ஸ்ரீ ரங்கம் ரங்கநாதப் பெருமானின் ஆலயத்தில் இரண்டாம் பிராகாரத்தில் தெற்குச் சுவரில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டை மத்திய அரசின் கல்வெட்டுத்துறை 1938ம் ஆண்டு படி எடுத்து அச்சிட்டுள்ளது. கிரந்த எழுத்தில் சம்ஸ்கிருத மொழியில் உள்ள இந்த கல்வெட்டு விஜயநகரப் பேரரசன் தேவராயன் ஆண்ட காலத்தில் 1429ல் எழுதப்பட்டது. ரங்கநாதப் பெருமானுக்கு வழிபாட்டுக்காக வியாஸபாரதி யோகி என்பவர் அத்திச் சோளேந்திர மங்களம் என்ற ஊரை தானமாக அளித்தார் என்று கூறுகிறது. இந்த ஊரின் வருவாயிலிருந்து ஆறு தங்கத் தளிகையில் அறுசுவையுண்டி அமுதாகப் படைக்கவேண்டும். மூன்று அணை புஷ்பமாலைகள் அணிவிக்கப்படவேண்டும். நல்ல சந்தனச் சாந்தும் பட்டாடைகளும் ரங்கராஜனுக்கு அலங்கரிக்க வேண்டும். நான்கு தீபங்கள் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும். ஷோடஸ உபசாரங்கள் ரங்கநாதனுக்கு நடைபெற வேண்டும். மூன்றாவது யாமத்தில் உத்ஸவம் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த ஊரை வியாஸபாரதி கொடுத்திருக்கிறார். ஸம்ஸ்கிருத செய்யுளாக உள்ள இந்த கல்வெட்டை வியாசபாரதியே பாடியுள்ளார்.
இந்த “வியாஸபரதி யோகி” என்பவர் தொண்டை மண்டலத்தில் சில்லிமந்தா என்ற கிராமத்தைச் சார்ந்தவர். தக்ஷிணாமூர்த்தி என்பவர்க்கும் மரகதவல்லியார் என்பவர்க்கும் பிறந்தவர். இவர் அத்வைத மரபை பின்பற்றிய சன்னியாசி என்று தெரிகிறது.
ராமசந்திர சரஸ்வதி என்ற பெரியவரின் தலைமைச் சீடர் என்று கல்வெட்டில் அழைக்கப்படுகிறார். ராமசந்திர சரஸ்வதியைப் பற்றி கூறுமிடத்து கல்வெட்டு அவரை “ராமசந்திர சரஸ்வதி என்ற குரு” என்றும், அவரிடத்தில் வியாஸபாரதி சன்னியாசம் வாங்கிக் கொண்டர் என “அவாப்த பரிவ்ராஜகத்வம்” என்று கூறுகிறது.
இதே வியஸபாரதி திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி என்றழைக்கப்படும் திருத்தவத்துறை ஈசுவரர் கோயிலுக்கும் ஒரு ஊர் தானமாகக் கொடுத்துள்ளார். ஸ்ரீ ரங்கத்துக்கு கொடுத்த மறு வருடம் லால்குடி கோயிலுக்கு கொடுத்துள்ளார். மழநாட்டில் தூயவேலி என்ற ஊரை திருத்தவத்துறை உடைய நாயனார் கோயிலுக்கு திருநாமத்துக் காணிக்கையாக கொடுத்திருக்கிறார். இதைக் கூறும் கல்வெட்டு லால்குடி சப்தரிஷீச்வரர் கோயிலில் சண்டேஸ்வரர் ஆலயத்து கிழக்கு சுவரில் உள்ளது. கல்வெட்டு தமிழில் உள்ளது. அதே விஜயநகர அரசன் தேவராயனின் ஆட்சியில் சகம் 1352ல் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டையும் மத்திய அரசு கல்வெட்டுதுறை 1928 ஆம் ஆண்டுபடி எடுத்து அச்சிட்டுள்ளனர். (ஏ.ஆர்.இ.131/1928-29) இங்கு வியாஸபாரதி பரமஹம்ஸர் என்று இந்த அத்வைதப் பெரியார் அழைக்கப்படுகிறார். இக் கல்வெட்டிலும் அவர் தொண்டை நாட்டு சில்லிமந்தா கிராமத்தில் பிறந்தவர் என்றும் இவரது பெற்றோர் தக்ஷிணாமூர்த்தி மரகதவல்லி என்றும் குறிக்கப்படுகின்றனர். தந்தையைக் கூறுமிடத்து நிம்பை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறது. நிம்பை என்பது நிம்பவனம், வேப்பங்காடு என்ற ஊராக இருக்ககூடும். இங்கு பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் ஒரு கடும் போர் நடந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன.
லால்குடி கல்வெட்டும் வியாஸபாரதியை “பரமஹம்ஸர் ராமசந்திர சரஸ்வதி” என்பவரின் சீடர் என்று கூறுகிறது. அவரது குருவாகிய ராமசந்திர சரஸ்வதி என்பவரைக் கல்வெட்டு “பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய, பதவாக்ய பிரமாண பிரதிஷ்டாபக, போகவர்த்தந பரிஷத் துரந்தார் என்று கூறுகிறது. ஆதிசங்கரரால் தோற்றிவிக்கப்பட்ட மரபில் வந்த சர்வஞபீடம் என்று அழைக்கபடும் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் பெரியார்கள் சரஸ்வதி என்று பெயர் ஏற்றுக் கொள்கின்ற மரபு இன்றும் நிலவி வருவதைக் காண்கிறோம். சரஸ்வதி என்ற பட்டம் பெற்ற அத்வைத சன்னியாசிகளின் சீடர்கள் பாரதி என்ற பட்டம் ஏற்றிருக்கிறார்கள் என்று கல்வெட்டுகள் காட்டுகின்றன.
பிற நாட்டு சமயத்தால் கோயில்களும் வழிபாடும் நமது பண்பும் ஆபத்தில் சிக்கியபோது இந்த அத்வைத சன்னியாசிகள் கோயில்களில் வழிபாடு நிலைபெற்று நிற்க வகை செய்துள்ளார்கள். வியசபாரதி யோகி ஸ்ரீ ரங்கத்துக்கும் லால்குடி ஈஸ்வரர் கோயிலுக்கும் நிலமளித்து சைவ வைணவ பாகுபாடின்றி நம் கோயில்களும் பண்பாடும் நிலைத்து நிற்க வகை செய்துள்ளார். 500 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இந்த அத்வைதப் பெரியார்கள் தமிழகத்தில் பண்பு மலர சைவ வைணவ ஒற்றுமை நிலவ தொண்டு புரிந்திருக்கிறார்கள் என்று நாம் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். இன்றும் காஞ்சியில் உலகம் உய்யும் பொருட்டு தவம் புரிந்து வரும் பரமாச்சாரியாள் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்நாட்டில் கோயில்களில் வழிபாடு மலர பண்புகள் நிலைத்து நிற்க சைவ வைணவ ஒற்றுமைக்கு அயராது புரிந்து வரும் பணிகள் இந்நாட்டு வரலாற்றில் நிலையான இடம் பெற்றுள்ளன அல்லவா!