pATal06
pATal05.html
pATal06.html
pATal07.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
6. நுகத்தடிச்சிறப்பு.
நுகம்+தடி = நுகத்தடி: இருபெயரொட்டு. நுகம் — கலப்பையை யிழுத்துச்செல்லும் உழவுமாட்டின் கழுத்தின்மேல் வைக்கும் மரம்.
6. நுகத்தடிச்சிறப்பு.
உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகிற் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் வெறுமையொடு வீழாமே
கரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே.
(இ—ள்.) உரை ஏற்ற — மந்திரமொழியாகிய வேதத்திற் சிறப்பித்துக் கூறப்படுகின்ற, செங்கதிரோன் — செந்நிறமான கிரணங்களையுடைய சூரியனது, ஒளி நெடு தேர் — ஒளியினையுடைய நீண்ட தேரிலே, பூண்ட — பூட்டப்பட்டுள்ள, நுகம் — நுகத்தடி யானது, திரை ஏற்ற — அலைகளைப்பெற்றுள்ள, கடல் — சமுத்திரத்தினாற்சூழப்பட்ட, உலகில் — இந்நிலவுலகத்தில், செறி — நெருங்கிய, இருளை — இருட்டை, மாற்றுவது — போக்குதற்குக் காரணமாயிருக்கின்றது; கார் ஆளர் — மேகத்தின் தன்மையை யுடைய வேளாளரது, உழும் நுகம் — நிலத்தையுழுதற்குக் கருவியான (கலப்பையின்) நுகத்தடியோ, விரை ஏற்ற — புகழ்மணந் தங்கிய, இரு நிலத்தோர் — பெருமை பொருந்திய நிலவுலகத்திலுள்ளவர், வெறுமையொடு வீழாமே — தரித்திரத்தினால் அழியாதபடி, கரை ஏற்றும் — (அவரைக்) கரையேற்றுகின்ற, நுகம் அன்றோ — நுகத்தடியாகுமல்லவோ? (எ - று.)
உலகத்திலுள்ள புறவிருளைமாத்திரம் நீக்குகின்ற சூரியனது தேரின் நுகத்தைக் காட்டிலும் உலகிலுள்ளாரது பசிப்பிணியை நீக்கி அன்னவரின் மனத்துயரமாகிய அகவிருளை நீக்குகின்ற வேளாளரது ஏர்நுகமே சிறந்த தென்க; இதில், உபமானமாகிய செங்கதிரோனது தேர் நுகத்தினும் வேளாளரது ஏர்நுகத்திற்குச் சிறப்புத்தோன்றுவது, வேற்றுமையணியாகும். அந்தணர்செய்யும் சூரியநமஸ்காரம் முதலியவற்றை ஏற்றுக்கொள்பவனாதலால், சூரியனை “உரையேற்ற செங்கதிரோன்” என்றாருமாம்: உரையேற்ற — புகழைப்பெற்றுள்ள எனினுமாம். சூரியனுடைய ஒளியைத் தேரின் மேலேற்றி “ஒளிநெடுந்தேர்” என்றார். “விரையேற்ற இரு நிலத்தோர்” என்பதற்கு — (பயன் துய்ப்பதில்) விரைவையுடைய பெரியநிலவுலகத்தோர் என்பாரு முளர். இருநிலத்தோர் — மண்ணுலகம், விண்ணுலகம் ஆகிய இரண்டு நிலத்தி லுள்ளவரெனினுமாம்; மண்ணுலகத்தார்க்கு உணவு வேண்டுமாறுபோலவே, விண் ணுலகத்தார்க்கும் வேள்விகளிற் கொடுக்கப்படும் அன்னரூபமாகிய அவியுணவு வேண்டு மாதலால், “இருநிலத்திலுள்ளவரும் வெறுமையொடு வீழாமே கரையேற்றும் நுகம்” என்றா ரென்க. ஏர்நுகத்தடிக்கு இருளையொழிக்கின்ற சூரியனது தேர் நுகத் தடியை உவமையாகக்கூறி யிருத்தலால், இந்நுகத்தடியால் நீக்கப்படும் வெறுமையை இருளாகக்கொள்க: ஏகதேசவுருவகத்தின்பாற்படும். வெறுமையை இருளாகக்கொள்வதற்குக் காரணம் இம்மை மறுமை வீட்டிற்குமுயலும் அறிவை மயக்கித் தடைசெய்தலினாலாகும்; “வறியார் இருமையறியார்” என்றது காண்க. வெறுமையெனினும், வறுமையெனினும் ஒக்கும்; வறுமையாவது — நுகரப் படும்பொருள் யாவு மில்லாமை. வெறுமையொடுவீழாமே கரையேற்றல் — தரித்திரத்தி லகப்பட்டு அழியாதபடி ஈடேறச் செய்தல்.
ம்
ஏற்ற, ஏல் — பகுதி. செறியிருள் — வினைத்தொகை. வீழாமே — எதிர்மறைத்தெரிநிலைவினையெச்சம்; மே — வினையெச்சவிகுதி. — (6)