<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அருளிசெய்த திருமொழி</author>
<title>திவ்யப் பிரபந்தம் (9/14)</title>
<number>9</number>
<total>1</total>
</heading>

<padiyam>
<number>1</number>

<title>முதல் திருவந்தாதி</title>

<verse>
<line> வையம் தகளியா, வார் கடலே நெய் ஆக,</line>
<line> வெய்ய கதிரோன் விளக்கு ஆக, செய்ய</line>
<line> சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை-</line>
<line> இடர்-ஆழி நீங்குகவே என்று.</line>
</verse>

<verse>
<line> என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?-</line>
<line> ஒன்றும் அதனை உணரேன் நான்: அன்று, அது-</line>
<line> அடைத்து, உடைத்து, கண்படுத்த ஆழி; இது-நீ</line>
<line> படைத்து, இடந்து, உண்டு, உமிழ்ந்தபார்.</line>
</verse>

<verse>
<line> பார் அளவும் ஓர் அடி வைத்து, ஓர் அடியும் பார் உடுத்த</line>
<line> நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே: சூர் உருவின்</line>
<line> பேய் அளவு கண்ட பெருமான்! அறிகிலேந்-</line>
<line> நீ அளவு கண்ட நெறி.</line>
</verse>

<verse>
<line> நெறி வாசல் தானேயாய் நின்றானை, ஐந்து,</line>
<line> பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்-</line>
<line> ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த,</line>
<line> ஆலம் அமர் கண்டத்து, அரன்!</line>
</verse>

<verse>
<line> அரன், நாரணன் -நாமம்; ஆன்விடை, புள்-ஊர்தி;</line>
<line> உரை-நூல், மறை; உறையும் கோயில்-வரை, நீர்;</line>
<line> கருமம்-அழிப்பு, அளிப்பு; கையது-வேல், நேமி;</line>
<line> உருவம்-எரி, கார்; மேனி, ஒன்று.</line>
</verse>

<verse>
<line> ஒன்றும் மறந்தறியேன், ஓத நீர் வண்ணனை நான்;</line>
<line> இன்று மறப்பனோ, ஏழைகாள்? அன்று,</line>
<line> கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன், கண்டேந்</line>
<line> திருவரங்கம் மேயான் திசை.</line>
</verse>

<verse>
<line> திசையும், திசை உறு தெய்வமும், தெய்வத்து</line>
<line> இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க்</line>
<line> கண்ணன், நெடு மால், கடல் கடைந்த கார் ஓத</line>
<line> வண்ணன் படைத்த மயக்கு.</line>
</verse>

<verse>
<line> மயங்க, வலம்புரி வாய் வைத்து, வானத்து</line>
<line> இயங்கும் எறி கதிரோந்தன்னை, முயங்கு அமருள்,</line>
<line> தேர் ஆழியால் மறைத்தது என் நீ, திருமாலே!-</line>
<line> போர் ஆழிக் கையால் பொருது?</line>
</verse>

<verse>
<line> பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு, அன்று உன்</line>
<line> ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட</line>
<line> சேவடியை நீட்டி, திசை நடுங்க, விண் துளங்க,</line>
<line> மா வடிவின் நீ அளந்த மண்!</line>
</verse>

<verse>
<line> மண்ணும், மலையும், மறி கடலும், மாருதமும்,</line>
<line> விண்ணும் விழுங்கியது மெய் என்பர்: எண்ணில்,</line>
<line> அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு, அன்று இவ்</line>
<line> உலகு அளவும் உண்டோ  உன் வாய்?</line>
</verse>

<verse>
<line> வாய் அவனை அல்லது வாழ்த்தாது: கை உலகம்</line>
<line> தாயவனை அல்லது தாம் தொழா; பேய் முலை நஞ்சு</line>
<line> ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-</line>
<line> காணா கண், கேளா செவி.</line>
</verse>

<verse>
<line> செவி, வாய், கண், மூக்கு, உடல் என்று ஐம்புலனும்; செந்தீ,</line>
<line> புவி, கால், நீர், விண் பூதம் ஐந்தும்; அவியாத</line>
<line> ஞானமும், வேள்வியும், நல்லறாமும் என்பரே-</line>
<line> ஏனமாய் நின்றாற்கு இயல்வு!</line>
</verse>

<verse>
<line> இயல்வு ஆக, ஈன் துழாயான் அடிக்கே செல்ல</line>
<line> முயல்வார் இயல் அமரர், முன்னம்; இயல்வு ஆக</line>
<line> நீதியால் ஓதி, நியமங்களால் பரவ</line>
<line> ஆதியாய் நின்றார்-அவர்.</line>
</verse>

<verse>
<line> அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி,</line>
<line> இவர் இவர் எம் பெருமான் என்று, சுவர்மிசைச்</line>
<line> சார்த்தியும் வைத்தும் தொழுவர்: உலகு அளந்த</line>
<line> மூர்த்தி உருவே முதல்.</line>
</verse>

<verse>
<line> முதல் ஆவார் மூவரே; அம் மூவருள்ளும்</line>
<line> முதல் ஆவான் மூரி நீர் வண்ணன்; முதல் ஆய</line>
<line> நல்லான் அருள் அல்லால், நாம நீர் வையகத்துப்</line>
<line> பல்லார் அருளும் பழுது.</line>
</verse>

<verse>
<line> பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி,</line>
<line> அழுதேன்; அரவு-அணைமேல் கண்டு, தொழுதேந்</line>
<line> கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண்</line>
<line> அடல் ஓத வண்ணர் அடி.</line>
</verse>

<verse>
<line> அடியும் படி கடப்ப, தோள் திசைமேல் செல்ல,</line>
<line> முடியும் விசும்பு அளந்தது என்பர்-வடி உகிரால்</line>
<line> ஈரணியனது ஆகம், இரும் சிறைப் புள்</line>
<line> ஊர்ந்தான், உலகு அளந்த நான்று.</line>
</verse>

<verse>
<line> நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு, உறி வெண்ணெய்</line>
<line> தோன்ற உண்டான், வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்</line>
<line> பொருது உடைவு கண்டானம், புள்வாய் கீண்டானும்-</line>
<line> மருது இடை போய் மண் அளந்த மால்.</line>
</verse>

<verse>
<line> மாலும் கருங் கடலே! என் நோற்றாய்-வையகம் உண்டு</line>
<line> ஆலின் இலைத் துயின்ற ஆழியான், கோலக்</line>
<line> கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்</line>
<line> திருமேனி நீ தீண்டப்பெற்று?</line>
</verse>

<verse>
<line> பெற்றார் தளை கழலப் பேர்ந்து, ஓர் குறள் உருவாய்,</line>
<line> செற்றார் படி, கடந்த செங்கண் மால் நல் தா-</line>
<line> மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி,</line>
<line> நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று.</line>
</verse>

<verse>
<line> நின்று, நிலம் அங்கை நீர் ஏற்று, மூவடியால்,</line>
<line> சென்று, திசை அளந்த செங்கண் மாற்கு என்றும்</line>
<line> படை ஆழி: புள் ஊர்தி: பாம்பு-அணையான் பாதம்</line>
<line> அடை, ஆழி நெஞ்சே! அறி.</line>
</verse>

<verse>
<line> அறியும் உலகு எல்லாம், யானேயும் அல்லேந்</line>
<line> பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய்! வெறி கமழும்</line>
<line> காம்பு ஏய் மெந்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத்</line>
<line> தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு.</line>
</verse>

<verse>
<line> தழும்பு இருந்த-சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை;</line>
<line> தழும்பு இருந்த-தாள், சகடம் சாடி; தழும்பு இருந்த-</line>
<line> பூங்கோதையாள் வெருவ, பொன் பெயரோன் மார்பு இடந்த</line>
<line> வீங்கு ஓத வண்ணர் விரல்.</line>
</verse>

<verse>
<line> விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு, ஆய்ச்சி</line>
<line> உரலோடு உறப் பிணித்த நான்று, குரல் ஓவாது</line>
<line> ஏங்கி, நினைந்து, அயலார் காண இருந்திலையே?</line>
<line> ஓங்கு ஓத வண்ணா! உரை.</line>
</verse>

<verse>
<line> உரை மேற்கொண்டு, என் உள்ளம், ஓவாது, எப்போதும்,</line>
<line> வரைமேல் மரதகமே போலத் திரைமேல்</line>
<line> கிடந்தானை, கீண்டானை, கேழலாய்ப் பூமி</line>
<line> இடந்தானை ஏத்தி எழும்.</line>
</verse>

<verse>
<line> எழுவார், விடைகொள்வார், ஈன் துழாயானை</line>
<line> வழுவாவகை நினைந்து வைகள் தொழுவார்</line>
<line> வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர்</line>
<line> மனச் சுடரைத் தூண்டும் மலை.</line>
</verse>

<verse>
<line> மலையால் குடை கவித்து, மா வாய் பிளந்து,</line>
<line> சிலையால் மராமரம் ஏழ் செற்று, கொலை யானைப்</line>
<line> போர்க்க் கோடு ஓசித்தனவும், பூங் குருந்தம் சாய்த்தனவும்-</line>
<line> கார்க் கோடு பற்றியான் கை.</line>
</verse>

<verse>
<line> கைய-வலம்புரியும் நேமியும்; கார் வண்ணத்து</line>
<line> ஐய! மலர்மகள் நின் ஆகத்தாள்; செய்ய</line>
<line> மறையான் நின் உந்தியான்; மா மதிள் மூன்று எய்த</line>
<line> இறையான் நின் ஆகத்து இறை.</line>
</verse>

<verse>
<line> இறையும், நிலனும், இரு விசும்பும், காற்றும்,</line>
<line> அறை புனலும், செந்தீயும் ஆவான்; பிறை மருப்பின்</line>
<line> பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த</line>
<line> செங்கண் மால் கண்டாய்-தெளி.</line>
</verse>

<verse>
<line> தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்து</line>
<line> எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை, எளிது ஆகத்</line>
<line> தாய் நாடு கன்றே போல், தண் துழாயான் அடிக்கே</line>
<line> போய் நாடிக்கொள்ளும்-புரிந்து.</line>
</verse>

<verse>
<line> புரி ஒரு கை பற்றி, ஓர் பொன் ஆழி ஏந்தி,</line>
<line> அரி உருவும் ஆள் உருவும் ஆகி, எரி உருவ</line>
<line> வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால், மற்று</line>
<line> எண்ணத்தான் ஆமோ, இமை?</line>
</verse>

<verse>
<line> இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி,</line>
<line> அமையாகப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்,</line>
<line> ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய்</line>
<line> நாகத்து அணையான் நகர்.</line>
</verse>

<verse>
<line> நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல்,</line>
<line> பகர மறை பயந்த பண்பன் பெயரினையே</line>
<line> புந்தியால் சிந்தியாது, ஓதி உரு எண்ணும்</line>
<line> அந்தியால் ஆம் பயன் அங்கு என்?</line>
</verse>

<verse>
<line> என், ஒருவர் மெய் என்பர்-ஏழ் உலகு உண்டு, ஆல் இலையில்</line>
<line> முன் ஒருவன் ஆய முகில் வண்ணா! நின் உருகிப்</line>
<line> பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால்: பேர் அமர்க் கண்</line>
<line> ஆய்த் தாய் முலை தந்த ஆறு?</line>
</verse>

<verse>
<line> ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்</line>
<line> கூறிய குற்றமாக் கொள்ளல் நீ: தேறி,</line>
<line> நெடியோய்! அடி நடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து</line>
<line> முடியான் படைத்த முரண்?</line>
</verse>

<verse>
<line> முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே-முன்னம்</line>
<line> தரணி தனது ஆகத்தானே இரணியனைப்</line>
<line> புண் நிரந்த வள் உகிர் ஆர் பொனாழிக் கையால், நீ</line>
<line> மண் இரந்து கொண்ட வகை?</line>
</verse>

<verse>
<line> வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள், நாளும்,</line>
<line> புகை, விளக்கும், பூம் புனலும் ஏந்தி, திசைதிசையின்</line>
<line> வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே-வெண் சங்கம்</line>
<line> ஊதிய வாய் மால் உகந்த ஊர்.</line>
</verse>

<verse>
<line> ஊரும் வரு அரவம், ஒண் குறவர் மால் யானை</line>
<line> பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய</line>
<line> மின் என்று, புற்று அடையும் வேங்கடமே-மேல சுரர்</line>
<line> எம் என்னும் மாலது இடம்.</line>
</verse>

<verse>
<line> இடந்தது பூமி; எடுத்தது குன்றம்;</line>
<line> கடந்தது கஞ்சனை, முன் அஞ்ச; கிடந்ததுவும்</line>
<line> நீர் ஓத மா கடலே; நின்றதுவும் வேங்கடமே-</line>
<line> பேர் ஓத வண்ணர், பெரிது.</line>
</verse>

<verse>
<line> பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ</line>
<line> வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்</line>
<line> மீன் வீழக் கண்டு, அஞ்சும் வேங்கடமே-மேல் அசுரர்-</line>
<line> கோன் வீழக் கண்டு, உகந்தான் குன்று.</line>
</verse>

<verse>
<line> குன்று அனைய குற்றம் செயினும், குணம் கொள்ளும்,</line>
<line> இன்று முதலாக-என் நெஞ்சே! என்றும்,</line>
<line> புறன் உரையே ஆயினும், பொன் ஆழிக் கையான்</line>
<line> திறன் உரையே சிந்தித்திரு.</line>
</verse>

<verse>
<line> திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்,</line>
<line> திருமகட்கே திர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல்</line>
<line> பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த</line>
<line> மால் ஓத வண்ணர் மனம்?</line>
</verse>

<verse>
<line> மன மாசு தீரும்; அரு வினையும் சாரா;</line>
<line> தனம் ஆய தானே கைகூடும்: புனம் மேய</line>
<line> பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி,</line>
<line> தம் தொழாநிற்பார் தமர்.</line>
</verse>

<verse>
<line> தமர் உகந்தது எவ் உருவம், அவ் உருவம் தானே;</line>
<line> தமர் உகந்தது எப் பேர், மற்று அப் பேர்; தமர் உகந்து</line>
<line> எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே,</line>
<line> அவ் வண்ணம்-ஆழியான் ஆம்.</line>
</verse>

<verse>
<line> ஆமே அமரர்க்கு அறிய?-அது நிற்க,</line>
<line> நாமே அறிகிற்போம், நல் நெஞ்சே! பூ மேய</line>
<line> மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை</line>
<line> பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு.</line>
</verse>

<verse>
<line> பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற</line>
<line> வெண் புரி நூல் மார்பன் வினை தீர, புண் புரிந்த</line>
<line> ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம்</line>
<line> போகத்தால் பூமி ஆள்வார்.</line>
</verse>

<verse>
<line> வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்,</line>
<line> சேரி திரியாமல் செந்நிறீஇ, கூரிய</line>
<line> மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே-மேல் ஒருநாள்</line>
<line> கைந் நாகம் காத்தான் கழல்.</line>
</verse>

<verse>
<line> கழல் ஒன்று எடுத்து, ஒரு கை சுற்றி, ஓர் கைமேல்</line>
<line> சுழலும் சுராசுரர்கள் அஞ்ச, அழலும்</line>
<line> செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல</line>
<line> மருவு, ஆழி நெஞ்சே! மகிழ்.</line>
</verse>

<verse>
<line> மகிழ் அலகு ஒன்றே போல், மாறும் பல் யாக்கை</line>
<line> நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால், முகிழ் விரிந்த</line>
<line> சோதிபோல் தோன்றும் சுடார் பொன் நெடு முடி எம்</line>
<line> ஆதி காண்பார்க்கும் அரிது.</line>
</verse>

<verse>
<line> அரிய புலன் ஐந்து அடக்கி, ஆய் மலர் கொண்டு, ஆர்வம்</line>
<line> புரிய பரிசினால் புல்கில், பெரியனாய்</line>
<line> மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர்</line>
<line> ஏற்றானைக் காண்பது எளிது.</line>
</verse>

<verse>
<line> எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு, என் உள்ளம்!</line>
<line> தெளிய, தெளிந்தொழியும் செவ்வே; களியில்</line>
<line> பொருந்தாதவனைப் பொரால் உற்று, அரியாய்</line>
<line> இருந்தான் திருநாமம் எண்.</line>
</verse>

<verse>
<line> எண்மர், பதினொருவர், ஈர்-அறுவர், ஓர் இருவர்</line>
<line> வண்ண மலர் ஏந்தி, வைகலும் நண்ணி,</line>
<line> ஒரு மாலையால் பரவி, ஓவரது, எப்போதும்,</line>
<line> திருமாலைக் கைதொழுவர் சென்று.</line>
</verse>

<verse>
<line> சென்றால் குடை ஆம்; இருந்தால் சிங்காசனம் ஆம்;</line>
<line> நின்றால் மரவடி ஆம்; நீள் கடலுள் என்றும்</line>
<line> புணை ஆம்; மணி விளக்கு ஆம்; பூம் பட்டு ஆம்; புல்கும்</line>
<line> அணை ஆம்-திருமாற்கு அரவு.</line>
</verse>

<verse>
<line> அரவம், அடல் வேழம், ஆன், குருந்தம், புள் வாய்,</line>
<line> குரவை, குடம், முலை, மல், குன்றம்-கரவு இன்றி,</line>
<line> விட்டு, இறுத்து, மேய்த்து, ஓசித்து, கீண்டு, கோத்து, ஆடி, உண்டு,</line>
<line> அட்டு, எடுத்த-செங்கண் அவன்.</line>
</verse>

<verse>
<line> அவன் தமர் எவ் வினையர் ஆகிலும், எம் கோந்</line>
<line> அவன் தமரே என்று ஒழிவது அல்லால், நமன் தமரால்</line>
<line> ஆராயப்பட்டு அறியார் கண்டீர்-அரவு-அணைமேல்</line>
<line> பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர்.</line>
</verse>

<verse>
<line> பேரே வரப் பிதற்றல் அல்லால், என் பெம்மானை</line>
<line> ஆரே அறிவார்? அது நிற்க, நேரே</line>
<line> கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலாந்கண்ணன்</line>
<line> அடிக்கமலம்-தன்னை அயன்.</line>
</verse>

<verse>
<line> அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன்; அஞ்சி,</line>
<line> உய, நின் திருவடியே சேர்வான், நயம் நின்ற</line>
<line> நல் மாலை கொண்டு, நமோ நாரணா என்னும்</line>
<line> சொல்-மாலை கற்றேந்தொழுது.</line>
</verse>

<verse>
<line> தொழுது மலர் கொண்டு, தூபம் கை ஏந்தி,</line>
<line> எழுதும்; எழு, வாழி, நெஞ்சே! பழுது இன்றி</line>
<line> மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்:</line>
<line> அந்தரம் ஒன்று இல்லை, அடை.</line>
</verse>

<verse>
<line> அடைந்த அரு வினையோடு அல்லல், நோய், பாவம்</line>
<line> மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில், நுடங்கு இடையை</line>
<line> முன் இலங்கை வைத்தான் முரண் அழிய, முன் ஒரு நாள்,</line>
<line> தன் வில் அங்கை வைத்தான் சரண்.</line>
</verse>

<verse>
<line> சரணா மறை பயந்த தாமரையானோடு,</line>
<line> மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய</line>
<line> பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி, மற்று அறியாது-</line>
<line> ஓர் ஆழி சூழ்ந்த உலகு.</line>
</verse>

<verse>
<line> உலகும், உலகு இறந்த ஊழியும், ஒண் கேழ்</line>
<line> விலகு கருங் கடலும், வெற்பும், உலகினில்</line>
<line> செந்தீயும், மாருதமும், வானும், திருமால்-தன்</line>
<line> புந்தியில் ஆய புணர்ப்பு.</line>
</verse>

<verse>
<line> புணர் மருதின் ஊடு போய், பூங் குருந்தம் சாய்த்து,</line>
<line> மணம் மருவ மால் விடை ஏழ் செற்று, கணம் வெருவ</line>
<line> ஏழ் உலகும் தாயினவும், எண் திசையும் போயினவும்-</line>
<line> சூழ் அரவப் பொங்கு அணையான் தோள்.</line>
</verse>

<verse>
<line> தோள் அவனை அல்லால் தொழா; என் செவி இரண்டும்</line>
<line> கேள்-அவனது இன் மொழியே கேட்டிருக்கும்; நா நாளும்</line>
<line> கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே;</line>
<line> நாணாமை நள்ளேன் நயம்.</line>
</verse>

<verse>
<line> நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு;</line>
<line> உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; வியவேன்;</line>
<line> திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்;</line>
<line> வரும் ஆறு எநென்மேல் வினை?</line>
</verse>

<verse>
<line> வினையால் அடர்ப்படார்; வெம் நரகில் சேரார்;</line>
<line> தினையேனும் தீக்கதிக்கண் செல்லார்-நினைதற்கு</line>
<line> அரியானை, சேயானை, ஆயிரம் பேர்ச் செங்கண்</line>
<line> கரியானைக் கைதொழுதக்கால்.</line>
</verse>

<verse>
<line> காலை எழுந்து உலகம் கற்பனவும், கற்று உணர்ந்த</line>
<line> மேலைத் தலை மறையோர் வேட்பனவும், வேலைக்கண்</line>
<line> ஓர் ஆழியான் அடியே: ஓதுவதும், ஓர்ப்பனவும்-</line>
<line> பேர் ஆழி கொண்டான் பெயர்.</line>
</verse>

<verse>
<line> பெயரும் கருங் கடலே நோக்கும்-ஆறு; ஒண் பூ</line>
<line> உயரும் கதிரவனே நோக்கும்; உயிரும்</line>
<line> தருமனையே நோக்கும்; ஒண் தாமரையாள் கேள்வன்</line>
<line> ஒருவனையே நோக்கும்-உணர்வு.</line>
</verse>

<verse>
<line> உணர்வார் ஆர்- உன்பெருமை, ஊழிதோறு ஊழி?</line>
<line> உணர்வார் ஆர்-உன் உருவம்-தன்னை? உணர்வார் ஆர்-</line>
<line> விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப்</line>
<line> பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்?</line>
</verse>

<verse>
<line> பாலந்தனது உருவாய், ஏழ் உலகு உண்டு, ஆல் இலையிந்</line>
<line> மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர்; ஆல் அன்று</line>
<line> வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?</line>
<line> சோலை சூழ் குன்று எடுத்தாய்! சொல்லு.</line>
</verse>

<verse>
<line> சொல்லும்-தனையும்-தொழுமின், விழும் உடம்பு</line>
<line> செல்லும்-தனையும், திருமாலை நல் இதழ்த்</line>
<line> தாமத்தால், வேள்வியால், தந்திரத்தால், மந்திரத்தால்-</line>
<line> நாமத்தால் ஏத்துதிரேல், நன்று.</line>
</verse>

<verse>
<line> நன்று பிநீ மூப்புக் கையகற்றி, நான்கு ஊழி</line>
<line> நின்று நிலம் முழுதும் ஆண்டாலும், என்றும்</line>
<line> விடல், ஆழி நெஞ்சமே! வேண்டினேன் கண்டாய்-</line>
<line> அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு.</line>
</verse>

<verse>
<line> அன்பு ஆழியானை அணுகு என்னும்: நா அவந்தன்</line>
<line> பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும்: முன்பு ஊழி</line>
<line> காணானைக் காண் என்னும் கண்: செவி கேள் என்னும்-</line>
<line> பூந் ஆரம் பூண்டான் புகழ்.</line>
</verse>

<verse>
<line> புகழ்வாய், பழிப்பாய், நீ பூந் துழாயானை;</line>
<line> இகழ்வாய், கருதுவாய், நெஞ்சே!-திகழ் நீர்க்</line>
<line> கடலும், மலையும், இரு விசும்பும், காற்றும்,</line>
<line> உடலும், உயிரும் ஏற்றான்.</line>
</verse>

<verse>
<line> ஏற்றான், புள் ஊர்ந்தான்; எயில் எரித்தான், மார்வு இடந்தான்;</line>
<line> நீற்றான், நிழல் மணி வண்ணத்தான்; கூற்று ஒருபால்</line>
<line> மங்கையான், பூமகளான்; வார் சடையான், நீள் முடியான்;</line>
<line> கங்கையான், நீள் கழலாந்காப்பு.</line>
</verse>

<verse>
<line> காப்பு உன்னை உன்னக் கழியும்; அரு வினைகள்-</line>
<line> ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும்; மூப்பு உன்னைச்</line>
<line> சிந்திப்பார்க்கு இல்லை; திருமாலே! நின் அடியை</line>
<line> வந்திப்பார் காண்பர்-வழி.</line>
</verse>

<verse>
<line> வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா</line>
<line> மொழி நின்ற மூர்த்தியரே ஆவர்: பழுது ஒன்றும்</line>
<line> வாராதவண்ணமே விண் கொடுக்கும்-மண் அளந்த</line>
<line> சீரான் திருவேங்கடம்.</line>
</verse>

<verse>
<line> வேங்கடமும், விண்ணகரும், வெஃகாவும், அஃகாத</line>
<line> பூங் கிடங்கின் நீள் கோவல் பொந்நகரும், நான்கு இடத்தும்</line>
<line> நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தானே,</line>
<line> என்றால், கெடுமாம்-இடர்.</line>
</verse>

<verse>
<line> இடர் ஆர் படுவார்! எழு நெஞ்சே! வேழம்</line>
<line> தொடர் வான் கொடு முதலி சூழ்ந்த படம் உடைய</line>
<line> பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்-</line>
<line> கொய்ந் நாகப் பூம் போது கொண்டு.</line>
</verse>

<verse>
<line> கொண்டானை அல்லால், கொடுத்தாரை யார் பழிப்பார்?</line>
<line> மண் தா என இரந்து மாவலியை, ஒண் தாரை</line>
<line> நீர் அங்கை தோய, நிமிர்ந்திலையே-நீள் விசும்பில்</line>
<line> ஆரம் கை தோய, அடுத்து?</line>
</verse>

<verse>
<line> அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி,</line>
<line> படுத்த பெரும் பாழி சூழ்ந்த, விடத்து அரவை</line>
<line> வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு</line>
<line> அல்லாதும், ஆவரோ-ஆள்?</line>
</verse>

<verse>
<line> ஆள் அமர் வென்றி அடு களத்துள் அண்ணான்று,</line>
<line> வாள் அமர் வேண்டி, வரை நட்டு, நீள் அரவைச்</line>
<line> சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே-தொல் நரகைப்</line>
<line> பற்றிக் கடத்தும் படை.</line>
</verse>

<verse>
<line> படை ஆரும் வாள் கண்ணார் பாரசி-நாள் பைம் பூந்</line>
<line> தொடையலோடும் ஏந்திய தூபம், இடை இடையில்</line>
<line> மீன்மாய, மாசூணும் வேங்கடமே-மேல் ஒரு நாள்,</line>
<line> மான் மாய எய்தான் வரை.</line>
</verse>

<verse>
<line> வரை குடை, தோள் காம்பு ஆக, ஆ-நிரை காத்து, ஆயர்</line>
<line> நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய</line>
<line> நீர் ஆழியுள் கிடந்து, நேர் ஆம் நிசாசரர்மேல்</line>
<line> பேர் ஆழி கொண்ட பிரான்!</line>
</verse>

<verse>
<line> பிரான்! உன் பெருமை பிறர் ஆர் அரிவார்?</line>
<line> உராஅய் உலகு அளந்த நான்று, வராகத்து</line>
<line> எயிற்று-அளவு போதா ஆறு என்கொலோ-எந்தை</line>
<line> அடிக்கு அளவு போந்த படி?</line>
</verse>

<verse>
<line> படிகண்டு அறிதியே? பாம்பு-அணையினான் புள்-</line>
<line> கொடி கண்டு அறிதியே? கூறாய்-வடிவில்</line>
<line> பொறி ஐந்தும் உள் அடக்கி, போதொடு நீர் ஏந்தி,</line>
<line> நெறி நின்ற நெஞ்சமே! நீ.</line>
</verse>

<verse>
<line> நீயும் திருமகளும் நின்றாயால்-குன்று எடுத்துப்</line>
<line> பாயும் பனி மறுத்த பண்பாளா!-வாசல்</line>
<line> கடை கழியா, உள் புகா, காமர் பூங் கோவல்</line>
<line> இடைகழியே பற்றி, இனி.</line>
</verse>

<verse>
<line> இனி, யார் புகுவார் எழு நரக வாசல்?</line>
<line> முனியாது மூரித் தாள் கோமின்; கனி சாயக்</line>
<line> கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு</line>
<line> நன்கு அறிந்த - நாவலம் சூழ் நாடு.</line>
</verse>

<verse>
<line> நாடிலும் நின் அடியே நாடுவன்; நாள்தோறும்</line>
<line> பாடிலும் நின் புகழே பாடுவன்; சூடிலும்</line>
<line> பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு,</line>
<line> என் ஆகில் என்னே-எனக்கு?</line>
</verse>

<verse>
<line> எனக்கு ஆவர் ஆர் ஒருவரே-எம் பெருமான்</line>
<line> தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம்-</line>
<line> பூ மேனி, காணப் பொதி அவிழும் பூவைப் பூ-</line>
<line> மா மேனி காட்டும், வரம்.</line>
</verse>

<verse>
<line> வரத்தால் வலி நினைந்து, மாதவ! நின் பாதம்</line>
<line> சிரத்தால் வணங்கானாம் என்றே- உரத்தினால்</line>
<line> ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை,</line>
<line> ஓர் அரியாய், நீ இடந்தது ஊன்?</line>
</verse>

<verse>
<line> ஊனக் குரம்பையின் உள் புக்கு, இருள் நீக்கி,</line>
<line> ஞானச் சுடர் கொளீஇ, நாள்தோறும், ஏனத்து</line>
<line> உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்</line>
<line> மருவாதார்க்கு உண்டாமோ-வான்?</line>
</verse>

<verse>
<line> வான் ஆகி, தீ ஆய், மறி கடல் ஆய், மாருதம் ஆய்,</line>
<line> தேன் ஆகி, பால் ஆம் திருமாலே! ஆநாய்ச்சி</line>
<line> வெண்ணெய் விழுங்க நிறையுமே-முன் ஒரு நாள்</line>
<line> மண்ணை உமிழ்ந்த வயிறு?</line>
</verse>

<verse>
<line> வயிறு அழல, வாள் உருவி வந்தானை, அஞ்ச,</line>
<line> எயிறு இலக, வாய் மடுத்தது என் நீ-பொறி உகிரால்,</line>
<line> பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா! நின்</line>
<line> சேவடிமேல் ஈடு அழிய, செற்று?</line>
</verse>

<verse>
<line> செற்று, எழுந்து தீவிழித்து, சென்ற இந்த ஏழுலகும்,</line>
<line> மற்று இவை, ஆ என்று வாய் அங்காந்து, முற்றும்</line>
<line> மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால்,</line>
<line> இறையேனும் ஏத்தாது என் நா.</line>
</verse>

<verse>
<line> நா, வாயில் உண்டே; நமோ நாரணா என்று</line>
<line> ஓவாது உரைக்கும் உரை உண்டே; மூவாத</line>
<line> மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே: எநொருவர்</line>
<line> தீக் கதிக்கண் செல்லும் திறம்?</line>
</verse>

<verse>
<line> திறம்பாது-என் நெஞ்சமே! செங்கண் மால் கண்டாய்</line>
<line> அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்; புறம் தான், இம்</line>
<line> மண் தான், மறிகடல் தான், மாருதம் தான், வான் தானே</line>
<line> கண்டாய்-கடைக்கண் பிடி.</line>
</verse>

<verse>
<line> பிடி சேர் களிறு அளித்த பேராளா! உந்தன்</line>
<line> அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே- பொடி சேர்</line>
<line> அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த</line>
<line> புனல்-கங்கை என்னும் பேர்ப் பொன்?</line>
</verse>

<verse>
<line> பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்,</line>
<line> நின்று உலகம் தாய நெடுமாலும், என்றும்</line>
<line> இருவர் அங்கத்தால் திரிவரேலும், ஒருவன்</line>
<line> ஒருவன் அங்கத்து என்றும் உளன்.</line>
</verse>

<verse>
<line> உளன் கண்டாய், நல நெஞ்சே! உத்தமன்; என்றும்</line>
<line> உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்;</line>
<line> வெள்ளத்தின் உள்ளானும்; வேங்கடத்து மேயானும்,</line>
<line> உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.</line>
</verse>

<verse>
<line> ஓர் அடியும், சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும்,</line>
<line> ஈர் அடியும் காணலாம், என் நெஞ்சே!-ஓர் அடியில்</line>
<line> தாயவனை, கேசவனை, தண் துழாய் மாலை சேர்</line>
<line> மாயவனையே மனத்து வை.</line>
</verse>

<verse>
<line> முதல் திருவந்தாதி முற்றும்.</line>
</verse>

</padiyam>

</thirumozi>

