“காணாததைக் கண்டோம்”என்று வியந்து கூறும்படியான கண்டுபிடிப்புகள் எந்தத் துறையிலும் எப்பொழுதாவது நிகழும் அதிசயங்களாகும். சங்ககால வரலாற்றுத் துறையில் சங்க நூல்களை மீண்டும் வெளிக் கொணர்ந்து பதிப்பித்து சங்க கால மன்னர்களின் கல்வெட்டுக்களையும் பெயர் பொறித்த காசுகளையும் வாசித்தளித்தது ஆகிய நிகழ்ச்சிகளை இப்பட்டியலில் சேர்க்கலாம்.
அண்மையில் கரூருக்கு அருகில் அமராவதி ஆற்றுப் படுகையில் கிடைத்த ஒரு பொன்னாலான இலச்சினை மோதிரத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழில்மிகு சிற்பம் தமிழகத்தில் சங்க காலத்து கலைஞர்களின் அரிய கலைத்திறனை நேரடியாக எடுத்துக்காட்டும் முதல் புறச்சான்று என்ற பெருமைக்கு உரித்தாகிறது.
தொல்லியல் அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி இப்புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த சுவையான கட்டுரையில் அவருக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார்" - திரு ஐராவதம் மகாதேவன்.
"இந்தத் தங்க மோதிரத்தைப் பார்த்தீர்களா? இது கரூரில் அமராவதி ஆற்று மணலில் கிடைத்தது. எழிலே உருவாக ஆணும் பெண்ணும் அணைத்து நிற்கும் இந்த மோதிரத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று தினமணி ஆசிரியர் என்னைக் கேட்டபோது.
மாசறு பொன்னே வலம்புரி முத்தேஅரும்பெறல் பாவாய் ஆரூயிர் மருந்தேபெருங்குடி வாணிகன் பெருமட மகளேமலையிடைப் பிறவா அணியே என்கோஅலையிடப் பிறவா அமிழ்தே என்கோயாழிடைப் பிறவா இசையே என்கோ!தாழிருங் கூந்தல் தையால்
என்று சிலம்பு வரிகளே என் நினைவுக்கு வந்தன.
25.1. இலச்சினை மோதிரம்
அண்மையில் கரூருக்கு அருகில் அமராவதி ஆற்றுப் படுகையில் இது கிடைத்தது. இப்பொழுது தனியார் வசம் உள்ள இப்பொன்னாலான இலச்சினை மோதிரத்தின் எடை ஒன்றரை தோலா 15.6 கிராம். இதன் முகப்பில் 25 மி.மீ நீளமும் 15.மி.மீ அகலமும் கொண்ட ஒரு குழிவான நீள்வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஒரு தலைவனும், தலைவியும் அணைத்து நிற்கும் கோலம். இலச்சினையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலை வல்லுநர் இக்காட்சியை மிதுனம் என்று கூறுவர்.
சிற்ப அமைதியைக் கொண்டும் கரூரில் அமராவதி ஆற்றுப் படுகையிலிருந்து அவ்வப்பொழுது கிடைத்துவரும் காசுகளிலிருந்தும், கைவினைப் பொருள்களிலிருந்தும் இந்தப் பொன் இலச்சினை மோதிரம் சங்க காலத்தைச் சேர்ந்தது என்றும், சுமார் கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்றும் கூறலாம். சங்க காலச் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாகக் கிடைத்துள்ள முதல் புறச்சான்று என்ற தனிச் சிறப்பினை இம்மோதிரம் பெறுகிறது.
25.2. தலைவி
தலைவி எழிற்கொடியாய் நிற்கிறாள். தலையில் உயர்த்தி ஒருபுறமாக சொருகியுள்ள கொண்டை. நாணிச் சற்றே திரும்பியுள்ள முகம், வேய் எனத் திரண்ட தோள், நீண்டு புறத்தே தொங்கும் இடக்கரம், தலைவனை சுற்றி அணைக்கும் வலக்கரம், உள்ளக் கிளர்ச்சியை எடுத்தியம்பி விம்மும் மார்பகம், மின் இடை, வலக்கால் நிலை பெற அதனை கொடியெனச் சுற்றிய இடக்கால், கைகளில் வளையல், கால்களில் கொஞ்சும் சிலம்பு, மேனியழகை மறைக்காத மெல்லிய துகிலுடை.
25.3. தலைவன்
அருகில் அணைந்து நிற்கிறான் தலைமகன். அவனும் தன் முடியைக் கொண்டையாகச் சொருகி, தலைவியைக் காதல் கூர் நோக்கோடு கண்டு களிக்கிறான். வலக்கரத்தில் அவளுக்கு அளிக்க ஒரு மலர், குறிஞ்சி மலரோ? (குறிஞ்சி என்றால் இணைதல் என்றும் பொருள்), உயர்ந்த திண்தோள்கள், இடக்கால் நெடித்து வலக்கால் மடித்து துடியிடையாள் படரும் கொம்பென நிற்கிறான்.
25.4. கொல்லிப் பாவை
இந்த இலச்சினை மோதிரத்தில் உள்ள மடந்தையின் உருவையும் எழிலையும் காணும்போது சங்க இலக்கியங்களில் அடிக்கடி குறிக்கப்பெறும் கொல்லிப்பாவையும் நினைவுக்கு வருகிறது. அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் கபிலர், பரணர், ஒளவை முதலிய பெரும் புலவர்கள் கொல்லிமலையில் வடித்திருந்த பாவையின் எழிலைப் பாடுகிறார்கள். எடுத்துக்காட்டாக
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர்கொல்லிகருங்கட் தெய்வம் குடவரை எழுதியநல் இயல் பாவை அன்ன இம்மெல் இயல்
என்று தலைவியின் எழிலைக் கொல்லிப்பாவைக்கு ஈடாகப் பரணர் கூறுகிறார்.
கொல்லிப்பாவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இந்த மோதிரத்திலுள்ள பெண் சிற்பத்தைப் பார்த்தால் இவளைப் போன்ற மடந்தைகளைத் தான் கொல்லிப்பாவைக்கு ஒப்பக் கூறியிருக்கிறார்கள் சங்கப் புலவர்கள் என்று சொல்லலாம்.
25.5. யாருடை இலச்சினை?
இந்த இலச்சினை மோதிரத்தைச் சேர மன்னனின் பொற்கொல்லன் ஒருவன் வடித்திருக்க வேண்டும். இது ஒரு சேர அரசனின் ராஜமுத்திரையாக இருக்குமோ? அவ்வாறெனின் இதிலுள்ள சிற்பங்கள் சேரமன்னனையும் அவனுடைய தேவியையும் குறிக்கக் கூடுமோ? எப்படி இருப்பினும் ஒப்பரும் கலைஞனால் சேர அரசவையில் இது வடிக்கப்பட்டது என்பது திண்ணம்.
25.6. தமிழகத்தில் ரோமானிய வாணிபம்
சங்க காலத் தமிழகம் ரோமானியப் பேரரசுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. பொன்னோடு வந்து கறியொடு பெயர்த்த யவனரின் கப்பல்கள் தமிழகத் துறைமுகங்களில் நிறைந்திருந்தன. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழகத்தில் ரோமானிய தங்க, வெள்ளிக் காசுகள் பல்லாயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. கரூரில் மட்டும் பல ஆயிரம் ரோமானியக் காசுகள் பலமுறை புதையல்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கி.பி.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அகஸ்டஸ், டைபீரியஸ், கிளாடியல், மார்கஸ், அரேலியஸ் என்ற ரோமானிய சீசர் மன்னர்களின் காசுகளாகும்.
25.7. தமிழகம் கண்ட யவனர் அணிகள்
ரோமானியர்களைப் பண்டைய தமிழர் யவனர் என்றே அழைத்தனர். யவனர் என்ற சொல் பொதுவில் கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் குறிக்கிறது. யவனர்கள் சிற்பக் கலையில் மிகவும் சிறந்தவர்கள். சங்க காலத்தில் யவனச் சிற்பிகளைத் தமிழகம் பெரிதும் போற்றியுள்ளது. யவனத்தச்சர் என்று இவர்கள் பண்டைய தமிழ் நூல்களில் குறிக்கப்படுகிறார்கள். யவனர் தந்த வினைசிறந்த நன்கலன்களைத் தமிழ் நூல்கள் குறிக்கின்றன.
ரோமானியக் காசுகளுடன் அவர்களுடைய அணிகலன்களும் தமிழகத்தில் கிடைத்துள்ளன. கோவைக்கு அருகில் வெள்ளளூரில் கிடைத்த இரு புதையல்களில் ரோமானியக் காசுகளுடன் சில தங்க மோதிரங்களும் அணிகளும் இருந்தன. இவற்றில் ஒரு மோதிரத்தில் ஒரு கிரேக்க-ரோமானியப் பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் ரோமானியரால் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. இதனுடன் கிடைத்த மற்ற மோதிரங்களும் அணிகளும் தமிழ்க் கலைஞர்களால் ஆக்கப்பட்டவை.
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிகொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை"
என மணிமேகலை கூறுவது போல இரு நாட்டுக் கலைஞர்களும் கூடிப் பணிபுரிந்துள்ளனர் என்பதும் ஒருவர் திறனால் மற்றவர் பயனடைந்துள்ளனர் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.
இதுபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் கரிவலம் வந்த நல்லூரில் சங்ககாலத்திய தங்க அணிகள் கிடைத்துள்ளன. இவையும் யவனக் கலைஞர்களால் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவை என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த அரிக்கமேட்டிலும் ரோமானிய வினைபொருள்கள் கிடைத்துள்ளன. இங்கு பானை ஓடுகளில் மோதிர இலச்சினைகளைப் போன்ற சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றைத் தமிழ்க் கலைஞர்கள் பொறித்துள்ளனர். தங்கத்தை உருக்கி மோதிரம் வடிக்கும் போது இப்பானையோட்டு இலச்சினைகளைக் கருவாகப் பயன்படுத்தியுள்ளனர்.
25.8. சேர நாட்டில் ரோமானியர்
கி.பி. முதல் நூற்றாண்டில் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரப்பேரரசு ரோமானியப் பேரரசுடன் நெருங்கி தொடர்பு கொண்டிருந்தது என்பதைக் கரூரில் நான் நடத்திய அகழ்வு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பலவகையான ரோமானிய மட்பாண்டங்களும், ரோமானிய நாணயமும் இந்த அகழ்வு ஆய்வுகளில் கிடைத்துள்ளன.
மேலை நாட்டு நூல்களில் ரோமானியர் கொங்கு நாட்டுக்கு நீலம் முதலிய மணிக்கற்களைத் தேடி வந்தார்கள் என்றும், கரூருக்கு அருகில் படியூர் கொடுமணல் பகுதிகளிலிருந்து இவற்றை ஏராளமாக வாங்கிச் சென்றார்கள் என்றும் குறிப்புகள் உள்ளன. கொடுமணலில் முதன் முதலில் யான் நடத்திய தொல்லியல் ஆய்வும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
25.9. வாரி வழங்கும் விண்புகழ் பொருநை வஞ்சி
கரூர் சங்க காலத்தில் வஞ்சியென்றும் அழைக்கப்பட்டது. அமராவதி ஆறு அக்காலத்தில் ஆண்பெருநை என்ற பெயர் படைத்திருந்தது.
தண்பொருநைப் புனல் பாயும்விண்பொருநை புகழ் விறல் வஞ்சி
என்று பேய்மகள் இளவெயினி என்ற பெண்பாற்புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.
அண்மையில் கரூரில் அமராவதி ஆற்றுப் படுகையிலிருந்து ஒப்பரும் கருவூலங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமான சிலவற்றைக் கீழே குறித்திருக்கிறேன்.
ரோமானியத் தங்கக் காசு (கி.பி. முதல் நூற்றாண்டு) : கிளாடியஸ் சீசர் என்ற ரோமானிய மன்னரின் தங்க நாணயம்.
சேரமான் மாக்கோதையின் வெள்ளிக்காசு (கி.பி. 2ம் நூற்றாண்டு) : ரோமானிய வெள்ளிக் காசுகளின் பாணியில் ஆந்திர சாதவாகன மன்னர்களின் உருவம் பொறித்த காசுகள் வெளியிட்டது போலவே சேர மன்னர்களும் வெளியிட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டெடுத்து வெளியிட்ட வெள்ளிக் காசு ஒன்றில் மாக்கோதை என்ற பெயரும் ரோமானியப் பாணியில் அரசனது திருஉருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. அரசனுடைய பெயர் சேரமான் கோட்டம்பலத்துக் துஞ்சிய மாக்கோதையை நினைவுறுத்துகிறது.
25.10. கொல்லிப் புறையின் செப்புக்காசு
சேர மன்னனாகிய கொல்லிப்புறை வெளியிட்ட செப்புக் காசைப் பற்றி அண்மையில் நான் தினமணியில் எழுதிய கட்டுரை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்க மோதிரத்துடன் மேலும் மூன்று பொன் மோதிரங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் சிங்கம், யாளி போன்ற மிருகம் குதிரை ஆகியவற்றின் உருவங்கள் மிக நேர்த்தியாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த இலச்சினை மோதிரங்களை வெள்ளலூர், கரிவலம்வந்தநல்லூர், அரிக்கமேடு ஆகிய இடங்களில் கிடைத்த தமிழ்க் கலைஞர் செய்துள்ள மோதிரங்களுடன் அணிகலன்களுடனும் ஒப்பிடலாம். இவையனைத்துமே ஏறத்தாழ சமகாலத்தவையாகும்.
கரூரில் அமராவதி ஆற்றுப் படுகையிலிருந்து கிடைத்துள்ள பெயர் பொறித்த இருமோதிரங்களைப் பற்றிய தகவல்கள் ஏற்கனவே திணமணியில் வெளியாகியுள்ளன. ஒரு பொன் மோதிரத்தில் “ஊபாஆன்” (உபாசகன்) என்றும், ஒரு வெள்ளி மோதிரத்தில் “தித்தன்” என்றும் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்கள் புகளூர்க் கல்வெட்டுகளைப் பெரிதும் ஒத்திருப்பதால் இம்மோதிரங்களும் சங்ககாலத்தைச் சார்ந்தவையே என்று கூறமுடியும்.
25.11. கரூவூர் பொன்வாணிகன்
கரூருக்கு அருகில் புகளூரில் ஆறுநாட்டார் குன்றில் சங்ககாலச் சேரர்களான இரும்பொறை மன்னர்களுடைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. மேலும் இங்கு ஒரு கல்வெட்டில் கருவூர் பொன் வாணிகன் ஒருவனும் குறிக்கப்பெறுகிறான். ஆதலின் கருவூரில் சங்ககாலச் சேரமன்னர்களின் ஆட்சியில் பொன்வாணிகம் சிறந்திருந்தது என்பதும் அரசு குடும்பத்துடன் பொன்வாணிகர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் தெளிவாகின்றன.
ஆந்திர நாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் அமராவதி என்ற இடத்தில் ஒரு மிகப்பெரிய பெளத்த ஸ்தூபம் இருந்தது. சாதவாகன மன்னர்களின் காலத்தில் கி.பி. 1-2 நூற்றாண்டுகள் அந்த ஸ்தூபத்தில் பளிங்குக் கல்லால் ஏராளமான சிற்பங்கள் செய்யப்பெற்றன. அச் சிற்பங்களில் காணப்பெறும் மிதுன உருவங்கள் இப் பொன் மோதிரத்தில் காணப்படும் உருவங்களை ஒத்துக் காணப்படுகின்றன. ஆந்திர நாட்டு அமராவதி ஸ்தூபத்து மிதுனச் சிற்பங்களும், தமிழகத்தில் அமராவதி ஆறு ஈந்த மிதுனச் சிற்பமும் ஒன்றையொன்று ஒத்துள்ளது ஒரு சிறப்பான செய்தியாகும்.