44. இந்திய வரலாற்றில் இரும்பு

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 43 | Contents | அத்தியாயம் 45 | Home

மனிதன் படிப்படியாக முன்னேறியிருக்கிறான். அந்த முன்னேற்றங்களில் பல புரட்சிகரமானவையாகும். கல்லையும், கம்பையும், எலும்பையும் மட்டும் கருவிகளாகப் பயன்படுத்த அறிந்து காடுகளிலும் மலைக் குகைகளிலும் குரங்கு மனிதனாகத் திரிந்த நிலையையே கற்காலம் என்பர் வரலாற்று வல்லோர். அந்த நிலையில் இந்திய நாடு முழுவதும் மனிதன் பல லட்சம் ஆண்டுகள் திரிந்திருக்கிறான். சென்னைக்கு அருகில் கூட அவன் அவ்வாறு திரிந்த சான்றுகள் உள்ளன. அதன் பிறகு அவன் உலோகத்தின் பயனைக் கண்டு பிடித்தான். அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட முக்கிய உலோகம் செம்பு. செம்பின் பயனைக் கற்று முன்னேறிய இந்திய மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே இரும்பின் பயனைக் கண்டு அரிந்தான். ஆதலின் இந்திய வரலாற்றில் கற்காலத்துக்குப் பிறகு செப்புக்காலம் என்ற கால வரையறை உண்டு. இப்படிச் செம்பின் பயன் தெரிந்தும், இரும்பு என்றால் என்ன என்றே தெரியாத பண்பாடுதான் சிந்து வெளிப்பண்பாடு. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய இந்தப் பண்பாடு ஹரப்பா, மொஹஞ்சதாரோ, காளிபங்கன், லோத்தல் முதலிய இடங்களில் கிடைத்துள்ளது. இது போல் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிந்துவெளிப் பண்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சிந்து பகுதியிலிருந்து டில்லி வரையிலும் தெற்கே நர்மதையாற்றங்கரை வரையிலும் இந்த நாகரிகம் நிலவி வந்துள்ளது. ஆனால் இவ்விடம் எங்கும் இரும்பு அகழ்வாய்வில் கிடைக்கவே இல்லை. சுமார் ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேல் மிகச் சிறந்த நாகரிகமாக இது திகழ்ந்த போதிலும் இரும்பு என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகத்தான் இந்த மக்கள் வாழ்ந்தனர். வேதங்களைக் கண்டுணர்ந்த ரிஷிகளும் அவர்களுடைய குலங்களும் கிறிஸ்துவுக்கும் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சிந்துவெளி நாகரீகம் தோன்றி 1500 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் தோன்றினர் என்பர். இவர்கள் ஆரியர்கள் என்பதும், இவர்கள் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து வந்தவர் என்பதும் வரலாற்றார் கூற்று. இவர் இந்திய நாட்டிலேயே மலர்ந்தவர் தாம் என்று வாதாடுவோரும் உண்டு. எது எப்படியாயினும் வேதமொழியுடன் அவெஸ்தா, லத்தீன், ஜெர்மானியம், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய அனைத்து மொழிகளும் ஒரே மொழியிலிருந்து தோன்றியவைதாம் என்பதைத் திட்டவட்டமாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் நினைப்பதைக் காட்டிலும் பண்டைய உலகில் தொடர்பு மிகவும் நெருங்கி இருந்தது. அது மிகவும் பரந்த மொழியாக இருந்தது என்பதில் யாருக்கும் ஐயம் கிடையாது. வேதங்களில் தொன்மையான ருக்கு வேதத்தில் “அயஸ்” என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இது செம்பையும், இரும்பையும் குறிக்கப் பயன்பட்டது என்பர். இது தமிழில் பொன் என்ற சொல் உலோகம் என்ற பொதுச் சொல்லாகப் பயன்பட்டதை ஒக்கும். ஆதலில் இரும்பு என்னும் உலோகத்தை வேதகால இந்தியரே கண்டு பிடித்தனர் என்பதும் தெளிவாகிறது. சிந்து வெளி நாகரீகத்தின் இறுதிக் கட்டத்தில் வேதகாலத் தொடக்கம் முதல் இரும்பு இந்திய மக்களின் வாழ்வில் இன்றியமையாத நிலையைப் பெற்றது. இதையே இரும்புக்காலம் என்பர். இரும்பு வேதத்தில் அயஸ் என்று அழைக்கப்பட்டது. அயஸ் என்ற இந்த சொல்லே பிற உலக மொழிகளிலும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக லத்தீன் மொழியில் அஸ் என்றும், கோத்திக் மொழியில் ஐஸ் என்றும், தற்கால ஜெர்மானிய மொழியில் அயஸன் என்றும், பண்டைய ஜெர்மானிய மொழியில் சற்றுத் திரிந்து ஐரஸ் என்றும் காணப்படுகிறது. இதுவே ஆங்கிலத்தில் ஐரன் என்றும் இப்பொழுது அழைக்கப்படுகிறது. தமிழில் இரும்பு என்பதும் இந்தச் சாயலாகவே தென்படுகிறது. இந்தியாவின் வடபால் அஸ்தினாபுரம் கௌசாம்பி சோன்புர் ஆகிய இடங்களிலும், மத்திய இந்தியாவில் உஜ்ஜயினி, மகேச்வர், பிரகாஷ் முதலிய இடங்களிலும் நடந்த அகழ்வாய்வுகளிலிருந்து இரும்பு எங்கெல்லாம் பரவிப் பயன்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேல் குறிப்பிட்ட இடங்கள் எல்லாவற்றிலும் இரும்பு கிறிஸ்துவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சோன்புர் என்பது தற்கால இந்தியாவின் இரும்புக்கனிகளின் இருக்கை என்று கூறப்படும். பீஹார் மாநிலத்தில் உள்ளது. கி.மு. 1000 லேயே இன்றைய இரும்புக் கனிச்சுரங்களைக் கண்டுபிடித்து விட்டனர். கிழக்கிந்தியாவில் பீஹாரிலிருந்து, மேற்கே பஞ்சாப் வரையிலும் மத்திய இந்தியாவில் உஜ்ஜயினிப் பகுதி வழியாக இரும்பைப் பரவலாகப் பயன்படுத்தத் தலைப்பட்டனர். இங்கு மற்றொன்றும் குறித்தல் வேண்டும். மத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் இரும்பைப் பயன் படுத்திய மக்கள் ஒரு குறிப்பிட்ட வகையான பானைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பானைகள் கறுப்பு நிறமும், சிவப்பு கலந்து ஒரு வகையாகும். தென்னிந்தியாவில் இறந்து பட்டவர்களைப் புதைத்து பலவகையான கற்சின்னங்களை எடுத்தனர். “கல்லாயினனே” என்பது பண்டைத் தமிழ் இலக்கிய மரபு. இது போன்ற ஈமச் சின்னங்களை தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை அனைத்திலும் இறந்தோருடன் புதைக்கப்பட்ட இரும்பு வாள்களும் சூலங்களும் படைக்கலன்களும் காணப்படுகின்றன. இவற்றுடன் கறுப்பு சிவப்பு பானைகளும் கிடைக்கின்றன. இவை கி.மு.1000 லிருந்தே பயன்பட்டவை. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் ஈமத்தாழிகள் அகழ்வாய்வில் வெளிக் கொண்டு வரப்பட்டன. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தாழிகளில் இரும்பினால் செய்யப்பட்ட கூர்வாள்கள், சூலங்கள், விளக்குத் தட்டுகள், சங்கிலிகள் முதலியன கிடைத்துள்ளன. இவ்வாறே செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர், சானூர் போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளது. இவற்றுடன் குதிரைகளுக்குப் பயன்படுத்தப்படும் கடிவாளங்கள் கால்மிதிகள் முதலியன கிடைத்துள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் மொழி பேசியோர் குதிரையை நன்கு பயன்படுத்தியவர் என்பது வெளிப்படை. இங்குக் கிடைத்துள்ள பல பொருள்களுக்கும் மத்திய ஆசியாவில் காகஸஸ் பகுதியில் வாழ்ந்த ஸ்கிதியர் என்பவர்களுடைய பொருள்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருந்தது என்றும், இரும்பின் பயனை ஒருவர் மற்றொருவரியமிருந்து கற்றிருக்கலாம் என்றும் கருதுகின்றனர் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தியனின் வாழ்க்கை மிகவும் வேகமாக முன்னேறியது. இரும்பு மிகவும் வன்மைமிகுந்த உலோகமாகும். இவற்றால் முன்பிருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு பணி செய்யவும் விரைவாக இயங்கவும் முடிந்தது. பயிர்த்தொழிலுக்குப் பெரிதும் பயன்பட்டது. இதுகாறும் மரத்தால் செய்யப்பட்ட கலப்பைகளைப் பயன்படுத்தியவர். இரும்புக் கொழுவைப் பொருத்தி ஆழமாகவும், அதிகமாகவும் உழுவதற்கு முடிந்தது. இரும்புக் கோடாரியால் மரங்களை வீழ்த்திப் பரவலான இடங்களைப் பண்படுத்த முடிந்தது. அதே போன்று வண்டிகளுக்கும் தேர்களுக்கும் இரும்புப் பூண்களும், சக்கரங்களும் பொருத்த அவற்றின் பயன் பன்மடங்குப் பெருகியது. அவற்றைக் காட்டிலும் குதிரைகளின் உதவி கொண்டு வெகுவிரைவில் முன்னேறி இரும்பு படைக் கலன்களால் பெரும் வெற்றி காண முடிந்தது. இவற்றின் பயனாய் இரும்பு ஒரு புரட்சியையே தோற்றுவித்தது என்பர். ருக்கு வேதம் வீட்டின் முகட்டைத் தாங்கும் நடுத்தறியை அயஸ்தூண் என்று கூறுகிறது. பாணினி தம் வியாகரண நூலில் இரும்பினால் செய்யப்பட்ட சூலத்தைத் தாங்கும் சிவபக்தர்களைக் குறிக்கிறார். இதை “அயஸ் சூலதண்ட அஜினாப்யாம் டக்டஞௌ” என்ற சூத்திரத்தில் குறிக்கிறார். சிவபெருமான் கரத்தில் சூலம் தரித்தவர். அந்தச் சூலத்தைத் தம் இலச்சினையாகக் கொண்டிருந்தவர் சைவர் என்பது இதனால் புலனாகிறது. பாணினி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பர். மிகச் சிறந்த இரும்பு அயஸ் கண்டம் என்றழைக்கப்பட்டது. இரும்பைக் காய்ச்சி பணி செய்பவன் அயஸ்காமன் என்றும், அயஸ்காரன் என்றும் அழைக்கப்பட்டான். இரும்பில் பணிபுரிவதில் இரும்பைக் காய்ச்சுபவன், என்றும் அடிப்பவன் என்றும் இருவர் பணி புரிந்திருக்கிறார்கள். காய்ச்சுபவரை “அயஸ்தாபன்” என்று சமஸ்கிருத நூல்கள் கூறுகின்றன. இரும்பினால் செய்யப்பட்ட படைக்கருவிகள் தவிர அயஸ்கணசமி அயஸ்பாத்ரம் என்ற இரும்புக் குவளைகளும் கலன்களும் குறிக்கப்படுகின்றன. இரும்பினால் செய்யப்பட்ட உருவங்கள் இருந்தன என்பது அயஸ்பிரதிமா என்ற பொருள் காளாயஸம் என்று அழைக்கப்பட்டது. பொதுவாகச் சமஸ்கிருத நூல்கள் உலோகங்களை எட்டு வகைகளாகப் பிரித்து அஷ்டதாதுக்கள் என்று கூறும். அவை சுவர்ணம் (தங்கம்), ரஜதம் (வெள்ளி), தாம்பரம் (செம்பு), ரீதி (வெண்கலம்), த்ரபு (தரா), சீஸம் (ஈயம்), காலாயஸம் (இரும்பு) என்பவையே அவை. அமரகோசம் இரும்பைப் பற்றிக் கூறும்போது லோஹா, அஸ்திரி, சரஸ்திரிகம், தக்ஷணம் பிண்டம் காளாயஸம் ஆயசீ என்று குறிக்கிறது. உலோகங்களினால் கோட்டைகள் கட்டப்பட்டன என்று புராணங்கள் கூறும். சிவபெருமான் எரித்த முப்புரங்களில் ஒன்று தங்கத்தாலும், மற்றது வெள்ளியாலும், மூன்றாம் புரம் அயஸாலும் எடுக்கப்பட்டன என்று லிங்கபுராணம் கூறும். இரும்பைக் காய்ச்சி உருக்கப்பட்ட கழுமரத்தை இராமாயணம் கூறுகிறது. மகாபாரதத்தில் துரியோதனாதிகள் களத்தில் வீழந்ததும் பாண்டவர்கள் திருதராஷ்டிரனைக் காணச் சென்றார்கள். அவன் வெற்றியை புகழ்வது போல் வஞ்சகமனத்துடன் பீமனை அணைய அருகில் அழைத்தான். அவன் வஞ்சத்தை அறிந்த கண்ணன் எஃகினால் ஆன வடிவை அவன் அருகிலிட அவன் அதை இரு கரங்களால் அணைக்கவும் அவன் வலிமையால் அது பொடிப்பொடியாக வீழ்ந்தது என்பர். நாராசம் என்ற அம்பு இரும்பினால் ஆனது. பண்டைய தனுர்வேதம் என்னும் நூல் இரும்பை வடித்துப் பல்வகை அம்புகளைச் செய்யும் முறைகளைக் கூறுகின்றது. சாணக்கியன் தன் அர்த்தசாஸ்திரத்தில் படைக் கொட்டில்களை மேற்பார்வையிடும் அத்யக்ஷனைக் குறிக்கிறான். இரும்பினால் செய்து வைக்கப்பட்டிருக்கும் படைக்கலன்களைத் துரு ஏறாதபடி நெய் பூசி வைக்க வேண்டும். முனை மழுங்கிய உடைந்த கலன்களை எடுத்துவிட்டுப் புதியவற்றைச் சேர்த்து வைக்க வேண்டும். அடிக்கடி இவற்றின் நிலையைப் பரிசோதிக்க வேண்டும் என்று குறிக்கிறான். பாரசீகப் படையில் இருந்த இந்தியர் இரும்பு முனையுடன் கூடிய பிரம்பு அம்பைப் பயன்படுத்தினர் என்று ஹிரோடோடஸ் கூறுகிறான். பண்டைய தனுர் வேத நூல்கள் இரும்பை வடித்துப் படைக்கலன்கள் செய்யும் முறையைக் கூறுகின்றன. விற்கள் பிரம்பாலும், கொம்புகளாலும், உலோகங்களாலும் செய்யப்பட்டவை மிகவும் பளுவாக இருந்தன. வில் எய்வதற்கு ஏற்பப் பல இரும்பு வளையங்களைக் கொண்டும், பிரம்புகளைக் கொண்டும் அமைக்கப்பட்டன. இவையே தனுஸ் என்பவனாம். கிறிஸ்தவாப்தத்தின் தொடக்கத்தில் இந்திய நாடு ரோமானியப் பேரரசுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தது. தமிழகத்தை ஆண்ட முடியுடை வேந்தர்களும் மேலைநாட்டுடன் வர்த்தகத்தை வளர்த்தார்கள். மேலைக் கடற்கரையை ஒட்டி இந்தியக் கலன்களும், கிரேக்க அரேபியர்களின் கலன்களும் முசிறி தொண்டி முதலிய துறைமுகங்களிலிருந்து பல பொருள்களை ஏற்றிக் கொண்டு அரேபியாவின் தென்கோடி வழியாக எகிப்து நாட்டு அலெக்ஸாண்டிரியாவுக்கும் அங்கிருந்து ரோமாபுரிக்கும் ஏற்றிச் சென்றனர். இவ்வாறு ஏற்றிச் சென்ற பல பொருள்களில் எஃகும் இரும்பும் இருந்தன. இந்திய எஃகால் செய்யப்பட்ட வாள்களையே ரோமானியர்கள் பிறவாள்களைக் காட்டிலும் பெரிதும் விரும்பினர். மிகவும் உயர் ரகமான எஃகு இரும்பைச் சேரர்களே ஏற்றுமதி செய்தனர் என்று பிளினி என்ற ஆசிரியர் குறிக்கிறார். சேரர்களின் ஆட்சியில் தான் சேலம் பகுதி இருந்தது. இங்கு இரும்பு தாதுக்கள் கிடைப்பது அறிந்ததே. இவர்கள் இரும்புக் கனிகளை மட்டும் அனுப்பாமல், கூர்வாள்களை வடித்துத் தம் கப்பல்களிலேயே அனுப்பினார்கள் என்பதும், மிக உயர்ந்த வாட்களை வடிக்கும் தொழிலை மிக ரகசியமாக வைத்துக் கொண்டனர் என்றும் தெரிகிறது. இந்திய இரும்பைப் பதப்படுத்தும் வழியை ஒரு கிரேக்க நூல் கூறுகிறது. இவ்விரும்புகளைக் கொண்டு ரோமானியர்கள் ஸ்பூன்களும், சிறுகத்திகளும் செய்து கொண்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சங்க நூல்களில் இரும்பைப் பற்றிப் பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. இரும்புத் தொழில் குறித்துப் பல நுணுக்கச் சொற்கள் இடம் பெறுவதிலிருந்து இரும்புத் தொழில் மிகவும் முன்னேறியிருந்தது என்று கூறலாம். இது அக்காலத்திலேயே ரோமானியத் தொடர்பு பற்றி எழுதிய பிளினி பெரிப்ளஸ் நூல்கள் கூறுவதை உறுதி செய்கின்றது. இரும்புத் தொழில் செய்பவரை வலிய கையை உடைய கருங்கைக் கொல்லர் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. அவர் பணிபுரியும் இடம் கூடம் எனப்பட்டது. அவன் செந்தீயில் இரும்பைக் காய்ச்சுபவன். அது பதம் அடைந்துள்ளதா என அதில் நீர் தெளித்துச் சோதிப்பான். அதை உலையில் இட்டு உருக்கி, உலைக்கல்லில் இட்டு விசைத்து எறிவான். அது பெரிய ஓசையை எழுப்பும். இதை “இரும்பின் விசைத்து எறிந்த கூடம், திண்திசை உரத்துக் கொட்டின ஓசை” என்று கூறும். இரும்பைக் காய்ச்சும்போதும் தீயை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள உலையில் நீரை அவ்வப்போது சிறிது தெளிப்பான் என நற்றிணை என்ற நூல் கூறுகிறது. இரும்பின் பதத்தைக் கவனமாகக் கண்டு கூறிய வார்த்தை இது. “இரும்பு செய் கொல்லன் வெவ்வுலை தெளித்த தோய் மடல் சில் நீர் போல” எனக் குறிக்கிறது. இரும்பை வடித்தல், வீசி எறிதல், திரித்தல் போன்ற தொழில்களை அறிந்திருந்தனர். வீசிச் சம்மட்டியால் அடித்து உருவாக்கி வார்த்தனர். கம்பிகளாகவும், சங்கலிகளாகவும் திரித்தனர். வேல், அம்புமுனை முதலியவை வடிக்கப்பட்டன. குந்தம் முதலியவை வடித்து எறியப்பட்டன. யானை முதலியவற்றை இரும்பால் பிணைத்தனர். இரும்பினால் பிரதிமைகள் செய்வதையும் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். இவை வார்க்கப்பட்டு இருக்க வேண்டும். "இரும்பு இயன்றன்ன கருங்கோட்டு எருமை" என அகநானூறு கூறுகிறது. யானைத் தந்தத்துக்கு இரும்புப் பூண் இடப் பட்டது. வில்லிலிருந்து கணைகளை ஏவும் போது நாண்கள் தசைகளை வெட்டித் தெறித்து விடாதிருக்க வீரர்கள் விரல்களுக்குப் பூண் இட்டுக் கொண்டனர். இவற்றை இரும்புச் சுற்றார் என்று நூல்கள் கூறும். வீரர்கள் தங்கள் அம்புகளைக் கற்களில் தேய்த்துக் கூராக்கிக் கொள்வர். இரும்போடு கரியைச் சேர்த்து உருக்கும் கலையைப் பெருங்கதை கூறுகிறது. இதனால் வலிமையும் நிறமும் துருப்பிடிக்கும் தன்மையும் குறைந்தனவோ எனக் கருத இடம் உண்டு. ரோமானியர் விரும்பி வாங்கிய வாட்கள் இவ்வாறு வழங்கப்பட்டனவோ என்ற ஐயம் எழுகிறது. இரும்பின் மீது பிற உலோகங்களைப் பூசும் முறையையும் அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்று உண்டு. என்ன பூசினாலும் இரும்பில் துரு ஏறாதிருக்காது என்றும் கருதினர். பூசிக்கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும் என்பது பண்டைய நூல் மொழி. டில்லியில் குதுப்மினாருக்கு அருகில் சுமார் 23 அடி உயரமுள்ள ஒரு இரும்புத்தூண் உள்ளது. இதில் பண்டைய எழுத்துக்களில் சமஸ்கிருதச் சுலோகங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டிலிருந்து சந்திரன் என்ற அரசனால் விஷ்ணுபாதம் என்ற மலையில் விஷ்ணுவுக்கு எடுக்கப்பட்ட ஸ்தம்பம் அது எனத் தெரிகிறது. இந்த மன்னனின் எதிரிகள் பலர் ஒருங்கிணைந்து வங்கத்திலிருந்து இவனைத் தாக்கினார்கள் என்றும், அவர்களை இவன் புறமுதுகிட்டு ஓடச் செய்தான் என்றும், சப்த சிந்துவைக் கண்டறிந்து வஹிலகா என்போரை வென்றான் என்றும் அக்கல்வெட்டுக் குறிக்கிறது. சந்திரன் என்ற இவ்வரசன் யார் என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சில ஆராய்ச்சியாளர்கள் சந்திர குப்த மெரியன் என்று கருதினர். விக்கிரமாதித்தன் என்று பட்டம் ஏற்ற இரண்டாம் சந்திர குப்தனாலேயே இது எடுக்கப்பட்டது என்று இப்பொழுது வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர் (கி.பி. 375-415). சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வடித்தெடுக்கப்பட்ட இவ்விரும்புத் தூண் அனைத்து உலோகக் கலை வரலாற்றிலேயே சிறப்பு இடம் பெற்றுள்ளது. துரு என்பதே படியாமல் இன்னும், இன்று வார்த்தெடுத்தது போல் விளங்குகின்றது. இதை விஞ்ஞானிகள் கண்டு வியக்கின்றனர். இரும்பை வார்க்கும் கலை எவ்வளவு உயர் நிலையில் இருந்தது என்பதற்கு இது சான்று.
அத்தியாயம் 43 | Contents | அத்தியாயம் 45 | Home