காஞ்சி தவமுனிவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர மகாபெரியவர் 98வது ஜயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்நாளில் நல்லவர்கள் அனைவருடைய மனதிலும் ஒரே எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது. இப்புண்ணிய மகான் வாழும் இந்நாளில் நாமும் வாழும் பேறு கிட்டியதே! அவரைப் பார்ககவும் அவரது ஆசியைப் பெறவும் நாம் என்ன பேறு செய்தோம் என்று எண்ணி எண்ணி மனம் பூரிக்கிறோம்.
உமையன்னை சிவபெருமானை அடைய தவம் மேற் கொண்டாளாம். நீ காஞ்சிபுரம் சென்று கம்பையாற்றின் கரையில் தவம்புரிந்தால் என்னை அடைவாய் என சிவபெருமானே கூறியதாக புராணங்கள் கூறும். அவ்வன்னை தான் “தவம்புரி காமாக்ஷி” எனக் கூறுவர். அது போன்று ஈடு இணையில்லாத தவமுனிவர் ஒருவரை இருபதாம் நூற்றாண்டில் எங்களுக்கு கொடு என இருபது நூற்றாண்டுகள் தமிழகம் தவம் புரிந்திட அதன் பயனாய் நம்மிடை விளங்குபவர் காஞ்சி பெரியவர் அவர்கள் எனில் அது மிகையில்லை.
இந்திய மக்களுக்காக இந்நூற்றாண்டில் வாழ்ந்த தலைவர்கள் மகாத்மா காந்தி, பண்டிட் மதன்மோகன் மாளவியா, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்ற திலகங்கள் அனைவரும் அடிபணிந்து எவருடைய முன்னிலையில் அமைதியும் ஆக்கமும் பெற்றார்களோ, எவர் தமது 13 வது வயதில் துறவு மேற்கொண்டு காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரிக்கத் தொடங்கி கடந்த 85 ஆண்டுகளாக அல்லும் பகலும் ஒவ்வொரு வினாடியும் இந்நாட்டு மக்களின், ஏன் உலக மக்களின் அமைதிக்காகவும் ஆன்மீக வாழ்வுக்காகவும் தம் பணிகளை இந்திய மரபுப்படி மேற்கொண்டு வருகிறாரோ அவர் நமது காஞ்சி பெரியவர் அவர்கள் என உலகம் கூறுகிறது.
அரசியல் தலைவர்களாகட்டும், அனைத்துலக விஞ்ஞானிகளாகட்டும், புகழ் பெற்ற டாக்டர்களாகட்டும், பேராசிரியர்களாகட்டும், மாமேதைகளாகட்டும், ஆன்மீகத்துறை போன்ற ஆன்றோர்களாகட்டும் காஞ்சி தவமுனிவரிடம் உரையாடும் பேறு கிடைத்த போது தங்கள் தங்கள் துறையிலே காஞ்சி பெரியவரின் ஆழ்ந்த புலமையைக் கண்டு வியந்துள்ளனர். மிகவும் எளிமையான தோற்றமும் எளிமையான வாழ்க்கையையும் கடைபிடித்து வரும் இம்மாகானின் அறிவு ஆற்றலையும் அன்பே வடிவான உரையாடலையும் அருளாசியையும் பெறத்தான் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அவரிருக்கும் இடத்தில் குழுமுகிறார்கள். ஆன்மீக பலமும், தியாகமும், தவமுமே சமுதாயத்தை உய்விக்க வைக்கும் சக்திகள் என இவர் தமது வாழ்க்கையில் நடத்திக் காட்டியுள்ளார்கள்.
இவர்கள் ஆற்றியள்ள பணிகளை எடுத்துரைக்க வேண்டுமெனில் பல நூற்தொகுதிகளாலும் இயலாது. இறந்து பட்ட அனாதையான சவங்களை இந்துக்களின் மரபுப்படி அடக்கம் செய்யவும் அவரவர் மரபுப்படி ஈமச்சடங்குகள் புரியவும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒர் இயக்கம் தோற்றிவித்தார். நோய்வாய்பட்டு ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளைக் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறவும் உதவவும் தெய்வீக பிரசாதங்களை வழங்கவும் இயக்கம் தொடங்கி அது நடைமுறையில் உள்ளது.
பிடி அரிசிதிட்டம் என வீடுதோறும் நாள்தோறும் ஒரு பிடி அரிசி சேமித்து அதை கோயில்களில் தெய்வங்களுக்குப் படைத்து எழைகளுக்கு விநயோகம் செய்ய ஏற்பாடு செய்தார். சமயக்காழ்ப்பின்றி அனைத்துச் சமயங்களும் ஒன்றி செயல்படுவதின் தொடக்கமாக திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள் ஊர்தோறும் நடக்கச் செய்தார். நாட்டுப்புறக் கலைகளையும் சிற்பக் கலைகளையும் கோயில் வழிபாடுகளையும் பேணி வளர்க்க “ஆகம சில்ப வியாஸ கலாதி சதஸ்” என ஆண்டு தோறும் நடக்க ஏற்பாடு செய்தார்.
இதன் பயனாகவே கோயில்களில் வழிபாடு மரபுப்படி தொடர்ந்து நடக்க வகை ஏற்பட்டது. நலிந்த கோயில்களை புனருத்தாரணத் திருப்பணி செய்ய ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளார். எழை எளியவர்களுக்கு உதவி செய்ய ஒரு நிறுவனம் அமைத்துள்ளதும் குறிப்பிடதக்கது. எல்லாத் துறைகளிலும் சிறக்க வழி செய்த பெரியவர்களுக்கு வரலாற்றிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு. எந்த ஊருக்குச் சென்றாலும் அவ்வூர்க கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் பெரியவர் அங்குள்ள கல்வெட்டுக்களில் ஆழ்ந்த கவனம் செலுத்தி படிக்கத் தவறமாட்டர்கள். கல்வெட்டுகள் நமது சமயத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் அடிப்படைச் சான்றுகள். அவற்றைப் பேண வேண்டுமென்பதில் ஆழ்ந்த ஆர்வம் உடையவர்கள்.
விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவக் காரணமாயிருந்த வித்யாரண்யர் பெயரில் “உத்தங்கிட வித்யாரண்ய கல்வெட்டியல் அறக்கட்டளை” என ஒரு நிறுவனம் அமைத்து இந்தியக் கல்வெட்டுகளை எல்லாம் தொகுத்து வெளியிட வகை செய்துள்ளார்கள். இரண்டு கல்வெட்டுத் தொகுதிகளை இதுவரை வெளியிட்டுள்ளார்கள்.
இராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது தஞ்சை பெரியகோயிலில் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் ஆகியோர் வந்தனர். நவரத்னம் இழைத்த தங்கக் கிரீடம் ஒன்றை செய்தளித்து இராஜராஜன் சிலைக்கு இந்திராகாந்தியைக் கொண்டு அணிவிக்க செய்தார்கள். முதலாம் இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்டசோழபுரக் கோயில் சிறக்க கங்கை நீர் கொண்டு எப்பொழுதும் அபிஷேகம் நடைபெறவும் அன்னாபிஷேகம் நடைபெறவும் ஏற்பாடுகளை செய்துள்ள பெருந்தகை அவர்கள்.
அவர்களோடு பலமுறை பல மணிநேரம் கல்வெட்டுப் பற்றி பேசும் பெரும் வாய்ப்பு இக்கட்டுரை ஆசிரியருக்கு கிட்டியள்ளது. பல வெளிநாட்டு பேராசிரியர்களை பெரியவர்களிடம் அழைத்து செல்லும் பேறும் கிட்டியுள்ளது. ஒரு ரஷ்ய நாட்டு பேராசிரியரை அவர்களிடம் அழைத்து சென்ற போது அவர்களிடம் உரையாடி விட்டு வெளியே வந்த ரஷ்யப் பேராசிரியர் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்துள்ள தத்துவங்களையும் பண்பாட்டையும் தன்னுள்ளே கொண்டு, அதன் உருவகமாக எளிமையே உருவெடுத்து கிராமப்புறங்கள் தோறும் கால்நடையாகவே சென்று அவ்வுன்னத தத்துவங்களை கடைபிடித்து எடுத்துரைக்கும் இந்த மகானைப் போல் பிறிதொரு பெரியவரை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை” என்றார். இதையே தான் இப்பெரியவரை பார்க்கும் ஒவ்வொருவரும் எண்ணுகிறார்கள். ஈடிலாத் தவமுனியே! இப்பண்பு சிறக்க, இந்நாடு சிறக்க இன்னும் ஒர் நூற்றாண்டு இரும் என வேண்டிக் கொள்ளத்தான் செய்கின்றார்கள்.