அணிந்துரை

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
Contents | ஆசிரியர் முகவுரை | Home

இந்நூலின் ஆசிரியர் டாக்டர். இரா.நாகசாமி இவர்கள் தமிழிலும் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாகப் பல நாளேடுகளில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “தவம் செய்த தவம்” என்ற இந்த நூல்.டாக்டர். நாகசாமி காஞ்சி பரமாச்சாரியாரின் பரம பக்தர். தான் கண்டுபிடித்த ஒவ்வொரு செப்பேட்டையும் அப்பெரியவரிடம் படித்துக் காட்டி அப்பெரியவரின் கருத்துக்களைக் கேட்டு இன்புற்றிருக்கிறார். அது போன்ற ஒரு நிகழ்ச்சியைச் சுவைபட “மூவர் கண்ட செப்பேட” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். தமிழ்நாடு தொல்பொருள் துறையின் இயக்குனராக டாக்டர். நாகசாமி இருந்தபோது இவர் மேற்கொண்ட கரூர், அழகன்குளம் அகழாய்வும், கொடுமணல் அகழாய்வும் குறிப்பபிடத்தக்கவை. இவர் சங்ககால ஆய்விற்கு ஒளியூட்டிய இரண்டு கண்டுபிடிப்புக்களான அதியமான் கல்வெட்டும் கரூரில் கிடைத்த “கொல்லிப்புறை” நாணயமும் இத்துறை இயக்குனராக இருந்தபோது நடந்தவை. அதியமான் கல்வெட்டை முதலில் படித்தபோது ஏற்பட்ட மனநிலையைக் குறித்து அழகாக எழுதியுள்ளார். “குகைக்கு வெளியே ஓடிவந்தேன். மாணவர் செல்வராசைக் கட்டி அணைத்துக் கொண்டேன். மீண்டும் குகைக்குள் ஓடினேன் அந்தக் கல்வெட்டை எழுத்து எழுத்தாகப் படித்தேன். மீண்டும் வெளியே ஓடிவந்தேன்.” என்று கூறியுள்ளது அவருக்குப் புதிய வரலாற்றுச் செய்திகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது.கருத்தைக் கவரும் வேறு பல கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. தமிழகப் பண்பாட்டிலும் வரலாற்றிலும் ஆர்வம் உள்ளவர்கள் இந்நூலை வாங்கிப் படித்துப் பயன் பெறலாம். இரா. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர் “தினமலர் சென்னை”

Contents | ஆசிரியர் முகவுரை | Home