இரண்டாவது வரகுணப் பாண்டியனின் தம்பி பராந்தக வீரநாராயணன் என்பவனால் அளிக்கப் பெற்றது தளவாய்புரம் செப்பேடு. இச்செப்பேட்டில் பாண்டியர்களுடைய முன்னோர்களைக் கூறுமிடத்தில் கீழ்வரும் பகுதி காணப்படுகிறது.
ஆன்று நின்ற ஒருவன் பின்விஞ்சத்தின் விஜ்ரும்பணையும் பெறல் நகுலன் மதவிலாசமும் வஞ்சத்தொழில் வாதாபி சீராவியும் மகோததிகளின் சுருங்காத பெருந்தன்மையும் சுகேதுசுதை சுந்தரத்தையும்ஒருங்கு முன்னாள் மடிவித்த சிறுமேனி உயர்தவத்தோன்மடவிழி மூலயத்து மாமுனி புரோசிதன்னாக கடல் கடந்துஅமிரது கொண்டும்.
பாண்டியர் அகத்திய முனிவரைப் புரோகிதராக கொண்டிருந்தனர் என்று கூறுமிடத்து அகத்தியர் புரிந்த அரும் செயல்கள் கூறப்படுகின்றன நகுலன் மதத்தை அகத்தியர் அழித்தார். வஞ்சத் தொழிலில் ஈடுபட்ட வாதாபியின் ஆவியை அழித்தார். கடல் நீரை குடித்தார் என்பதோடு சுகேதுசுதை சுந்தரத்தையும் முன்னாள் ஒருங்கே மடிவித்த “சிறுமேனி” என்றும் புகழ்ப் பெற்றுள்ளார். இங்கு சுகேதுசுதையின் சுந்தரத்தை ஒருங்கே மடிவித்தார் என்பது தாடகையின் அழகை அழிவித்தார் என்னும் தாடகை வரலாறு குறிக்கப்படுகிறது.
சுகேது என்பவன் ஒரு தூய்மையான இயக்கன். அவனுக்கு மகபேறு இல்லாததால் நான்முகனை நோக்கி தவம் புரிந்தான். அவன் தவத்தை மெச்சி அவனுக்கு அழகில் சிறந்தவளும், ஆயிரம் யானைகளின் வலிமையைப் பெற்றவளும் ஆன ஒரு பெண்மகவை அயன் அருளினான். அவளை சுந்தன் என்பவன் மணந்தான். அவளுக்கு இரு மைந்தர்கள் பிறந்தனர். தன் தாரத்தின் வலிமையாலும், மைந்தர்களின் வலிமையாலும் கர்வம் கொண்ட சுந்தன் அகத்திய முனிவரின் தவத்தை அழிக்கத் தலைப்பட்டான். அகத்தியர் அனல் என விழிக்கவே மாண்டுபோனான். ஆதலின் வெகுண்ட சுகேதுவின் மகள் தன் மைந்தனோடு அகத்தியன் மீது பாய்ந்தாள். அகத்தியர் அவளை அழிவன செய்வதால் அரக்கர் ஆகியே அழிக எனச் சபித்தார். அந்த சாப்த்தால் சுதையான தாடகை தனது அழகு அழிந்து அரக்கி ஆகித்திரந்தாள் என்பது தாடகை வரலாறு.
இவ்வரலாற்றையே தளவாய்புரம் செப்பேடு சுகேதுசுதை சுந்தரத்தை (அழகை) ஒருங்கு முன்னாள் மடிவித்த சிறுமேனி என்னும் தொடரால் குறிக்கிறது. இச்செப்பேடு சற்றேறக்குறைய க.பி. 900ஐச் சார்ந்தது. இதிலிருந்து க.பி. 900ல் தாடகையின் வரலாறு தமிழகத்தில் நன்கு வழக்கிலிருந்தது என்பது தெளிவு.
ஆதிகவி வான்மீகியின் இராமகாதையில் பாலகாண்டம் 25வது சர்க்கத்தில் தாடகாவிருத்தாந்தம் என்னும் பெயரில் இது குறிக்கப்பட்டுள்ளது. சுகேதுவின் தவம், தாடகைப் பிறப்பு, சுந்தன் இறந்து தாடகை அகத்தியரை விழுங்கப் பாய்ந்தது, அகத்தியர் சாபத்தினால் தன் அழகு இழந்து அரக்கியாகித் திரிந்தது ஆகிய அனைத்தும் வான்மீகத்தில் இடம் பெற்றுள்ளன. சுவாகுவைப் பற்றிய குறிப்பு அதில் இல்லை
கம்பனது இராமகாதையில் இவ்வரலாறு தாடகை வதைப் படலத்தில் இடம் பெற்றுள்ளது. கௌசிக முனிவன் இராமனுக்குத் தாடகையின் வரலாற்றை
கல்நவில் தோளினாய் கமலத்தோன் அருள்மல்உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்துஇல்உயிர் வளர்க்கும் ஓர் எரிகொள் கூற்றமேஅன்னவள் யாவள் என அறையக் கேட்டில்
எனத் தொடங்கி 18 பாடல்களில் மிக விரிவாகவும், அழகாவும் கம்பன் எடுத்துரைப்பான். ஆனால் திரு. ராஜம் பதிப்பிலும் அண்மையில் வெளிவந்துள்ள கம்பன் கழகப் பதிப்பிலும் இப்பதினெட்டுப் பாடல்களும் மிகைப் பாடல்கள் என்று ஒதுக்கப்பட்டுள்ளன. பதிக்கப்பட்டுள்ள மூலத்தில் தாடகையின் வரலாறு இல்லை. அவள் அழிவு செய்யும் அரக்கி என்பது மட்டும் இடம்பெறுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உ.வே.சா. நூலகம், வை.மு.கோ ஆகிய பதிப்புகளில் இப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரை ஆசிரியருக்கு அண்மையில் கிடைத்த கம்பராமயண ஓலைச்சுவடி ஒன்றிலும் இப்பாடல்கள் உள்ளன.
கம்ப நாடான் கி.பி. 9ம் நூற்றண்டில் வாழ்ந்தவன் என்பது இப்போது ஆய்வாளர் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலே குறிக்கப்பட்ட தளவாய்புரச் செப்பேடு அக்காலத்தைச் சார்ந்ததே ஆதலின் அக்காலத்திலேயே சுகேது கதையின் வரலாறு தமிழ் மரபில் இடம் பெற்றிருந்த ஒன்று என்று திட்டமாக அறிகிறோம். தாடகை வரலாறு மிகைப்பாடல் என எடுக்கப் பட்டால், கம்பனில் அவளது வரலாறு இல்லாமல் போய்விடும் என்பதாலும், அவ்வரலாறு கம்பன் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஒன்று என்பதற்கு சான்றுள்ளதாலும், சொல்லாட்சியிலே அதில் வேறுபாடு புலப்படாமையாலும் மிகைப் பாடல்கள் என பதிப்பிக்கபட்டுள்ளது பொருத்தமல்ல. மூலத்தில் இடம் பெற்றதே அது என எமக்குத் தோன்றுகிறது!