﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>தவம் செய்த தவம்</book>

<title><line>ஞானப்பிரான்</line></title>

<para>
<text>
தமிழகத்தில் வராஹமூர்த்தியின் வழிபாடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்துள்ளது. சங்ககால இலக்கியமான பரிபாடல் வராஹமூர்த்தியின் சிறப்பை அழகாகப் படைக்கிறது. திருமாலைக் குறித்து உள்ள இரண்டு பாடல்களில் உபநிஷத் கருத்துக்களின் இருப்பிடமாக வராஹமூர்த்தி உருவாக்கப் பெற்றதை குறிக்கின்றன. அந்தணர் அருமறையால் இதன் புகழ் பாடப்பட்டது எனப் பரிபாடல் கூறுவதை காணலாம். வராஹமூர்த்தியின் வழிபாடு வேதக் கருத்துக்களின் அடிப்படையில் உருவானது எனலாம்.
</text>
</para>

<para>
<text>
வராஹப் பெருமானுக்கு பல கோயில்களும் சிற்பங்களும் தமிழகத்தில் உள்ளன. மாமல்லபுரத்தில் ஆதிவராஹர் கோயில் என்று ஒரு குகைக் கோயில் உள்ளது. இதனை பல்லவ மன்னர்கள் தோற்றிவித்திருக்கிறார்கள். கல்வெட்டில் இதை "பரமேஸ்வர மஹாவராஹ விஷ்ணு கிருஹம்" என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் கருவறையில் ஆதிவராஹ மூர்த்தியாக ஆழ்கடலில் இருந்து நில மகளை தூக்குவாராக வராஹப் பெருமான் படைக்கப்பட்டுள்ளார். நில மகளை கடலில் இருந்து தூக்குவது போன்ற உருவம் இருந்தால் அதை ஆதிவராஹம் என்று வைஷ்ணவ ஆகமங்கள் கூறுகின்றன. இன்றும் இதே பெயரில் இக்கோயில் திகழ்கிறது. கருவரையின் இருமருங்கும் கஜலக்ஷ்மியின் உருவமும் துர்கையின் உருவமும் உள்ளன. பக்க சுவர்களில் பிரும்மாவும், கங்காதர மூர்த்தியாக சிவபெருமான் உருவமும் உள்ளன. இக் கோயிலைத் தோற்றிவித்த பல்லவ அரசர்களின் உருவச் சிலையும் உள்ளன. இக்கோயிலில் திருமாலின் பத்து அவதாரங்கள் கல்வெட்டில் பொறிக்க பட்டுள்ளது ஒரு சிறப்பாகும்.
</text>
</para>

<para>
<text>
மாமல்லபுரத்தில் மற்றொரு குகைக் கோயிலிலும் வராஹ மூர்த்தியின் உருவம் உள்ளது. இக்குகைக் கோயிலை "வராஹ குகை" என்று அழைப்பர். அயினும் இக்கருவறையில் எந்த உருவமும் இல்லையாதலால் இக்கோயில் வராஹப் பெருமானுக்கு அமைக்கப்பட்டதா என்று தெளிவாகத் தெரியவில்லை. இங்கும் வராஹமூர்த்தி கடலில் இருந்து பூமிதேவியை எடுப்பவராக காணப்படுகிறது. 
</text>
</para>

<para>
<image display="half" float="floatleft" caption="வராஹமூர்த்தி, நரசிம்மசுவாமி கோயில், நாமக்கல்">images/varaha.jpg</image>
<text>
சேலம்மாவட்டத்தில் நாமக்கல் என்ற இடத்தில் அதியமான்கள் என்பவர்களால் குடைவிக்கப்பட்ட இரண்டு குகைக் கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் நரசிம்மசுவாமி கோயிலின் பக்கச் சுவரில் மிக அழகான வராஹமூர்த்தியின் சிற்பம் உள்ளது. இதுவும் கடலிலிருந்து பூமாதேவியை வெளிக்கொணர்வது ஆக அமைந்துள்ளது தான். கடல் அலைகளிலிருந்து பெருமான் எழுவதாகக் காட்டுவதற்கு கணுக்காலுக்கு கீழ் எதுவும் காட்டாமல் நீரில் மறைந்துள்ளது போல் சிற்பி இதனைப் படைத்திருக்கிறான். இதில் பூமா தேவியின் உருவம் மிகவும் எழில் வாய்ந்ததாக செதுக்கப் பட்டுள்ளது. இங்கு மேலும் ஒரு சிற்பம் உள்ளது. நான்கு முனிவர்கள் வராஹப் பெருமானைப் போற்றுவது போல் மேலே சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நால்வரும் நான்கு வேதங்களை குறிப்பதாகக் கூறுவர். ஆதலின் வேதங்களின் முடிவாக, ஞானத்தில் உருவாக வராஹர் போற்றப்பட்டிருக்கிறார் என்பதற்கு இப்பாறைச் சிற்பம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கி.பி. 8ம் நூற்றாண்டில் இப்பகுதியினை ஆண்ட அதியேந்திரன் என்ற மன்னனால் குடைவிக்கப் பட்டுள்ளது இக்கோயில். 
</text>
</para>

<para>
<text>
இவை தவிர மாமல்லபுரத்துக்கருகில் திருவிடந்தை என்ற இடம் உண்டு. அங்கு எடுக்கப்பட்டிருக்கும் கோயில் ஒரு கட்டிடக் கோயில். இது வராஹ பெருமானுக்காக எடுக்கப்பட்டது. சோழர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது என கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் "ஆழ்வார் வராஹ தேவர்" என்று இப்பெருமான் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார். பிற்காலத்தில் வராஹசுவாமி என்ற பெயர் காணப்படுகிறது. இராஜராஜ சோழனுடைய பிறந்த நட்சத்திரத்தன்று ஆவணி மாதத்தில் ஏழு நாள் திருவிழா இங்கு நடை பெற்றது. இக்கோயிலில் காணப்படும் ஏராளமான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சோழர் கல்வெட்டாக இருக்கின்றன. ஆதலின் சோழர் காலத்தில் வராஹசுவாமியின் வழிபாடு இங்கு மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது என்று அறியலாம்.
</text>
</para>

<para>
<text>
தென் ஆற்காடு மாவட்டத்தில் "ஸ்ரீமுஷ்ணம்" என்ற இடத்தில் வராஹப் பெருமானுடைய உருவம் உள்ளது. அங்கு ஆதி வராஹ மூர்த்தியாக பெருமான் திகழ்கிறார். மூலஸ்தானத்தில் பெருமான் மிகச் சிறிய அளவில் காணப்படுகிறார். அந்த ஆதிவராஹ மூர்த்திக்காகவே தஞ்சையை ஆண்ட நாயக்கர மன்னர் காலத்தில், குறிப்பாக அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் மிகச் சிறப்பாக இங்கு கட்டிடக் கலை நுணுக்கம் வாய்ந்த பகுதிகள் எழுப்பப் பட்டுள்ளன. இந்த வரிசையில் மிகச் சிறப்புற எடுக்கப்பட்டுள்ள புண்ணியத் திருக்கோயில். 
</text>
</para>

<para>
<text>
ஆத்ம வித்தையை பற்றி கூறவந்தவை உபநிஷத்துக்கள். இந்திய மக்களின் மனதில் காலம் காலமாக இருந்து வந்த கருத்துக்களை பிரதிபலிப்பவை இவை. இவற்றில் "வராஹ உபநிஷத்" என ஒரு உபநிஷத் உள்ளது. இது ஐந்து அத்தியாயங்களை உடையது. இதில் வராஹ ஸ்வரூபமான பகவானை அறிய பல கருத்துகள் உள்ளன.
</text>
</para>

<para>
<text>
ஒரு காலத்தில் "ரிபு" என்ற முனிவர் "தேவமானம்" என்ற முறைப்படி பன்னிரண்டு ஆண்டுகள் தவம்புரிந்தார். அதன் முடிவில் பகவான் வராஹ உருவில் தோன்றி ரிபு மகரிஷிக்கு அருள்பாலித்து வரம் வேண்டுமெனில் கேள் என்றார். அதற்கு ரிபு பகவானே ஆசையால் உந்தப்பட்டு மற்றவர்கள் எந்தெந்த வரங்களை வேண்டினார்களோ அவற்றில் எதையும் நான் உன்னிடம் வேண்டேன். எதை உன்னிடமிருந்து அறிந்து வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பிரும்மா முதலிய தேவர்கள் எல்லாம் முக்தி அடைந்தார்களோ அதை உன்னிடமிருந்து அறிய விரும்புகிறேன். வராஹரூபமான உனது உருவைப் பற்றிய ஞானமே முக்திக்கு காரணம். அந்த ஞானத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டினார். பகவான் ரிபுவுக்கு வராஹரூபத்தின் ஞானத்தை உபதேசித்தார். அதுவே வராஹ உபநிஷத் என்று அதன் தொடக்கம் கூறுகிறது.
</text>
</para>

<para>
<text>
வராஹரூபத்தில் உள்ள என்னை யார் பக்தியோடு வணங்குகிறார்களோ அவர்கள் அஞானத்திலிருந்து நீங்கி ஜீவன் முக்தர்களாக திகழ்கிறார்கள்.
</text>
</para>

<para>
<verse>
<line>வராஹ ரூபினம் மாம் யே பஜந்தி மயி பக்தித:</line>
<line>விமுக்த அஞான தத் கார்யா ஜீவன் முக்தா பவந்தி தே</line>
</verse>
</para>

<para>
<text>
என்று இவ்வுபநிஷத் கூறுகிறது. அஞானம் நீங்கி ஞானவான்களாக ஆகிறார்கள். ஆதலால் ஞானத்தை அளிக்கும் ஸ்வரூபம் வராஹமூர்த்தி. அதனால்தான் அவரை ஞானப்பிரான் என்றனர். "நான் ஒவ்வொருவர் மனதிலும் பரமார்த்த விஞ்ஞானமாகவும், ஸ்வயம் பிரகாசமாகவும், இன்பத்தை அளிக்கும் ஆத்மாவாகவும் விளங்குகிறேன். ஒவ்வொருவர் உள்ளத்தும் திகழ்கின்ற "அஹம் தத்துவம்" நான். ஒவ்வோர் உள்ளத்தும் உணர்ச்சிப் பெருக்காக ஆடிடும் என்னை ஒரு வினாடியகிலும் தியானித்தால் எல்லாவித பந்தங்களிலிருந்தும் விடுபடுகிறான். ஆதலின் எனக்கே வணக்கங்கள்."
</text>
</para>

<para>
<verse>
<line>பரமார்த்தைக விஞானம் சுகாத்மானம் சுவயம்பரபும்</line>
<line>ஸ்வஸ்வரூபதயா ஸர்வம் வேத ஸ்வானுபவேன ய:</line>
<line>ஸது தீர: ஸது விஞேய: ஸோஹம் தத்துவம் ரிபோ பவ</line>
<line>ஸ்வஸ்வரூபானுஸந்தானாத் நிருத்யந்தம் ஸர்வஸாக்ஷிணம்</line>
<line>முகூர்த்தம் சிந்தயேன் மாம் ய: ஸர்வ பந்தை பிரமுச்யதே</line>
<line>ஸர்வ பூதாந்தரஸ்தாய நித்ய முக்த சிதாத்மனே</line>
<line>பிரத்யக் சைத்தன்யரூபாய மஹ்யமேவ நமோ நம:</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பகவான் கூறுகிறார். இதில் "உபவாஸம்" இருத்தல் என்றால் என்ன எனக் கூறுயுள்ளது சிந்திக்க தக்கது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் அருகருகே இருப்பதுதான் உபவாஸம். உடம்பை வருத்துவது உபவாஸம் அல்ல. பாம்புப் புற்றை வெளியில் அடித்தாலே உள்ளிருக்கும் பாம்பு செத்து விடுமா? என்று கூறுகிறது.
</text>
</para>

<para>
<verse>
<line>உப ஸமீபே யோ வாஸ ஜீவாத்ம பரமாத்மயோ:</line>
<line>உபவாஸ ஸ வை ஞேய: நது காயஸ்ய ஸோஷணம்</line>
<line>காயஸோஷண மாத்ரேன கா தத்ர அவிவேகினாம்</line>
<line>வல்மீக தாடனாத் ஏவ மிருத: கிம் நு மஹோரக:</line>
</verse>
</para>

<para>
<text>
இந்த உபநிஷத்தில் மற்ற இடத்தில் "அஹம் பிரும்மாஸ்மி" என்னும் அறிவே சாக்ஷாத்காரம் என்பது. மோக்ஷம் அடைய விரும்புபவன் ஜீவன் யாது, ஈசன் யாவன் என்று வாதம் செய்து கொண்டிருக்க தேவையில்லை. பிரும்ம தத்துவத்தை அனுபவிக்க வேண்டும். இந்திரியங்களுக்கெல்லாம் தலைவன் மனம். மனத்துக்கு தலைவன் காற்றாகிய சுவாசஸம். சுவாஸத்தை கட்டுப்படுத்துவது லயித்து நிற்றல். அதுவே யோகிகளின் தன்மை. உலக வியவஹாரங்களை பார்த்துக் கொண்டிருந்தாலும், அதன் மத்தியில் இருந்தாலும் பிரும்மானுபவத்தை விடமாட்டான். ஒரு நாட்டியப் பெண்ணானவள் ஸங்கீதம் வாத்யம் தாளம் இவற்றில் லயித்து சுழன்று சுழன்று ஆடினாலும் தலையில் வைத்திருக்கும் கரகத்தை எவ்வாறு மறப்பதில்லையோ அங்ஙணம் என்று இவ்வுபநிஷத் கூறுகிறது. கரகாட்டம் அக்காலத்தில் இருந்தது என்பதற்கும் இது சான்று. 
</text>
</para>

<para>
<text>
சுகரும் வாமதேவரும் இவ்வாறு சிறந்த பரமயோகிகள். பிரும்ம ஸ்வரூபிகள். சுகர் என்பவர் ஒரு பறவை. வாமதேவர் என்பவர் ஒரு சிறு எறும்பு. ஆதலால் யோகாப்யாசத்தில் ஆத்மாவை அறிவதே ஞானம். அதுவே சிவம். சிவனே கருவும், வேதமாகவும், தேவனாகவும், பிரபுவாகவும், நானாகவும், நீயாகவும் இருக்கிறான். ஆதலின் சிவனே அனைத்தும் சிவனன்றி ஏதுமில்லை என்று கூறுகிறது. இவ்வுபநிஷத்திலிருந்து சில செய்திகள் அறிகிறோம். சிவன் வேறு விஷ்ணு வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அவரவர் மனத்தே உள்ள ஆத்மதத்துவம் தானே சிவன் என்பதும் விஷ்ணு என்பதும். ஆதலின்
</text>
</para>

<para>
<verse>
<line>சிவோ குரு: சிவோ வேத: சிவோ தேவ: சிவ பிரபு:</line>
<line>சிவோஸ்மி அஹம் சிவ: ஸர்வம் சிவாத் அன்யத் ந கிஞ்சன</line>
</verse>
</para>

<para>
<text>
என்பது இவ்வுபநிஷத். இந்த ஆத்ம தத்வமே வராஹஸ்வரூபம். ஞானமூர்த்தி. ஞானபிரான். இந்த உபநிஷத் அத்வைதபரமாக உள்ளது. 
</text>
</para>

<para>
<text>
சங்ககாலத் தமிழ் நூலாகிய பரிபாடலில் வராஹம் குறிக்கப்பட்டுள்ளது. மரீசி சம்ஹிதை என்னும் வைகானஸ நூல் வராஹமூர்த்தியை மூன்று விதமாகக் கூறுகிறது. ஆதிவராஹம், பிரளய வராஹம், யக்ஞவராஹம் என மூன்று உருவங்களில் வராஹஸ்வாமியை வணங்க கூறுகிறது. 
</text>
</para>

<para>
<text>
நான்கு கரங்களோடு வராஹ முகத்தோடு வலது காலை ஐந்தலை அரவின் தலைமேல் ஊன்றி இடது காலை உதைத்து ஊன்றி தேவியை நிலமகளை தம் மார்புயரத் தூக்கி தம் வலதுகரத்தால் தேவியின் அடிகளைப் பற்றி இடது கரத்தால் அவளை அண்ணாந்து தம் முகத்தால் அத்தேவியை முகர்வது போல் விளங்குவார் ஆதிவராஹமூர்த்தி. தேவி கரம் கூப்பியிருப்பாள். தம் காதலரை கடைக்கணித்து புன்முருவல் தவழ இருப்பாள்.
</text>
</para>

<para>
<text>
பிரளய வராஹம் என்பதன் உருவம் வேறு விதமாக இருக்கும். இவ்வராஹமூர்த்தி சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பார். இடக்காலை மடக்கி வலக்காலை தொங்கவிட்டு இருப்பார். நான்கு கரங்கள். பின் இருகரங்களில் சங்கு சக்கரம். வலக்கரம் அபயம் அளிக்கும். இடக்கரம் துடை மீது வைக்கப்பட்டிருக்கும். அவரின் வலத்தே பூமி தேவியானவர் அமர்ந்திருப்பாள். இரண்டு கரங்கள். வலது கரத்தில் உத்பல புஷ்பம். இடது கரத்தை ஆஸனத்தில் வைத்திருப்பாள். தம் தேவரை நோக்கிய பார்வை. முறுவலித்த முகம். இந்த உருவையே "பூவராஹமூர்த்தி" என்றும் அழைக்கின்றோம். 
</text>
</para>

<para>
<text>
மூன்றாவதான உருவம் "யக்ஞவராஹம்". வெள்ளை நிறம். நான்கு கரங்கள். சிம்மாஸனத்தில் அமர்ந்திருப்பார். அவரது வலத்தில் ஸ்ரீதேவி அமர்ந்திருப்பாள். அவளது கரத்தில் தாமரை மலர் இருக்கும். அவரது இடத்தில் பூமாதேவி தன் கரத்தில் அல்லிப்பூவை தரித்து அமர்ந்திருப்பாள். இவ்வுருவம் யக்ஞவராஹம் எனப்படுகிறது.
</text>
</para>

<para>
<text>
ஆதிவராஹர் பயிர்கள் போன்ற பச்சை வண்ணம். பிரளய வராஹம் நீல வண்ணம். யக்ஞவராஹர் வெள்ளை வண்ணம். ஆதிவராஹர் நின்றிருப்பார் பிரளய வராஹரும், யக்ஞவராஹரும் அமர்ந்திருப்பர். பிரளய வராஹருடன் பூமாதேவி மட்டும் இருப்பாள். யக்ஞவராஹருடன் ஸ்ரீதேவியும் இருப்பார். 
</text>
</para>

<para>
<text>
வைஷ்ணவ மூர்த்திகளை பிரதிஷ்டை செய்வதையும் பூஜிப்பதையும் வெவ்வேறு சம்பிரதாயப்படி பூஜிக்க வெவ்வேறு ஆகம நூல்கள் உள்ளன. இவற்றில அந்த அந்த மரபுக்கு தகுந்தபடி வெவ்வேறு உருவங்கள் கூறப்படுகின்றன. வராஹமூர்த்திக்கு இவ்வாறு பல உருவங்கள் கூறப்படுகின்றன. நான்கு கைகளிலிருந்து 16 கைகள் வரையில் உள்ளவையாக பல உருவங்கள் உண்டு. ஸ்ரீதேவியும், பூதேவியுமாக உபயநாச்சியாருடன் உள்ள வராகமும் உண்டு. ஸ்ரீ, பூமி, நீலாதேவி, என மூன்று நாச்சிமாரோடும் உள்ள வராகமூர்த்தியும் உண்டு. மூன்று தேவிகளுடன் உள்ள மூர்த்தியை சில ஆகமங்கள் யக்ஞவராஹம் என்று கூறுகின்றன.
</text>
</para>

<para>
<text>
வைஷ்ணவ கோயில்களில் நவமூர்த்தி பிரதிஷ்டை, ஷண்மூர்த்தி பிரதிஷ்டை, பஞ்சமூர்த்தி பிரதிஷ்டை என பலவகை பிரதிஷ்டைகள் உண்டு. மூன்று தளங்களை உடையவையாக நின்றான் இருந்தான் கிடந்தான் என்று பெருமாளை கர்ப்பகிருஹத்தில் பிரதிஷ்டை செய்வர். கீழ் நிலையில் நான்கு புறமும் நான்கு வியூகங்கள். மேல் தளத்தில் தெற்கே நரநாராயணர்களையும் மேற்கே நரசிம்மமூர்தியையும் வடக்கே வராஹமூர்த்தியையும் பிரதிஷ்டை செய்வர். இதில் இரண்டாம் தளத்தில் வடக்கு பார்த்து பூவராஹமூர்த்தி உள்ளது காணத்தக்கது.
</text>
</para>

</article>
