20. பிடி வாரண்ட்

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 19 | Contents | அத்தியாயம் 21 | Home

சமீபத்தில் சரிவர வருமானவரி கட்டவில்லை என்றும் அளவுக்கு மீறி கணக்குக் காட்டாத பணம் வைத்திருந்தார் என்றும் ஒருவரை கைது செய்யக் காவல்துறை முயன்றது. அவர் கிடைக்கவில்லை. தலைமறைவாகிவிட்டார். அதனால் அவர் பெண்ணையும் பையனையும் கைது செய்து கொண்டு போய் ஒருநாள் மழுவதும் வைத்திருந்து விசாரித்தார்கள் என்று செய்தி வெளியாயிருந்தது. குற்றம் செய்தவரை பிடிக்க இயலவில்லை என்றால் அவரது வீட்டாரை பிடித்து செல்லும் வழக்கம் இருக்கிறது. சோழர் காலத்தில் அதாவது ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இம்முறை இருந்திருக்கிறது. ஆனால் அவ்வாறு பிடித்துச் செல்லுவதும் சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் செய்ய வேண்டும் என்ற நியதி அக்காலத்தே இருந்திருத்திறது என்று கல்வெட்டுக் கூறுகிறது. காஞ்சீபுரத்திற்கு அருகே உள்ளது காவேரிப்பாக்கம் என்னும் ஊர். அங்கு இராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டு இருக்கிறது. கி.பி.1010 ஆம் ஆண்டைச் சேர்ந்த அக்கல்வெட்டின் செய்தி பின்வருமாறு. காவேரிப்பாக்கத்து ஊர் சபையாருக்கு ராஜராஜ சோழன் ஒரு ஆணை அனுப்பினான். அதை வெண்பைக்குடி நாட்டு ஊரார் மூலம் அனுப்பினான். அவர் வந்து கொடுத்த ஆணைப்படி ஊர்ச்சபையும் முடிவெடுத்தது. அக்காலத்தில் பார்வதி தேவிக்கு எடுக்கும் அம்மன் கோயிலை காமக்கோட்டம் என்று அழைப்பார்கள். ஊர்ச்சபையார் இந்த முடிவை அவ்வூர் காமக்கோட்டத்தில் கூடியிருந்து விவாதித்து முடிவு எடுத்தார்கள். அதன்படி அரசிடமிருந்தோ சபையிடமிருந்தோ யாராவது குற்றம் செய்தவர்களைப் பிடிக்க பிடிவாரண்ட் வந்தால் அதை சங்கிராந்தி, பிரதமை, பெர்ணமி தினமாயிருந்தால் அந்த தினங்களில் வாங்க வேண்டிய தேவையில்லை. அதாவது வாரண்டை அந்த தினங்களில் மறுத்துவிடலாம். பிற நாட்களில் அம்மாதிரி வாரண்ட் வந்தால், புருஷரைக் காணாவிட்டால் ஸ்திரீகளைப் பிடித்துக் கொண்டுபோய் ஊர் அம்பலத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. குற்றம் செய்த ஆண்களைக் காணாவிட்டால் அவர் வீட்டுப் பெண்களைப் பிடித்துச் செல்லக் கூடாது என்பதுதான் முடிவு. இது இராஜராஜ சோழனின் ஆணைப்படி எடுத்த சபையின் தீர்மானம். இதை மீறி யாராவது பிடித்துச் சென்றால் அவர்கள் அரசனுக்கும் ஊருக்கும் குற்றம் புரிந்தவர் ஆவார்கள். அக்குற்றத்துக்காக தண்டனை பெறுவார்கள். இதை அவ்வூர் ஆண்டாண்டும் ஆளும் சபை வாரியப் பெருமக்களும் அவ்வூர் அரசு அதிகாரியும் நடைமுறை செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இக்கல்வெட்டிலிருந்து இரண்டு மூன்று செய்திகள் நமக்குத் தெளிவாகின்றன. மாதத்தில் மூன்று தினங்கள் பிரதமை, பெர்ணமி, சங்கராந்தி (புண்ணிய நாட்கள்) ஆகிய நாட்களில் யாரையும் கைது செய்யக் கூடாது. அப்புண்ணிய தினங்கள் அம்பாளுக்கு விசேஷமான தினங்கள் ஆகும். அதனால்தான் அவ்வூர் காமகோட்டத்தில் ஊரார் கூடி முடிவு எடுத்தார்கள். அப்புண்ணிய நாட்களில் பெண்கள் மனம் கலங்கக் கூடாது என்பது கருத்து. குற்றம் செய்த ஆண்கள் கிடைக்கவில்லை என்பதால் யாரும் பெண்களைப் பிடித்துச் செல்லக்கூடாது. மீறி செய்பவர்கள் அரசனின் காவலரே ஆயினும் தண்டிக்கப்படுவர் என்பது ராஜராஜசோழன் காலத்து நீதி. கல்வெட்டில் “பிடி வாரண்ட்” என்று இல்லை. அது இக்கால சொல் வழக்கு. இராஜராஜன் காலத்தில் அதைக் “கரணம்” என்று அழைத்தனர். அது ஒரு (லீகல் டேர்ம்) சட்ட வழக்கு. நமது கல்வெட்டுக்கள் எல்லாமே அக்காலத்து பதிவு செய்யப்பட்ட சட்ட பத்திரங்கள் தாம். "ரிஜிஸ்டர்டு லீகல் டாக்குமெண்ட்கள்". 30 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளன. நமது சமுதாயத்தைப் பற்றி எத்தனை அரிய செய்திகளை அவை ஆதாரபூர்வமாகத் தெரிவிக்கின்றன. காவிரிப்பாக்கத்து ஊராரர் எடுத்த முடிவை கல்வெட்டு எப்படி கூறுகின்றது என்று பார்ப்போமே! எப்பேர்ப்பட்ட கரணங்களும் ஸங்கிராந்தியும் உவாவும் (பெர்ணமியும்) பிரதிபதமும் இந்நாளால் காணப்பெறாததாகவும். மற்றும் எப்பேர்ப்பட்டதும் காட்டுமிடத்து காட்டப்பட்ட புருஷரைக் கொண்டு போதுவாராகவும் புருஷரைக் காணாவிடிலும் ஸ்திரீகளைக் கொண்டு போகப் பெறாதாராகவும் கொண்டு போந்தார் சபையோருக்கும், பெருமானடிகளுக்கும், அரசனுக்கும் பிழைத்தாராகவும் என்பது அவ்வூர்ச் சபையின் தீர்மானம். இவ்வளவு ஆதாரமான செய்திகளைத் தரும் கல்வெட்டுக்களை போனது போக இருப்பவற்றையாவது காப்பாற்ற வேண்டாமா?
அத்தியாயம் 19 | Contents | அத்தியாயம் 21 | Home