﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>செங்கண் அவன்</line>
</title>

<author>டாக்டர் இரா. நாகசாமி</author>
<date>14-Apr-2007</date>

<para>
<text>
செங்கண் என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்கு சிவந்த கண் என்று ஒரு பொருள். அதுபோல் சீரான பார்வை, நேர்மையான பார்வை என்றும் ஒரு பொருள். செந்தமிழ் என்கிறோம் அல்லவா அது போல். அந்தந்த இடத்துக்கு ஏற்ப நல்ல சொல்லை பயான்படுத்தவேணடும். பொருள் கொள்ளவும் வேண்டும். இது பண்பாட்டின் பிரதிபலிப்பு என்று கூறலாம். அதை மனதில் கொள்கிறார் பொய்கை ஆழ்வார். கண்ணனுடைய பல விளையாட்டுக்களை எடுத்துக்கொள்கிறார். அவை ஒவ்வொன்றையும் ஒருசொல்லால் குறிக்கிறார். அந்தந்த சொல்லுக்கேற்ற வினைச்சொற்களையும் அதே வரிசையில் வைத்து இந்த சொல்லுக்கு இந்த வினைச்சொல்லைப் பயான்படுத்த வேண்டும் என்றும் காட்டுகிறார். ஒரே பாட்டில் பெயர்ச்சொற்களை வரிசையாகத் தொகுத்து அவற்றின் வினைச்சொற்களையும் அதே வாரிசையில் தொகுத்துள்ளதைப் பாருங்கள்.
</text>
</para>

<para>
<verse>
<line>அரவம், அடல் வேழம், ஆன், குருந்தம், புள் வாய்,</line>
<line>குரவை, குடம், முலை, மல், குன்றம் - கரவு இன்றி</line>
<line>விட்டு, இறுத்து, மேய்த்து, ஓசித்து, கீண்டு, கோத்து, ஆடி, உண்டு,</line>
<line>அட்டு, எடுத்த - செங்கண் அவன்.</line>
</verse>
</para>

<para>
<text>
காளீயன் ஆகிய பாம்பு தனது விஷத்தைக் கக்கி ஆயர் சிறுவர்களைத் துன்புறுத்தியது. அதன் மீது பாய்ந்து அதன் தலையில் நடமாடி விஷத்தைக் கக்க வைத்து பின் அதன் மனைவியர் வேண்ட விட்டுவிட்டார் அல்லவா! அதைக் குறிக்கிறார் "அரவம் கரவு இன்றி விட்டு" என்கிறார். கம்சனால் விடப்பட்ட அட்டகாசமாக வந்த யானையை அழித்தார் (இறுத்தார்). பசுக்களை (ஆன்) மேய்த்தார். குருந்த மரங்களை ஒசித்து (ஒடித்து), புள்வாய் (பறவை) வடிவில் வந்த பகாசுரனை அதன் வாயினைக் கீண்டு அழித்து, சேர்ந்து ஆடும் குரவைக் கூத்தைக் கைகோத்து (ஆடி), கைகளிலும் தோள்களிலும் குடங்களைத் தாங்கி குடக்கூத்து ஆடி, பேயான பூதனை பெண் வடிவில் வந்து பால்கொடுத்து கொல்ல முயற்சிக்க அவளது முலைப்பால் உண்டு, மல்லர்களோடு மல்லட்டு (மல் ஆடலை மல்அட்டல் என்பது சீரான வழக்கு), இந்திரன் பெய்வித்த மழையை தடுக்க குன்றத்தை எடுத்த கண்ணன் "செங்கண்" அவன். 
</text>
</para>

<para>
<text>
இந்த இடத்தில் செங்கண் என்ற சொல்லுக்கு "நல்ல அருள் நோக்கு உடையவன்" என்பது பொருள். கண் நோக்கு என்றால் அருள் நோக்கு  என்ற பொருளில் திருவள்ளுவர் பயன் படுத்தியுள்ளார். இவை அனைத்தும் அருளினால் கண்ணன் புரிந்த விளையாடல்கள். 
</text>
</para>

<para>
<text>
ஆழ்வார் வரிசையாக சொற்களை பயன் படுத்தியுள்ளதைப் பாருங்கள். "அரவம் விட்டு, வேழம் இறுத்து, ஆன் மேய்த்து, குருந்தம் ஒசித்து, புள்வாய் கீண்டு, குரவை கோத்து, குடம் ஆடி, முலை உண்டு, குன்றம் எடுத்து அருள்புரிந்த கண்ணன் அவன்" என்கிறார். இப்படிப் பார்ப்பதுதான் சீரான பார்வை என்றும் (அருள் பார்வை சீர் பார்வை என) இரண்டு பொருள் தொனிக்கும் வகையில் பாடல் இயற்றியுள்ளார். இதிலிருந்து பாடல்  இயற்றுவதில் இதுவும் ஒருமரபு எனப் படம் பிடித்து, சொற்களை எப்படி சீராகப் பயன் படுத்த வேண்டும் என்றும்  காட்டுகிறார்.
</text>
</para>

<para>
<text>
இதே போல் மற்றொரு பாட்டிலும் இவ்வாழ்வார் பாடியுள்ளார். ஆனால் அதில் சற்று மாறாக பாடியுள்ளார். திருமால் உறையும் நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவற்றில் ஒன்றில் திருமால் நின்ற கோலத்திலும் மற்றொன்றில் அமர்ந்த கோலத்திலும், மூன்றாம் இடத்தில் படுத்த கோலத்திலும் இறுதியில் நடந்த கோலத்திலும் விளங்குகிறார். வேங்கடம், விண்ணகர், வெஃகா, திருக்கோவலூர் அகிய நான்கு திருத்தலங்களை முறையாகக் கூறி, அங்கு நின்றார், இருந்தார், கிடந்தார், நடந்தார் எனக் கூறுகிறார்.
</text>
</para>

<para>
<verse>
<line>வேங்கடமும், விண்ணகரும், வெஃகாவும், அஃகாத</line>
<line>பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும், நான்கு இடத்தும்</line>
<line>நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே,</line>
<line>என்றால், கெடுமாம்-இடர்</line>
</verse>
</para>

<para>
<text>
இப்பாடலில் வேங்கடத்தில் நின்றான், விண்ணகரில் இருந்தான், வெஃகாவில் கிடந்தான், திருக்கோவலூரில் நடந்தான் என்று சொற்களை முறையே இணைத்து பொருள் அறிதல் வேண்டும். இவையெல்லாம் நமக்கு பாடல்கள் அமைக்கும் மரபைக் கூறுவதுடன் தெய்வ பக்தியையும் புகட்டுகின்றன.
</text>
</para>

</article>





