pATal47
pATal46.html
pATal47.html
pATal48.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
47. ஈற்றேறுஞ் சிறப்பு.
பயிர்க்கதிரிற் பிடித்த கரு பாலானநிலைமாறி அரிசிவடி வத்தையடையுமாறு முதிர்ந்துவருதல், ஈற்றேறுத லெனப்படும். ஈற்று — ஈன் என்ற பகுதியினடியாப் பிறந்த தொழிற்பெயர்.
47. ஈற்றேறுஞ் சிறப்பு.
ஏற்றேறு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்
மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேறுங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி
ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே.
(இ—ள்.) ஊற்று ஏறும் — ஊற்றுத் தோன்றப்பெற்ற, குலம் — சிறந்த, பொன்னி — காவேரிகதி, உறை — (பாய்ந்து) தங்கப் பெற்ற, நாடர் — சோணாட்டு வேளாளர், இடும் — பயிரிட்ட, சாலி செந்நெல், ஈற்று ஏறும்போது — ஈற்றேறுகையில், —ஏறு ஏறும் அரன் — இடபத்தை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துகின்ற சிவ பெருமானுடைய, சிறப்புக்கு — திருவிழாவுக்கு, எழில் — அழகானது, ஏறும்; [சிவபெருமானது உத்ஸவங்கள் சீராக நடைபெறுமென்றபடி]; மகத்து அழல்கள் — (அந்தணர்கள் செய்யும்) வேள்வித் தீக்கள், மாற்று ஏறும் — மேன்மைபெற்று நிற்கும்: அரசர் முடி — அரசர்களின் அரசாட்சி, வளர்ந்து ஏறும் — சிறப்புற்று நடைபெறும்; வளமை மிகும் — (இவ்வுலகத்திற்) செழிப்பு மிகும்; கலி — வறுமையோ, ஈடு ஏறமாட்டாது — நிலைபெற்றிராது (தொலைந்துவிடும்); (எ - று.)
தேவர், மானுடர் என்ற யாவரும் மேன்மைபெற்று விளங்குவது, பயிர் ஈற்றேறினால்தான் என்பது கருத்து. மகம் — யாகம்; வடசொல். மகம் தழல்கள் என்றும் பிரிக்கலாம். காருகபத்தியம், ஆகவநீயம், தட்சிணாக்கினி என வைதிகாக்கினி மூவகைப் படுதலால், “அழல்கள்” என்றது. ஈற்றேறும்போது அரன் சிறப்புக்காக [விசேஷ உத்ஸவத்திற்காக) வளர்க்கப்படுகின்ற எழிலேறுகின்ற மகத்தழல்கள் மாற்றேறும்; அரசர் முடியானது வளர்ந்தேறும் எனக் கூறினுமாம். “வளமைமிகும்” என்ற தொடரை ஊற்றுக்கு விசேஷணமாக்கி யுரைக்கவுமாம். அரன் = ஹரன்; அழித்தற் கடவுள். — (47)