நவராத்திரி முடிவில் விஜயதசமியையும் ஆயுதபூஜையையும் நாம் சிறப்பாக கொண்டாடுகிறோம். நாம் எவற்றை கருவிகளாகக் கொண்டு வாழ்கின்றோமோ அதையே தெய்வமாக நன்றிப் பெருக்கோடு வணங்குவது தானே ஆயுத பூஜை! ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கருவிகளை ஆய்ந்து தூய்மை செய்து அதைப் பற்றி நினைக்க வந்த விழா. எங்கும் காணக்கிடைக்காத ஒரு பெரும் விழா இது. "எழுதுகோலும் தெய்வம் எழுத்தும் தெய்வம்" என்றான் அமரகவி பாரதி. எழுத்தை பண்டைய இந்திய மக்கள் பாரதி தேவி என்றும் மொழியை சரஸ்வதி தேவி என்றும் வணங்கினர். இருவரும் ஒருவரே. அவளது பூஜையே சரஸ்வதி பூஜை. அதை ஒட்டித்தான் எழுத்தறிவிக்கும் "அக்ஷராப்யாஸம்" என்பதைத் தொடங்குகிறோம். புது ரிஜிஸ்டர்கள் எழுதுகிறோம். வரி வடிவாயும், மொழி வடிவாயும் உள்ள தாய் வணக்கம் தான் சரஸ்வதி பூஜை. அது நவராத்திரியில் இறுதியில் வருகிறது. இந்த ஒன்பது ராத்திரியில் யாரைப் பூஜிக்கிறோம் என்று கேட்டால் பெரியவர்கள் சொல்வார்கள். துர்க்கா-லக்ஷ்மி-சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களையும் மூன்று மூன்று நாட்களாக ஒன்பது நாட்கள் வணங்குகிறோம் என்பார்கள். தெய்வத்தாய் ஒருத்தியே. அச்சக்தியே நம்மிடையே மூன்று வடிவில் வருகிறாள் என்பது தான் கருத்து.
செல்வத்தின் கிழத்தி திருமகள் லக்ஷ்மி. அவளை தாமரை மலர் மீது அமர்த்தி மேல் இரு யானைகள் பொற்குடங்களில் நீர் எந்தி அவள் மீது சொரிய தூய்மையான தாமரை மலர்களை கரங்களில் ஏந்தியவளாக வணங்குகிறோம். இவ்வடிவை கஜலக்ஷ்மி என்றும், மஹாலக்ஷ்மி என்றும் அழைக்கிறோம். பண்டைய சிற்பங்களில் தேவியின் இருமருங்கிலும் சங்கமும் தாமரை மலர்களும் காணப்படும். இவை சங்கநிதி, பத்மநிதி என்ற இரண்டு நிதிகளைக் குறிக்கின்றன. தேவி நிதியின் இருப்பிடம். அனைத்து மணிகளும் உலோகக் கருப்பொருள்களும் பயிர்கள் விளையும் சக்தியும் பூமியில் உள்ளன. அவள் உலர்ந்தால் அனைத்தும் வரண்டுவிடும். அவள் செழுமை பெற மேகங்கள் திரண்டு கருத்த யானை போல் மேல் எழுந்து மழையாகப் பொழிய வேண்டும். அவ்வாறு வளமுற்ற பூமியே அனைத்து செல்வங்களையும் கொடுக்கும் செல்வக்கிழத்தி. அவளே திருமகள் லக்ஷ்மி. இதைத்தான் இரண்டு யானைகள் தேவியின் மீது நீர் பொழிவது போல் உருவகப்படுத்தினான் கவிஞன். வடிவு கொடுத்தான் கலைஞன் சிற்பி. பூமிதேவியும், லக்ஷ்மியும் ஒருவரே. செழுமையில் தான் எம்முனையிலும் வெற்றி காண இயலும். வெற்றியையே தெய்வமாக வணங்கும் போது அவளை கொற்றவை என்றும், துர்க்கை என்றும் கூறுகிறோம். செழுமையில் தான் எழுத்தும், கவிதையும், கலையும் மலர்கின்றன. இவ்வுருவில் வருபவளை கலைமகள் என்றும், சரஸ்வதி என்றும் அழைக்கிறோம். ஒரே சக்தியை அலைமகளாகவும், மலைமகளாகவும், கலை மகளாகவும் வடிவு வேறுபடுத்தி காண்கிறோம்.
யானைகள் இருமருங்கும் நீர் பொழியும் கஜலக்ஷ்மியை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல் துர்கைக்கும் சரஸ்வதிக்கும் யானைகள் இரு மருங்கு நீர் பொழியும் வடிவை பண்டைய காலங்களில் சிற்பங்களில் படைத்து வணங்கி உள்ளனர். சென்னைக்கு அருகில் 50கல் தொலைவில் உள்ளது புகழ் வாய்ந்த உத்திரமேரூர். அங்குள்ள சுந்தரவரதப் பொருமாள் கோயில் பல்லவர் காலத்தில் அதாவது இன்றைக்கு சுமார் 1230 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதில் ஒரு சரஸ்வதி தேவியின் உருவம் உள்ளது. தேவிக்கு நான்கு கரங்கள். சரஸ்வதி என்பதைக் குறிக்க அவளது கரம் ஒன்றில் ஓலைச் சுவடி இருக்கிறது. மற்றிரு கரங்களில் அக்ஷமாலையும், கெண்டியும் உள்ளன. தேவி தாமரை மலர் மீது அமர்ந்திருக்கிறாள். அவள் மேல் இரண்டு யானைகள் பொற்குடங்களை ஏந்தி நீராட்டுகின்றன. தெரியாதவர்கள் இதைப் பார்த்தால் லக்ஷ்மி என்று கூறுவார்கள். ஆனால் இது உண்மையில் சரஸ்வதியின் உருவம். வாக்தேவி என்று ஆகம நூல்கள் இவளைக் குறிக்கின்றன.
இந்தியாவில் வடபால் குறிப்பாக காஷ்மீரத்தில் துர்க்கை அன்னையை அமர்ந்தவளாக காட்டுவர். அவளருகில் அம்பிகை என்பதைக் காட்ட சிங்க வாகனம் காணப்படும். தேவியின் கரத்தில் "சிருங்கம்" கொம்பு உண்டு. இத்தேவியின் மேல் இரு யானைகள் நீராட்டுவதாக காண்பிக்கப்படும். லக்ஷ்மிக்கு மட்டும் யானைகள் இருபக்கமும் உண்டு என நாம் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் அவை துர்கைக்கும் உண்டு. சரஸ்வதிக்கும் உண்டு. மூன்றும் ஒரே சக்தியின் வெவ்வேறு பெயரும் வடிவமும். நாம் எளிதில் அறிந்து கொள்வதற்கே அடிப்படை தத்துவம் ஒன்றே என்பதை அன்றே கவிதை வாயிலாகவும் கலை வாயிலாகவும் நமக்கு ஆன்றோர் புகட்டியுள்ளனர். நமக்கு அறிவினால் தெளிவு பிறக்கும் போது உண்மை நிலை காண்கிறோம். ஆதலின் அறிவே பெரும்பேறு என சரஸ்வதி வழிபாட்டை இவ்விழாவின் முடிவான குறிக்கோளாக வைத்தனர். "விஞ்ஞான பிரும்ம" என்றும் நம் உபநிடதங்கள் கூறுகின்றன. மூடநம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியவை அல்ல நம் தெய்வ வடிவங்கள். உயர்ந்த தத்துவங்களுக்கு உருவகம் கொடுக்க வந்த கலை வடிவங்களே என்ற அறிவு பிறக்கும் போது வியக்கிறோம். இவளே மகாதேவி என்றும் மகாலக்ஷ்மி என்றும் மகாசரஸ்வதி என்றும் வணங்கப்படுபவள்.