கோடை காலத்தில் சாராயம் காய்ச்சினால் அபராதம் ரூ. 15 இலட்சம்.
கோடை காலத்தில் சாராயம் குடிப்பவர்களுக்கு பலவிதமான வியாதிகள் வருகின்றன. ஆதலால் குடிப்பவரின் நலனை முன்னிட்டு மார்ச்சு மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் பிராந்தி, சாராயம் காய்ச்சக்கூடாது. அதை விற்கவும் கூடாது. வேறு ஒருவர் மூலமாகவும் விற்கக்கூடாது. எந்த விதத்தில் விற்றாலும் 15 லட்சம் ரூபாய் 1500 வராகன் அபராதம் கட்டி, பின்னரும் ஒரு ஆண்டு காவலிலே கிடக்க வேண்டியிருக்கும் என்று ஒரு உத்தரவிடப்பட்டது. இப்பொழுது அல்ல. 250 வருடங்களுக்கு முன்னர் பாண்டிச்சேரியில் இப்படி ஒரு ஆணை பிறப்பிக்கபட்டது. அப்போது பாண்டிச்சோரி பிரஞ்சுக்காரர்களின் கீழிருந்தது. உலகிலேயே மிக உயர்ந்த ரக ஒயின் தயாரிப்பவர்கள் பிரஞ்சுக்காரர்கள் தான். அவர்களே இப்படியொரு ஆணை பிறப்பித்தார்கள் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா! 1741 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எத்தனை வகை சாராயம் காய்ச்சப்பட்டது? அதை தெரிந்தோ, தெரியாமலோ விற்றால் எவ்வளவு அபராதம்? விற்பவர்களை எப்படி எல்லாம் தண்டித்தார்கள் என்றெல்லாம் தெளிவாக குறித்துள்ளார்கள்.
பிராந்தி, சாராயம், லிக்கர், சாராயம், பத்தாயி சாராயம், கொழும்பு சாராயம், கோவை சாராயம், பட்டை சாராயம், சுளுக்குச் சாராயம் என்றெல்லாம் பல வகையான சாராயங்கள் அக்காலத்திலிருந்தன. இந்த பல வகையான சாராயத்தை நேர்முகமாகவோ, கள்ளத்தனமாகவோ விற்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் ஒரு வருடம் காவலிலும் இருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. இப்படி அபராதம் வசூலிக்கப்பட்ட பணத்தில் ஒரு பங்கை பிச்சைக்காரர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று பிச்சைக்காரர்கள் மேம்பாட்டுக்கு தண்டனைப் பணத்தைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். சாராயத்தை யாராவது ஒருவன் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாலும், கூலிக்கு எடுத்துச் சென்றாலும் அவர்களை சாவடியில் கட்டிவைத்து அடித்து வலது தோளில் முத்திரை குத்தி அனுப்பிவிடுவார்கள். இது சாராயம் குடிப்பவர்கும் பொருந்தும். ஆனால் இறக்குபவர்கள் மட்டும் அதை காடியாக்கி விற்றுக் கொள்ளலாம்.
இந்த ஆணையிட்ட நாளில் ஏற்கெனவே தங்கள் வீட்டில் சாராயம் சேர்த்து வைத்திருந்தவர்கள் பாதிக்கக் கூடாது என்பதனால் அவர்களுக்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த கால கெடுவுக்குள் ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் தங்களிடம் உள்ள ஸ்டாக்கை எடுத்துக் கூறி ஒப்புதல் பெறவேண்டும். அப்படி பெறத்தவறினால் அவர்களிடமுள்ள சாராயம் முழுவதும் பறிக்கப்படும்.
இந்த ஆணையை வெளியிட்ட பிரஞ்சுக்காரர்கள் அதன் குறிக்கோளையும் தெளிவாக குறிப்பிட்டிருகிறார்கள். அதில் "லாகரி வஸத்துவாகிய பலவித சாராய வகைகள் கோடைக் காலமாகிய உஷ்ண காலத்திலே வாய்கட்டாமல் மிகுதியாக குடிக்கிறவர்களுக்கு மிகுதியாக வியாதி சம்பவிக்கிற படியால் இந்த அவசரமான வேலையில் எங்களால் ஆன மட்டும் விலக்கினோம் நிற்க. உத்தாரமாக கட்டளையிட்டதாவது.
எந்த சாதியில் எப்பேர்பட்டவராயிலும் மார்ச் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரையிலும் பிராந்தி சாராயங்கள் விற்றாலும், விற்பித்தாலும் கொஞ்சமானாலும், ரொம்பவானாலும் பின்னை எந்த மார்க்கத்திலேயாவது வழக்கம் பண்ணி இந்த உத்தாரத்தை மீறி நடந்தவர்கள் ஆயிரம் வராகன் அபராதமும் ஒரு வருஷம் காவலிலே கிடக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இது ஏதோ பயமுறுத்தவதற்காக வெளிப்பட்டது என்றும் எண்ணக் கூடாது என்றும், இந்த உத்தரவை கடுமையாக நிறைவேற்றுவோம் என்றும் தெளிவாகக் குறிக்கப்பட்டது.
இந்த ஆணையை பிரஞ்சிலேயும், தமிழிலேயும் வெளியிட்டார்கள். ஒரு வெள்ளைக்காரர் குதிரை மேல் எறிக் கொண்டு ஒவ்வொரு பகுதியாகச் சென்று பிரெஞ்சுலே படித்தார். அவர் பின்னே வந்த கணக்குபிள்ளை அதே ஆணையை தமிழில் படித்தார். அவர் படித்தவுடன் தண்டோரா போடப்பட்டது. இவ்வாறாக பாண்டிச்சேரி முழுவதும் தண்டோரா போடப்பட்டு பிரகடனப் படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை அக்காலத்தில் புதுச்சேரியில் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கபிள்ளை அவர்கள் அப்படியே தமது நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார்.
இதிலிருந்து 250 ஆண்டுகளுக்கு முன்னரே சாராம் குடிப்பதால் ஏற்படும் தீமைகளைக் களைய குறிப்பாக கோடை காலத்தில் அதைத் தடுக்க பிரஞ்சுக்கார அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை அறிய முடிகிறது.
இதில் வரலாற்று விந்தை என்னவென்றால் எந்தப் பாண்டிச்சேரியில் 200 வருடங்களுக்கு முன்பு சாராயம் குடிக்க தடை இருந்ததோ அதே பாண்டிச்சேரி, தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கு அமலில் இருந்த போது சாராம் குடிப்பவர்களின் புகலிடமாக, கந்தர்வலோகமாக திகழ்ந்தது என்பது குறிக்கத்தக்கது.
சாராயத்திற்கு பண்டையத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. களி, கவ்வை, நரவு, ஈழம், பானம், தோப்பீ, மது, நாற்றம் என்று பல பெயர்கள் உண்டு. பானங்களுக்கு பனாட்டு, தாளயம் என்று பெயர்கள் உண்டு. தென்னங்கள்ளுக்கு குங்கு என்றும், மலர்களிலிருந்து தயாரிக்கும் கள்ளுக்கு மது, மதுகம், தேரல் என்றும், கல்கண்டியிலிருந்து தயாரிக்கும் கள்ளிற்கு கெடம் என்றும், தேனிலிருந்து தயாரிக்கப்படும் கள்ளிற்கு மாதவம் என்றும், வெந்நெல்லிலிருந்து தயாரிக்கும் கள்ளிற்கு தொண்டி என்றும் பெயர்கள் இருந்தன. கள் எப்படி தயாரித்தல் என்பதை பற்றி பாடல்களே உண்டு. இவற்றையெல்லாம் விரிவாக ஒரு பெரும் ஆராய்ச்சியே மேற்கொள்ளலாம். அதற்கு டாக்டர் பட்டமும் பெறலாம். “களிகொள் கள்” பற்றி ஆராய்ச்சி சுவை மிகுந்து இருக்கும்.