நூறு ஆண்டுகளாக தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்றி உலகம் முழுவதற்கும் ஞான ஒளியும் அருள் ஒளியும் அளித்துவரும் மகாப்பெரியவர் அவர்கள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் திருவடிக் கீழ் நெருங்கி அமர்ந்து வரலாறு பற்றியும் கல்வெட்டுக்கள் பற்றியும் கலை பற்றியும் பேசும் பெரும்பேறு எனக்குப் பலமுறை கிட்டியுள்ளது. பல சமயங்ளில் மணிக்கணக்கில் என்னிடம் பெரியவர்கள் பேசிக் கெண்டிருந்திருக்கிறார்கள். ஒரு சமயம் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அத்வைத சித்தாந்தத்தை எனக்குத் தெளிவாக எடுத்துப் புகட்டியுள்ளார்கள். அந்த மகானைப் பற்றிக் கட்டுரைகள் சில எழுதும் வாய்ப்பு பெற்றேன். அவற்றை இந்நூலில் முதலில் தொகுத்து அம்மகானின் திருவடிகளில் மலராகச் சூட்டுகின்றேன். அவரது பெருமையை எழுத்தால் வடிக்க ஒண்ணுமோ? ஆதலின் "தவம் செய்த தவம்" என்று அவரது வரலாற்றுக் கட்டுரையையே நூலின் தலைப்பாக இட்டுள்ளேன்.
இந்நூலில் எனது பல கட்டுரைகள் தொகுத்துக் கொடுக்கபட்டுள்ளன. இவை வெளிவருவதற்குப் பல அறிஞர்களும் அன்பர்களும் எனக்கு ஊக்கம் அளித்துள்ளனர். "தினமலர்" ஆசிரியர் தி.ரு. இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களும், தினமணி ஆசிரியராகப் பல்லாண்டு அரும்பணியாற்றிய நண்பர் ஐராவதம் மகாதேவன் அவர்களும் சிறப்பாக குறிக்கத் தகுந்தவர்கள் ஆவர். என்னை "எழுதுங்கள்", "எழுதுங்கள்" என்று ஊக்கிவித்ததோடல்லாமல் தங்கள் நாளிதழ்களில் தயங்காது வெளியிட்ட இப்பெருந்தகைகள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கட்டுரைகள் இப்பெரியவர்களின் அன்பாலும் ஊக்கத்தாலும் மலர்ந்தவை எனக் கூறி கொள்வதில் பெருமைப் படுகிறேன். "அமுதசுரபி" ஆசிரியர் நண்பர் விக்ரமன் அவர்கள் என்பால் மிகுந்து அன்பு பூண்டவர்கள். எனது பல கட்டுரைகளை தமது அமுதசுரபியில் வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு வரலாற்றில் அளவு கடந்த ஈடுபாடு உண்டு. அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். திரு. மணியன் வெளியிட்டுவரும் "ஞானபூமி", "கலைமகள்" முதலிய பத்திரிகைகளும் எனது கட்டுரையை வெளியிட்டுள்ளன. இவ்வனைவருக்கும் எனது நன்றியை எழுத்தில் வடிக்கிறேன். சில கட்டுரைகள் வெளிவந்த போது பல நண்பர்கள் கடிதம் எழுதிப் பாராட்டினர். "முத்தரையர்" என்ற கட்டுரைக்கு இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட பாராட்டுக் கடிதங்கள் வந்தன. ஒரு சில கடிதங்களையும் அக்கட்டுரையில் இணைத்துள்ளேன்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்புச் செய்துள்ள மதிபிற்குரிய "தினமலர்" ஆசிரியரான திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகும்.
இக்கட்டுரைகள் அனைத்தும் நூல்வடிவில் வர வேண்டும் என்று பெரிதும் விரும்பியவர் நமது அன்புச் சீடர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள். அவரே முன்னின்று இந்நூலை உருவாக்கியுள்ளார். அவரது அன்புக்கும் ஆர்வத்துக்கும் கடமைப் பட்டுள்ளேன். அவருக்கு எனது ஆசிகள்.
இரா. நாகசாமி