47. காஞ்சியில் நடந்த கலவரம்

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 46 | Contents | அத்தியாயம் 48 | Home

காஞ்சிபுரத்தில் ஏகம்பரேஸ்வரர் கோயில் பிராகாரத்தில தென்மேற்கு மூலையில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு எதிரில் இருப்பது முப்பது பேர் நின்று கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் இவரை அடிடா என்றார். மற்றொருவர் நீ எப்படி செய்கிறாய் பார்கிறேன் என்றார். ஒரே கலவரம் போன்ற சூழ்நிலையிலிருந்தது. என்னோடு அப்போது ஹரிநாராயணாவும் உடனிருந்தார். நான் சொல்வது நடந்து கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. நடந்தது இது தான். இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு வாரம் முன்னால் எதேச்சையாக காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்தில் ஒரு மண்டபம் இருந்தது. அது இடிந்து சரிந்திருந்தது. அப்போது விழுந்த கற்களை கல்துண்டுகளாக ரோடு போடும் ஜல்லிகளாக உடைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மண்டபத்துக்கு பெர்ணமி மண்டபம் என்று பெயரிருந்தது. அங்கிருந்த எல்லாக் கற்கலையும் ஜல்லியாக உடைத்துப் போடப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் எனக்கு ஷாக் அடித்த மாதரியிருந்தது. நேராக சென்னை வந்து சேர்ந்தேன். இந்து சமய அறநிலை அணையராக உத்தண்டராம பிள்ளை என்பவர் இருந்தார். அவருக்கு ஒரு போன் செய்து உங்களை அவசரமாகப் பார்க்க வேணாடும் என்றேன். வரச் சொன்னார். அவரிடம் காஞ்சி மாநகரத்து ஏகாம்பரநாதர் கோயிலில் பெர்ணமி மண்டபம் என்ற பகுதி இடிந்துகிடக்கிறதே அதை ஜல்லியாக உடைக்கிறார்கள். நீங்கள் தான் தடுத்து காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். என்னுடைய பதட்டத்தை பார்த்து விட்டு பிள்ளையவர்கள் போன் செய்து கற்களை உடைப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டார்கள். பிறகு என்னிடம் அந்த உடைந்த மண்டபத்தில் அப்படியென்ன சிறப்பு என்று கேட்டார். தமிழ்நாட்டில் ஏராளமான பண்டைய கோயில்கள் இருகின்றன. இந்தக் கோயில்கள் பெரும்பாலும் திருப்பணியின் போது மாற்றம் பெற்றுள்ளன. ஆதலின் எஞ்சியுள்ள கோயில்களில் மிகத் தொன்மையான கட்டிடங்கள் கி.பி. 600ல் ஆண்ட மகேந்திரவர்ம பல்லவன் காலத்திலிருந்துதான் உள்ளன. அவற்றிலும் மலைகளிலே அவன் குடைந்துள்ள குகைக் கோயில்களே உள்ளன. தமிழ்நாட்டில் கருங்கற்களாலும் கட்டிடங்களை எழுப்பியிருக்கிறார்கள் என்று உலகோர்க்கு எடுத்துக கூற சான்றாக இருந்தவை இந்த ஏகாம்பரர் கோயில் பெர்ணமி மண்டபத்து தூண்கள் தான். இவை மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் எடுக்கப்பட்டவை. இவற்றில் ஒன்றில் அவனுடைய பட்டப்பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன. மகேந்திர விக்கிரமன், விசித்ரசித்தன், மத்தவிலாஸன், சித்திராகாரபுலி என்றெல்லாம் அவனது சிறப்புப் பெயர்கள் அந்த தூண்களில் செதுக்கப்பட்டிருந்தன. அந்தத் தூண்களைத் தான் ஜல்லிகளாக உடைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாடு கட்டிடக்கலை வரலாற்றுக்கு இது ஒரு பெரும் இழப்பாகிவிடும். தாங்கள் அனுமதி கொடுத்தால் இந்த தூண்களை காப்பாற்றி சென்னை அருங்காட்சிசாலையில் கொண்டு வந்து வைக்கிறேன் என்று கேட்டுக் கொண்டேன். நீங்கள் இங்கு வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று என்று பாராட்டியதுடன் அங்கேயே அத்தூண்களை சென்னை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆணை கொடுத்தார். அதை வைத்துக கொண்டுதான் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நின்று கொண்டிருந்தேன். அந்த தூண்களை கொண்டு போகக் கூடாது என்று தான் என் எதிரிலிருந்த அந்த 20-30 பேரும் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது காரசாரமான பேச்சைக் கேட்டதும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தூண்கள் ஜல்லியாக உடைக்கும் போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீர்கள்? அப்பொழுது தடுக்காமல் இப்பொழுது ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டேன். ஆனால் அதில் ஒருவர் எது எப்படியிருந்தா உனக்கென்ன உன்னை நாங்கள் கொண்டு போக விடமாட்டோம் என்று சீறினார். அத்தோடு நில்லாமல் வெளியில் சென்று மேலும் சிலரை கூட்டி வந்தார்கள். எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் கொண்டு சென்ற லாரியில் தூண்கள் எற்றிக கொண்டிருந்தார்கள் ஆதலில் லாரி டிரைவருக்கு அவர்கள் எதிரில் ஒரு ஆணையிட்டேன் தூண்களை இந்த லாரியில் ஏற்றிக் கொண்டு இவ்வூர் போலீஸ் ஸ்டேஷன் முன் சென்று நிறுத்தி வைத்துவிடுங்கள். நான் சென்னை சென்று மேலதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று அதன் படிசெய்வோம் என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் தான் லாரி நகர்வதற்கே அக்கூட்டம் வழிவிட்டது. ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்பதை லாரி டிரைவர் புரிந்து கொண்டார். கோயிலைவிட்டு வெளியில் வந்தவுடன் லாரி சென்னையை நோக்கி பறந்தது. 1300 ஆண்டுகள் நிலைத்து நின்ற வரலாற்றை அழிக்க முற்பட்டபோது நான் உடனடியாக எடுத்த முடிவினால் காப்பாற்ற முடிந்தது. இப்போது மகேந்திரவர்ம பல்லவனின் பெயர் பொறித்த அந்தத் தூண்கள் சென்னை அருங்காட்சியக நூழைவாயிலில் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கின்றன. ஒரு ஒப்பரும் வரலாற்றுச் சின்னத்தை நாம் காத்தோம் என்ற மகிழ்வு என் மனத்தே எப்போதும் நிறைந்துள்ளது.
அத்தியாயம் 46 | Contents | அத்தியாயம் 48 | Home