pATal33 pATal32.html pATal33.html pATal34.html ஏரெழுபது மகாகவி கம்பர் 33. முடிவிளம்புதற் சிறப்பு.
பொருளடக்கம் | 32. வயலில் முடிசேர்த்தற் சிறப்பு. | 34. கைப்பாங்கின் சிறப்பு. | அகெடமி

முடி விளம்புதலாவது — நாற்றுமுடியை நடும்போது “பயிர் வாழ்க” என்றுகூறுத லென்பர்: இனி, சுமந்துசென்ற நாற்று முடியை ஒன்று இரண்டு என எண்ணுதலென்று உரைத்தாரு முளர்: நடுவோரின்கைக்கு எட்டுமாறு நாற்றுமுடிகளை ஆங்காங்கு எறிதலென்று உரைத்தலு முண்டு; முடிவிளம்புதலென்பது நாற்றுமுடியை நடுதற்காக வீசியெறி தலென்ற இப்பொருளில் இக்காலத்து வழங்குகின்ற தென்பர். 33. முடிவிளம்புதற் சிறப்பு. வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற் செய்யின்முடி விளம்பாரேல் விளம்புவன சிலவுளவோ மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார் ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே. (இ—ள்.) வெய்ய — கொடிய, கலி — வறுமையின், வலி — வலிமையை, தொலைக்கும் — ஒழிக்கவல்ல, வேளாளர்—, விளை — விளைக்கின்ற, வயலில் — வயலிலே, செய்யின் முடி — நாற்றங்காலினின்று பறித்துக் கொண்டுவந்த நாற்றுமுடியை, விளம்பார் ஏல் — விளம்பாரேயானால், மை அறும் அந்தணர்குற்றமற்ற பிராமணர்கள், மறை விளம்பார் — வேதாத்தியயனஞ் செய்யமாட்டார்கள்; மன்னவர் — அரசர்கள், மனு — தருமசாஸ்திரங்களை, விளம்பார் — ஓதமாட்டார்கள்; ஐயம் அறு புலவோரும் — சந்தேகமற நூற்பொருளை யுணர்ந்த தமிழ் வித்துவான்களும், அரு தமிழ் நூல் — அரிய தமிழ் நூலை, விளம்பார் — சொல்லமாட்டார்கள்; (ஆகவே), விளம்புவன — கற்கப்படுபவை, சிலஉளவோ — சில உண்டோ? (எ - று.) முடிவிளம்பி வேளாளர் பயிர்செய்யாவிட்டால், உலகத் தோர்க்கு உண்ண உணவின்றிப்போகப் பசியுடற்று மாதலாலும், “மானங்குலங் கல்வி... பத்தும், பசிவந்திடப்பறந்துபோம்” என்றவாறு பசியுடற்றின் கல்வி முதலியன போய்விடு மாதலாலும், அந்தணர் முதலியோர் மறைமுதலியன விளம்பாரென்க, மனு — இங்கு, மனுஸ்மிருதி முதலிய நூல்கள். ஐயமென்பது திரிபுக்கும் உபலட்சணம்: ஆகவே, ஐயமறுபுலவரென்றது — ஐயந்திரிபற வுணர்ந்த புலவரென்றவாறு. செய் — இங்கு, நாற்றங்கால்.
பொருளடக்கம் | 32. வயலில் முடிசேர்த்தற் சிறப்பு. | 34. கைப்பாங்கின் சிறப்பு. | அகெடமி