﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>கல்வெட்டில் பறையர்</line>
</title>

<author>டாக்டர். இரா. நாகசாமி</author>
<date>15-செப்டம்பர்-2007</date>

	
<para>
<text>
நம்மில் பல இனத்தவரைப் பற்றி தவறான கருத்துகளை சிலர் கொண்டுள்ளனர். குறிப்பாக ஜாதி என்ற சொல்லைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை. வரலாற்று அடிப்படையில் ஜாதிகளைப்பற்றி அறிந்தால் சமுதாயச் சீர்திருத்தங்களை செவ்வனே செய்ய இயலும். இதற்கு நம்மிடையே வரலாற்று அறிவு வளர்தல் வேண்டும். வரலாற்று அறிவு சிறக்க அடிப்படை ஆதாரங்களாக விளங்குபவை கல்வெட்டுகள். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கல்வெட்டுகள் நம் நாட்டில் தான் அதிகம் உள்ளன. ஆயினும் அதற்கு முதலிடம் கொடாமல் கடை இடம் கூட கொடுக்காமல் இன்றும் இருக்கிறோம். இந்த பின் அணியில் ஒரு சில கருத்துக்களைப் பார்க்கலாம்.
</text>
</para>

<para>
<text>
கொங்கு நாடு உழுகுடிகளான வெள்ளாளர்கள் அதிகம் வாழ்கின்ற நாடு. வெள்ளாளப் பெருமக்களை கவுண்டர்கள் என அழைப்பது மரபு. அவர்களில் வெள்ளாளக் கவுணடர்கள் என்றும் வேட்டுவக் கவுண்டர்கள் என்றும் பொதுவாக கூறுவர். அவர்களைப் பற்றிய ஏராளமான செய்திகளை கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகட்கு முந்திய கல்வெட்டுகளில் இப்பகுதியில் அவர்களே அதிகம் வாழ்ந்தார்கள் என்ற செய்தி வெளிப்படுகிறது. மற்ற குடியினர் இருந்தபோதிலும் வெள்ளாளர்களே நிறைந்து விளங்கிய பகுதி இது என ஐய்யம் திரிபற கல்வட்டுகள் வாயிலாக அறிகிறோம். அவர்கள் நிலச்சுவாந்தார்களாகவும், பொருள் படைத்தவர்களாகவும், பரந்தமனப்பான்மை படைத்தவர்களாகவும் திகழ்ந்து இருக்கிறார்கள். நம் கோயில்களைக்கட்டி திருப்பணிகளைச்செய்து ஏராளமான பொருள்களை அளித்து காத்தவர்கள் இவர்களே, எனக்கல்வெட்டுகள் காட்டுகின்றன.
</text>
</para>

<para>
<text>
இவர்களில் பலர் பல்லவரையன் போன்ற பட்டங்களை பெற்றிருந்தார்கள். நீதி மன்றங்களில் வழக்குகளை ஆராய்ந்து நீதி கிடைக்க வழிவகை செய்த வெள்ளாளர்களை மன்றாடிகள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்பணியை மன்றாட்டு என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.அத்துடன் சமுதாயத்தில் முன்னின்றதோடு அரசுப்பணிகளிலும் முதலிடம் பெற்று முதலிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பிள்ளைகள் என்றும் சில கல்வெட்டுகளில் காண்கிறோம்.
</text>
</para>

<para>
<text>
இவை தவிர வெள்ளாளர்களில் பல குடிப்பிரிவுகள் இருந்தன. கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் பதினாறுக்கும் மேற்பட்ட குடிப்பிரிவுகள் குறிக்கப்படுகின்றன. கொற்றந்தை குலம், பூலுவர், மலையர், பைய்யர் பிள்ளந்தை, புல்லி, போன்ற குலப்பெயர்கள்  காணப்படுகின்றன. இவற்றில் கொற்றந்தை என்ற குடி இரண்டாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது என அறிகிறோம். புகளூர் சேரமன்னன் கல்வெட்டின் அருகில் அதே கல்வெட்டில் கொற்றந்தை இளவன் என்பவன் குறிக்கப்படுகிறான்.
</text>
</para>

<para>
<text>
கொங்கு நாட்டு வேளாளர் குடிகளில் மேலும் சில பிரிவுகளும் உள்ளன. சேட்டர், விச்சர், உட்டமர், வகையர், என்ற பிற பெயர்களும் கல்வெட்டுகளில் கானப்படுகின்றன. வேறு சிலர் மாடை, வெள்ளெலி, முட்டை, ஊகை, கருன்தொழி என்றும் அழைக்கப்பட்டனர். கோவில் பாளையம் கல்வெட்டில் வெள்ளாளன் புல்லிகளில் கோவன் இருடன் ஆன இராஜ நாராயண காமுண்டன் என்பவன் குறிக்கப்படுகிறான். இடிகரைக் கல்வெட்டில் "வெள்ளாளன் மலையரில் சோழக்கமுண்டன் மன்றாடி" குறிக்கப்பெறுகிறான். இக்கல்வெட்டு 1275ல் விக்கிரமசோழன் கல்வெட்டில் குறிக்கப்படுவதாகும். கடத்தூர் கல்வெட்டில் 1222ல் வீரராஜேந்திரசோழன் காலத்தில் "வெள்ளாளன் குமரன் குமரனான தனஞ்செய பல்லவரையன்" குறிக்கப்பெறுகிறான். இங்கு பல்லவரையன் என்பது பட்டப்பெயர் என்பது தெளிவு.
</text>
</para>

<para>
<text>
கல்வெட்டுகளில் வெள்ளாளரைப்பற்றிக் கூறும்போது முதலில் அவன் வெள்ளாளன் எனக்கூறி பின்னர் அவனது உட்குடிப்பெயர் கூறி, பின் அவனது இயற் பெயரைக்கூறி, அவனது பட்டப் பெயரைக் கூறி அவன் கொடுத்த கொடையைக் கூறுவது மரபு. இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்வரும் கல்வெட்டைக் கூறலாம்.
</text>
</para>

<para>
<text>
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றி வித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால்  தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூர் என அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.
</text>
</para>

<para>
<text>
இப்பின்னணியில் வேறுசில கல்வெட்டுகளையும் இங்கு காணலாம். இவர்களில் பையர் என்ற பிரிவினர்களைப் பார்த்தோம். இப்பையருக்குள் மற்றும் ஒரு உட்பிரிவு உண்டு. அவர்களை கல்வெட்டுக் கூறுகிறது. அவ்வுட்பிரிவினர் பறையர் என்று அழைக்கப்பட்டனர். இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் (14ஆம் நுற்றாண்டில்) கோயிலில் விளக்கு எரிக்க பத்து வராஹன் பணம் கொடுத்தவன் பெயர் "கொற்றமங்கலத்திருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்" என்று உள்ளது. வெள்ளாளரில் பைய்யரில் என்ற பிரிவில் பறையர் என்ற உட்பிரிவினர் இருந்துள்ளனர் என இதன் வாயிலாக அறிகிறோம். இதே ஊரில் உள்ள மற்றொரு கல்வெட்டில் "வெள்ளாளன் பைய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான். இது போல் வெள்ளாளர் உட்பிரிவுகளில் புல்லி என்ற பிரிவிலும் பறையன் குறிக்கப்படுகிறான். விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். "வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்" என்பவன் குறிக்கப்பெறுகிறான். இதிலிருந்த்து 13ஆம் நூற்றாண்டு- 14ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்களில் பறையன் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளது. இவன் நாட்டுக்காமுண்டன் என்று அழைக்கப்படுவதிலிருந்து வடபரிசார நாட்டுக்கே வெள்ளாளர் குடியில் தலைவனாகவும் இருந்திருக்கிறான் என்று அறிகிறோம். ஆதலின் இவர்கள் நிலச்சுவாந்தாராகவும்,பொருளுடையோராகவும் மக்களிலே சிறந்தோராகவும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது.
</text>
</para>

</article>

