pAyiram nUlAciriyar.html pAyiram.html pATal01.html ஏரெழுபது மகாகவி கம்பர் பாயிரம்.
பொருளடக்கம் | நூலாசிரியர் | 1. உழவுநாட்கோடற்சிறப்பு | அகெடமி

ஏரெழுபது அரங்கேறிய சபையைக்குறித்து, குணங்கொள்சடையன் புதுச்சேரிக்கொடையான் சேதிராயன்முதல் கணங்கொள் பெரியோர்பலர்கூடிக் கம்பநாடன்களிகூர இணங்கும்பரிசிலீந்துபுவியேழும் புகழேரெழுபதுடன் மணங்கொள்திருக்கைவழக்க நூல்வைத்தார் சோழமண்டலமே. என்று ஒருபாடல் வழங்குகின்றது. பாயிரம். பாயிரம் பதிகம் நூன்முகம் முகவுரை புறவுரைமுதலியன — பரியாயச் சொற்கள். “தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளு, மெய்தவுரைப்பது தற்சிறப்பாகும்,” “ஆக்கியோன் பெயரே வழியேயெல்லை, நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோடாயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிரத் தியல்பே” “காலங்களனே காரணமென்றிம், மூவகையேற்றி மொழிநருமுளரே” என்பவற்றாற் பாயிரத்திற் கூறப்பட வேண்டியபொருள் இன்னதென வுணர்க. கணபதி துதி. கங்கைபெறுங் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறுந் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். (இதன் - பொருள்) கங்கை பெறும் — கங்கையாற் பெறப்பட்ட [கங்கைமரபிற்றோன்றிய], கார் ஆளர் — மேகத்தின் தன்மையை (த் தம்மிடத்துக்) கொண்டவரான வேளாளர் (தம் முடைய), கருவி எழுபது உம் — (இன்றியமையாத உழவுத்தொழிலுக்கு உறுப்பான) சாதனங்கள் எழுபதனையும், உரைக்க — (முட்டுப்பாடின்றி வரையறுத்துச்) சொல்ல, அம் கை பெறும் வளைத் தழும்புஉம் முலைத்தழும்புஉம் அணி — அழகிய கையிலே தரித்த வளைகளின் சுவடும் முலையினது சுவடும் அணிவிக்குமாறு, அ மலை மங்கை பெறும் திரு உருவாய் — அந்த மலையரசன் மகள் பார்வதி (கணவனாகப்) பெறுதற்கேற்ற மங்கல உருவமாய், வந்து உறைந் தார் தமை — (ஒற்றைமாமரத்தின்கீழ்க் கருணைப் பெருக்கோடு) வந்து தங்கினவராய ஏகாமிரநாதரை, வலம் செய் — பிரதட்சிணம் செய்து வணங்குகின்ற, கங்கை பெறும் விகட தடம் களிற்றானை — கங்கையைத் தலையிலே தாங்கப்பெற்ற விசாலமான (கவுள்) தலத்தையுடைய யானையாம் விநாயகனை, கழல் பணிவாம் — திருவடி வணங்குவோம்; (எ - று.) விசேடவுரை:— பார்வதி பரமேசுவரரை வலஞ் செய்த விநாய கனைக் கழல் பணிவோம் என்று கணபதி துதி தொடக்கத்துக் கூறியவாறு. மலைமங்கை தழுவக் குழைந்தது காஞ்சியிலாதலின், ஏகாமிரநாதரை வலஞ்செய்யும் விகடசக்கர விநாயகனைக் குறித்தபடி. விகடசக்கர விநாயகர் காஞ்சியிலெழுந்தருளி யிருப்பதைக் கந்தபுராணத்து “விகடசக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்” என்பதனாலும் தெளியலாம். விகடக்களிற்றான் என்றதால், இவ்விநாயகரைக் குறிப்பிற்றெரித்தபடி. இவ்விநாயகர் ஏகாமிரநாதர் கோயிலிலுள்ள ஆயிரக்கான் மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். தடவிகட — விகட தட என மாறுக. மங்கை பெறுந் திருவுருவாய்மணவாளக் கோலத்துடன் என்றபடி. சிவபெருமானுக்குப் பார்வதியின் உடற்பரிசத்தோடு வளைத்தழும்பும் முலைச்சுவடும் உண்டாக, சிவபெருமான் மணவாளக்கோலத்துடன் பிரதியட்சமானார் என்பது பிரசித்தம். “வாய்வதிற் றந்தையும் தாயும் தொழு தெழுக” என்பதற்கேற்ப, “வலஞ்செய்” என்றார். விநாயகரும் தமது தந்தையாகிய பரமசிவனைப்போல் தலையில் கங்கையைக் கொண்டுள்ளார் என்பதைக் “கங்கைபெற்றோன்” என்று அவரைச் சூடாமணி நிகண்டு சுட்டுதலாலும் அறிக. எனவே, “கங்கை பெறுங்காராளர் கருவியெழுபதும் உரைக்கக் கங்கைபெறுந் தட விகடக் களிற்றானைக் கழல்பணிவாம்” என்றதால், ஏற்புடைக் கடவுள் வணக்கம் கூறியதாயிற்று. கங்கைபெறும் காராளர் — கங்கை மரபினராய வேளாளர். வேளாண்குலம் கங்கை மரபு எனப்படுதலை பொருந்துமாயிரமுகக் கங்கைமரபிற் ... றோன்றி” என்ற சேக்கிழார்பிள்ளைத் தமிழ்த் தொடராலும் அறிக. கங்கை பாயும் பிரதேசத்தினின்று வந்தவர் என்று சொல்லிக் கொள்வதால் வேளாளர் குலம் கங்கைக்குலம் எனப்பட்டது என்பாருமுளர். காராளர் — வேளாளர்; கைம்மாறு கருதாக் கொடையுடைமை, ஓரறிவுயிரையும் ஓம்பும் ஆற்றலுடைமை, கடவுளாணை வழிநிற்றலுடைமை முதலிய மேகத்தின் தன்மையை யுடைமையால், வேளாளர் “காராளர்” எனப்பட்டார். இனி, சிறையிட்ட மேகத்தைப் பாண்டியனிடத்தில் தாம் தேவேந்திரனுக்குப் பிணைநின்று விடுவித்தமை பற்றி, இவரைக் காராளரென்றது என்றலும் உண்டு; இவர் கார் காத்த வேளாளரெனப்படுதல் காண்க. கருவி — ஈண்டு, சாதனம்: “அறிவற்றங் காக்குங் கருவி” என்றவிடத்துப்போல. இதுமுதல் மூன்று கவிகள் — பெரும்பாலும் காய்ச்சீர் நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். — (1) 2. திரிமூர்த்திகள் வணக்கம். நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத் தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும் பிறைக்குரிய நெடுஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம். 2. (இ - ள்) நிறைக்கு உரிய — சால்புடைமைக்கு (இயல்பாக) உரியராய, அந்தணர்கள் — பிராமணர்களின், நெறி பரவ — ஒழுக்க முறை பரவவும், மனு விளங்க — நீதிகள் தவறாது நடக்கவும், தறைக்கு உரிய காராளர் தமது — பூமி செழித்தற்குரிய வேளாளர்களின், வரம்பு இனிது ஓங்க — ஒழுக்கவரம்பு நன்கு உயரவும், மறைக்கு உரிய பூ மன் ஐ உம் — வேதத்திற்குரிமை பூண்டவராய்த் தாமரைப் பூவில் நிலைபெறத் தங்கியுள்ள பிரமதேவனையும், வள் துளபம் தாமன் ஐ உம் — வளப்பம் பொருந்திய திருத்துழாய் மாலையை யுடையவராகிய திருமாலையும், பிறைக்கு உரிய நெடு சடிலம் பெம்மான் ஐ உம் — பிறைச்சந்திரனை யணிதற்குரிய நீண்ட சடைமுடியை யுடைய தலைவராகிய சிவபெருமானையும், பணிவாம் — வணங்குவோம்;— (எ - று.) ஐ - இச்செய்யுள் மும்மூர்த்திகள் வணக்கம் குறித்தது. பரவ, விளங்க, ஓங்க, பணிவாம் என இயையும். பூ மன் — மலரவன், பிரமன். திருமாலினது நாபியிற்பூத்த தாமரைமலரை இருப்பிடமாகக் கொண்டவன். மெய்கலந்த நால்வேத விரிஞ்சனாதலின் “மறைக்குரிய” என்றார். தாமம் — மாலை. சிவபிரான் சடிலம் கபர்த்தம் எனப்படும். நிறையாவது - சால்பு; எல்லா நற்குணங்களும் குறைவுபடாமல் நிறைந்திருத்தல்; குணபூர்த்தி. இது - முதனிலைத் தொழிற் பெயர். இனி, நிறை - உறுதிப்பாடு என்றும் பொருள் கொள்ளலாம்; அது, காப்பன காத்துக் கடிவன கடியுந் திண்மை. அந்தணர் நெறிபரவல் - வேதநெறி தழைத்தோங்குதல். மனு விளங்குதல் அரசநீதி செங்கோல் வழிப்படரல். மேழித்தேவராதலின், தறைக் குரியராயினார். வரம்பு - ஒழுக்க வரம்பு. அதாவது “மூவரு நெஞ் சமர முற்றி யவரவர், ஏவ லெதிர்கொண்டு மீண்டுரையான் — ஏவல், வழுவான் வழிநின்று வண்டார் வயலுள், உழுவா னுலகுக் குயிர்” என்றது. — (2) 3.-நாமகள் துதி. திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக் கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர் துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3. (இ - ள்.) திங்களின் மும் மாரி பெய — மாதம் மூன்று மழை பொழியவும், (அதனால்), செகத்தில் உயிர் செழித்து ஓங்க — உலகத்தில் ஜீவராசிகள் செழிப்புற்று வளரவும், கங்கை குல அதிபர் வயலில் — வேளாளர்களின் வயல்களில், கரு வீற — நெற்பயிரின் கருவானது சிறப்புறவும், தொழு குலத்தோர் துங்கம் மகம் [துலங்கிட] — (மற்றை மூன்று குலத்தவராலுந்) தொழப்படுங் குலமாகிய அந்தணர் குலத்தோரது பரிசுத்தமான யாகங்கள் விளங்கவும், மனு நீதி துலங்கிட — அரசநீதிகள் விளங்கவும், வையம் படைத்த பங்கயன் தன் — உலகத்தைப் படைத்த பதுமத்தோனாகிய பிரமனின், நாவில் உறை பா மடந்தை — நாக்கினில் [எஞ்ஞான்றும்] தங்கி வசிக்கின்ற சரசுவதீ தேவியின், பதம் தொழுவாம் — பாதங்களை வணங்குவோம்; (எ - று.) இச்செய்யுள் நாமகள் துதியாகும். பெய, ஓங்க, வீற, துலங் கிட... மடந்தைபதம் தொழுவோம் என இயையும். துலங்கிட ஈரிடத்தும் கூட்டப்பட்டது. மும்மாரி — முடிபுனைந்தசீர் மன்னவர் நெறியினான் முன்னவர் தவத்தாற்பைந், தொடி மடந்தையர் கற்பினான் மதிதொறுஞ்சொரிதரும் மும்மாரி என்றதும் நோக்குக. ஒன்பது நாள் வெயிலும் ஒருநாள் மழையுமாய் என்றபடி. “நாமகள் பிரமனின் நாவிலுறைபவள்” என்பதை “அந்தணன் நாவில் வைத்தான்” என்றதனாலும் அறிக. — (3) வேறு. 4. சோழமண்டலச் சிறப்பு. ஈழ மண்டல முதலென வுலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர் தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் தாமெ லாம்பிறந் தினியபல் வளத்தின் வாழு மண்டலங் கனகமு மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ் சோழ மண்டல மிதற்கிணை யாமெனச் சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே. 4. (இ - ள்) ஈழமண்டலம் முதல்என — ஈழமண்டல முதலாக வைத்து, உலகத்து எண்ணு மண்டலத்து — இப்பூமியிடத்து(ச் சிறப்பித்து] எண்ணப்படுகின்ற மண்டலங்களிலுள்ள, எறி படை வேந்தர் — (பகைவர்மேல்) என்ற ஆயுதங்களாற் சிறந்த அரசர்கள் [பலரும்], தாழும் மண்டலம் — பணிந்து வணங்கும் மண்டலமாவது யாதெனில், செம்பியன் மரபினோர் தாம் எலாம் பிறந்து — சிபிசக்கரவர்த்தியின் மரபினராகிய சோழமன்னர்கள் எல்லாரும் பிறந்து, இனிய பல் வளத்தின் வாழும் மண்டலம் — இனிமை தருகிற பலவகை வளங்களோடு வாழ்கின்ற மண்டலமாகும்; (இதன் பெயர் யாதெனில்), காவிரி — காவிரிநதியானது, வரம்பு இல் கனகம்உம் மணிகள்உம் — அளவற்ற பொன்னையும் மணிகளையும், குரம்பினில் — செய்கரைகளில், கொழிக்கும் — ஒதுக்கும், சோழமண்டலம் — சோழமண்டலமாகும், இதற்கு இணையாம் என சொல்லும் மண் தலம் — இதற்கு நிகராகுமெனச் சொல்லத்தக்க [மேன்மையையுடைய) பூமியிடம், சொல்வதற்கு — நினைத்தற்கும், இல்லை —; (எ - று.) ல இது, சோழமண்டலத்தின் தனிச்சிறப்புக் குறித்தது. ஈழ மண்டலம் - இலங்கை; தற்போது சிலோன் எனப்படுவது. ஒரு நாட்டினைப் பெரும்பகுதிகளாகப் பிரிக்க, அப்பெரும்பகுதி மண்டலம் எனப்படும். வேந்தர்தாழும் மண்டலம், மரபினோர்வாழும் மண்டலம் சோழமண்டலம் என இயையும், செம்பியன் - சிபியின் வழிவந்தவன்; சோழன். கரிகாற்சோழனை “செருமிகு சினவேற் செம்பியன்” (சிலப்: மங்கல. வரி. 67) என்றும், கிள்ளிவளவனை “செம்பியர் மருகன்” என்றும், (புறம்: 228) கூறியிருத்தல் நினைக. “மாநீர்க்குரம்பெலாஞ் செம்பொன்” என்றார் இராமாயணத்தும். ஈற்றில் வந்துள்ள மண்டலம் என்பது மண் தலம் எனப்பிரித்துப் பொருள் கொள்ளப்பட்டது; இனி, மண்டலம் என்றே கொள்ளினுமாம். சொல்லுதலென்றது — நினைத்தலென்ற பொருளில் வந்தது; பண்பு புலன் மாறிவந்த உபசார வழக்கு; “பொருளுறு பண்பு புலனிவைமாறியுஞ் சேர்ந்திடுமே” என்பது பிரயோக விவேகம். மூன்றாமடியில் பிராசம் காண்க. இச்செய்யுள் — மாச்சீரும் விளச்சீரும் விரவிவந்த எண்சீரா சிரியவிருத்தம். — (4) வேறு. 5. சோழராசன் சிறப்பு. முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான் இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக் குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே. 5. (இ - ள்.) மூ உலகும் படைத்து உடைய — மூன்று நிலப் பகுதிகளையும் தமக்குரித்தாகக் கொண்டுள்ள, முடியுடைய மன்னவரின் கொடியுடைய மன்னவரின் — முடியுடைவேந்தரும் (அடையாளக்) கொடியுடைவேந்தரும் ஆகிய சோழ சேர பாண்டிய மன்னவருள், குலவு முதல் பெயர் உடையான் — [மேம்பாட்டினால்] விளங்குகின்ற தனிச்சிறப்பு உடையவன் [யாவனெனில்], இடி உடைய ஒலி கெழு நீர் — இடியும் கீழ்ப்பட்டுப்போம்படி ஒலி மிகுந்த நீரையுடைய கடலினாற் சூழப்பட்ட, எழுபத்தொன்பது நாட்டுக்குடி உடையான் — எழுபத்தொன்பது நாட்டு மக்களையும் (கோனோக்கி வாழும்) தன் குடிகளாக உரிமை கொண்டுள்ளவனாகிய, சென்னி — சோழனாவன்; பிறர் — ஏனைய சேரபாண்டிய ரிருவரும், என் உடையார் — என்ன சிறப்பினையுடையவர், கூறீர் — [நீங்களே] சொல்லுங்கள்; (எ. - று.) இதனால், சேரபாண்டியர் இருவரினும் சோழன் தனிச்சிறப்புப் பெறவைத்தபடி. எழுபத்தொன்பது நாட்டுக் குடியுடையான் சென்னி என்றது — அக்காலத்தைய சோழப் பேரரசு எழுபத் தொன்பது சிறுபகுதிகளைக் கொண்டது என்னலாம்; மேல் வாழ்த்துச் செய்யுளிலும் “ஏர்வாழி இசைவாழி எழுபத்தொன்பது நாடே” என முடித்தலும் காண்க. “நாடு” என்றசொல் சிறுபகுதிகளைக் காட்டுவதை “ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரை நாடு” என்ற தொடர்களாலும், “குறும்பொறை நன்னாடு கோடியர்க்கீந்த … ஓரி” என்றவிடத்தானும் உணரலாம். மூவுலகு என்றவிடத்து, உலகு என்னுஞ்சொல், உலகின் ஏகதேசத்தைக் குறித்தது; “உலகென்னுஞ்சொல், மண்ணுலக முழுதுமேயன்றித் தன்கட் கூறுபட்ட நிலங்களையுமுணர்த்து மென்பது, ‘மாயோன் மேய காடுறையுலகமும்’ என்னுஞ் சூத்திரத்தானுணர்க” என்ற நச்சினார்க்கினியர் கூற்று (சிந்தா: முத்தி: 8 - உரை) நினைக்கத்தக்கது. பரிபாடலிற் பரிமேலழகரு “இவ்வுலகி னுட் பாகுபாடுகளையும் உலகென்றார்” என்றார். (பரி : 3 - உரை). கொடி — அடையாளக் கொடி: சோழருக்குப் புலியும், சேரருக்கு வில்லும், பாண்டியர்க்கு மீனும் அடையாளங்கள். முதற்பெய ருடையான் — முதலிற் பெயரிட்டுச் சொல்லத்தக்கவன்; தனிச் சிறப்புடையான் என்றபடி. பெயர் — பெருமை; புகழ். உடைதல் — கீழ்ப்பட்டுப் போதல். ஒலிகெழுநீர் எனவே கடலாயிற்று: ஆர்கலி என்ற பெயருண்மையும் காண்க. சென்னி — சோழன்; “சென்னி செங் கோலது வோச்சி” என்றது சிலப்பதிகாரமும். இச்செய்யுள் - காய்ச்சீர் நான்குகொண்ட கலிவிருத்தம். —- (5) வேறு. 6. சோழனது மகாநாட்டுச் சிறப்பு. மந்தர மனைய திண்டோள் மணிமுடி வளவன் சேரன் சுந்தர பாண்டி யன்றஞ் சுடர்மணி மகுடஞ் சூட அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே. 6. (இ - ள்.) மந்தரம் அனைய திண் தோள் மணி முடி வளவன் — மந்தரமலையையொத்த திண்ணிய தோள்களையும் மணிகள்பதித்த முடியையுமுடைய சோழமன்னன், சேரன் சுந்தரபாண்டியன் தம் சுடர் மணி மகுடம் சூட — சேரனுடையதும் சுந்தரபாண்டிய னுடையதும் ஆன விளங்குகின்ற மணிகள்பதித்த மகுடங்களைச் சூட்டிக்கொள்ள, (அதனால்), அந்தணர் குலமும் எல்லா அறங்களும் விளங்க — பிராமணர் குலங்களும் எல்லாநீதிகளும் பொலிவுபெற, அந்த பெரிய நாடு — (அப்போதுகூடிய) அந்த மகாநாடானது, இந்திரன் ஓலக்கம்போல் இருந்தது — தேவேந்திரனது அத்தாணிக் காட்சிபோலச் சிறந்திருந்தது; (எ - று.). இது, மகாநாட்டில் சோழவரசன் ஓலக்கச்சிறப்புக்குறித்தது. மகாநாடு - மகாசனங்களின் கூட்டம். வளவன் சேரபாண்டியர்களது சுடர்மணி மகுடங்களைச் சூடியது, அவர்களை அடிப்படுத்தியமை நோக்கி. இது, “மந்தரமனையதிண்தோள்” என்ற அடையை வளவனுக்கு இட்டதால் தெளியலாம். “சுந்தரபாண்டியன்” என்றது, பெயருமாகலாம். சூட — செயவெனெச்சம் காரணப் பொருளது. “அந்தணர்குலமும்” என்று, சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும். ஓலக்கம் — அத்தாணிக்காட்சி, சபாமண்டபம். இந்திரனது ஓலக்க மண்டபம், சுதர்மையென்று பெயர் பெறும். இச்செய்யுள் — முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும் ஏனையவை மாச்சீர்களுமாகி வந்த அறுசீராசிரியவிருத்தம். — (6) வேறு. 7. வேளாண்குடிச் சிறப்பு. ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார் ஊழித்தேவர் தாங்கூடி உலகங்காக்க வல்லாரோ வாழித்தேவர் திருமக்கள் வையம்புரக்கும் பெருக்காளர் மேழித்தேவர் பெருமைக்கு வேறேதேவர் கூறேனே. 7. (இ - ள்.) ஆழி தேவர் — சக்கராயுதத்தைக் கொண்ட கடவுளாகிய திருமாலானவர், கடல் ஆனார் — திருப்பாற்கடலிலே கண்வளர்பவராயினார்; அல்லா தேவர் — (காத்தற்றொழிலையுடைய) அக்கடவுளல்லாத [சங்காரமூர்த்தியாகிய] சிவபெருமானார், அம் பலத்தார் — திருச்சிற்றம்பலத்திற் கூத்தாடுபவரானார்; ஊழி தேவர் தாம் — ஊழிக்காலம் வாழுந் தேவராகிய பிரமனார், கூடி — மனம் பொருந்தி, உலகம் காக்க வல்லாரோ — இவ்வுலகத்தைக் காத்தற்கு வல்லமை யுடையவரோ? [வல்லமை யுடையவரல்ல ரென்றபடி]; வாழி தேவர் — வாழ்ச்சியால் விளங்குபவரும், திரு மக்கள் — செல்வத்தைப் பெற்றுள்ள மக்களும், வையம் புரக்கும் பெருக்காளர் — உலகத்தைக் காப்பாற்றுதற்கு உரிய (செல்வம், அறிவு, அருள் முதலியவற்றின்) பெருக்கத்தைக் கொண்டவருமான, மேழி தேவர் — மேழியைப் பிடித்து உழுதற்றொழிலைச் செய்யுந் தேவராகிய வேளாளரின், பெருமைக்கு — சிறப்புக்கு எதிராக, வேறே தேவர் — வேறேயொரு தேவரின் பெருமையை, கூறேன் — சொல்ல மாட்டேன்; (எ - று.) மும்மூர்த்திகளுமே உலகத்தைக் காத்தற் றொழிலைச் செய்ய மாட்டாதவராகிவிட வேளாண்மக்களே இவ்வுலகத்தைக் காக்குந்தொழிலை மேற்கொண்டிருத்தலால், அந்தத்திரிமூர்த்திகளும் இவ்வேளாளமாந்தர்க்கு நிகராகார்: அங்ஙனமாக, மற்றைத் தேவரை இவ்வேளாளர்க்கு உவமை கூறுவேனோ? கூறேனென்பதாம். கடலிற்படுத்து உறங்குதலும், அம்பலத்திற் கூத்தாடிக் கொண்டிருத்தலும் காத்தற் றொழிலை மேற்கொண்டார்க்கு அழகு அல்ல என்பார் “ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவரம்பலத்தார்” என்றார். காத்தற் றொழிற்கு உரிய கடவுளென்று பேர் வைத்துக் கொண்டிருப்பது பற்றி, ஆழித்தேவரை முதலிற் கூறினார். காத்தற்றொழிற்கு எதிரான அழித்தற் றொழிலைக் கைக்கொண்டிருப்பவ ராதலால் சிவபெருமானாரை “அல்லாத்தேவர்” என்றார். ஊழி — கற்பகாலம்: பலசதுர்யுகங்களைக் கொண்டதான (பிரமதேவனது) ஆயுட்காலம். ஊழித்தேவர் எனவே, பிரமனைக் காட்டிற்று. தேவர் என்றசொல் — அறிவு, மகிழ்ச்சி, ஒளி முதலியவற்றை யுடையவ ரென்று காரணப்பொருள்படு மாதலால், வேளாண் மாந்தரை “வாழித்தேவர் மேழித்தேவர்” என்றார். வாழி — இகர வீற்றுத் தொழிற்பெயர். ஊழித்தேவர் — ஊழிக்காலம் வரையிலிருக்குந் தேவரென ஏழாம் வேற்றுமையுருபும்பயனும் உடன் றொக்கதொகை. இனி, இத்தொடர்க்கு காக்கும் முறைமையை யுடையதேவர் எனக் கூறுவாரு முளர். வல்லாரோ, ஓகாரம் — எதிர்மறை. தேவர் கூறேன் — இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், இயல்பாகவேண்டிய இடத்து பொதுவிதிப்படி இயல்பேயாயிற்று; “தேவர்க்கூறேனே” என இருப்பின் நலம். இச்செய்யுளை வேளாளர்சிறப்பு என்றும் பின்வருஞ் செய்யுட்களை வேளாண்குடிச் சிறப்பு என்றும் கூறின், ஏற்குமெனத் தோன்றுகின்றது; மேல்வரும் பாட்டில் “உழுங்குலத்திற் பிறந்தாரே” என்றும், பத்தாம் பாடலில் “காராளர், கோதில் குலந்தனக்கு” என்றும் குலத்தை யெடுத்துக் கூறியிருத்தல், காண்க. குலம் குடி என்பன — பரியாயச் சொற்களாயும் நிற்கும். ஒருகால் இச்செய்யுள் சொருகுகவியாயிருப்பினும் இருக்கலாம். இச்செய்யுள் — முதற்சீரும் மூன்றாஞ்சீரும் நேரிறுதியான நாலசைச் சீராகவும், இரண்டும்நான்கும் காய்ச்சீருமாகிவந்த கலிவிருத்தமாகப் பிரிக்கப்பட்டுள்ளது; இதனை, மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீரும், மற்றை நான்கும் மாச்சீருமாகிவந்த அறுசீராசிரிய விருத்தமாகப் பிரிக்கலாம். — (7) வேறு. 8. இதுமுதல் மூன்றுகவிகள் — வேளாளர்சிறப்பு. தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ் செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென் உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. 8. (இ - ள்.) தொழும் குலத்தில் — (மற்றைமூன்று குலத்தவராலுந்) தொழப்படுங் குலமாகிய அந்தணர் குலத்திலே, பிறந்தால் என் — பிறந்தால்தான் யாதுபயன்? சுடர் முடி மன்னவர் ஆகி — ஒளியையுடைய கிரீடந்தரித்த அரசராகி, எழும் — விளக்கத்தைப் பெறுகின்ற, குலத்தில் — க்ஷத்திரியகுலத்திலே, பிறந்தால் என்? இவர்க்கு பின் — இவ்விரு குலத்தவர்க்கும் பின்னே (அடுத்துள்ள), வணிகர் எனும் செழு குலத்தில் — வணிகரென்று சொல்லப்படுகிற செல்வச்செழிப்பையுடைய வைசியகுலத்திலே, பிறந்தால் என்? [இப்பிறப்புக்களால் உலகுக்கு நேரே நன்மை செய்ய முடியாதாகையாற் பயனில்லை யென்றபடி]; சிறப்பு உடையர் ஆனால் என்? — செல்வவான்களாக இருந்தால்தான் என்ன? உழும் குலத்தில் பிறந்தாரே — உழுதற்றொழிலைச் செய்யுங் குலமாகிய வேளாண் குலத்திற் பிறந்தவரே, உலகு உய்ய பிறந்தார் — (உலகத்தார் பசிநோயால் இறந்துபடாது) உய்வு பெறுமாறு பிறந்தவராவர்; (எ - று.) அந்தணர் முதலியோர் வெவ்வேறுவகைப்பட்ட சிறப் புடையவ ரெனத் தம்மை மதித்தாலும், அவ்வப்பிறவிகள் உலகத்தோரின் பசியை யொழிப்பதற்கு நேரே கருவியாகா வாதலாற் பயனில்லை; வேளாளர் பிறவியே பயிர்விளைத்து உலகத்தோர் பசியை யொழித்தற்கு நேரே காரணமா யிருத்தலால், அதுவே உயர்ந்த குலமா மென்றவாறு: பிறர்க்கு உதவாத பூமிக்குப் பாரமாக இருக்குங் குலங்களினும், பிறர்க்கு உதவிபுரியுங் குலமே சிறந்த தென்க. இதனால், நாற்குலங்களுள் இறுதிக்குலமாகிய வேளாண் குலத்திற்கு உள்ள சிறப்புக் கூறப்பட்டவாறு காண்க. “வணிக்” என்ற வடசொல் “அர்” என்னும் பலர்பால் விகுதிபெற்று “வணிகர்” என ஆயிற்று. குலத்திற்பிறந்தாரே, ஏகாரம் - பிரிநிலை. இறுதி யேகாரம் - அசைநிலை. இதுமுதல் இந்நூலின் ஈற்றயல்பாடல் (செய்யுள்: 68) நீங்கலாக எல்லாச் செய்யுள்களும் - பெரும்பாலும் காய்ச்சீர் நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். — (8) அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும் எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ உழுங்கொழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச் செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல். — 9 9. (இ - ள்.) உழும் — உழுதற்கு உதவுகின்ற, கொழுவில் — கொழுவினால், கரு — நெற்பயிரின் கருவானது, வீறி — சிறுப்புறுதலால், உலகமுதல் — உலகத்தினிடத்தே, கரு — பிராணிவர்க்கமாகிய கருக்கள், ஆக — உண்டாகுமாறு, செழு கமலத்து அயன் — செழிப்புள்ள (திருமாலின்) நாபித்தாமரையில் தோன்றிய பிரமதேவன், இவரை — இவ்வேளாளரை, செய்து — படைத்து, உலகம் — உலகத்து உயிர்களை, செய்வான் ஏல் — படைப்பானென்றால், அழும் குழவிக்கு — (பசியினால்) அழுகின்ற குழந்தைக்கு, அன்பு உடைய — அன்பு (கொண்டு அந்தக் குழந்தையின் பசி தணியுமாறு பாலூட்டுதலைக்) கொண்ட, தாயே போல் — தாயைப்போல, அனைத்து உயிர்க்கும் எழும் கருணை பெருக்கு ஆளர் — எல்லாப் பிராணிகளிடத்திலும் எழுகின்ற கருணையையுடையவரான வேளாளர், [குழவியின் பசியைத் தன் கருணையால் தணிக்குந் தாய் போலத் தாம்விளைக்கும் நெல்மூலமாக எறும்புமுதல் பிரமனீறாக வுள்ள எல்லாவுயிர்கட்கும் தமது கருணையாற் பசியைப் போக்கு கின்றவரான வேளாளர்], யாம் — நாம், புகழ — புகழ்ந்து கூறு மாறு, எளியரோ — எளிமைப் பட்டவரோ? (எ - று.) படைப்புத்தொழிற் கடவுளான பிரமதேவனே இவ்வேளாளரைப் படைத்து அதன்பின்னரே அன்னமயமான புருஷனைப் படைத்தா னென்றால், இவ்வேளாளர் அளவிட முடியாதபடிமிக்க பெருங் கீர்த்தியை யுடையவராவ ராதலால், இவ்வேளாளரின் பெருமை எம்மாற் புகழ்ந்து கூற முடியாது என்றவாறு. “ஆகா𑌶𑌾த் வாயு𑌃” என்று தொடங்கி, “அந்நாத்புருஷ𑌃” [அன்னத்தினின்று புருஷனைப் படைத்தான்] என்று கூறுவதனால், புருஷனுக்கு அன்னம் இன்றியமையாதது என்பது பெறப்படும்: அன்னத்தை யுண்டாக்குபவரோ வேளாளர்: ஆகவே, அன்னத்தைப் படைத்து புருஷனைப் படைத்தா னென்று கூறும் வேதத்திலிருந்தே அன்னத்தை யுண்டாக்குபவராதல்பற்றி இவ்வேளாளரைப் படைத்தே மற்றைப்புருஷரை யுண்டாக்கினா னென்று தொனிக்கு மென்ற கருத்துத்தோன்ற, “உழுங்கொழுவிற்கரு வீறி யுலகமுதற்கருவாகர் செழுங்கமலத் தயனிவரைச்செய் துலகஞ்செய்வான்” என்றார்; “அனைத்துயிர்” எனப் பொதுப்படக் கூறியதனால், எறும்பு முதல் பிரமனீறாகவுள்ள எல்லாப்பிராணிகளுங் கொள்ளப்பட்டன: இவ்வேளாளர் விளைக்கின்ற நெல் ஹவிசுஆகி, ஓமங்களிலு தவப்பெற்றுப் பிரமனாதிதேவர்க்கும் உணவாமாறு அறிக. இவ்வாறு பெருமை பெற்றிருத்தலாலேயே “எளியரோ” என்றது; ஓகாரம் — எதிர்மறை. — (9) வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும் நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர் தங்குலமுஞ் சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர் கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. — 10. 10. (இ - ள்.) வேதியர்தம் — அந்தணர்களுடைய, உயர் குலம் உம் — சிறந்தகுடியும், விறல் வேந்தர் பெருங் குலம்உம் — வெற்றிபொருந்திய அரசரின் பெருமைபெற்ற குலமும், நீதி வளம் படைத்து உடைய நிதி — நியாய முறைமையின் சிறப்பைப்பெற்ற செல்வத்தைப் படைத்துள்ள, வணிகர்தம் குலம்உம் — வணிக குலமும், (ஆகிய இக்குலங்கள்), சாதி வளம் படைத்து உடைய — சாதிக்குள் வளப்பம் மிக இருக்கப்பெற்ற, தாய் அனைய — எவ்வுயிர்க்குந் தாய்போன்று பசிப்பிணியைப் போக்குகின்ற, காராளர் — வேளாளரின், கோது இல் குலம் தனக்கு — குற்றமற்ற குலத்திற்கு, நிகர் — ஒப்பாக, உண்டு ஆகில் — இருக்குமானால், கூறீர் — சொல்லுங்கள்; (எ - று.) தாயைப்போல் மற்றைக் குலத்தவரை யளிக்கும் பெருங் கருணையைப் படைத்திருத்தலால், இவ்வேளாளர்குலம் மற்றையோர் குலத்தினும் மேன்மைப்படும். இதற்கு நிகராக ஒருகுலமும் இல்லை யென்றவாறு. செல்வம் படைத்திருப்பதே மேன்மைக்குக் காரணமாகாது: நீதிமுறை தவறாம லீட்டப்பட்ட பொருளே சிறப்புக்குக் காரணமென்பார் “நீதிவளம் படைத்துடைய நிதிவணிகர்” என்றார். குலம், நீதி, நிதி, வணிக், ஜாதி என்னும் வடசொற்கள் திரிந்துவந்தன. வேதியர்வேதம் என்ற வடமொழியினடியாப் பிறந்தபெயர். — (10) பாயிரம் முற்றிற்று.
பொருளடக்கம் | அறிமுகவுரை | அத்தியாயம்-2 | அகெடமி