இந்திய தத்துவ வரலாற்றுக்கு தனிப்பெரும் மரபு ஒன்றை தந்தது தமிழகம். அதுவே “சைவசித்தாந்தம்” ஆகும். சைவ மரபிலே பல பிரிவுகள் உண்டு. அவற்றில் சைவ சித்தாந்தம் மிகச் சிறந்த நிலை வகிக்கிறது. தமிழகத்தில் தொன்றுதொட்டே வளர்ந்த இம்மரபு கி.பி. 700ல் எடுக்கப்பட்ட கைலையநாதர் ஆலயக் கல்வெட்டில் “சைவ சித்தாந்த மார்கே” என்று அழைக்கப் படுகிறது. 13ம் நூற்றாண்டில் மெய்கண்டார் எழுதிய “சிவஞானபோதமே” இன்று வழங்கும் தமிழ்ச் சைவ மரபுக்கு தலையாய நூல். இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. இவவுரைகளில் சிவஞான சுவாமிகள் எழுதிய “சிவஞான பாஷ்யமே” மிகச்சிறந்த உரை எனக் கூறப்படுவது. இதை “திராவிட மகாபாஷ்யம்” என்றும் அழைப்பர். அவ்வளவு ஒப்பற்ற உரை இது.
இதை இயற்றிய சிவஞான சுவமிகள் சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தவர். திருநெல்வேலிச் சீமையில் பாபநாசத்துக்கு அருகில் விக்ரம சிங்கபுரத்தில் பிறந்தவர். தமிழைச் சிறக்க கற்ற இவர் திருவடுதுறை மடத்தை அடைந்து அங்கு வேலப்பதேசிகர் அவர்களிடம் பாடம் கற்றார். அங்கு துறவறம் மேற்கொண்டு சிவஞானசுவாமிகள் என்று பெயர் ஏற்றார். சுவாமிகள் தொல்காப்பியப் பாயிரத்துக்கு உரை எழுதியிருக்கிறார். இவர் எதையும் ஆழ்ந்து ஆராய்ந்து அறியும் நெறியுடையவர் என்பதை இவரது தொல்காப்பிய உரை எடுத்துரைக்கும். இளம்பூரணர், சேனாவரையார், நாச்சினார்க்கினியார் முதலிய பேராசிரியர்கள் உரைகளையும் வேண்டிய இடங்களில் மறுத்து எழுதும் வல்லமை பெற்றவர். நன்னூலுஞ் சங்கர நமச்சிவாயர் எழுதிய விருத்தியை சுவாமிகள் திருத்தி எழுதினார். சென்னைக்கருகில் தொட்டிக்கலை என்ற ஊரில் தங்கி அவ்வூர் செங்கழுநீர் பிள்ளையார் மீது பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்களில் கச்சி ஆனந்தருத்ரேசர் பதிகம், ஆனந்தக் களிப்பு, அந்தாதி, குளத்தூர் பதிற்றுப் பத்தந்தாதி முதலிய புகழ் பெற்றவையாகும்.
18ம் நூற்றாண்டு தமிழ்ப் பெரியார்களில் ஒளிவீசும் தாரகையாகத் திகழ்ந்தவர் சிவஞான யோகிகள். தமிழில் மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். தொட்டிக்கலையில் அவர் வாழ்ந்தபோது திருவொற்றியூர், காஞ்சீபுரம் ஆகிய இடங்களிலிருந்து சம்ஸ்கிருத வித்வான்களை வரவழித்து அவர்களிடம் ஆகம சாத்திரங்களையும், நீலகண்ட சிவாசாரியார், ஹரதீர்த்தர், அப்பயதீக்ஷிதர் ஆகியோர் எழுதிய நூல்களையும் சிறப்பாகக் கற்றார். அப்பய்ய தீக்ஷிதர் எழுதிய “சிவதத்துவ விவேகம்” என்ற நூலையும், சர்வாத்ம சம்பு என்பவர் இயற்றிய “சித்தாந்த பிரகாசம்” என்ற நூலையும் தமிழில் மொழி பெயர்த்தார். ஹரதத்தர் எழுதிய ஒரு சுலோகத்தையும் தமிழ் படுத்தியுள்ளார்.
சிவஞான சுவாமிகளின் இருமொழி புலமைக்கு அவரது திராவிட மாபாஷ்யத்திலிருந்து கீழ்வரும் பகுதியைக் காணலாம்.
“மலர்தலை உலகத்து செவிப்புலனாய் ஓசை எழுத்தோசை எனவும் இசை ஓசை எனவும் இருவகைப்படும். இவற்றுள் எழுத்தோசை விந்து முதற்காரணமாக அதனின்றும் விருத்தியாய்த் தோன்றிச் செவிப்புலனாவது, இசை, ஓசை, ஆகாய முதற்காரணமாக அதன் கண் தோன்றி செவிப்புலனாவது வடநூலார் எழுத்தோசையைய் 'வர்ணாத்மக சப்தம்' என்றும் இசை ஓசையை 'தொனியாத்மக சப்தம்' என்றும் கூறுவர்".
என்று எழுதியுள்ளார். மேலும் சிலர் வைதிகத்தை (வேத வழியை) ஒதுக்குவதை சுவாமிகள் ஏற்றுக் கொள்வதில்லை. சிலர் வேதம் பிராமணம் அன்றென்பர். அது பகுத்துணர்வில்லாதோர் கூற்றேயாம் என்று மறுக்க. வேதாசாரம் சிவாகமம் ஆதலால் சைவாசாரத்துக்கு உரியோன் வைதிகன் எனவும், வேதாந்தப் பொருளை தெளித்துக் கூறுவது சித்தாந்தம் எனவும் பிற நூல் பிறபொருளைக் கூறும் எனவும் வேதத்தோடு ஒற்றுமை உடமை பற்றியே சிவாகமங்ளுக்கு பிரமாணம் ஆதல் கூறும் வசனங்களோடு முரணுமாறு அறிக. என்று வேதங்களை ஏற்று கொள்ளாவிடில் சிவாகமங்கள் பிரமாணம் இல்லை என்று ஆகிவிடும் என்பது சிவஞான சுவாமிகளின் திடமான முடிவு. (திராவிட மாபாடியம்: மதுரை 1906 அச்சுபிரதி பக்கம் 18)
பண்டைய மரபில் சாத்திரங்களைக் கற்க விரும்புபவர்கள். சாத்திரம் என்றால் உண்மையை அறிய உதவும் நூல் என்பது பொருள். தத்துவங்களை கூறும் போது அவற்றைப் பல்வேறு கோணங்களில் இருந்து ஆராய்தல் வேண்டும். பல்வேறு ஐயங்களை எழுப்ப வேண்டும். அவ்வய்யங்களுக்கு பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளக்கூடிய விடைகளைப் பெற வேண்டும். அவ்வாறு தெளிவான விடை பெற இயலாவிடில் அவை தத்துவங்களாகா. ஆதலின் ஐயம்திரிபற எதையும் எடுத்துரைக்க அறிவை பழக்கப்படுத்திக் கொள்வது அல்லது தீட்டிக் கொள்வது தேவை. இதற்கென இந்திய நாட்டில் தனியாக ஒரு துறை மலர்ந்தது. அதையே “தருக்கம்” என்பர். தருக்க சாத்திரத்தைக் கற்றவர்கள் எதையும் குழப்பமின்றி எடுத்துறைப்பார். எந்த சாத்திரத்தைக் கற்க விரும்பினாலும் “தருக்கம்” அடிப்படையாக கற்றேயாக வேண்டும். தருக்கம் படிக்காவிடில் எந்த பண்டைய சாத்திரத்தையும் கற்க முடியாது. உதாரணமாக சைவ சித்தாந்தத்தை ஒருவர் கற்க விரும்பினால் முதலில் தர்க்க சாத்திரம் கற்றால்தான் சித்தாந்தம் கற்க முடியும். ஆதலின் பண்டைய காலம் தொட்டே பல தர்க்க நூல்கள் எழுதப்பட்டன. இவற்றில் மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்ட நூல் “தர்க்க சங்கிரகம்” என்னும் சம்ஸ்கிருத நூலாகும். இதை அன்னம் பட்டர் என்ற ஆசிரியர் எழுதினார். இந்நூலுக்கு அவரே “தருக்க சங்கிரக தீபிகை” என்ற உரையும் எழுதினார். இந்நூல் தோன்றிய பிறகு இதையே எங்கும் விரும்பி படித்தனர்.
நமது சிவஞான சுவாமிகள், தமது சைவ சித்தாந்தக் கல்விக்கு அடிப்படைத் தேவை என்று அன்னம்பட்டர் எழுதிய தர்க்க சங்கிரகத்தையும், அதன் உரையையும் நன்கு கற்றார். அத்துடன் சம்ஸ்கிருத மொழியில் இருந்த நூல்களை தமிழ் கற்போர் அறிய வேண்டும் என தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சிவஞான சுவாமிகள் தமிழ்ப்படுத்தியுள்ள தமிழ் தருக்க சங்கிரஹம் பல ஆன்றோர்களால் அன்மைக்காலம் வரையில் விரும்பி கற்கப்பட்டது. பெரும் புலவர்கள் எல்லாம் இதைப் பாராட்டியுள்ளனர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் சுவாமிகளின் தருக்க சங்ரஹ மொழி பெயர்ப்பை பாராட்டி பின்வருமாறு பாடியுள்ளார்.
“வடகலையின் தென்கலையின் மாறிலா இலக்கியமும்தொடர்புடைய இலக்கணமும் தோலாத தருக்கமும் மற்றிடனுடைய மெய்பொருட்கலையும் எக்கலையும் முழுதுணர்ந்துதிடமுடைய அனுபூதிச் செல்வராய்ச் சிறப்புற்றார்”.
உயர்ந்த வெள்ளாளர் குடியிற் பிறந்த சிவஞான சுவாமிகள் தமிழில் எவ்வளவு சிறந்தவராக திகழந்தாரோ அதே போல சம்ஸ்கிருத மொழி வல்லவராகவும் திகழ்ந்திருக்கிறார் என்பதற்கு இப்பாடல் சான்று. திரிசரபுரம் தியாகராசச் செட்டியார் அவர்களும், சிவஞான சுவாமிகளின் மொழி பெயர்ப்பை சிறப்பித்து பாடியுள்ளார்.
“தனிஞானம் பழுத்த சிவஞான முனிவரன்கூரிய உணர்விற்கோ ருறை இடமெனத்தந்தருளும் தமிழ்த் தருக்க சங்கிரகமும்அன்னம் பட்டியம் என்னும் அதனுரையும்”.
என்று குறிக்கிறார்.
சிவஞான போததிற்கு சுவாமிகள் எழுதிய மாபாடியத்தைத் கற்க விரும்புபவர்கள் தருக்க சங்கிரகம் கற்றாலொழிய அறிதல் இயலாது. அண்மைக் காலம் வரையில் சம்ஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் மொழி என்று கருதப்படவில்லை. அனைத்து மக்களுடைய மொழியாகத் திகழ்ந்தது என்பதற்கு சிவஞான சுவாமிகள் வரலாறே சான்று. சுவாமிகள் 1785ம் ஆண்டு சிவபரிபூரணம் அடைந்தார்கள். 1985ம் ஆண்டு அவர்களது 200வது ஆண்டு சிறப்பாக நினைவு கூரத் தகுந்தது.
இதுபோல் தமிழ் பெரியார்கள் சம்ஸ்கிருதத்துக்குத் தொண்டு செய்தவர்கள் பலர் உண்டு. இரு மொழியும் எமதே எனக் கருதி அப்பெரியார்களில் சிலரையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.