﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>தோள் செய்யும் சிறப்பு</line>
</title>

<author>டாக்டர் இரா.நாகசாமி</author>
<date>27-Mar-2007</date>

<para>
<text>
முதாலாழ்வார் மூவரில் பூதத்தாழ்வார் இராண்டாவதாகக் குறிக்கப்படுகிறார். இவரும் இராமபக்தியை பாடுகிறார். அப்பாடல் சுவையான செய்யுள் அலங்காரங்களுடன் காணப்படுகிறது. இராவணனுக்கு பத்து தலைகள். இருபது காரங்கள். இரு கால்கள். ஆதலின் அவை அனைத்தும் இற்று வீழ இராமன் அம்பு எய்தான். அவ்வாறு வீழ்த்திய இராமனது தாள்களை யார் வணங்குகிறார்களோ அவர்களது திருவடிகளை வணங்குவது எனது தோள்களுக்குச் சிறப்பு என்கிறார் ஆழ்வார்.
</text>
</para>

<para>
<verse>
<line>தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும், முடி அனைத்தும்,</line>
<line>தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் தாள் இரண்டும்</line>
<line>ஆர் தொழுவார் பாதம்-அவை தொழுவது அன்றே-என்</line>
<line>சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு.</line>
</verse>
</para>

<para>
<text>
இப்பாடலில் ஒவ்வொரு வரியும் தனித்தனியாகவும் சேர்ந்தும் படித்து இன்புற வேண்டும். முதல் வரியில் தோள் இருபது என்பதை, "தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்" என்கிறார் ஆழ்வார், இவற்றைக் கூட்டினால் இருபது கிடைக்கும். இருபது தோள்கள் என்பது இவ்வாறு கூறப்படுகிறது. இவ்வெண்களின் அமைப்பை ஒரு சொல் விளையாட்டு எனலாம். முதலில் வரும் இரண்டு எண்களாகிய "இரண்டு எட்டு" எனபவை இரட்டைப்படை எண்கள். அடுத்த இரண்டும் ஒத்தைப்படை எண்கள். முதல் எண்ணும் கடைசி எண்ணும் "இரண்டு மூன்று" என, ஏறு வரிசை எண்கள். இடையில் உள்ள இரண்டும் "எட்டு ஏழு" என, இறங்கு வரிசை எண்கள். முதல் இரண்டைக் கூட்டினாலும் பின் இரண்டைக் கூட்டினாலும் பத்து வரும். 
</text>
</para>

<para>
<text>
"ஏழும் மூன்றும்" என்பதை இரண்டாம் முறை வருவித்துக் கொள்ள வேண்டும். அவ்வமையம் வரும் பத்து என்பது இராவணனது தலைபத்து எனக் குறிக்கும். அதை ஏழும் மூன்றுமான முடி பத்து அனைத்தும் என்பது பொருள். நம்மை கணக்குபோட வைக்கிறார் ஆழ்வார்.
</text>
</para>

<para>
<text>
அடுத்த வரியில் "தாள் இரண்டு" எனத்தொடங்கி "தாள் இரண்டு" என முடிக்கிறார். அரக்கனுடைய "தாள்கள் இரண்டும் வீழ"  யார் அம்பு எய்தானோ அவனுடைய "இரண்டு தாள்களை யார் தொழுகிறார்களோ" எனபது பொருள். "தாள் இரண்டும் வீழ தாள் இரண்டும் தொழுவார்" என்பது முரண்படுவது போல் தோன்றும். இவ்வாறு சொல் ஆக்கத்தை "முரண்பாட்டு அணி" அல்லது "விரோதாபாச அணி" என்பர் இலக்கணம் வல்லவர்கள்.
</text>
</para>

<para>
<text>
இராமனது பாதத்தை யார் தொழுகிறார்களோ அவர்களது பாதத்தை தொழுவது தான் என் தோள்களின் சிறப்பு என்கிறார். "தொழுவார் பாதம் தொழுவது" என்பது மற்றொரு வகை அணி. முன் கூறியதற்கு எதிரானது இது. 
</text>
</para>

<para>
<text>
இறுதி அடியில் என்னுடைய இரு தோள்கள் என்பது இரு கரங்களையும் குறிக்கும். எனது தோள்கள் அழகும் வலிவும் மிக்கவை என்கிறார். இராமபிரானின் அடியாரைத் தொழுவதால் அழகு பெற்றன. வலிவும் பெற்றன என்பது பொருள். எனது தோள்கள் செய்யக்கூடிய சிறப்பான செயல் எது எனில் இராம பக்தர்களை தொழுவது தான் என முடிக்கிறார் பூதத்தாழ்வார்.  இராமபக்தி மட்டுமல்ல! இராம பக்தர்களிடத்தும் பக்தியைக் காட்டுகிறார். இதிலிருந்தும் இராம பக்தி தமிழகத்தில் அக்காலத்தே எவ்வளவு சிறந்திருந்தது எனவும் அறியலாம்
</text>
</para>

</article>