pATal45
pATal44.html
pATal45.html
pATal46.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
45. களைகளைதற்சிறப்பு.
45. களைகளைதற்சிறப்பு.
வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்
சுளைகளையுங் கொடுகரைக்கே சொரிபொன்னித் திருநாடர்
விளைகளையுண் செஞ்சாலி வேரூன்றிக் கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே.
(இ—ள்.) வளைகளையும் — சங்குகளையும், மணிகளையும் — இரத்தினங்களையும், மலர்களையும்—, வரும் பலவின் சுளைகளையும் — தோன்றுகின்ற பலாப்பழத்தின்சுளைகளையும், கொடு — அடித்துக் கொண்டுவந்து, கரைக்கே சொரி — கரையிலே ஒதுக்குகின்ற, பொன்னி — காவேரிநதி பாயப்பெற்ற, திருநாடர் — அழகிய சோழ நாட்டை வாழிடமாகக்கொண்ட வேளாளர், விளை — தழைக்கின்ற, நளை — அழகை, உண் — (தன்னகத்தே) கொண்ட, செஞ்சாலி — செந் நெற்பயிர், வேர் ஊன்றி—, கோடு கொள்ள — கிளைபிரிந்து வளரும்படி, களை களையாவிடில் — களை பிடுங்கி யெறியாவிட்டால், வேந்தர் — அரசர், கலி — (உலகத்துத்தோன்றும்) வறுமையை, களையமாட்டார் — போக்கும் வல்லமையுடையவராக மாட்டார்;
உழுதல், எருப்பெய்தல், களைகட்டல், நீர்கால்யாத்தல், காத்தல் என்று பயிரிடுதற்றொழிலில் ஐவகையுண்டு: இவ்வண்ணம் பயிர் செய்வதில் ஐவகைத் தொழிலுள தென்பது “ஏரினு நன்றாலெரு விடுதல் கட்டபின், நீரினு நன்றதன் காப்பு” என்ற திருக்குறளாலும், அதன் உரையாலும் நன்கு விளங்கும். (அவற்றுள் உழுத லென்பது 20-ஆவது செய்யுளாற் கூறப்பட்டது; எருப்பெய்தலைத் தெரிவிக்கும் பாடல் 24-ஆகும். நீர்கால் யாத்தல் கீழ்ச்செய்யுளாற் கூறப்பட்டது; களைகட்டல் இச்செய்யுளாற் கூறப்படுகின்றது; காத்தல் 50-ஆவது செய்யுளாற் கூறப்படுமென்று அறிக). விளை களை யுண் செஞ்சாலி என்பதற்கு — விளைவை யுடைத்தாய்க் களைக்கொண் டெழுந்த செஞ்சாலி என்று உரைத் தாருமுளர். கலி — துன்பமுமாம். — (45)