﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>ஒளி உருவாம் நின் உருவம்</line>
</title>

<author>டாக்டர் இரா. நாகசாமி</author>
<date>14-Apr-2007</date>

<para>
<text>
வேதத்தில் ஒரு மந்திரம் தீயின் உருவை வர்ணிக்கிறது. தீக்கு இரண்டு தன்மைகள் உள்ளன. ஒன்று சுட்டுக்கொளுத்தும் தன்மை. மற்றது தேவையான உஷ்ணம் அளித்து பாதுகாத்தலும் பிரகாசித்தலும். இவ்விரண்டு தன்மைகளும் தீயில் பிரிக்கமுடியாதபடி இணந்துள்ளன. இந்த இருதன்மையையும் வேதம் கவிதை நயமாக உருவகித்துப் பாடுகிறது.
</text>
</para>

<para>
<text>
சுட்டுக்கொளுத்தும் தன்மையை அக்னியாகிய ருத்ரன் என்றும் தேவையான உஷ்ணத்தையும் ஒளியையும் கொடுக்கும் தன்மையை விஷ்ணு என்றும் கூறுகிறது. இதை "அக்னா-விஷ்ணு" என்ற சொல்லால் கூறுகிறது. அக்னியும் விஷ்ணுவும் இணைந்த உருவம். அதாவது ருத்ரனும் விஷ்ணுவும்  இணைந்த உருவம்.  
</text>
<image height="200" align="left">../images/harihara.jpg</image>
</para>

<para>
<text>
ருத்திரனையும் விஷ்ணுவையும் பிரிக்கவே முடியாது. இதைத்தான் ஹரிஹரன் என்று முன்னையோர் கூறினர். சுட்டுக்கொளுத்தும் உஷ்ணமாகிய ருத்ரன் கடினமானவன். அதைக் கோரஉருவம் என்றும் காத்துப் பிரகாசிக்கும் உருவை ஒளிமயமான "விஷ்ணு" என்றும் வேதம் கூறுகிறது. இரண்டும் சேர்ந்தது "சிவம்" அல்லது "சிவதமம்"  அதாவது பரம மங்களகரமானது. இதை தெளிவாக அறியவேண்டுமானால் உலகியலால் அறியலாம். தீ தீண்டப்படும்போது சுட்டுக் கொளுத்திவிடும். அதே பயங்கரத்தீயாக காட்டுத்தீயாக இருந்தால் அனைத்தையும் அழித்துவிடும். ஆயினும் அதே உஷ்ணம் தேவையான அளவிற்கு உடலில் இல்லை என்றால் மனிதன் இறந்து போவான். செடி கொடிகள் வளராது. எதையும் பார்க்க இயலாது. ஆதலின்  தாயைப்போல் காக்கும்  தீயின் சக்தியை தாயின் பெண்மையைப் போன்றது என்றும் வேதமே கூறுகிறது. அதை "சிவா" என்று அழைக்கிறது. ருத்திரனை "சிவன்" என்றும் விஷணுவை "சிவா" என்றும் கூறுகிறது வேதம். இதிலிருந்து "சிவனும் சிவையும்" இணைந்த உருவான அர்த்தநாரி உருவம் வெளிப்படுகிறது. இதை 
</text>
</para>

<para>
<verse>
<line>அக்நா விஷ்ணு அர்ச்சா</line>
<line>ருத்ரோ வா ஏஷ யத் அக்னி:</line>
<line>தஸ்ய எதே தனுவெள</line>
<line>கோரா அன்யா</line>
<line>சிவாஅன்யா</line>
<line>...அக்னிர் வசு:</line>
<line>தஸ்ய ஏஷா தாரா</line>
<line>விஷ்ணுர் வசு:</line>
<line>தஸ்ய எஷா தாரா</line>
<line>யா அஸ்ய கோரா தநூ:</line>
<line>சதருத்ரீயம் ஜுஹோதி</line>
<line>யா அஸ்ய சிவா தநூ:</line>
<line>வஸோர் தாராம் ஜுஹோதி"</line>
</verse>
</para>

<para>
<text>
என்று வேதம் கூறுகிறது.
</text>
</para>

<para>
<text>
"அக்னி விஷ்ணு என்பது உருவாகும். இந்த அக்னி என்பவன் ருத்ரன் தான். இவனுக்கு இரு உருவங்கள். ஒன்று கடுமையானது (கோராமானது). மற்றது மென்மையானது (சிவா). எது கடுமையானதோ அதற்கு ருத்திர மந்திரத்தால் நெய்யைத் தாரையாக வார்க்கிறேன். எது மென்மையானதோ அதற்க்கு வஸோர்தாரை என்னும் மந்திரத்தால் நெய்யைத் தாரையாக வார்க்கிறேன்" என்பது இந்த வேதமந்திரத்துக்குப் பொருள்.
</text>
<image height="200" align="right">../images/ardhanari.jpg</image>
</para>

<para>
<text>
ஆதலின் ஒளி மயமான விஷ்ணுவும் சிவா என்று அழைக்கப்பட்ட தேவியும் ஒன்றுதான், என்பது வேதத்தின் கருத்து. இவ்விரண்டில் எதிலிருந்து எதைப்பிரிக்க முடியும்? ஆதலின் நம் ஆன்றோர்கள் இரண்டையும் இணை பிரியா உருவமாக ஹரிஹரன் என்றும் அர்த்தநாரி உருவம் என்றும் வணங்கினர். ஆதலின் ஒளிமயமான தீயின் உருவை விஷ்ணு என்றனர். 
</text>
</para>

<para>
<text>
இதை பூதத்தாழ்வார் தமது பாடலில் மிக அழகாகப் பாடுகிறார். "நீர் ஒரே உருவம் உள்ளவன் அல்லன். உனக்கு இரண்டு உருவங்கள் என்று உலகோர் கூறுவர். அவற்றில் ஒளி உருவம் உன் உருவம். ஆதியாகிய உருவம்  எதுவோ அதை அறிந்தவன் நீ. நீ தான் இம்மண்ணுலகைக் காக்கும் உருவம் ஆகிய திருமால்". என்கிறார். அவர் காத்தல் கடவுள் ஆதலின் விஷ்ணுவே முதல் கடவுள் என்கிறார்.  
</text>
</para>

<para>
<verse>
<line>ஓர் உருவன் அல்லை: ஒளி உருவம் நின் உருவம்;</line>
<line>ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர்; ஓர் உருவம்</line>
<line>ஆதியாம் வண்ணம் அறிந்தார்-அவர் கண்டீர்</line>
<line>நீதியால் மண் காப்பார், நின்று.</line>
</verse>
</para>

<para>
<text>
இங்கு மற்றும் ஒரு விஞான விளக்கத்தை அளிக்கிறார் ஆழ்வார். நமது கண்கள் உருவைப் பார்க்கின்றன என்றால் வண்ணத்தைப் பார்க்கின்றன என்பது பொருள். இது இன்றய விஞானம் நமக்குக் கூறும் அறிவு. இதை அன்றே ஆழ்வார் "உருவம் ஆதியாம் வண்ணம"் என்று நமக்கு கூறியிருக்கிறார். முதன் முதலில் உருவத்தைக் கண்டவர், ஒளி உருவாகத் தோன்றியவர் திருமாலே என்கிறார். ஆதியாகிய உருவம் திருமால் என்பது ஆழ்வார் கருத்து
</text>
</para>

</article>

