﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>வில் அங்கம் வைத்தான் சரண்</line>
</title>

<author>டாக்டர் இரா.நாகசாமி</author>
<date>27-Mar-2007</date>

<para>
<text>
"தனது அழகிய கரத்திலே வில்லேந்தி நின்றானே இராமன் அவனை நீ சரண் அடை. கோதண்ட ராமனை சரண் அடை". கோ எனில் அரசன்; தண்டம் எனில் செய்த குற்றத்திக்கு அளிக்கப்படும் தண்டனை. கோதண்டம் அறத்தை காக்க ஏந்தியது. இராமன் அறத்தின் மூர்த்தி அல்லவா தர்மத்தை காப்பவன். ஆதலின் கோதண்டராமனை சரண் அடை. வனத்தில் தனியாக இருந்த சீதையைக கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்த இராவணனை தண்டித்த வில்லேந்திய இராமனை சரண் அடை. முற் பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த தீ வினைகள் அகல துன்பங்கள் எல்லாம் அகல, நோய்கள் எல்லாம் மறைய வேண்டுமெனில் கோதண்டராமனை சரண் அடை. என்று பாடுகிறார் திருமால் அடியார்களில் முதல்வரான பொய்கை ஆழ்வார். இவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். இவரது பாடல் இராமபக்தியின் சிறப்பையும் முழுமுதற் தன்மையையும் காட்டுகிறது. அப்பாடல் இதுதான்:
</text>
</para>

<para>
<verse>
<line>அடைந்த அரு வினையோடு அல்லல், நோய் பாவம்</line>
<line>மிடைந்தவை மீண்டும் ஒழிய வேண்டில், நுடங்கு இடையை</line>
<line>முன் இலங்கை வைத்தான் முரண் அழிய, முன் ஒரு நாள்</line>
<line>தன் வில் அங்கை வைத்தான் சரண்</line>
</verse>
</para>

<para>
<text>
ஒரு அபலைப் பெண்ணைத் துன்புறுத்தி சிறை வைத்ததற்காக இராமன் இராவணனை தண்டித்தார். குற்றம் புரிபவார் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஆதலின் அந்த இராமபிரானைச் சரண் அடைவோம் என்கிறது இப்பாடல். பண்டைய சிற்பங்களிலும் செப்புத் திருமேனிகளிலும் இராமபிரான் கோதண்ட ராமராக காட்சியளிப்பது அக்காலத்து இராமன் கோதண்டபாணியாக பெரும்பாலும் வணங்கப்பட்டமைக்குச் சான்று. தமிழகத்தில் இவர் காலத்துக்கும் முன்பிருந்தே இராமபக்தி சிறந்திருந்தது எனவும் இதனால் அறிகிறோம்.
</text>
</para>

</article>