தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் தோற்றிவித்த பெரும் கோயிலில் கர்ப்பகிருஹத்தைச் சுற்றியுள்ள உள்சுற்றுச் சுவரில் சுந்தரமூரத்தி நாயானாருடைய ஓவியம் தடுத்தாட்கொண்ட புராணத்தில் தொடங்கி அவர் வெள்ளையானை மீது ஏறி கயிலையை அடைந்து உமை அன்னயோடு வீற்றிருக்கும் சிவ பெருமானின் முன்பு கரம் கூப்பி அமர்ந்திருக்கும் நிலை வரையில் மிக விரிவாக அழகாக படைக்கப்பட்டுள்ளது. இராஜராஜனுடைய காலத்தில் சுந்திரமூர்த்தி நாயனார் மிகவும் சிறப்பாக போற்றப்பட்டார் என்று இதிலிருந்து அறிய முடிகிறது. இக்காலத்தில் தான் நம்பி ஆண்டார் நம்பி சுந்தரமூர்த்தியை பாட்டுடைத் தலைவன் ஆக்கி அவர் பாடியுள்ள திருத்தொண்டைத் தொகையை விரிவாக்கி திருத்தொண்டர் திருவந்தாதி பாடியுள்ளார் என்பதும் நினைவில் கொள்ளலாம்.
இராஜராஜன் காலத்தில் சுந்தரர் எவ்வளவு அன்போடு வணங்கப்பட்டார் என்பதை எடுத்துரைக்கும் கல்வெட்டுக்களும் உண்டு. கும்பகோணத்துக்கு அருகில் கூகூர் என்ற ஊரில் ஆம்பரவனேஸ்வரர் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு. கல்வெட்டுகளில் இருந்து இக்கோயிலின் பெயர் ஆதித்தீஸ்வரம் என்று அறிகிறோம். ஆதித்தீஸ்வரம் என்பது காலப்போக்கில் ஆம்பரவனேஸ்வரர் என மருவியது போலும். இக்கல்வெட்டுகள் இரண்டும் முதல் இராஜராஜ சோழன் காலத்தவை. எறக்குறைய கி.பி. 900ல் முதலாம் ஆதித்த சோழன் பெயரால் இக்கோயில் உருவாக்கப்பட்டது போலும்! இராஜராஜனுடைய 10வது ஆண்டு கல்வெட்டு கி.பி. 995ல் எழுதப்பட்டது. இது இவ்வூர் சபையார் இக்கோயிலின் ஈசுவரர்க்கு 31 குழிகள் உடைய மனையும் 9 மா நிலமும் கொடுத்ததைக் குறிக்கிறது. இவற்றைச் சித்திரைத் திருவிழாவுக்காக திருவிழாப் புறமாக ஊரார் கொடுத்தனர். இதைக் குறிக்கும் கல்வெட்டுப் பகுதியை பார்ப்போம்.
சுந்திரமூர்தி நாயனார்
“ஆதித்தீஸ்வர பட்டாரகர் நம்முடைய அணுக்கப்பிள்ளை நம்பியாரூரானுக்கு சித்திரைத் திருவிழாவுக்காக திருவிழாப்புறம் ஆக விட்டதாக” கூறுகிறது. நம்பியாரூரன் என்பது சுந்தரமூர்த்தி நாயனாரைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம். அவரை கோயில் ஈசுவரரே “நம்முடைய அணுக்கப் பிள்ளை நம்பியாரூரன்” என்று கூறுகிறார் எனில் அவர் மீது சிவபெருமானுக்கு எவ்வளவு அன்பு இருந்தது எனக் காட்டுகிறது. சுந்தரருக்கு “தம்பிரான் தோழன்” என்ற பட்டப் பெயர் உண்டு. அணுக்கன் என்றால் மிகவும் நெருங்கிய நட்பு பூண்டு உடன் இருக்கும் என்று பொருள்படும். ஆதலின் 10ம் நூற்றாண்டிலேயே அதாவது சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் பாடும் காலத்துக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுந்தரர் சிவபெருமானின் அணுக்கப்பிள்ளையாக தமிழ் மக்களால் கருதப்பட்டார் என்பதற்கு இக்கல்வெட்டு ஒன்றேசான்று. இவருக்கு சித்திரை மாதத்தில் திருவிழா எடுக்கப்பட்டது என்பதும் இதனால் அறிகிறோம்.
இரண்டாவது கல்வெட்டு இராஜராஜனின் 12ம் ஆட்சியாண்டைச் சார்ந்தது. முன் கல்வெட்டை காட்டிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 997ல் எழுதபட்டது. இக்கல்வெட்டிலும் ஊரார் நம்பி ஆரூரருக்கு நிலம் கொடுத்தது குறிக்கபடுகிறது. இதைக் குறிக்கும் இடத்தில் “கோயில் ஆள்வாரை (திருவுள்ளம் கொண்ட) திருப்பதிகம் விண்ணப்பம் செய்த பிள்ளை நம்பி ஆரூரனாருக்கு பிராயம் ஆக ஊரோம் பரிசிலாக கொடுத்த நிலம்” என்று குறிக்கிறது. சுந்தரமூர்த்தி சிவபெருமானிடத்து திருப்பதியம் விண்ணப்பம் செய்தார் எனக் கல்வெட்டு குறிக்கிறது. ஆதலின் அவர் “திருப்பதியம் விண்ணப்பம் செய்த பிள்ளை” என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு “பிராயம் ஆக” நிலம் ஊராரால் கொடுக்கப்பட்டது. இந்த நிலத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய இறை வரிகள் எல்லாம் ஊர் தானே கொடுப்பதாக கொண்டு நிலம் கொடுத்தனர். இதை “இறையிலி முற்றூட்டாக செய்து கொடுத்தோம் கூகூர் ஊரோம்” என்று கல்வெட்டு குறிக்கிறது. இவருக்குச் செய்த உபகாரத்தை மாற்ற நினைத்தவர்கள் காவேரி ஆற்றுக்குலை தகர்த்தவர் பாவம் பெறுவர் என்றும், அரச ஆணையை மீறிய குற்றப்படுவர் என்றும் ஊரார் கூறினர். ஊரார் கூற ஊர் மத்யஸ்தன் நாராயணன் சக்ரபாணி எழுதினான்.
இக் கல்வெட்டை நோக்கும் போது சுந்தரர் உயிரோடு இருப்பது போலவும் சிவனிடத்து விண்ணப்பம் செய்வது போலவும் அவர் மீது அன்பு கொண்டு ஊரார் நிலம் கொடுத்தமை அறிகிறோம். இவ்வூர் கல்வெட்டுக்களிலிருந்து இராஜராஜனுடைய 10ம் ஆண்டிலேயே சுந்தரமூர்த்தி நாயனார் சோழ நாட்டுக் கோயில்களில் மிக அன்புடன் வணங்கப்பட்டார் என்றும் அவருடைய வழிபாட்டுக்காக நிலங்கள் கொடுக்கப்படன என்றும், அவர் திருமேனிக்கு திருவிழா எடுக்கப்பட்டது என்றும், சான்றுடன் கல்வெட்டு பகர்கிறது எனில் இராஜராஜனுடைய ஆட்சியின் தொடக்கத்திலேயே தேவாரப் பதிகங்களும் பதிகம் பாடியோரும் சிறப்புற்று இருந்தனர் என்பது தெளிவு.