14. கணக்குப் பிள்ளையார்?

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 13 | Contents | அத்தியாயம் 15 | Home

கங்ககொண்ட சோழபுரத்தில் கோயிலைப் பார்த்து விட்டு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வெயில்த்தாழப் போகலாம் என்று ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தேன். அப்பொழுது “இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கு கணக்கே தெரியல்லே, அந்தக் காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கத்துக் கொண்ட போது “மா காணி", “முந்திரி", “வீசம்” என்றெல்லாம் வாய்பாடு மூலமே கணக்கு சொல்லித் தருவாங்க. ஆயுள் பூராவும் அதை மறக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு மூளையை பழக்கியிருந்தாங்க” என்றார் வயதான பெரியவர் ஒருவர். அந்த பெரியவருடன் ஒருவர் இருந்தார். வயது நடுத்தரமிருக்கும். “இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கென்ன நம்ம வாத்தியாருக்கு கூடத்தான்! அவரு பிள்ளைங்களிடம் கணக்குக் கேட்பாரே தவிர திரும்பி அவரையே கேட்டா பதில் சொல்லத் தெரியாது. அதுவும் இப்போ புதுகணக்குன்னு ஒன்னு வந்திருக்கு. அது சரியாவே புரியலையாம்” என்றார் அவர். அதற்கு பெரியவர் நேர்விடை கொடுக்கவில்லை. என்னை பார்த்து இந்த ஊரில் கணக்கு பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது அதை நீங்க பார்த்திருக்கீங்களா என்று கேட்டார். எனக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்திருந்தது. அதனால் அதைப் போய் பார்க்கலாமே என்று கிளம்பினேன். முதலாம் இராஜேந்திர சோழன் கட்டியிருக்கிறானே அந்த பிரம்மாண்டமான கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அதன் பின்புறம் மதிலை ஒட்டி ஒரு மண் பாதை அது வழியாக சென்று கொண்டிருந்தோம். அங்கு வெள்வேலாம் முள்ளு மரங்கள் எங்கும் நிறைந்திருக்கிறது. அங்கு ஒரு ஓடை கணுக்கால் அளவு நீர் சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் இறங்கி அதை ஒட்டியிருந்த உயர்ந்த கரைமேல் ஏறினோம். உடன் வந்த செல்வராசு சொன்னார். சார் அந்த உயர்ந்த கரைதான் இராஜேந்திரன் சோழன் கட்டிய அரண்மனையின் கோட்டை மதில் சுவர். இந்த மேட்டைத் தாண்டினால் பிண்டிக்கல்லால் ஆன அந்த மதில் சுவரின் அடிச்சுவரைப் பார்க்கலாம். நாம் இறங்கி வந்தோமே அது கோட்டை மதிலின் புறத்தே இருக்கும் அகழி. அப்படியே இந்த மேட்டுக்கரையிலேயே நடந்து சோழர் கோட்டை மதிலையும், அகழியையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வரலாம். இராஜேந்திர சோழன் மதில், குலோத்துங்க சோழன் மதில் என்றெல்லாம் பெயர்கள் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றன என்றார். நான் கேட்டுக் கொண்டே அரண்மனை இருந்ததாகக் குறிக்கப்பட்ட பகுதியை பார்த்தேன். ஒரே பரந்த வயலாகக் காட்சி தந்தது. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் அந்த ஒளியில் பொன்மயமாக அந்தக காட்சி தென்பட்டது.

14.1 சிறுகோயில்

இருந்தாலும் இப்பொழுது என் கவனம் முழுவதும் கணக்கு பிள்ளையார் மேலேயே இருந்தது. பெரிய கோயிலிலிருந்து தென்மேற்காக வயல்வெளியில் ஒரு கல் தொலைவு சென்றோம். அங்கு நான்கைந்து வீடுகள் மட்டுமிருந்தன. அவற்றின் மத்தியில் ஒரு சிறு கோயிலைக் காண்பித்து இதுதான் கணக்குப் பிள்ளையார் கோயில் என்றார்கள். கோயில் கதவு பூட்டியிருந்தது. சாவியைக கொண்டுவரச் சொன்னேன். அது வருவதற்குள் பிள்ளையாரைப் பார்த்து விடவேண்டும் என்று ஆசை. சாவித்துளை வழியாக பார்த்தேன் ஒரே இருட்டாக இருந்தது. நல்ல பவர் உள்ள டார்ச்ச அடித்து பார்த்த போது அப்படியே ஸ்தம்பித்து போய் நின்று விட்டேன். அதற்குள் சாவி வந்து கதவை திறந்தார்கள். அடேயப்பா பிள்ளையார்னா அதுதான் பிள்ளையார்! செம்மையான பிள்ளையார்! வழவழவென்று நல்ல கருங்கல்லு. முக்கும் முழியும் அதோடு முடியும்! பருத்த தொந்திதான். தொந்தி கூட எவ்வளவு அழகாகயிருக்கிறது! நான்கு கைகள். மேல் வலது கையில் மழு; இடது கையில் மணிமாலை; கீழ் வலது கையில் ஒடிந்த தந்தம்; இடது கையில் நல்ல கொழுக்கட்டை; துதிக்கையையும் சேர்த்தால் ஐங்கரனல்லவா! அந்த துதிக்கையினால் கொழுக்கட்டையை லாகவகமாக எடுக்கிறார். அவர் வயிற்றைச் சுற்றி ஒரு பாம்பு. அகன்ற செவி. கழுத்தில் அழகான மாலை. நல்லபிள்ளையார்.

14.2. மரபு

“இந்த பிள்ளையாரு சாதாரண பிள்ளையாரில்லே! இராஜேந்திர சோழனையே கணக்கு கேட்ட பிள்ளையார் ஆக்கும்! உக்கும்” என்றாள் அந்த பக்கத்து வீட்டைச் சார்ந்த ஒரு பெண். அந்த பெண்ணுக்கு தங்கள் பிள்ளையார் அவ்வளவு சிறந்தவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. “இராஜேந்திர சோழனிடத்தில் இவர் என்ன கணக்குக் கேட்டார்?” என்று அந்த பெண்ணிடம் கேட்டேன். அப்பெண் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது மட்டுமல்ல நம்மிடம் முன்காலத்தில் இருந்த மரபையே நினைவூட்டியது. “இராஜேந்திர சோழன் அந்த பெரும் கோயிலான கங்கைகொண்ட சோழீச்சுரர் கோயிலைக் கட்டிக் கொண்டிருந்த போது மாலையில் தினந்தோறும் இந்த பிள்ளையாரிடம் வந்து இன்று எவ்வளவு செலவாயிற்று என்று கணக்கு ஒப்பிபபானாம். அதனால்தான் இவருக்கு கணக்கு பிள்ளையார் என்று பெயராம்.” என்றாள் அந்த பெண்மணி. அந்தக கிராமத்துப் பெண் கூறியது நிஜமாகவே இராஜேந்திர சோழன் தினமும் இங்கு வந்து கணக்கு ஒப்பிப்பது போல இருந்தது. இதிலிருந்து ஒரு மரபுதான் எனக்கு பிடித்திருந்தது. முன்காலத்தில் கோயில் நிர்வாகம் செய்பவர் இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்து நடைசார்த்துவதற்கு முன்னர் அன்றன்றைய கணக்கை தெய்வத்தின் முன்னிலையில் எல்லோரும் கேட்கும் வகையில் படித்துக் காட்ட வேண்டும். ஏன்! இப்பொழுது கூட ஸ்ரீரங்கம் போன்ற ஒரிரு கோயில்களில் இந்த மரபு இருக்கிறது என்றேன். கூடவந்தவர் சொன்னார். “இப்பொழுதெல்லாம் கோயில்களை நிர்வாகம் செய்பவர் நிர்வாக அதிகாரி அல்லவா? அவர் எங்க சார் வந்து கணக்கு வாசிக்கிறார்?” என்றார்.

14.3. சாளுக்கிய பிள்ளையார்

அந்த பிள்ளையார் நம்ம ஊர் பிள்ளையார் இல்லை. சாளுக்கிய நாட்டுப் பிள்ளையார். சாளுக்கிய நாட்டை சோழர்கள் வென்ற போது அங்கிருந்து சில தெய்வ உருவங்களைக் கொண்டுவந்து தமது தலைநகரில் வைத்து வணங்கியிருக்கிறார்கள். அது போல சில சாளுக்கிய சிலைகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்றும் உள்ளன. இராஜேந்திர சோழனின் மைந்தன் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை வென்றான். அப்பொழுது அங்கிருந்து ஒரு சாளுக்கிய துவாரபாலகர் சிலையை கொண்டுவந்தான். அதன் அடியில் “உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது. அந்த துவாரபாலகர் சிலை தாராசுரத்தில் இருந்தது. இப்பொழுது தஞ்சை கலைக்கூடத்தில் இருக்கிறது. இந்த பிள்ளையாரைப் பார்த்தால் அது செய்யப்பட்டிருக்கும் கல்லும் சரி, கலை மரபும் சரி அந்த துவாரபாலகர் போலவே இருக்கிறது. பிள்ளையார் கையில் வைத்திருக்கிற மழுவைப் பார்த்தாலே தெரியும் அது தமிழ்நாட்டில் தமிழ்சிற்பி செய்த சிலை இல்லை என்று. இந்த பிள்ளையார் சாளுக்கிய நாட்டிலிருந்துதான் வந்திருக்கிறார் சந்தேகமில்லை. ஆனால் யார் அழைத்து வந்தார்கள்? அதுதான் தெரியவில்லை. இங்கு வழங்குகின்ற கதையோ இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலைக கட்டும் போது இங்கே பிள்ளையார் இருக்கிறார் என்று கூறுகிறது. இராஜேந்திரனே கொண்டு வந்தானோ? எதுவாயிருந்தால் என்ன! இராஜேந்திரனையே கணக்குக் கேட்ட பிள்ளையாரே உன்னை வணங்குகிறேன் என்று நான் கரங்கூப்பி தலை வணங்கிய போது இதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவது போன்ற ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன்.
அத்தியாயம் 13 | Contents | அத்தியாயம் 15 | Home