﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>பிரமேகம்</line>
</title>

<author>டாக்டர். இரா. நாகசாமி</author>
<date>15-செப்டம்பர்-2007</date>

	
<para>
<text>
பிரமேகம் என்ற ஒரு சொல் கொங்கு நாட்டுக் கல்வெட்டில் காணப்படுகிறது.. உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயிலில் மஹாமண்டபத்தில் அக்கல்வெட்டு உள்ளது. கொங்குச் சோழன் மூன்றாவது விக்ரம சோழனின் கல்வெட்டு அது. 1302 ஆம் ஆண்டைச் சார்ந்தது. திருபுவனசிங்க தேவன் என்ற ஒருவனுக்கு ஒருவகை வாதநோய் பீடித்தது. அவன் கடத்தூர் சிவபெருமானை வேண்டிக்கொள்ள அவனது நோய் தீர்ந்தது. அதனால் பெருமானின் அர்த்தசாம பூஜைக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி அளக்கும் அளவுக்கு ஒரு நிலத்தை திருபுவன் சிங்க தேவன் அளித்தான். அதை அந்த கல்வெட்டுக் கூறுகிறது. 
</text>
</para>

<para>
<text>
இதைக் குரிக்குமிடத்து ஒரு வரலாற்றுச் செய்தியையும் கல்வெட்டுக் குறிக்கிறது.அரசன் விக்கிரம சோழனின் ஆட்சியில் ஒரு கலகம் அல்லது போர் ஒன்று இங்கு நடைபெற்றது.அதில் கண்ணாடிபுத்தூரில் இருந்த உதையாதித்த தேவன் என்பவன் துரோகியாக மாறி வடகொங்குக்கு ஓடிப்போய்விட்டன்.அவனைத் துரத்துவதில் இத்திரிபுவநசிங்க தேவனும் அவனது தம்பி சோழசிங்க தேவனும் அரசனுக்கு பெரும் தொண்டாற்றினர். அதனால் விக்கிரம சோழன் ஓடிப்போன உதையாதித்தனின் நிலத்தைப் பறிமுதல் செய்து திருபுவனசிங்க தேவனுக்கும் அவன் தம்பி சோழசிங்க தேவனுக்கும் காணியகக் கொடுத்துவிட்டான். இவ்வாறு ஒவ்வொருவரும் ஆறுகலம் நெல் விளையும் நிலம் பெற்றனர். அரசன் இவர்களுக்கு அந்நிலத்தைக் கொடுத்தபோது இவர்களுக்கும், இவர்கள் மக்கள் மக்களுக்கும் உடைமையாகவும் இதை இவர்கள் விற்கவும், ஒத்தி வைக்கவும் ஸ்திரீ தனமாகக் கொடுக்கவும் உரிமையை அளித்தான்.
</text>
</para>

<para>
<text>
இவ்வாறு தனக்கு கிடைத்த நிலத்தைத்தான் தனக்கு வந்த வியாதி நிவர்த்தி யானதற்காகக் கடத்தூர் மருதீசப் பெருமானுக்கு அர்த்தசாமபூஜைக்கு திருபுவன சிங்க தேவன் கொடுத்துவிட்டான்.இதிலிருந்து "பிரமேகம்" என்ற ஒருவியாதியைப் பற்றிய குறிப்பும் துரொகியாக மாறியவர்களின் நிலத்தை அரசன் பறிமுதல் செய்யும் உரிமை கொண்டிருந்த்தையும் அதை தன் வீரர்களுக்கு கொடுக்கும் மரபு இருந்தது என்பதும் பெறுகிறோம். கடத்தூர் சிவபெருமான் வாத நோயைத் தீர்க்கும் பெரும் கடவுளாகத் திகழ்ந்திருக்கிறார் என்பதையும் அறிகிறோம்.
</text>
</para>

<para>
<text>
இக்கல்வெட்டிலிருந்து வேறு சில செய்திகளும் அறிகிறோம். கண்ணாடிபுத்தூரின் வடகரையில் வீரசோழீச்சுரம் என்னும் சிவன் கோயிலும் அழகாண்டார் என்னும் பெருமாள் கோயிலும் இருந்தன என அறிகிறோம். அத்துடன் தமிழில் "கவரு" என்ற ஒரு சொல்லைக் கல்வெட்டுகளில் பயன் படுத்தியுள்ளளார்கள் என்பதயும் காணலாம். "இந்நிலத்துக்கு ப்பாய்கிற கவருக்கு தெற்க்கு எல்லை" என்று கல்வெட்டு கூறுகிறது. "கவரு" என்றால் கிளை வாய்க்கால் என்றும் இதனால் அறிகிறோம்.
</text>
</para>

</article>

