﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>தவம் செய்த தவம்</book>

<title><line>சங்கரரின் காலத்தைத் தேடி</line></title>

<para>
<text>
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்னர் இராமநாதபுரம் மாவட்டம் இளையாத்தங்குடியில் காஞ்சி முனிவர் தாமே முன்னின்று மகத்தான "ஆகம சில்ப ஸதஸ்" ஒன்று நடத்தினார். அன்றிருந்தே தமிழ் கோயில் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. அம் மகத்தான சதஸில் ஒரு நாள் மாலையில் பிரஞ்சு நாட்டு பேராசிரியர் பிலியோசா அவர்கள் "கடல் கடந்த நாடுகளில் ஹிந்து சமயத் தொடர்பு" என்ற பொருள் பற்றி பேசினார். ஆங்கிலத்தில் இருந்த அவரது சொற்பொழிவைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் பேராசிரியர் டாக்டர் ராகவன். ஏராளமான அறிஞர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கூடி அப்பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன்.
</text>
</para>

<para>
<p-title>பிலியோசா</p-title>
<image display="half" float="floatleft" caption="பிலியோசாவும், நாகசுவாமியும்">images/Filliozat with RN.jpg</image>
<text>
பேராசிரியர் பிலியோசா தமது உரையில் "கம்போடியா நாட்டில் ஒரு கல்வெட்டில் ஆதி சங்கரர் குறிக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார். அதை மொழிபெயர்த்த டாக்டர். ராகவன் "யோனாதீதானி சாஸ்திராணி பகவத் சங்கராஹ்வயாத்" என்று கம்போடியா நாட்டில் சங்கரர் குறிக்கப் பட்டுள்ளார் எனக் கூறினார். பரமாச்சாரியார் ராகவனை அழைத்து அந்தக் கல்வெட்டுச் செய்யுளின் மறு அடியையும் எடுத்துரைக்க கூறினார். திடீர் என்று கேட்டதால் டாக்டர். ராகவன் சற்று யோசித்தார். உடனே பரமாச்சாரியார் தாமே அந்த அடியை முழுமையாக எடுத்துக்கூறினார். பரமாச்சாரியாருக்கு கல்வெட்டில் இருக்கும் ஈடுபாடும் நினைவாற்றலும் அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் அப்படியே வியப்பில் திளைக்க வைத்தது.
</text>
</para>

<para>
<text>
கூட்டம் முடிந்ததும் டாக்டர். பிலியோசாவை சென்று பார்த்தேன். அந்தக் கம்போடியா கல்வெட்டின் முழு வாசகமும் கிடைக்குமா என்று கேட்டேன். ஸதஸ் முடிந்ததும் நான் அங்கிருந்து சென்னை திரும்பினேன். பிலியோசா அவர்கள் கம்போடியா நாட்டுக் கல்வெட்டிலுள்ள வாசகம் முழுவதையும் எழுதி எனக்கு அனுப்பிவைத்திருந்தார். கல்வெட்டு சம்ஸ்கிருத மொழியில் பாடலாக உள்ளது. கல்வெட்டை மீண்டும் மீண்டும் படித்தேன். பேராசிரியர்கள் குறிப்பிடுவது போல் அது நமது ஆதிசங்கரரைக குறிக்கவில்லை போலிருக்கிறதே? கல்வெட்டை முழுமையாகப் படிக்காமல் சங்கரரைக் குறிக்கிறது என்று எழுதியுள்ளனரோ என்று ஐயம் எனக்கு ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட ஐயத்தை இரண்டு பக்கங்களில் எழுதி பரமாச்சாரியாருக்கு அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் அதைபற்றி மறந்துவிட்டேன்.
</text>
</para>


<para>
<p-title>பங்காரு காமாக்ஷி</p-title>
<text>
ஒராண்டுக்குப் பிறகு தஞ்சாவூர் சென்றிருந்தேன். பங்காரு காமாக்ஷி கோயிலில் காஞ்சி பெரியவர் தெய்வம் போல் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம் நின்றிருந்தது. என்னை அருகில் அமரச் சொன்னார். "நீ எழுதியிருக்கையே கட்டுரை நன்றாக இருந்தது" என்றார்கள். நான் என்ன என்று தெரியாமல் விழித்தேன். "நீ பகவத்பாதாளைப் பற்றி கம்போடியா கல்வெட்டிலிருந்து எழுதியிருந்தாயே அதைத்தான் சொல்றேன். அச்சுப் போட்டுடு" என்றார்கள். நான் எழுதியிருந்ததை நானே மறந்துவிட்டேன். ஆனால் பரமாச்சாரியார் ஓர் ஆண்டுக்குப் பிறகு என்னைப் பார்த்தவுடன் அதை குறிப்பிட்டது என்னை மெய்மறக்க செய்தது. அவர்கள் குறிப்பிட்டபடி பரோடாவில் உள்ள ஒரியண்டல் இன்ஸ்டிட்யூட் இதழில் வெளியிட்டேன்.
</text>
</para>


<para>
<p-title>பேராசிரியர் சீதெஸ்</p-title>
<text>
1963ல் நான் பிரான்சு நாட்டுக்கு சென்றேன். கம்போடியா கல்வெட்டை பிரஞ்சு நாட்டை சார்ந்த பேராசிரியர் சீதெஸ் என்பவர் தான் முதன்முதலில் பதிப்பித்தார். சங்கரர் காலத்தைக் கேட்கவேண்டும் என்பதற்காவே நான் பாரீஸ் மாநகர் சென்றபோது அவரைச் சென்று பார்த்தேன். அப்பொழுது அவருக்கு 83 வயது. அவரிடம் நான் என் ஐயத்தைக் கூறினேன். "தாங்கள் கம்போடியா கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சங்கரர் இந்திய நாட்டில் அத்வைத ஸ்தாபனம் செய்த சங்கரரயிருக்கலாம் என்று எழுதியிருக்கிறேர்களே எனக்கு ஐயப்பாடாக உள்ளதே" என்று கூறினேன். எனது ஐயங்களை எழுப்பினேன். பரந்த அனுபவமும் முதிர்ந்த வயதும் நிரம்பிய பேராசிரியர் சீதெஸ் "என் இளைய நண்பரே முதன் முதலில் அந்த கல்வெட்டைப் படித்தபோது, பகவத் சங்கரர்" என்ற பெயர் வந்ததும் அந்த உணர்ச்சியின் ஆர்வத்தில் நான் அவ்வாறு எழுதினேன். ஆனால் இப்பொழுது நீர் கூறும் ஐயப்பாட்டுக்கு உண்மையிலேயே இடமுள்ளது. ஆராயப்பட வேண்டியதுதான். ஆனால் நான் மிகவும் வயது முதிர்ந்துள்ளேன். உம்போன்ற ஆராய்சியாளர் மேலும் இதை ஆராய்தல் வேண்டும்" என்று அன்போடு கூறினார். இப்பொழுது பேராசிரியர் சீதெஸ் நம்மிடையே இல்லை. சங்கரர் காலத்தைப் பற்றி நான் எழுப்பிய ஐயம் அவரையும் ஐயத்தில் ஆழ்த்தியது என்பது மட்டும் இங்கே குறிக்க விரும்புகிறேன். பின்னர் எனது கட்டுரை பரோடா இதழில் பதிப்பிக்கபட்டது.
</text>
</para>

<para>
<image display="half" float="floatleft" caption="ஆதிசங்கரர்">images/sankara.jpg</image>
<text>
நான் அன்றிலிருந்து சங்கரர் காலத்தைச் சான்றுகளுடன் அறிய பல கட்டுரைகளைப் படித்தும் தொகுத்தும் வைத்தேன். பல பேராசிரியர்கள் பிறர் கருத்தை அப்படியே ஏற்றுத் தாமாக ஏதும் ஆயாமலேயே எழுதியுள்ளனர். சில ஆசிரியர்கள் இவ்வாறு இருக்ககூடும் என ஐயத்துடன் கூடிய கணிப்பாக கூறியுள்ளனர். ஒரு சிலர் முடிந்த முடிவாக எழுதியுள்ளனர். அனைத்து கட்டுரைகளையும் பார்க்கும் போது சங்கரர் காலத்தை தெளிவாக அறிந்து கொள்ளும் சான்றுகள் இல்லை என்பது தெளிவாகியது.
</text>
</para>


<para>
<p-title>கம்போடியா கல்வெட்டு</p-title>
<text>
கம்போடியா கல்வெட்டில் என்ன இருக்கிறது? அதில் உள்ள ஐயம் என்ன என்று காணவேண்டாமா? கம்போடியாவில். "பிரசாத் கண்டோல் தோம்" என்று ஒரு இடம் உள்ளது. அங்குதான் அந்த கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டில் சகவருஷம் குறிக்கப்பட்டுள்ளது. அது ஏறக்குறைய கி.பி. 866ல் எழுதப்பட்டது. ஆதலால் அக்கல்வெட்டின் காலமும் அதில் குறிக்கப்பட்ட காலமும் திட்டவட்டமாக தெரிகிறது. இந்திரவர்மன் என்று அங்கு ஆண்ட அரசனுக்கு சிவசோமன் என்று ஒரு ராஜகுரு இருந்தார். அவரைப்பற்றி அந்த கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சிவசோமன் என்ற அந்த ராஜகுரு பல பெரியோர்களிடமிருந்து கல்வி கற்றிருக்கிறார். அவர்களில் சிலருடைய பெயர்களைக குறிக்கிறார். அத்துடன் தான் எந்த கல்விகளைக் கற்றார் என்பதையும் குறிக்கிறார். அந்த இடத்தில்தான் எல்லா அறிஞர்களாலும் போற்றபடும் "பகவத் சங்கரரிடமிருந்து கல்வி கற்றேன்" என்று சிவசோமன் கூறுகிறார். இங்கு "பகவத் சங்கரர்" என்று குறிக்கப்படுபவர் "ஆதிசங்கர பகவத்பாதர்" என்றும் சிவசோமன் காலமும் சங்கரர் காலமும் உறுதிப்படுகின்றன என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆதலின் சங்கரர் கி.பி. 800ஐ ஒட்டி வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் கணிக்கின்றனர். 
</text>
</para>

<para>
<text>
அந்தக் கல்வெட்டில் சிவசோமனைக குறிக்கும் முழுப் பகுதியையும் இங்கு காணலாம். இந்தச் செய்யுள்களில் மேலும் என்ன சொல்லியுள்ளார்? முதலில் சங்கரரிடமிருந்து கற்றதாகக் கூறுகிறாரல்லவா? அடுத்த செய்யுளில் வேதங்களை அறிந்தவரும் விப்ரரும் எல்லா வித்தைகளையும் அறிந்த வருமான "பகவான் ருத்ரரிடமிருந்தும்" கல்வி கற்றேன் என்று சிவசோமன் கூறுகிறர். இந்த ஆசிரியரை குறிக்குமிடத்து பகவான் ருத்ரர் என்று குறிப்பது காணத் தகுந்தது. ஆதலின் பகவான் என்ற சொல் பொதுவாக மரியாதையைக் குறிக்க இக்கல்வெட்டில் பயன்பட்டுள்ளது.  இதுபோல் "பகவத் சங்கரர்" என்பதும் மரியாதையைக் குறிக்கும் பொருளிலேயே பயன்பட்டுள்ளது என்று தெளிவாகிறது.
</text>
</para>


<para>
<p-title>இவர் வேறு அவர் வேறு</p-title>
<text>
மேலும் வயதிலும் கல்வியிலும் முதிர்ந்த பிற ஆசிரியர்களையும் அண்டி சிவசோமன் கல்வி கற்றதாக மூன்றாவது செய்யுளில் கூறுகிறார். இதையடுத்து தாம் எந்தக் கல்விகளைக் கற்றார் என்பதையும் சிவசோமன் கூறுகிறார். தர்க்கம் காவ்யம் முதலான சாஸ்திரங்களையும், புராணங்கள், பாரதம், அனைத்து சைவ சாஸ்திரங்களையும், வியாக்கரண சாஸ்திரங்கள் ஆகியவற்றையும் கற்று மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றார் என்று கல்வெட்டு கூறுகின்றது. மீண்டும் அவர் படித்த சாஸ்திரங்களின் பட்டியலைப் பாருங்கள். சிவசோமன் படித்ததாக கூறும் கல்விப பட்டியலில் காவ்யம், வ்யாகரணம், புராணம் முதலிய பல துறைகளும் உள்ளன. ஆனால் அத்வைத வேதாந்தமோ அல்லது மீமாம்ஸையோ குறிக்கப்படவில்லை. சங்கரரிடம் இவர் கல்வி கற்றிருந்தால் எந்த கல்வி கற்றிருப்பார்? அத்வைத வித்தை அல்லவா கற்றிருப்பார்! இது வியப்பாக இருக்கிறது. 
</text>
</para>

<para>
<text>
மேலும் ஆதிசங்கரர் கடல் கடந்து பிற நாடுகளுக்கு சென்றதாகக் குறிப்பு இல்லை. அது தர்மத்துக்கு விரோதமாகவே கருதப்பட்டது. ஆதலின் சில ஆராச்சியாளர்கள் சிவசோமன் என்பவர் இந்தியாவுக்கு சென்று ஆதிசங்கரரிடம் கல்வி பயின்றார் என்று கூறுவர். இவ்வளவு அரும்பாடுபட்டு கற்ற வித்தையைக் குறிக்காமல் பிற கல்விகளை மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளதிலிருந்து அக்கல்வெட்டில் வருபவர் ஆதிசங்கர பகவத்பாதர் அல்லர். என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கலாம். மேலும் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றைக குறிக்கும் பல நூல்கள் நம் நாட்டில் உள்ளன. இவற்றில் எந்த ஒரு நூலிலும் கம்போடியா நாட்டிலிருந்து ஒரு சீடர் இங்கு வந்து சங்கரரிடம் கல்வி பயின்றதாக குறிப்பு கிடையாது. ஆதலின் அந்த சங்கரருக்கும் அத்வைத சங்கரருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றே தோன்றுகிறது. அதனால் தான் இந்திய வரலாற்று அறிஞர்களிலே தலைசிறந்தவராக கருதப்படும் ஆர்.சி. மஜும்தார் என்ற பேராசிரியர் கம்போடியா கல்வெட்டுகள் பதிப்பிக்குமிடத்து மிகவும் ஐயப்பாட்டுடன் இதைக் குறித்துள்ளார். அவ்வாறு குறிக்குமிடத்து சங்கரரின் காலத்தைக கணிக்க இந்திய நாட்டு இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ ஆதாரபூர்வமான சான்றுகள் ஏதுமில்லை என்றும் எழுதியுள்ளார். இந்த ஒரே ஒரு கல்வெட்டைக் காரணமாக கொண்டு ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தார் என்று கொள்வதற்கு இல்லை என்றே தோன்றுகிறது.
</text>
</para>

<para>
<p-title>சங்கர விஜயம் </p-title>
<text>
நம் நாட்டில் ஆதிசங்கரருடைய வரலாற்றைக் குறிக்கும் பல நூல்கள் உள்ளன. இவற்றில் அவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பற்றி சில முரண்பாடுகள் உள்ளன. இதை மேலைநாட்டு அறிஞர்கள் சுட்டிக்காட்டி இந் நூல்கள் ஆதாரமற்றவை என்று கூறுகின்றனர். இங்கு ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் ஆன்றோர் வரலாற்றை காவிய வடிவில் எழுத முற்படும்போது சில கருத்துக்களைப் பக்தியின் அடிப்படையிலும் எழுதும் மரபு உண்டு. ஆங்காங்கே பல தலபுராணங்களில் எழுதப்பட்டுள்ளதை நாம் அறிவோம். நமது நூல்களை அந்த அடிப்படையில் அணுக வேண்டுமே அல்லாது இவை சரித்திரத்தை மட்டும் எழுத வந்த நூல்கள் அல்ல என்பதை மனதில் கொள்ளல் வேண்டும். ஆங்காங்கு ஆன்றோர்கள் கொண்டிருந்த வழி வழியாக அறிந்திருந்த கருத்துகள் இவற்றில் இடம் பெறுகின்றன.
</text>
</para>

<para>
<p-title>வரலாற்று நியதி</p-title>
<text>
ஆனால் வரலாற்றுக்கு என்று ஒரு நியதி உண்டு. அது அடிப்படை சான்றுகளைக் கொண்டு ஐயம் திரிபற எழுதுவது. பிறவற்றை ஊகமாக எழுதுவது என்பது தான் மரபு. சங்கரருடைய காலத்தை திட்டவட்டமாகக் கணிக்க நம் நாட்டில் எந்த நூலிலும் சான்றுகள் இல்லை. எந்த கருத்தை எடுத்து காட்டினாலும் அதற்கு மாறான கருத்தை வேறுறொரு நூலிலிருந்து எடுத்துக் காட்ட முடியும். ஆதலால் நம் நாட்டிலுள்ள சங்கரர் வரலாற்று நூல்களிலிருந்து அவரது காலத்தை கணிக்க முற்படுவது பயன் தருமா என்பது கேள்வி. அண்மையில் ஜப்பானிய பேராசிரியர் ஹாஜிமே நாகாமூரா என்பவர் இதுகாரும் சங்கரர் காலத்தைப் பற்றி எழுதிய அனைத்துக கட்டுரைகளையும் ஆராய்ந்து கி.பி. 788லிருந்து 820 வரை சங்கரர் வாழ்ந்தார் என்ற கருத்து முற்றிலும் தவறானது. ஏற்புடையது அல்ல என்று எழுதியிருக்கிறார்.
</text>
</para>

<para>
<text>
காலத்தை கணிப்பதை ஆராய்சியாளரிடையே சர்ச்சைக்கும் சண்டைக்கும் விட்டுவிடலாம். அது அவர்களுக்கு சூடாகக்கூட இருக்கும்! சங்கரரை அறிவது என்பது அவரது காலத்தை அறிவது மட்டும்தான? அவர் விட்டுச் சென்றுள்ள ஏறாளமான நூல்கள் உள்ளன. அவர் அறிவின் சிகரமாக திகழ்ந்தவர். உலக அரங்கிலே சமயத்திற்கும் பக்திமரபுக்கும் அவர் செய்துள்ள தொண்டு இமயம் போன்றது என அண்மைக்கால ஆராய்சியாளர் கூறுகின்றனர். அவர் அறிவுக்கு முதலிடம் கொடுத்துள்ளது. "விஞ்ஞான பிரும்ம" என்ற உபநிடத கருத்துகளின் அடிப்படையிலாகும். அவரது நூல்களின் நடை "சிங்க ஏறு" போன்ற நடை. அவரது நூல்களை அவர் கூறியுள்ள மூலத்திலேயே படிக்கும் போது அவர் ஆற்றலைக் கண்டு அறிஞயர்கள் வியக்கிறார்கள். அவர் கூறியுள்ள கருத்துக்கள் காலத்தை கடந்து, தேசத்தைக் கடந்து என்றும் எங்கும் நிலைத்து நிற்பவையாக உள்ளன. தாங்கள் விரும்பினும் விரும்பாவிடினும் அவருக்கு பின் வந்த சமுதாயம் அவரது கருத்துகளை ஏதாகிலும் ஒரு வகையில் எற்றுக்கொண்டு தம்மில் அடக்கியே வளர்ந்துள்ளது. இவைகளையெல்லாம் படிக்கலாமே! ஆசிரியர்கள் மாணாவர்களுக்கு எப்படி கல்வி கற்றுத்தர வேண்டும் என்பதை சங்கரர் கூறுகிறார். மாணவர் உள்ளம் பிஞ்சு உள்ளம். மீண்டும் மீண்டும் ஐயங்கள் எழாலாம். அவர்கள் மீது கடிந்து கொள்ளாது எவ்வளவு முறை கேட்டாலும் அவர்கள் அறியும்வரை அன்போடு புகட்ட வேண்டும் என்கிறாரே அதையும் படிக்கலாம். சித்தத்தைத் தூய்மைப்படுத்த எழுந்தவையே சடங்குகள். உண்மை நிலையை அறிவதற்கு அல்ல. உண்மை என்பது ஆய்ந்த அறிவின்பால்பட்டது.
</text>
</para>

<para>
<verse>
<line>சித்தஸ்ய சுத்தயே கர்ம நது வஸ்தூபலப்தயே</line>
<line>வஸ்து ஸித்திர் விசாரேண நகிஞ்சித் கர்மகோடிபிஹி</line>
</verse>
</para>

<para>
<text>
என்று கூறுவார். இதையும் படிக்கலாம். அவர் காலத்தை திட்டவட்டமாக அறிய சான்றுகள் இல்லாவிடினும் காலத்தை கடந்து நிற்கும் அவரது கருத்துகளை அறிவதே சாலப் பொருந்தும். ஆதி சங்கரரை பரமேஸ்வரரின் அவதாரமாக நம்நாட்டு மக்கள் நம்புகின்றனர். காஞ்சி முனிவரை ஆதிசங்கரரின் அவதாரமாக பிரத்யக்ஷ தெய்வமாகத்தானே உலகம் காண்கிறது!
</text>
</para>

</article>
