﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="tevaram.xsl"?>

<tirumurai>

<heading>
<salutation>திருச்சிற்றம்பலம்</salutation>
<author>திருஞானசம்பந்தர் அருளிய</author>
<authorabbr>sam</authorabbr>
<title>தேவாரத் திருப்பதிகங்கள்</title>
<tirumurai>இரண்டாம் திருமுறை</tirumurai>
<number>2</number>
<total>122</total>
<file>(1/6)</file>
</heading>

<pathikam>

<place>திருப் பூந்தராய் வினா உரை</place>

<number>1</number>
<pann>இந்தளம்</pann>

<verse>
<line>செந்நெல் அம் கழனிப் பழனித்து அயலே செழும்</line>
<line>புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்</line>
<line>துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்  </line>
<line>பின்னூசஞ்சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே?</line>
<number>01</number>
</verse>

<verse>
<line>எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்</line>
<line>பொன் திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச்</line>
<line>சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர்  </line>
<line>பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ?  பெருமானிரே!</line>
<number>02</number>
</verse>

<verse>
<line>சங்கு செம்பவளத்திரள் முத்து அவைதாம் கொடு</line>
<line>பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,</line>
<line>துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர்  </line>
<line>மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே?</line>
<number>03</number>
</verse>

<verse>
<line>சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்</line>
<line>பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்,</line>
<line>சோமனும்(ம்) அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர்  </line>
<line>காமன் வெண் பொடி ஆகக் கடைக்கண் சிவந்ததே?</line>
<number>04</number>
</verse>

<verse>
<line>பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகுவாயன</line>
<line>புள்ளும் நாள்தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்,</line>
<line>துள்ளும் மான்மறி ஏந்திய செங்கையினீர்! சொலீர்  </line>
<line>வெள்ள நீர் ஒரு செஞ்சடை வைத்த வியப்பு அதே?</line>
<number>05</number>
</verse>

<verse>
<line>மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்கு எலாம்</line>
<line>போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,</line>
<line>சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர்! சொலீர்  </line>
<line>காதில் அம் குழை சங்க வெண்தோடு உடன் வைத்ததே?</line>
<number>06</number>
</verse>

<verse>
<line>வருக்கம் ஆர்தரு வான் கடுவ(ன்)னொடு மந்திகள்</line>
<line>தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்,</line>
<line>துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர்  </line>
<line>அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே?</line>
<number>07</number>
</verse>

<verse>
<line>வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்</line>
<line>புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்,</line>
<line>சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர்  </line>
<line>கரிய மால், அயன், நேடி உமைக் கண்டிலாமையே?</line>
<number>08</number>
</verse>

<verse>
<line>வண்டல் அம் கழனி(ம்) மடை வாளைகள் பாய் புனல்</line>
<line>புண்டரீகம் மலர்ந்து மதுத் தரு பூந்தராய்,</line>
<line>தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர்! சொலீர்  </line>
<line>குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறி இன்மையே?</line>
<number>09</number>
</verse>

<verse>
<line>மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்</line>
<line>புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்</line>
<line>பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்</line>
<line>அகல்வர், தீவினை, நல்வினையோடு உடன் ஆவரே.</line>
<number>10</number>
</verse>

</pathikam>


</tirumurai>


