pATal49 pATal48.html pATal49.html pATal50.html ஏரெழுபது மகாகவி கம்பர் 49. நெற்குலை வளைதற்சிறப்பு.
பொருளடக்கம் | 48. பசுங்கதிர்ச் சிறப்பு. | 50. சேவல்காத்தற் சிறப்பு. | அகெடமி

49. நெற்குலை வளைதற்சிறப்பு. அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச் சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின் தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக் குலைவளையும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே. (இ—ள்.) காராளர் — வேளாளர் பயிர்செய்த, தண் வயலில் — குளிர்ந்த வயலிலே, செஞ்சாலி — செந்நெற்பயிரின், குலை — கதிர்க் குலையானது, (நன்குமுதிர்ந்து), வளையும் பொழுதினில் — தலைமடங்கி விழும்பொழுது, அலை வளையும் புவி வேந்தர் — கடலாற் சூழப்பட்ட பூமிக்குத் தலைவரான அரசர்களுடைய, அம் கையில் — அழகிய கையிலே, தங்கிய — தங்கியுள்ள, வீரம் சிலை --- வீரத்தைக் காட்டக்கூடிய வில்லானது, வளையும் — (மாற்றாரோடு பொருமாறு) வளைந்து நிற்கும்; மதன் — மன்மதனுடைய, கரும்பு சிலை — கரும்பு வில்லும், வளையும்—; கொடு கலியின் — கொடுமையான தரித்திரத்தின், தலை — தலைமை, வளையும் — குலையும்; (ஆனால்), செங்கோல் — (அரசருடைய) செங்கோல்மாத்திரம், வளையமாட்டாது — வளைந் திராமல் நிமிர்ந்து நிற்கும்; (எ - று.) நெற்பயிர் விளைந்து கதிர்க்குலை தலைசாய்ந்து அறுப்புக்கு ஏற்றதாகி விடுமானால், அப்போது செங்கோல் நன்கு நிலைபெறும்; அரசர் தம்மாற்றாரோடு பொருமாறு வில்லை வளைத்துச்செல்லுவர்: மன்மதன் ஆண் பெண்கட்கு இச்சைபிறக்கும்படி தன் வில்லிற் புஷ்பபாணங்களைத் தொடுத்து எய்வ னென்றவாறு. வளைதற் றொழிலைச் செங்கோலில் மறுத்து வீரச்சிலை முதலியவற்றில் ஏற்றிக்கூறியது, ஒழித்துக்காட்டணியின்பாற்படும். பயிர் விளையாவிடின் உணவின்றிவருந்தும் மன்னவர்க்குப் போர்செய்யும் வல்லமையின்றா மாகையாலும், பசியால் வாடும்பொழுது இன்பத்தை யனுபவிக்கவேணுமென்ற கருத்தே ஆண்பெண்கட்குப் பிறவா தாதலாலும், உலகத்துயிர்கள் உணவுப்பொருளின்றிப் பசிக்கொடுமையால் வருந்துமாதலாலும், செங்கோல்வளைய, வீரச் சிலையும் மதனன் கருப்புச்சிலையும் கொடுங்கலியின் தலையும் வளையா வென்க. உருவிலியான மன்மதன் தன்னுடைய கரும்புவில்லில் தாமரை அசோகு முதலிய மலர்களை அம்புகளாகக்கொண்டு தொடுத்து ஆண் பெண்களில் ஒருவர்மீது ஒருவர்க்குக் காதல் தோன்றுமாறு செய்வ னென்பது நூற்கொள்கை. மதன்மதநன் என்ற வட சொல்லின் விகாரம்; இனி மதமென்ற வடமொழியினடியாகப் பிறந்த தமிழ்மொழி யெனக்கொண்டு, மதத்தையுண்டாக்குபவன் என்று காரணப்பொருளுரைத்தலும் ஒன்று. அலை — கடலுக்கு இலக்கணை. கரும்பு+சிலை = கருப்புச்சிலை; “மென்றொடர்மொழியுட் சிலவேற்றுமையில், தம்மினவன்றொடர்” என்பது விதி. — (49)
பொருளடக்கம் | 48. பசுங்கதிர்ச் சிறப்பு. | 50. சேவல்காத்தற் சிறப்பு. | அகெடமி