nUl
preface.html
nUl.html
nUlAciriyar.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
ஏரெழுபது.
ஏரைப்பற்றிக் கூறுகின்ற எழுபது செய்யுள்களினா லாகிய தொரு நூலென விரியும்; இரண்டாம் வேற்றுமை யுருபும் பயனுமுடன் தொக்க தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. உழவு அல்லது அத்தொழிலுக்கு இன்றியமையாத கருவியாகிய கலப்பையைக் குறிக்கின்ற “ஏர்” என்ற சொல் — இங்கு, ஆகு பெயராய், அதனையுடைய வேளாளரைக் குறிக்கும்; “சுழன்று மேர்ப்பின்ன துலகம்” என்றவிடத்து “ஏர்” என்பதுபோல; எனவே, வேளாளரதுசிறப்பைக் கூறும் எழுபதுசெய்யுள்களினா லாகிய நூலென்பது, திரண்டபொருளாம். அன்றி, “ஏர்” என்ற சிறப்புப்பெயர் — இங்கு, பொதுப்பொருளின் மேலதாய், வேளாளர்க்கு இன்றியமையாத கருவிகளை யுணர்த்துமெனக்கொண்டு, கலப்பை முதலிய உழவுகருவிகளைக் குறித்துக் கூறும் எழுபது செய்யுள்களையுடைய தொரு நூலெனப் பொருள்கொள்வாரு முளர்: (கருவிகள் தவிரப் பயிர்விளைதல் முதலியனவும் இதில் கூறப்படுகின்றன). ஆகவே, “முதனூல் கருத்தன் அளவு மிகுதி, பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும், இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே” என்று கூறப்பட்ட நூற் பெயர்வகைகளுள் அளவாலும், நுதலியபொருளாலும் பெயர் பெற்றது இதுவென்று அறிக. (நுதலியபொருள் — கூறப்பட்ட விஷயம்.) இத்தொடர்க்கு வெவ்வேறுவகையாக இன்னும் நலிந்து பொருள்கொள்வதெல்லாம் நூலாசிரியர்கருத்தோடு மாறுபடு மாதலால், கொள்ளத்தக்கனவல்ல.
செந்தமிழ்ப் பரமாசாரியராகிய அகத்தியமகாமுனிவரது மாணாக்கர்களான தொல்காப்பியர்முதலிய பன்னிருவராலும் இயற்றப்பட்ட பன்னிரு படலமென்னும் புறப்பொருளிலக்கண நூலின் வழிநூலாக ஐயனாரிதனார் செய்த புறப்பொருள் வெண்பாமாலையிற் காணப்படுகிற புறப்பொருள்திணை பன்னிரண்டனுள் எட்டாவதாகிய வாகைத்திணையுள் முப்பத்தோராவது துறையாகிய கிணை நிலையின்பாற்படும் இவ்வேரெழுபது, என்பர்; அத்துறையின் இலக்கணம்: “தண்பணைவயலுழவனைத், தெண்கிணைவன் றிருந்துபுகழ் கிளந்தன்று.” (இதன்பொருள்: மருத நிலத்தில் கழனியிடத்து வேளாளனைத் தெளிந்தகிணைகொட்டுமவன் நல்லகீர்த்தியைச் சொல்லியது என்றவாறு.) வரலாறு:— “பகடுவாழ்கென்று பனிவயலுளாமை, யகடுபோலங்கட்டடாரித் துகடுடைத்துக், குன்றுபோற் போர்விற் குரிசில் வளம் பாட, வின்றுபோ மெங்கட் கிடர்.” (இதன்பொருள்: ஏர்வாழ்க வென்று சொல்லிக் குளிர்ந்தகழனியுள் ஆமையின துவயிறுபோன்ற அழகியகண்ணினையுடைய கிணையை மாசைத் துடைத்து மலையை யொக்கும் நெற்போர் விளக்கத்தையுடைய உபகாரிதன் செல்வத்தை இன்றுநீங்கும் எங்கட்கு மிடி என்றவாறு.) எனக் காண்க. இந்நூலில் கிணைகொட்டுமவன் புகழ்வதாக வெளிப்படையாகக் கூறாவிடினும், வேளாளரைப்புகழ்தல் வெளிப்படையா யிருத்தல் காண்க.
ஆசிரியர் தொல்காப்பியனார் வலியும் வருத்தமு மின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்குவருணத்தோரும் அறிவரும் தாபதர் முதலியோரும் தம்முடைய கூறுபாடுகளைத் தாமேமிகுதிப்படுத்தலும் பிறர்மீக்கூறுபடுத்தலும் வாகைத்திணை யென்றும், இவ்வாகைத்திணை புணர்ச்சியின்நீங்கி இல்லறம் நிகழ்த்திப் புகழெய்துதற்குப்பிரியும் பாலைத்திணைக்குப் புறனென்றுங் கூறி, அதன்வகைகளை விரித்தோதுவர். (“வாகை தானே பாலையது புறனே.” “தாவில்கொள்கைத் தத்தங்கூற்றைப், பாகுபட மிகுதிப்படுத்த லென்ப,” “அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும், ஐவகைமரபினரசர்பக்கமும், இருமூன்றுமரபி னேனோர்பக்கமும்” என்றவை முதலாகக் காண்க.) “இருமூன்றுமரபி னேனோர்பக்கமும்” என்ற விடத்து, உரைகாரர் “வேதமொழிந்தனவோதலும் ஈதலும், உழவும், நிரையோம்பலும், வாணிகமும், வழிபாடும் ஆகிய அறு வகையிலக்கணத்தையுடைய வேளாளர்பக்கமும்” என்று உரை கூறியிருத்தலால், இந்நூல் அங்ஙனமுள்ள வேளாளரது உழவு தொழிலைக் கூறுதல்பற்றி, வாகைத்திணையுள் ஏனோர்பக்கத்திற் சேர்ந்த தென்க. வேளாளர்க்கு அறுவகைத்தொழிலு முரியனவேனும், “வேளாண் மாந்தர்க்கு உழுதுஊண் அல்லது, இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” என்னுந் தொல்காப்பியத்துமரபியற் சூத்திரத்தாலும், “வேளாண்மாந்தர் பலவகைப்பட்ட தொழிலினரேனும் உழுதொழிலே பெரும்பான்மைத்தாகலான் அதனையே சிறப்பித்துச் சொல்லுதல், மரபு” என்ற அதன் உரையாலும் வேளாளர்க்கு உழவுதொழிலே சிறந்ததாகக் கூறுதல் மரபென உணர்க.
இந்நூல், முதலிற் பாயிரச்செய்யுள்களையும், “உழவுநாட் கோடல்” முதல் “மெய்ப்பேறு” வரையி லுள்ள அறுபத்தெட்டு விஷயங்களைத் தெரிவிக்கின்ற செய்யுள்களையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளையும் பெற்றுள்ளது.
இந்நூல், இன்ன நூலின் வழியே தோன்றிய தென்றுகொள்ள இடமில்லாமையால், முதனூல் வழிநூல் சார்புநூல் என்ற நூல் வகை மூன்றில் முதனூலின்பாற்படும். இந்நூல் ஒருவிஷயத்தைக் குறித்து எழுபது செய்யுள் கூறுவதனால், வித்தாரகவியாகும்.