5. மூவர் கண்ட செப்பேடு

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 4 | Contents | அத்தியாயம் 6 | Home

இராஜேந்திர சோழனுடைய செப்பேடுகள் சமீபத்தில் தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் ஏசாலம் என்ற கிராமத்தில் கிடைத்தமை அனைவரும் அறிந்ததே. இந்த ஏசாலம் என்ற கிராமத்திற்கு அருகில் எண்ணாயிரம் என்ற ஊர் உள்ளது. தமிழ்ப் புலவர்களில் சிறப்பு வாய்ந்த காளமேகப் புலவர் இந்த எண்ணாயிரம் கிராமத்தில் பிறந்தவர் என காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த எண்ணாயிரம் என்ற கிராமத்தில் இராஜராஜன் காலத்தில் ஒரு பெரிய கோயில் எடுக்கப்பட்டிருந்தது. இப்பகுதியையே இராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்று இராஜராஜன் பெயரிட்டிருந்தான். இராஜேந்திரசோழன் இங்கு ஒரு பெரிய கல்லூரியை நிறுவி அங்கு வேதம் இலக்கணம் சாத்திரங்களை முறையாகப் படிக்க வழி வகை செய்திருந்தான். ஏசாலம் கிராமத்திற்கு அருகில் பிரம்மதேசம் என்ற ஊர் உள்ளது. அங்கும் சோழர் காலத்துக் கோயில்கள் இருக்கின்றன. எண்ணாயிரம் ஏசாலம் பிரம்மதேசம் ஆகிய இந்தப் பகுதிகள் முழுவதுமே சோழர் காலத்தில் மிகச் சிறந்த பகுதியாகத் திகழ்ந்திருக்கின்றன. இச்சிறப்பு வாய்ந்த பகுதியில் சிவபெருமானுக்கு திருஇராமேச்வரம் என்ற பெயரில் ஒரு கோயிலை இராஜேந்திர சோழனுடைய இராஜகுரு சர்வசிவபண்டிதர் என்பவர் கட்டினார். இக்கோயிலுக்கு இராஜேந்திரசோழன் ஒரு ஊரை தானமாக அளித்துள்ளான். இந்த தானத்தை இராஜேந்திர சோழன் காஞ்சீபுரத்தில் தன்னுடைய அரண்மனையில் குளிக்கும் மாளிகயில் இருந்த போது தானம் செய்தான் என்று அறிகிறோம். இதனைக் குறிக்கும் செப்பேடுதான் இப்போது ஏசாலம் கிராமத்தில் இராமேச்வரம் கோயிலில் உள்ள பிராகாரத்தில் பூமிக்கடியில் இருந்து கிடைத்தது. இந்தச் சிறப்பு வாய்ந்த செப்பேட்டை, ஆகஸ்ட் 22 ஆம் தேதி நான் காஞ்சி பரமாச்சாரியாள் இடத்திலும், காமகோடி மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடத்திலும், பால பெரியவாள் சங்கர விஜயேந்திர சுவாமிகள் அவர்களிடத்திலும் காண்பிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். பரமாசாரியாள் அவர்கள் இந்தச் செப்பேட்டினைப் பார்த்து ஓர் அருமையான செய்தியை எடுத்துரைத்தார்கள். “திருவிடைமருதூரில் ஓர் கல்வெட்டில் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் இருப்பதாக என் வாத்தியார் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்” என்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தமது ஆசிரியரிடம் கற்ற கல்வெட்டுப் பகுதியை பளிச்சென்று எடுத்துரைத்தார். அக்கல்வெட்டு கரிகாலச் சோழனுடைய கல்வெட்டின் தொடக்கம். அந்த ஸ்லோகத்தில் பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்கானுசாரிநாம் ததேத் அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாசனம் என்று எழுதியிருக்கிறதாக என் வாத்தியார் சொன்னார். அது எங்கு இருக்கிறது என்றும் இன்னும் ஒருவரும் சரியாகப் பார்க்கவில்லை. இந்த சாசனம் பார்ப்பதற்குச் சுலபமாக இருக்கும். ஆனால் அதற்கு அர்த்தம் கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் சொல்ல வேண்டும். “பாத்ராகலித வேதானாம்” என்றால் வேதம் கற்றவர்களைக் காக்கின்றவன் பரிபாலிப்பவன் என்று அர்த்தம். சாஸ்த்ர மார்க்கானு சாரிநாம் என்பது “அமார்க்க அனுசாரிநாம்” என்று பிரிக்கப்படவேண்டும். அறத்தின் வழியில் நிற்காதவர்களைத் தண்டிப்பவன் என்று இதற்குப் பொருள் கூற வேண்டும். அப்படிப்பட்டவன் அரிகாலன். “அரிகாலன் என்றால் ஒனக்குத் தெரியுமோல்லியோ?” என்று பரமாச்சாரியாள் என்னைக் கேட்டார்கள். தெரியும் என்று சொன்னேன். “என்ன அர்த்தம்” என்று கேட்டார்கள். எதிரிகளுக்கு காலன் போன்றவன் என்று சொன்னேன். அந்த எதிரிகளுக்குக் காலனாகிய கரிகாலனுடைய சாசனம் இது என்று என் வாத்தியார் எனக்குச் சொல்லியிருக்கிறார் என்று பரமாச்சாரியாள் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார்கள். “சோழ ராஜாவின் தலைநகரமான உறையூர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது. அங்கு ஆட்சி புரிந்த சோழ இராஜாவுக்கு இரண்டு தேவிமார்கள். ஒரு சமயம் நாட்டில் கல்மாரி பொழிய ஆரம்பித்தது. நாட்டு மக்களெல்லாம் குடிபெயர்ந்து போனார்கள். அப்போது சோழராஜாவும் தன் தேவிமார்களோடு வெளியேறத் தொடங்கினார். கூட வந்தவர்கள் பலர் இறந்து போய்விட்டார்கள். இராஜாவுடைய முதல் மனைவி கர்ப்பமாக இருந்தாள். அவளால் இராஜாவோடு வேகமாக நடக்க முடியவில்லை. அதனால் இராஜா அந்தப் பெண்ணை வழியிலேயே தள்ளிவிட்டு மற்றொரு பெண்ணை அழைத்துக் கொண்டு நதியில் இறங்கி அக்கரை செல்வதற்காக போக ஆரம்பித்தார். ஆனால் தள்ளிவிடப்பட்ட முதல் பெண்ணின் அதிர்ஷ்டம் அங்கு கொஞ்சம் ஜலம் இருந்தது. அவள் அந்த ஜலத்தில் அடித்துச் செல்லப்பட்டு லால்குடிக்கு, பக்கத்தில் ஓர் ஊரில் கரையில் வந்து சேர்ந்தாள். அப்போது ஆற்றங்கரைக்கு வந்த ஒரு பிராமணர் அந்தப் பெண் தனியாக இருப்பதைக் கண்டு தன்வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மற்றொரு தேவியோடு போன இராஜா மண்மாரியில் சிக்கி அப்படியே மறைந்து போனார். நாட்டில் ராஜா இல்லாததால் ஊர் ஜனங்கள் பட்டத்து யானை கையில் ஒரு மாலையைக் கொடுத்து அந்த மாலையை அது யார் கழுத்தில் போடுகிறதோ அவனையே தங்கள் இராஜாவாக ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்கள். அந்த யானை லால்குடிக்குப் பக்கத்தில் அந்தக் குழந்தை இருந்த ஊருக்கு வந்தது. அந்தக் குழந்தை அப்போது வளர்ந்து சிறுவனாக இருந்தான். அவன் கழுத்தில் யானை மாலையைப் போட்டது. மற்றவர்கள் எல்லோரும் அதைப் பார்த்து அதிசயித்தினர். அந்தச் சிறுவன் யானை மீது ஒரே தாவலில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு ஐந்து யானை பலம் இருந்தது. அதனால் அவன் அம்மா அவனது காலில் கரியினால் நான்கு கோடு வரைந்து அவனுக்கு இருந்த பலத்தைக் குறைத்து விட்டாள். “காலில் கரியினால் கோடு போட்டதால் அவனுக்கு கரிகாலன் என்று பெயர் என்று புராணம் கூறும்” என்று கரிகாலனைப் பற்றிய பழைய கதையைப் பரமாச்சாரியாள் கூறினார்கள். அதன் பின்னர் செப்பேடு வாசகம் முழுவதையும் ஒன்று விடாமல் படித்தார்கள். அதில் கரிகாலனை கூறும் இடத்தில் “அரிகாலன்” என்று திருவிடைமருதூர்க் கல்வெட்டு கூறியுள்ளதைப் போலவே ஒரு செய்யுள் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதைப் படித்து விட்டு பரமாச்சாரியாள் “இதோ அதைப் போலவே இதிலும் வந்திருக்கிறதே” என்று கூறினார்கள். கரிகாலன் காலத்திலேயே அவன் பெயருடைய முத்திரைகளில் இது போல் சாசனங்கள் பொறிக்கப்பட்டன போலும்! அது வழி வழியாக வந்திருக்கிறது. அந்த கரிகாலனின் சாசனம் இப்போதிருக்கும் இடம் தெரியாவிட்டாலும் கரிகாலனின் ராஜமுத்திரையின் வாசகம் அது என்பதை பரமாசாரியாள் மூலமாக நாம் அறிய முடிகிறது. அது முற்றிலும் வரலாற்றுச் சாசனமாகவே இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கரிகாலனின் சாசன வாசகம் வழக்கில் இருந்திருக்கிறது என்பதை இராஜேந்திர சோழனின் செப்பேட்டு ஸ்லோகம் தெளிவாகக் கூறுகிறது. இதை பரமாசாரியாள் அனுக்கிரகத்தாலேயே நாம் அறிகிறோம். ஒரு ஒப்பற்ற வரலாற்று செய்தி இதன் வாயிலாகக் கிடைத்தது எனப் பெரும் மகிழ்வு எய்தினேன். பரமாசாரியாள் செப்பேட்டை தன் அருகில் கொண்டு வரச் சொல்லி ஒவ்வொரு ஏட்டிலும் உள்ள வாசகங்களைக் குறிப்பாக கிரந்த எழுத்துக்களில் உள்ள வாசகங்களை முழுமையாகத் தாமே வாசித்தார்கள். அதை வாசிக்கும்போதே மேலும் ஒரு அரிய செய்தியை எடுத்துரைத்தார்கள். “கிரந்த எழுத்து இருக்கு பாரு. அது ஆயிரம் வருஷமா மாறவே இல்லை! அப்படியே இருக்கு! தமிழ் எழுத்து காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து இப்போது இருக்கிற நிலையை அடைந்து இருக்கு! இந்தச் செப்பேட்டிலே இருக்கிற கிரந்தத்தையும் தமிழையும் பார்த்தால் அது நன்னா தெளிவாக இருக்கு” என்று கூறினார்கள். தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கு “கிரந்தம்” என்று பெயர். அண்மைக்காலம் வரையில் தமிழ் நாட்டில் சம்ஸ்கிருத நூல்கள் கிரந்த எழுத்து வாயிலாகவே படிக்கப்பட்டு வந்தன. ஆதலின் கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்கள் இன்றும் நம்மிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கல்வெட்டுக்களில் உள்ள கிரந்த எழுத்துக்களையும் பழைய தமிழ்க் கல்வெட்டுக்களையும் மிக விரைவாகப் படித்து விடலாம் என்று உண்மையும் புலப்பட்டது. சாதாரணமாக அச்சடிக்கப்பட்ட புத்தகத்தை நாம் எப்படி வாசிப்போமோ அப்படி இந்தச் செப்பேட்டை பரமாசாரியாள் வாசித்ததை நான் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடன் என் பெண் உமாவும் கூட வந்திருந்தாள். அவளும் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளைக் காண்பித்து பாதி படித்துக் கொண்டிருந்த ஆசாரியாள் “இவளுக்கு இதெல்லாம் படிக்கத் தெரியுமா” என்று கேட்டார். “கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்” என்று சொன்னேன். அவளுக்கு இதையெல்லாம் நன்னா சொல்லிக்கொடு என்று ஆசி கூறி மேலே தொடர்ந்தார். குறிப்பாக தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் பெரிய கோயிலைக் கட்டிய பகுதிகளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழீச்சவரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டியதையும் இந்தச் செப்பேடுகள் குறிக்கின்றன. இந்தச் செப்பேட்டில் இவை இரண்டும் மிகவும் அருமையாக குறிக்கப்பட்டுள்ள செய்திகளாகும். அப்பகுதியை குறிக்கும் இடத்தை இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பி படித்தார்கள். அத்துடன் இராஜேந்திர சோழன் காஞ்சிபுரத்து மகாசாலையில் இருந்த அறிஞர்களுக்கு ஏராளமான தானம் அளித்த பகுதியையும் காஞ்சிபுரத்தில் அரசனுடைய அரண்மனை இருந்த பகுதியையும் படித்தார்கள். அவ்வாறு ஆசாரியாள் படித்துக் கொண்டு வரும்போதே நான் படித்திருந்த சில வாசகங்களைக் திருத்திக் கொடுத்தார்கள். அந்தப் பெருமையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. செப்பேட்டில் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ள அரசர்கள் எல்லாம் புராண அரசர்கள் என்றும் விஜயாலயன் தொட்டு குறிப்பிடப்பட்டவர்கள் தான் வரலாற்று அரசர்கள் என்றும் ஆசாரியாள் குறிப்பிட்டது அவர்களுக்கு வரலாற்றில் எவ்வளவு ஆழ்ந்த ஈடுபாடு உள்ளது என்பதைப் புலப்படுத்தியது. ஆசாரியாள், இந்த ஏசாலம் இராஜேந்திர சோழனுடைய செப்பேட்டை சுமார் ஒன்றறை மணி நேரம் படித்து, அதில் உள்ள செய்திகளைப் பற்றி பேசியபோது தெய்வமே நமக்கு அரும்செய்திகளை எடுத்துப் புகட்டுவது போல் என் உள்ளத்தில் உணர்வு நிறைந்தது. இதை முற்றிலும் படித்துவிட்டு பரமாச்சாரியாள் “நீ இதை புது பெரியவாளிடத்தில் காண்பித்துவிட்டு அந்தக் கோயிலைப் பற்றியும் சொல்லிவிட்டு போ. அவர் அதுக்கு ஏற்பாடு செய்வா” என்று அருள் பாலித்தார். காஞ்சி பெரியவரே படிக்கும் பேற்றினை இச்செப்பேடு பெற்றது என்பதால் அச்செப்பேடு வரலாற்றில் மேலும் சிறப்பிடம் பெறுகிறது என்பதில் ஐயமில்லை. இராஜேந்திர சோழன் காஞ்சீபுரத்தில் தனது அரண்மனையில் தனது குளிக்கும் சாலையில் இருந்த சமயம் ஏசாலம் கிராமம் கோயிலுக்கு நிலம் தானம் செய்தான் என்று செய்தியை ஏசாலம் செப்பேடு கூறுகிறது. அரசன் இட்ட ஆணையை அவனது ஒலை எழுதும் மும்முடி சோழன் என்பவன் எழுதினான். அவன் எழுதிய வாசகம் சரியாக இருக்கிறதா? இல்லையா? என நான்கு அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர். சாவூர் பரஞ்சோதி, அணிமூரி நாடாழ்வான், உத்தமசோழ பிரும்மாதிராயன், உத்தமசோழ சோழகோன் என்று அந்நால்வரின் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி நடக்க வேண்டும் என இராஜேந்திர சோழ பிரும்மாதிராஜன் ஆணையிட்டான். இவன் அரசனுக்கு மந்திரியாகவும் சேனைத் தலைவனாகவும் திகழ்ந்தான். இவன் ஆணைப்படி ஓலையை எடுத்துக் கொண்டு அரங்கன் பனிச்சை என்பவனும் கிருஷ்ணபட்டன் என்பவனும் அரண்மனையிலிருந்து ஏசாலம் என்ற ஊருக்குச் சென்றனர். அந்த ஓலையில் அரசனுடைய மெய்க்கீர்த்தியும் அவன் கொடுத்த தானமும் ஊரார் என்ன செய்ய வேண்டும் என்பதும் எழுதப்பட்டிருந்தது. அந்த ஓலையை “திருமுகம்” என்று அழைத்தனர். அவ்வோலை அவ்வூருக்கு வந்ததையும், ஊரார் அதை எப்படி பெற்றார்கள் என்பதையும், என்ன செய்தார்கள் என்பதையும் செப்பேடு அழகாகக் கூறுகிறது. அந்த செப்பேடு வாசகத்தை அப்படியே பார்ப்போம். “நாட்டோமுக்கு பிரசாதஞ் செய்தருளிவர நாட்டோமும் திருமுகம் கண்டு எழுந்து எதிர் சென்று தொழுது வாங்கி தலைமேல் கொண்டு எல்லை தெரித்துக் காட்டி பிடிசூழ்ந்து பிடாகை நடந்தது கல்லும் கள்ளியும் நாட்டி அறவோலை செய்தோம்” என்று ஏசாலம் நாட்டு மக்கள் அரசனின் ஆணையை மரியாதையாக எதிர் சென்று தொழுது பெற்று தலைமேல் கொண்டு வலம் வந்தனர். யானை மேல் ஏறி, கொடி ஒன்று கையில் ஏந்தி புதியதாக வகுக்கப்பட்ட ஊரை வலம் வந்து அவ்வூருக்கு எல்லையை வகுத்து, எல்லயைக் குறிக்க எல்லைக் கற்களையும், பால் கள்ளிகளையும் எல்லைகளாக நட்டனர் என்பதையும் இதனால் அறிகிறோம். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி. இது போலவே பிற செப்பேடுகளும் கூறுகின்றன. இந்தப் பண்பு அக்காலத்தே நடைபெற்றது என அறிவோம். அது இன்றும் நம்மிடையே நடைமுறையில் உள்ளது என்ற செய்தியை காஞ்சி காமகோடி பீட பாலபெரியவாள் என்னிடத்தில் கூறியபோது நான் வியப்பில் ஆழ்ந்தேன். ஆம்! இன்றும் இது போன்ற நிகழ்ச்சி காஞ்சியில் நடைபெறுகிறது. ஆன்மிகத் துறையில் இப்பண்பு உள்ளது. ஏசாலம் செப்பேடுகளை பால பெரியவாள் பார்த்துப் படித்து போதுதான் இச் செய்தியைக் கூறினார்கள். காஞ்சி காமகோடி பீடம் மடத்திலிருந்து ஆச்சார்ய சுவாமிகள் வியாசபூஜைக்கு முதல் நாள் ஒரு “ஸ்ரீமுகம்” அனுப்பும் மரபு உண்டு. இந்த ஸ்ரீமுகத்தை மடத்தைச் சார்ந்த ஒருவர் காமாக்ஷி அம்மன் கோயிலில் கோபுர வாயிலில் நின்று படிக்கிறார். இதைக் கேட்க நகரப் பெருமக்கள் திரண்டு கூடுகிறார்கள். அவர்களுக்கு ஸ்ரீமுகம் வாசித்துக் காட்டப்படுகிறது. இதன் பின்னர் இவ்வோலையை நகரப் பெரியோர்கள் வணங்கி வாங்கி ஒரு பல்லக்கில் வைத்து நாத ஒலிகள் இசைப்ப நகரில் வலமாக எடுத்து வருகின்றனர். இது ஆண்டாண்டு தோறும் நடைபெறுகிறது. என்று பாலபெரியவாள் சொன்னார்கள். செப்பேட்டில் வந்துள்ள வாசகப்படி அப்படியே நடைபெறுகிறது என்று பாலபெரியவாள் கூறியபோது நம் நாட்டின் பண்பை எண்ணி எண்ணி மகிழந்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பெரியோரின் ஆணையை எவ்வாறு மதித்தனர் நம் நாட்டோர். இது போல் நம்மிடையே போற்றத்தகும் பண்புகள் இன்னும் எவ்வளவு இருக்கின்றனவோ அவற்றை நாம் தான் இன்னும் சரிவரக் கண்டு கொள்ளவில்லை என்று தோன்றியது. இச் செய்திக்காக பால பெரியவாளை மனதாரப் போற்றி வணங்கினேன். அரசனது ஆணையை செப்பேடு “திருமுகம்” என்று கூறுகிறது. காஞ்சி மடம் அனுப்பும் ஆணையை “ஸ்ரீமுகம்” என்று அழைக்கின்றனர். என்னே ஒற்றுமை! இச்செப்பேட்டையும் இதில் உள்ள இராஜேந்திர சோழனது ராஜமுத்திரையையும் வெகுவாக ரசித்துப் பார்த்தார்கள் புதுப்பெரியவாள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அத்துடன் அவ்வூர் கோயில் திருப்பணிகளுக்குக் காஞ்சி காமகோடி மடம் பொருளுதவியும் அளிக்கும் என்றும் அவ்வூர் கோயில் திருப்பணிக் குழவினரைத் தம்மைக் காண வரும்படியும் அழைப்பு விடுத்தார்கள். அப்போது என்னுடன் வந்திருந்த என் மைத்துனர் நாகராஜன் அக்காட்சியை அவசரம் அவசரமாக நிழற்படம் எடுத்தார். இக்காட்சி ஒரு வரலாற்றுச் சிறப்பான காட்சியாக அமையும் என நான் அப்பொழுது கருதவில்லை. இப்படம் எடுத்தபோது ஆகஸ்டு 22 ஆம் தேதி பிற்பகல் இரண்டு மணியிருக்கும். பிறகு மாலை நான்கு மணி வரையில் நான் ஸ்ரீமடத்திலேயே இருந்தேன். பின்னர் சென்னை திரும்பினேன். அன்று அதற்குப் பின்னர் யாரும் நிழற்படம் எடுத்ததாகத் தெரியவில்லை. அன்று இரவு தான் புதுப்பெரியவாள் ஜயேந்திரர் காஞ்சிபுரத்தை விட்டுப் புறப்பட்டு தலைக்காவேரி சென்றார்கள். காஞ்சி புதுப்பெரியவாள் ஜயேந்திரர் ஏசாலம் செப்பேட்டைப் பார்த்துக்கொண்டிருந்த போது பாலபெரியவாளும் உடனிருந்தார்கள். ஜயேந்திரர் பாலபெரியவாளிடம் செப்பேட்டு முத்திரையில் உள்ள புலி மீன் வில் வராகம் போன்ற சின்னங்களைப்பற்றி சிரிக்கப் சிரிக்கப் பேசி கொண்டிருந்தது இன்னம் மனத்தகத்தே நிலைத்து நிற்கிறது.
அத்தியாயம் 4 | Contents | அத்தியாயம் 6 | Home