குழந்தைகளுக்கு பொம்மை என்றால் ரொம்பவும் பிடிக்கும். பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடுவது என்றால் அவர்களுக்கு எவ்வளவு ஆசை தெரியுமா ? மண்ணாலான பொம்மை, மரத்தாலான பொம்மை, வெண்கலம் போன்ற உலோகங்களாலான பொம்மை, தந்தத்தாலான பொம்மை என்று பொம்மைகளில் பலாவகை உண்டு. விளையாட்டு பொம்மைகள் ஒருவகை. நவராத்திரிக் கொலுவில் வைக்கிறோமே அவைகள் அழகு பொம்மைகள். கோயில்களில் கடவுளைச் சிலர் வேண்டிக்கொள்வார்கள். அதற்காக வைக்கும் பொம்மைகள் ஒருவகை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர்கள் என்ன பொம்மைகள் செய்தார்கள் ? அக்காலத்தில் நம் நாட்டில் என்ன பொம்மைகள் இருந்தன ? மற்ற நாடுகளில் என்ன பொம்மைகள் இருந்தன ? இவைகளைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவலாயிருப்பீர்கள் அல்லவா ? அவற்றைப் பற்றி இப்போது கவனிப்போம்.
எகிப்தியப் பண்பாட்டில் பொம்மை
நைல் என்ற நதி எகிப்து நாட்டின் ஜீவ நதியாகும். இதில் தண்ணீர் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். இதன் இருகரைகளிலும்தான் நகரங்களும், கிராமங்களும் இருக்கின்றன. அதனால் எகிப்திய மக்கள் நைல் நதிக்கரையிலேயே வசிக்கின்றனர். நதிக்கரையைத் தாண்டி உள்ளே செல்ல வெறும் பாலைவனம்தான். இந்நாடு உலகிலேயே பழமையான சரித்திரம் உடையது. பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னதாகவே இந்நாட்டில் பண்பாடு உள்ள மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்களுடைய பல பொருள்களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இவற்றில் பலவிதமான பொம்மைகள் இருக்கின்றன. களிமண் பொம்மைகள், தாவரப்பசையினாலான பொம்மைகள், தந்தப் பொம்மைகள் முதலிய பொம்மைகள் இவற்றில் இருக்கின்றன.
எகிப்து மக்கள் குச்சியை எடுத்துக்கொள்வார்காள். அதில் தாவரப் பசையைப் பூசுவார்கள். அதன் மேலாகக் களிமண்ணைப் பூசி, மனிதன், குரங்கு, குழந்தை முதலிய பொம்மைகள் செய்வார்கள். இவ்விதம் செய்த பொம்மைகள் பல கிடைத்துள்ளன. பல மிருகங்களின் பொம்மைகள்கூட இப்படி செய்திருக்கிறார்கள். மிருகங்களில் நாய், நரி, சிங்கம், மாடு, யானை, முள்ளம்பன்றி முதலிய பொம்மைகள் இருக்கின்றன. இதிலிருந்து அக்காலத்தில் இந்த மிருகங்கள் எல்லாம் இருந்தன என்று தெரிகிறதல்லவா ?
அது மட்டுமா ? நைல் நதியில் விசித்திரமான ஆமைகள் இருக்கின்றன. இந்த ஆமைப் பொம்மையும் நிரம்ப செய்தார்கள். இப்பொம்மைகள் எவ்வளவு அழகானவை தெரியமா ? வண்ண வண்ண பொம்மைகள். சிவப்பு வண்ணம், பச்சை வண்ணம் முதலிய வண்ணங்களைப் பூசி பொம்மைகளை அழகாகச் செய்தார்கள். பெண்கள் தலையில் ஊசிக்குத்திக் கொள்வார்களே, அதில்கூட அழகான பொம்மைகள் இருக்கும்.
ஐயாயிரம் வருஷங்களுக்கு முந்திய பொம்மைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் எழுத்துக்கள் இருக்கின்றன. இதிலிருந்து இப்பொம்மைகள் எந்தக் காலத்தில் செய்யப்பட்டவை என்று சொல்லலாம். இதைச் சரித்திர காலம் என்று சொல்லுவார்கள். எகிப்து நாட்டைப் பரோக் என்பவர்கள் ஆண்டுவந்தார்கள். பரோக் என்றால் எகிப்து நாட்டின் மன்னர் என்று அர்த்தம். இவர்களில் மூன்றாம் தூத்மொஸில், இரண்டாம் ராம்சே என்பவர்கள் மிகச் சிறந்தவர்கள். இவர்கள் காலத்தில் செய்த பொம்மைகள் கிடைத்திருக்கின்றன. இவைகள் நல்ல நிலையில் இன்னும் இருக்கின்றன. இவ்வளவு வருஷங்களுக்குப் பிறகுகூட எப்படி இந்த பொம்மைகள் நன்னறாக இருக்கின்றன தெரியுமா ? அதற்கு இந்நாட்டு மன்னர்கள் அனுசரித்து வந்த ஒரு வழக்கமே காரணமாகும். எகிப்திய மக்களிடத்தில் மிக முக்கியமான ஒரு நம்பிக்கை இருந்தது. அதாவது ஒருவர் இறந்துபோனால் அவருடைய ஆத்மா இறப்பதில்லை. அது இருந்த உடலை பாதுகாத்துவைத்தால் என்றைக்காவது ஒருநாள் திரும்பி வந்துவிடும் என்று எண்ணி இருந்தனர். நம் நாட்டிலும் இறந்தவர்களின் உடலை சிலர் எரித்துவிடுகின்றனர். சிலர் புதைத்துவிடுகின்றனர். பிற நாடுகளிலும் இவ்விதம் புதைத்து விடுகின்றனர்.
எகிப்திய நாட்டில் அக்காலத்தில் இறந்தவர்களின் உடலை எரித்துவிடாமல் பாதுகாத்தனர். தைலங்களாலும், வாசனைத் திரவியங்களாலும், தோல் கெட்டு விடாமல் செய்வார்கள். பின்னர் உடலை பட்டு வஸ்திரத்தால் கட்டி வைப்பார்கள். முகத்தை தங்கம் வெள்ளி முதலியவற்றாலான முகமூடிகளால் அழகுபடுத்துவார்கள். இவைகளை மம்மி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பின்னர் இதற்காக கட்டப்பட்ட கல்லறைகளில் வைத்துப் புதைத்துவிடுவார்கள். அதில் யாரும் நுழையாதபடி வழியை மூடிவிடுவார்கள். இவ்விதம் புதைக்கும்போது இறந்தவர்களுக்கு பிடித்தமான பொருள்கள், பொம்மைகள் முதலியனவைகளையும் அங்கு புதைத்துவிடுவார்கள்.
அந்நாட்டு மன்னர்களாகிய பரோக்கள் தாங்கள் பட்டத்திற்கு வந்தவுடன் தங்கள் உடலை புதைப்பதற்கு மிகப்பெரிய கட்டிடங்களைக் கட்டுனார்கள். இவைகளுக்கு பிரமிட் என்று பெயர். இவைகள் உலகிலேயே மிகப்புகழ்வாந்தவை. மிகவும் பெரிய கட்டிடங்கள்.
இப் பிரமிடுகளின் உள்ளை மன்னரின் உடலை மிக விலை உயர்ந்த தங்கம், வைரம் முதலியவற்றால் ஆன பொருள்களுடன் வைத்துவிடுவார்கள். பின்னர் இதன் வழியையும் மறைத்துவிடுவார்கள். யாரும் உள்ளே நுழையாதபடி இவைகளின் வழிகள் மறைந்து போய்விடும். இருந்தாலும் இவற்றில் மிக வலையுயர்ந்த பொருள்கள் இருந்ததால் அக்காலத்திலேயே திருடர்கள், தந்திரமாக உள்ளை நுழைந்து அழகான பொருள்களையெல்லாம் திருடிச்சென்றுவிட்டார்கள். இவை போக பல எஞ்சியுள்ளன. தற்காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் பிரமிடுகளைத் திறந்து உள்ளே போய்ப் பல பொருள்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவற்றில் பல பொம்மைகள் மிகவும் நல்ல முறையில் உள்ளன. அநேகமாக எல்லா பிரமிடுகளிலும் ஒரு சிறிய கப்பலின் பொம்மை வைக்கப்பட்டிருக்கும். இது எதற்குத் தெரியுமா ? இறந்துபோன மன்னர் இந்தக் கப்பலில் ஏறி கடலை தாண்டித் திரும்பி வந்துவிடுவார் என்ற அக்காலத்திய மக்கள் நம்பினார்கள்.
எகிப்திய நாட்டின் மிகப் புகழ்வாந்த கடவுள் ஆமூன் என்பவர். இவர் செம்மறியாட்டின் உருவத்திலிருப்பவர். இவரது சிறிய பொம்மைகளும் பிரமிடுகளில் உள்ளன. ஓர் உழவன் இரண்டு காளைகள் பூட்டி ஏரை ஓட்டிசெல்வது போன்ற ஒரு சிறிய பொம்மை கிடைத்துள்ளது. இது மிக அழகு வாய்ந்தது. உட்கார்ந்திருக்கும் நிலையில் ஒரு நாய், கழுகுத் தலையும் மனித உருவமும் கொண்ட பொம்மை முதலிய பொம்மைகள் கிடைத்துள்ளன. மம்மிகளின் முகமூடிகள் மிகவும் நேர்த்தியானவை. ஒரு பிரமிட்டில் சிறு குழந்தையின் மம்மி கிடைத்துள்ளது. ஒரு பூனையின் மம்மிகூட கிடைத்திருக்கிறது. அதன் அருகில் அழகான விளையாட்டு பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன. இவ்விதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் உபயோகித்த பொம்மைகள் கிடைப்பது அரிது. எனெனில் அவர்கள் வாழ்ந்த இடங்கள் மண்மேடிட்டு மறைந்து போயிருக்கலாம். நதிகரையில் உள்ள நகரங்களும் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கலாம். அவ்விதம் கிடைத்தாலும் இது எக்காலத்தது என்று அறிவது கஷ்டம். ஆனால் எகிப்திய நாட்டில் பிரமிடுகளின் உள்ளே நன்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இப்பொம்மைகள் யாரால் வைக்கப்பட்டன, அவை எக்காலத்தவை என்று அவற்றில் உள்ள எழுத்துக்களினால் கூற முடிகறது.