370 ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்த வெள்ளைக்காரர் வர்ணனை:
1620 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கர் டென்மார்க்கு அரசர் நான்காவது கறிஸ்டியன் என்பவருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்தி கொண்டார். அவ்வொப்பந்தத்தின்படி தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் ஒரு கோட்டடையை அமைத்துக் கொண்டு வாணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது தரங்கம்பாடி வந்த வெள்ளைக்காரர் ஒருவர் அவ்வூர் கோயிலில் நடைபெற்ற திருவிழா பற்றியும் இங்கு நிலவிய சட்டம் ஒழுங்கு பற்றியும் நேராக பார்த்து ஒரு குறிப்பு எழுதிவைத்துள்ளார். இது நேர்முக வர்ணனை போல் காட்சி அளிப்பதோடு மிகவும் சுவையான செய்திகளையும் தருகிறது.
இதை எழுதியவர் ஜான் ஒலெஃப்ஸன் என்பவர். 1593ம் ஆண்டு ஜாஸ்லேண்டில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் டென்மார்க்கு நாட்டு கோபன்ஹேகன் நகருக்கு படிக்கவும் தொழில் செய்யவும் வந்தார். அந்நாட்டு அரசரின் பீரங்கிச் சிப்பாயாக அமர்ந்தார். 1618ம் ஆண்டு டென்மார்க்கு அரசர் கிறிஸ்டின் இந்தியாவுக்கு “ஒவ்கிட்” என்பவரை வர்த்தகத்துக்கு அனுப்பியபோது ஒலப்ஸன்னும் உடன் செல்லவிரும்பினார். ஆனால் அதற்கு அரசர் அனுமதி கொடுக்கவில்லை. அதன் பின்னர் தஞ்சைக்கும் டென்மார்க்கும் 1620ல் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுக்கு பீரங்கிச் சிப்பாயாக சென்றுவர ஜான் ஒலப்ஸன்க்கு அரசர் அனுமதி கொடுத்தார். இவரது கப்பல் டென்மார்கிலிருந்து தரங்கம்பாடி வந்து சேர ஏழு மாதங்கள் பிடித்தன. அது அக்காலத்தில் மிகவும் விரைவான பயணமாக கருதப்பட்டது. தரங்கம்பாடியில் இவர் ஒன்றறை ஆண்டுகள் பீரங்கி சிப்பாயாக பணிபுரிந்தார். அப்போது தான் இங்கு நேரில் பார்த்தவற்றை குறித்து வைத்துள்ளார்.
இங்குள்ளவர்கள் (இந்துக்கள்) தமது விழாக்களை பெரும்பாலும் இரவில் கொண்டாடுகிறார்கள். நான் ஒரு நாள் இரவு தரங்கம்பாடி கோட்டையில் பீரங்கி கொத்தளத்தில் நின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து பார்த்தால் எதிரே அந்தக் கோயில் தெரியும்.
தரங்கம்பாடி கோயில் ஒரு சதுரமான உயர்ந்த கட்டிடத்தை (விமானத்தை) கொண்டது. அதைச் சுற்றிலும் உயரந்த சுற்று சுவர்கள் உள்ளன. அதன் நடுவில் ஒரு பரந்த முற்றம் உண்டு அங்கு விவரிக்க முடியாத பயங்கரமான சிற்பக்காட்சிகள் உண்டு (அக்காலத்து வெள்ளைக்கார கிறஸ்தவர்கள் இந்து தெய்வங்களை பயங்கரமான உருவங்கள் என வர்ணிப்பது வழக்கம்). அந்தக் கோயிலின் உள்ளே மிருக வடிவில் ஆறு சிற்பங்கள் இருந்தன (இவர் குறிப்பது வாகனங்கள்). கோயிலின் உள்பகுதியில் தங்கத்தாலான மிகவும் அழகான பீடம் ஒன்றில் மூன்று தெய்வங்களின் உருவங்கள் இருந்தன. இந்த முக்கியமான மூன்று தெய்வங்களும் தான் ஆண்டுக்கு ஒரு முறை வீதிகளில் தேரில் ஏற்றி உலாவாகக் கொண்டு வருகிறார்கள் (இவர் குறிப்பது சோமாஸ்கந்த சிவபெருமானின் உருவம், உமை, சிவபெருமான், முருகன் ஆகியோரின் உருவம்). இத்தேரை வீதிகளில் இழுத்துச் செல்கிறார்கள். முப்பது அல்லது நாற்பது கொட்டு வாசிப்பவர்களும், மூன்று நான்கு கொம்பு வாசிப்பவர்களும் தங்கள் கருவிகளை வாசித்துக் கொண்டு வருகிறார்கள். தளியார் என்ற பல வீரர்களும் இதன் முன் செல்கிறார்கள். அன்று கோயில் பசுக்கள் எல்லாம் சுதந்திரமாக தெருவில் அவிழ்த்து விட்டு விடுகிறார்கள்.
நான் அன்றிரவு கோட்டை மேல் இருந்து கண்ட காட்சி இதுதான் தீவட்டி வெளிச்சங்களில் காட்சி நன்றாகத் தெரிந்தது. அவர்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவது தொரிந்தது. கோயிலின் உள்ளே மற்ற நேரங்களில் தொங்கவிட்டு வைத்திருந்த அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து இவர்கள் ஆடிக் கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. ஒரு நடிகர் மீன்போல் வேடம் போட்டுக் கொண்டு எதையோ வழுங்குவது போல் ஆடிக் கொண்டு வந்தார். இது ஏதோ ஒரு கதையைச் சித்தரிக்கிறது என்று தெரிந்தது.
நான் அங்கிருந்த உள்ளூர் ஓர் இந்துவிடம் ஏன் வாய்பேசாத சிலையை போய் நீங்கள் கடவுள் என வணங்குகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் எங்கள் கடவுளை நாங்கள் கண்ணால் காண முடிகிறது. உங்கள் கடவுளை நீங்கள் பார்க்க கூட முடியாதே என்று கூறினார். பின்னர் தேவதாசிகள் அத்தெய்வங்கள் முன் நாட்டியம் ஆடுவதைப் பார்த்தேன்.
ஆனால் இங்கு ஒன்றுமட்டும் மிகவும் வியப்புடன் கூறத்தான் வேண்டும். இவர்கள் (இந்துக்கள்) நம் சமயத்தை பின்பற்றாததால் இருளில் மூழ்கியிருப்பவர்கள் என நாம் நம்புகிறோம். நாமோ ஒளியைக் கண்டவர்கள். இருப்பினும் இவர்களைக் காட்டிலும் நாம் ஏன் மேன்மையாக நடந்து கொள்வதில்லை. கூறப்போனால் மிகவும் கீழ்த்தரமாகத் தான் நடந்து கொள்கிறோம். இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பெரும்பாலும் நிலைத்து நிற்கிறது. வணிகர்கள் சரியான எடைகளையும் அளவைகளையும் தான் பயன்படுத்துகிறார்கள். மக்கள் கெட்ட பழக்கங்களை வெறுக்கிறார்கள். நம் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் அளவுக்கு மீறி உட்கொள்வது, ஏராளமாக குடிப்பது போன்ற பழக்கங்கள் இங்கு இல்லை. தரங்கம்பாடியில் உள்ள இந்திய மக்கள் யாராவது குடிகாரனைப் பார்த்து விட்டால் தலையை ஆட்டி மார்பில் அடித்து பொண்டு அவன் மீது காரி துப்புவார்கள். இவனை பேய் பிடிச்சிருக்கிறது என்று கூறுவார்கள்".
இவ்வாறு ஜான் ஓலஃப்ஸன் 1625 ம் ஆண்டு தாம் நேரில் பார்த்ததை குறித்துள்ளார். இவர் தீவிர கிறிஸ்துவரான போதிலும் தரங்கம்பாடி மக்கள் அனைவரிடமும் நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறார். இவரது நெருங்கிய நண்பர்களில் பிராம்மணர் ஒருவர் இருந்தார் எனக் குறித்திருக்கிறார். 370 ஆண்டுகளுக்கும் முன்னர் மேலை நாட்டுக்காரரின் நேர்முகப் பார்வையில் இந்தியர் வாழ்க்கை குறிப்பாக தரங்கம்பாடி மக்களின் வாழ்க்கை பற்றிய நேர்முக வர்ணனை இது. நமது பண்பை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என்று கூட இதைக் கூறலாம். அன்று சட்டம் ஒழுங்கு நிலைத்து இருந்தது. மக்கள் குடியை வெறுத்தனர். நேரில் பார்த்த வெள்ளைக்காரர் கூறுகிறார். ஆனால் இன்று? இவர் குறித்துள்ள மற்றும் ஒரு செய்தியும் முக்கியமானதுதான்.
"டேனிஸ் போர்ட் என்று பெயர் பெற்ற தரங்கம்பாடி கோட்டை மாளிகை மிகவும் அழகான கட்டிடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்லாலான இந்தக் கட்டிடத்தை இந்திய கொத்தனார்கள் தான் கட்டினார்கள். இவர்கள் நம் ஐரோப்பிய கட்டு வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும் தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ்கிறார்கள். இந்த கோட்டையின் நடுவில் எழிலான ஒரு 'சர்ச்சு' ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதை இந்திய கொத்தனார்கள் தாம் கட்டினார்கள். நாம் கொடுத்த டேனிஷ் வரைபடத்தினைப் பின்பற்றி இவர்கள் கட்டியிருக்கிறார்கள்" என்று நம் கட்டிடக் கலைஞர்கள் ஐரோப்பிய கொத்தனார்களைக் காட்டிலும் மிகச் சிறந்தவர்கள் என இந்த வெள்ளைக்காரர் கி.பி. 1625லேயே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.