வித்யாவாசஸ்சபதி டாக்டர். இரா. நாகசமி அவர்கள் கோவை மாவட்டம், ஊஞ்சலூரில் 1930ல் பிறந்தவர். சம்ஸ்கிருத மொழியில் எம். ஏ. பட்டப் படிப்பும், தொலியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர். சங்க இலக்கியம் முதல் அண்மைக் கால இலக்கியம் வரை தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர். குறிப்பாக சைவ இலக்கியங்களில் சிறப்பாக ஈடுபட்டு பல நூல்களை இயற்றியவர். இவரது கட்டுரைகள் யுனஸ்கோ நிறுவனத்தல் 20க்கும் மேற்ப்பட்ட உலக மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பொருப்பேற்ற 22 ஆண்டுகாலப் பணியில் தமிழகம் முழுவதிலும் கல்வெட்டிலும், கலைகளிலும் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர். தொல்லியல், காசுகள், கலைகள், கோயில் வழிபாடு, சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் ஆகிய பல துறைகளிலும் வல்லுனர்.
கர்நாடக இசைப் பாடல்கள் பல இயற்றியவர். இராஜராஜ விஜயம், ஞானக்குழந்தை, அப்பர் சரிதம், மணிமேகலை முதலிய பத்துக்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இயற்றியவர். பண் முறையிலேயே பாடல்களைப் பாடி நாட்டியம் அமைத்தவர். இவரது நாட்டிய நாடகங்கள் ஸ்வீடன், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கானடா ஆகிய உலக நாடுகலளில் மிகவும் சிறப்பாக நடிக்கபெற்று புகழ் பெற்றன.
பத்தூரில் கிடைத்த நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசின் சார்பில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக சாட்ச்சியம் அளித்து நீதிபதியின் பாராட்டுகளை பெற்றதோடு வெளிநாடு சென்ற சிலையை இந்தியாவுக்கு மீட்டுத்தந்தவர். "சிலை மீட்ட செல்வர்" என பொள்ளாச்சி வள்ளல் நா. மகாலிங்கம் அவர்களால் பட்டம் அளித்து சிறப்பிக்கப் பெற்றவர். இவரது தொல்லியல் கலை சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது.