாறு இருக்க பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத்திலும் சம்பந்தர், சமணர்களை நீங்கள் இறக்கவேண்டாம்.சிவபெருமானை அம்மையப்பனை வழுத்தி உய்யுமின்கள் என்று கூறுகிறார்.ஆனால் சமணர் மறுத்து தாங்களே கழுவேறுகின்றனர்.
</text>
</para>


<para>
<verse>
<line>இன்னம் அறத்தால்  இசைக்கின்றேன் நீர் ஏன் வாளா இறக்கின்றீர்</line>
<line>அன்னை அணையான் எம் மிறைவன் அவனுக்காளாய் உய்மின்கள்</line>
<line>என்ன, ஏட சிறியாய் நீ எவ்வாறு எங்கட்கு அஹித மொழி</line>
<line>சொன்னதென்று மானமுளார் கழுவில் ஏறத் தொடங்கினர்</line>
</verse>
</para>

<para>
<text>
என்று உள்ளது சம்பந்தர் கருணை உள்ளத்துக்கு எடுத்துக்காட்டு. சமணர் தாமே கழுவேறினர். ஆனால் அவர்களது சீடர்களான சமணர்கள், திருநீறிட்டு சைவர்களாக மாறினர்.
</text>
</para>

<para>
<text>
ஆதலின் ஞானசம்பந்தர், சமணர்களை கழுவில் ஏற்றவில்லை என்பது எல்லா நூல்களிலும் ஒரு தலையாக குறிக்கப்படும் செய்தி. பல நூல்களில் அவர் சமணர்களை கழுவேற வேண்டா என்று தடுத்தபோதும்,அவர்கள் தாமே சென்று கழுவேறினர் என்பதும், அனைத்துச் சமணரும் கழுவேறவில்லை. பலர் திருநீறு பூசி சைவர்களாக மாறினர் என்பதையும் குறிக்கின்றன. சைவ மரபில் இக்கருத்துக்கள் தான் வழிவழியாக பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ளன என்பது தெளிவு. .
</text>
</para>

</article>
