pATal53
pATal52.html
pATal53.html
pATal54.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
53. களஞ்செய்தற் சிறப்பு.
அரிந்த நெல்லரிக்கட்டுக்களையிடுதல் முதலியன செய்யுங் களமாக நிலப்பகுதியைச் செப்பனிடுதல், களஞ்செய்த லெனப்படும்.
53. களஞ்செய்தற் சிறப்பு.
சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்
பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்
காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே.
(இ—ள்.) சீர் ஆன — சிறப்புப் பொருந்திய, விறல் வேந்தர் — வெற்றி பெற்ற அரசர், செரு விளைத்து செல்லுவதும் — போரினை யுண்டாக்கி(ப் பகைவர்மீது படையெடுத்து)ச் செல்லுவதும், பேர் ஆன மனு நீதி பிறழாது விளங்குவதும் — பெருமை பொருந்திய மநுதருமசாஸ்திரத்திற் கூறிய ஒழுக்கம் (தவறாமல் செங்கோலைச் செலுத்திக்கொண்டு) விளங்குவதும், (எதனாலென்றால்), செஞ் சாலி — செவ்விய செந்நெற்பயிரை, நீராலே விளைவித்து — நீரைப் பாய்ச்சி விளையச்செய்து, நெறி நடத்தும் — (தமது) குலவொழுக்கத்தைத் தவறாது நடத்துகின்ற, காராளர் — வேளாளர், விளை — விளையச்செய்கின்ற, வயலில் — வயலினிடத்து, களம் பண்ணும். பொருட்டாலே — களத்தை யமைக்குந் தன்மையினாலேயே யாகும்; (எ - று.)
மனு — கர்த்தாவாகுபெயராய், மனுவினாற் செய்யப்பட்ட நீதி நூலினை யுணர்த்தும். விளைவயல் — வினைத்தொகை. நீதி — தற்சம வடசொல். களம் — வடசொற்சிதைவு. — (53)