தமிழகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆலய வழிபாடுகள் எவ்விதம் நடந்து வந்தன என்பதை சில சாசனங்களிலிருந்தும், தாம்ர சாசனங்களிலிருந்தும் அறிய முடிகிறது. நம் நாட்டை பண்டைக் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் என்ற மன்னர்கள் ஆண்டார்கள் என்று சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்விலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை. இவ்விலக்கியங்களில் கடவுள் வழிபாடுகளும், கடவுளர் உருவங்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால் அக்காலத்திய சாசனங்கள் வழிபாட்டு முறையைப் பற்றி ஏதும் கூறவில்லை. அவை பெரும்பாலும் இயற்கை குகைத்தளங்களில் வசித்து வந்த சமணப் பெரியார்களுடையவையாக காணப்படுகின்றன. கி.பி. 600ல் கச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முதலாம் மகேந்திரன் என்ற பல்லவ மன்னர் காலத்திய சாஸனங்கள் ஹிந்துக்களது ஆலயங்களைப் பற்றி கூறுகின்றன. கி.பி. 600 லிருந்து கி.பி. 850 வரை சுமார் 250 வருட காலம் பல்லவர்களது ஆட்சி தமிழ்நாட்டில் மேலோங்கியிருந்தது. இக்காலத்திய சாசனங்களிலிருந்து தாம் பெரும்பாலும் ஆலய நிர்மானம் முதல், நித்திய வழிபாடு, திருவிழாக்கள், திருப்பணிகள் முதலியவை பற்றி அறிய முடிகிறது. பொதுப்படையாகப் பார்த்தோமானால் இன்று நம் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்விதம் இருந்தனவோ அதேபோல் தான் இன்றும் உள்ளன. ஆலயங்களை மன்னர்களும் பொது மக்களும் பொது ஜனங்களின் நலனுக்காகவும் உலக க்ஷேமத்திற்காகவும் கட்டி வைத்தனர்.
பிரஜைகளின் இஷ்டங்கள் பூர்த்தியடைவதன் பொருட்டு இக்கொயிலைக் கட்டினேன் என்று பல்லவ மன்னன் ராஜசிம்மனது சாசனங்கள் கூறுகின்றன. இவ்விதமே அரசமாதேவியரும் பல கோயில்களை எழுப்பியுள்ளனர். கோயில்களைத் தோற்றுவித்த பெரியார்கள் தங்களது பெயர்களையே கோயில்களுக்கு இட்டனர். திருச்சி மலையில் மேல் மகேந்திரவர்மனால் தோற்றுவிக்கப்பட்ட குகைக் கோயிலுக்கு லலிதாங்குர பல்லவேஸ்வர கிருஹம் என்று பெயர். ராஜசிம்மனால் கட்டப்பட்ட கோயில்களுக்கு ராஜசிம்மபல்லவேஸ்வரம் என்றும், அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம் என்றும், அத்யந்தகாம பல்லவேஸ்வர கிருஹம் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. அது போன்று பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்ட கோயிலுக்கு பரமேஸ்வர மஹாவராக விஷ்ணுகிருஹம் என்றும், பரமேஸ்வர விண்ணகரம் என்றும் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.
இது தவிர நமக்கு முன்னர் இறந்த பெரியவர்களுக்கு நினைவுக் கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயிலுக்கு பள்ளிப்படை என்று பெயர். காளஹஸ்தியில் முதலாம் ஆதித்திய சோழர் இறந்த பின்னர் அவர் நினைவாக அவரது மகனான பராந்தக சோழனால் ஆதித்தேஸ்வரம் என்று கோயில் எழுப்பப்பட்டது என அறிகிறோம். கோனேரிராஜபுரத்தில் கண்டராதித்தியரின் உடைய பிராட்டியார் செம்பியன் மஹாதேவியார் தனது கணவரின் பெயரால் திருக்கற்றளி எடுப்பித்தார் என அவ்வூரிலுள்ள சாசனம் கூறுகிறது. பல்லவ மன்னனான நிருபதுங்கவருமன் காலத்தில் நார்த்தாமலையில் ஒரு குகைக் கோயில் குடைவிக்கப்பட்டது. அது அவரது மகளால் பெரிதாக்கப்பட்டது. "விடேல்விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி குடைவித்த ஸ்ரீகோயில். இச்சிரி கோயிலுக்கு முகமண்டகமும் இஷவமும், இஷவக் கொட்டிலும், பலிபீடமும் செய்வித்தாள் சாத்தன் பழியிலி மகள் மீனவன் தமிழதியரையன் பல்லன் அனந்தன் புக்க பழியிலி சிறியநங்கை" என்று அச்சாசனம் கூறுகிறது.
இவ்விதம் தோற்றுவித்த கோயில்களில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்யவும் ஜலஸம்ப்ரோக்ஷணம் செய்வது பற்றியும் சாசனங்கள் கூறுகின்றன. கண்டராதித்ய சோழர் காலத்தில் உள்ள சாசனங்கள் "இக்கோயிலில் யாங்கள் ஸ்ரீகோயில் எடுப்பித்து பிரதிஷ்டை செய்வித்த கணபதியாருக்கு" என்று சொல்வதிலிருந்து எடுப்பித்த கோயிலிலே மூலவிக்கிரஹத்தை பிரதிஷ்டை செய்வது என்பது வழிவழி வந்த வழக்கம் என்று தெரியவருகிறது. "அந்த வந்தநல்லூர் நாட்டு திருவாலந்துறை பரமேஸ்வரருக்கு செம்பியன் இருக்குவேளிர் ஆன பூதிபராந்தகன் கற்றளி எடுத்து ஜலசம்ப்ரோக்ஷணம் செய்தான்" என்று மற்றொரு சாசனம் கூறுகிறது. கட்டுவித்த கோயிலின் மேல் விமானத்தில், செம்பினாலான கலசத்தை வைப்பதை தஞ்சைப் பெரிய கோயிலை எடுத்த ராஜராஜனின் சாசனம் கூறுகிறது. ஸ்ரீவிமானத்துச் செம்பின் ஸ்தூபத்தறியில வைக்கக் கொடுத்த செப்புக் குடம். இச்செப்புக் குடத்தின் மேல் தங்கத்தகடு போற்றப்பட்டது.
நித்திய வழிபாடு முறை பற்றி பல கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. கி.பி. 670 ல் அதாவது சுமார் 1300 வருடங்களுக்கு முன்னர் ஆண்ட பல்லவ மன்னனான பரமேஸ்வரவர்மனது செப்பேடுகள் மிக அழகாக பூஜைக்கிரமத்தை கூறுகின்றன.
வித்யாவினீத பல்லவ பரமேஸ்வர கிரஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பகவானும் பரமேஷ்டியும் ஆன பினாகபாணிக்கு, பூஜை, ஸ்நபனம், குசுமம், கந்தம், தூபம், தீபம், அவிஸ், உபகாரம், பலி, சங்கம், படகம் முதலியவைகளுக்கும், தண்ணீருக்கும், அக்கினிக்கும், பாரதம் வாசிப்பவருக்கும் ஆன நிபந்தங்களென்று கூறுகிறது. இதற்கு "தேவகர்மம்" என்றும் திருப்பணி செய்வதற்கு "நவகர்மம்" என்றும் பெயர். இதையே தமிழில் "கூரத்துத் தளிக்கு தேவகர்ம நவகர்மம் செய்வதாகவும், கூரத்து மண்டகத்துக்கு தண்ணீருக்கும் தீக்கும் ஒரு பங்காகவும், இம்மண்டகத்துக்கு பாரதம் வாசிப்போனுக்கு ஒரு பங்காகவும்" என்று உள்ளது. இதற்கு முந்திய பல்லவ சாசனம் கோவிஜயசிம்மவர்மன் என்ற மன்னன் காலத்தியது. அதில் திரிகாலமும் ஆராதித்தல், திரிகாலமும் அமிர்திடுதல், நந்தா விளக்கெரித்தல் முதலிய பற்றி குறிப்புள்ளது.
பெரும்பாலும் மூன்று சந்திகளில் பூஜை நடந்ததாக சாசனங்கள் கூறுகின்றன. இதை முச்சந்திகள் என்றும் சிறுகாலைச் சந்தி, உச்சியம்போதைச் சந்தி, இராச் சந்தியென்றும் அவை குறிப்பிடுகின்றன. சில இடங்களில் அர்த்தயாம சந்தியும் குறிக்கப்பட்டுள்ளது. திருப்பள்ளியெழுச்சியைப் பற்றி பல சாசனங்கள் கூறுகின்றன. இதிலிருந்து காலையில் பூஜை பள்ளி எழுச்சியிலிருந்து தொடங்கிற்று என அறியலாம். ஸ்ரீரங்கத்திலுள்ள குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு இக்கோயிலில் ஆழ்வாருக்கு திருப்பள்ளியெழுச்சி திருவாய்மொழி விண்ணப்பம் செய்யக்கூடவோமாக என்று கூறுவதிலிருந்து நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிச்சென்ற திருப்பதிகங்களைப் பாடி கடவுளுக்கு திருப்பள்ளி எழுச்சி செய்தனர் என அறியலாம்.
சைவக் கோயில்களில் அபிஷேகம் விசேஷமாக நடைபெற்றது என்பதை ராஜசிம்ம பல்லவனுடைய சாஸனத்திலிருந்து அறியலாம். முச்சந்திகளிலும் ஒன்றிலோ, இரண்டிலோ, அல்லது மூன்றிலோ ஆண்டவனுக்கு திருமஞ்சன நீராட்டல் வழக்கத்திலிருந்து வந்தது. மூலஸ்தானத்துப் பெருமானுக்கு மும்முறையும், உற்சவத் தினத்தன்றும் ஒரு சந்தியும் திருமஞ்சன நீராட்டல் என்பதும் பழக்கத்திலே இருந்து வந்தன. திருமஞ்சன நீருடன், தண்ணீரும் அபிஷேகத்திற்கு தனியாக உபயோகிக்கப்பட்டது என அறிகிறோம். பேரரசன் இராஜராஜன் தான் கட்டுவித்த தஞ்சைப் பெரிய கோயில் மூலஸ்சுவாமிக்கும் உத்சவருக்கும் வேண்டிய திருமஞ்சனத்திற்கு என ஒரு தனிச் சாசனமே செய்து வைத்துள்ளான். "ராஜராஜேச்சுவர முடையார் ஆடியருளும் திருமஞ்சன நீரிலும், தண்ணீர் மீதிலும் இட பெரும்செண்பக மொட்டுக்கும், ஏலவரிசிக்கும், இலாமச்சத்துக்கும் வேண்டும் நிபந்தம்" என்று அக்கல்வெட்டு கூறுவதிலிருந்து திருமஞ்சன நீரிலே செண்பக மொட்டு, ஏலவரிசி, இலாமிச்சவேர் முதலியவை போடப்பட்டன என்று அறிகிறோம்.
சில வைணவக்கோயில்களில் மூன்று சந்தியும் நீராட்டல் வழக்கத்திலிருந்தது வந்தது. மற்ற இடங்களில் சில விசேஷதினங்களில் எண்ணெய் காப்பு சாத்துவது பழக்கத்தில் இருந்து வந்தது என்று அறிகிறோம். இராஜேந்திரன் மகனான இராஜாதித்தனின் கல்வெட்டு "மதுராந்தக விண்ணகராழ்வாருக்கு அக்கோயிலில் காணிக்கையுடைய வைகானசன் ஆளி ஆராவமுது ஆளி தாமோதரனான வேங்கடவன் நித்தம் ஒரு திருமஞ்சனக்குடம் அபிஷேகம் பண்ணி திருமாலை சாத்த பழங்காசு" என்று கூறுகிறது. இதிலிருந்து வைகானச ஆகமம் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்தியது என்றும், ஆகம வைகானச முறைப்படி சில வைணவக் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது என்றும், அக்கோயில்களில் திருமஞ்சன நீராட்டல் நித்தமும் இருந்து வந்தது என்றும் அறிகிறோம். திருவரங்கத்திலுள்ள ஒரு சாஸனம் "திருஅரங்கத்து பெருமானடிகளுக்கு திருமஞ்சனம் புக்கு அருள சகஸ்ரதாரை ஒன்றினால்" என்று மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மனின் சாஸனம் கூறுவதிலிருந்து திருவரங்கப் பெருமானுக்கு திருமஞ்சன நீராட்டல் நடைபெற்றது என்று அறிகிறோம்.
திருமஞ்சன நீரை பிராமணன் ஒருவன் பக்கத்திலுள்ள நதியிலிருந்து கொண்டு வருவதுண்டு. சைவ ஆலயங்களில் எண்ணெய் காப்புக்களுக்கு பல நிபந்தங்கள் கொடுக்கப்பட்டன. எண்ணெய்க்காப்பு சில கோயில்களில் தினந்தோறும் இருந்து வந்தது. சில கோயில்களில் வாரத்தில் இரு நாட்களோ அல்லது ஒரு நாள் மட்டுமோ இருந்து வந்தது என்று சாஸனங்கள் கூறுகின்றன. பஞ்சகௌளவியம் ஆடியருளல் என்றும் அப்பஞ்சகெளவியத்திற்கு வேண்டிய பொருளும் அவற்றின் அளவும் ஒர் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. "கோமூத்திரம் உழக்கு, கோமயம் அழாக்கு, பால் நாழி, உழக்கு தயிர், நாழி உரி நெய்" என்று அது கூறுகிறது. நெய்யாடியருளல், பாலாடியருளல், திருசாந்து ஆடியருளல் என்பதும் சாஸனங்களில் வருகின்றன.
கோவை மாவட்டத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கல்வெட்டு "அமுதுபடி சாத்துப்படி திருமேற்பூச்சு சந்தியாதீபம் திருவிளக்கு திருப்பணி திருநாட்தேவை அக்னி பலி அர்ச்சனை நித்தகர்மம் பலமடி நிபந்தம்" என்று பூஜை முறைகளை கூறுகிறது. ஸ்ரீரங்கத்தில் சந்தானச்சாத்து, புழுகுநெய், கஸ்தூரி, கற்பூரம் உள்ளிட்ட சாத்துப்படி திருவரங்கப் பெருமானுக்கு இடப்பட்டது என்றும், கார்த்திகை மாதத்து திருகார்த்திகை திருநாளில் பெரியபெருமாளுக்கு புழுகுநெய் சாத்தியருள" என்றும் ஒரு கல்வெட்டு கூறுவதிலிருந்து புழுகுநெய் சாத்துவது வைணவக் கோயில்களில் வழங்கி வந்த முறை என்றும் அறிகிறோம். அதே கோயிலிலுள்ள மற்றொரு சாஸனம் எண்ணெய் காப்பு, நெல்லிக் காப்பு, மஞ்சக்காப்பு, சந்தனக்காப்பு, திருப்பள்ளி தாமம், திருமாலை திருப்பறிச்சட்டம் உள்ளிட சாத்துப் படிகள் என்று கூறுகிறது.
திருப்பள்ளிதாமம் பறித்து ஆண்டவனுக்கு சாற்றினர் என்றும் பெருமக்கள் திருமலர் மாலைகளைத் தங்களது பெயரால் செய்து தினமும் சாத்துவதற்கு நிபந்தம் செய்தனர் என்றும் அறிகிறோம். இதற்கு செங்கழுநீர் புஷ்பம் உபயோகப்பட்டது என்று சில இடங்களில் சாஸனங்கள் கூறுகின்றன. அரைத்த சந்தனத்தையே ஆண்டவனுக்கு இட்டனர் என்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. "திருச்சந்தனம் தேய்க்கும் பிராமணன் ஒருவனுக்கு கப்படம் முட்பட நிசதம்" என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இவ்விதம் அபிஷேகங்களால் பூஜிக்கப்பட்ட ஆண்டவனுக்கு பரிசட்டம் சாத்துவது வழக்கத்திலிருந்தது.
கோனேரிராஜபுரத்தில் உள்ள செம்பியன் மாஹாதேவியாரின் சாஸனம் கோயிலில் வழிபாட்டு முறை பற்றி மிகவும் வியக்கத்தக்க முறையில் பல செய்திகளைக் குறிக்கிறது. அதில் "திருநமனிகைக்கும் திருவிதானத்துக்கும் திருமேற்கட்டிக்கும் ஜலபவித்திரத்துக்கும் திருஒற்றாடைக்கும்" என்று கூறுவதிலிருந்து இவை வழிபாட்டுக்கு பயன் படுத்தப்பட்டன என்று அறிகிறோம். அதே கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு "இவர்க்கே சாத்தும் திருபரிசட்டத்துக்கு காசு இருபத்தாறும் திருநமணிகை நாலுக்கு காசு இரண்டும் திருப்பாவாடை பதினாலுக்கு காசு நாலும்" என்று கூறுகிறது. சில இடங்களில் சிறந்த பட்டினாலான பறிசட்டங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்விதம் கூறும் சாஸனங்களில் புலியூர்பட்டு, பச்சைப்பட்டு முதலியவை கூறப்பட்டுள்ளன. இவை அடிக்கடி மாற்றப்பட்டு புதிய பட்டுகள் கொடுக்கப்பட்டன. மூலஸ்தானத்து பட்டாரகருக்கு ஆபரணங்கள் சாற்றவதும் ஐந்தலைநாகம் சாற்றுவதும் சாஸனங்களில் குறிக்கப்பட்டுள்ன.
நைவேத்தியங்களைப் பற்றியும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. இவற்றிலிருந்து சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எவை எவை படைக்கப்பட்டனவோ அவையே இன்று வரையிலும் திருஅமிர்தாக இடப்படுகின்றன என்று அறிகிறோம். அநேகமாக எல்லாக் கல்வெட்டுகளிலும் கூறும் அமுதுபடி பல்லவர் காலம் தொட்டு இக்காலம் வரை ஒரே மாதிரியாக இருப்பது மிகவும் சிறப்பாகும்.
பல முறை குத்தப்பட்ட பவளம் போன்ற அரிசியால் அமுது படைக்கப்பட்டது. இந்தத் திருவமுதின் மீது நறுநெய் ஊற்றப்பட்டது. இதை "அவிஸ்" அல்லது "சரு" என்று சாஸனங்கள் கூறுகின்றன. இத்துடன் உபகாரம், பொரிக்கறியமுது, புளிங்கறியமுது கறியமுது, அப்பமுது முதலியவையும் இடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் புதிய மண்கலயங்களில் அமைக்கப்பட்டன. இவற்றிற்கென நித்தமும் கலயங்களிடும் குயவனுக்கு பல நிபந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு சந்தியிலும் இவ்வமுதுகள் செய்யப்பட்ட பொருள்களும் அவற்றிற்கு வேண்டிய அளவுகள் முதலியவை அனைத்தும் வியக்கத்தகும் வகையில் குறிக்கப்பட்டுள்ளன.
நிருபதுங்கவர்மன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் திருவெற்றியூரில் எழுதப்பட்ட ஓர் சாஸனம் "செந்நெற்குத்தல் பழவரிசி இருநாழியினால் நானாழியும், உழக்கு நெய்யும் அடுக்கிலையும், ஐந்து காயும், நாலு பழமும்" என்று கூறுகிறது. அதே அரசன் காலத்தில் போனகம் காட்டுதல் என்பது குறிக்கப்பட்டுள்ளது. அவன் பின் தோன்றலான அபராஜிதவர்மன் காலத்தில் "திருவமுது பத்தெட்டுகுத்தரிசி, பதினாறு நாழி போனகத்துக்கும், திருவமுதுக்கும், நெய் ஆறு நாழி, வாழைப்பழம் எட்டு, சர்க்கரை பலம் கறியமுதுக்கு காய் அடைக்காயமுது எண்பதிலையும் பத்துக் காயும், இளநீர் முப்பது, பஞ்சகெளவியத்துக்கு வேண்டுவனவும், சந்தனமும், தூபமும் இவ்வனைத்துக்குமாக வைத்த பொன்" என்று குறிப்பிடுகிறது.
மற்றொரு சாஸனம் அப்பத்துக்கு அரிசி, கருப்புக்கட்டி, நெய், தயிர், உப்பு, மிளகு முதலியவை பற்றி கூறுகிறது. அநேகமாக எல்லாச் சாஸனங்களிலும் வெற்றிலையும் பாக்கும் திருவமிர்தின் முடிவில் வெள்ளிலை என்றும் அடைக்காயமுது என்ற பெயரிலும் கூறப்பட்டுள்ளன. மன்னன் அல்லது மற்ற பெரிய மனிதர்களின் நட்சத்திரத்தன்று பெரும் திருவமுது விசேஷமாக இடப்பட்டது என்றும் அறிகிறோம். பல சாஸனங்களில் தேவர் அமுது செய்யும் போது உத்தமாக்கிரமாக வேதப் பிராமணர்களுக்கு அமுது செய்வித்தலைப் பற்றி குறிப்பபுகள் உள்ளன. உத்தமசோழரின் 9ம் ஆண்டு கண்டியூரில் எழுதப்பட்ட ஒரு சாஸனத்தில் மாதந்தோறும் என் பிறந்த நாளான ஜோதி நாளன்று பெரும் திருவமுது செய்ய என்று கூறுகிறது. பராந்தகசோழர் காலத்து சாஸனம் ஒன்று தேவர் அமுது செய்யும் போது வேதப் பிராமணர் நிசதம் ஐவர் அமுதம் செய்வதாகவும் என்று கூறுகிறது.
பரிவாரத் தெய்வங்களுக்கும் நித்தம் திருஅமுது இடுவதைப் பற்றி பல சாஸனங்கள் கூறுகின்றன. அய்யன் மகாசாஸ்தா, கணபதி, ஜேஷ்டாதேவி (சேட்டையார்), சப்தமாதர் முதலியவற்றுக்கும் திருஅமுது தினந்தோறும் படைக்கப்பட்டது. திருஅமுதுபடி காண்பிக்கும் போது வாத்தியங்கள் முழங்கின. ஸ்ரீபலி கொட்டுவது என்பது பற்றியும் பல கல்வெட்டுக்களில் காண்கிறோம். ஸ்ரீபலி கொட்டுவதற்குகெனத் தனிப்பட்ட ஒரு தேவரை எடுத்துச் செல்வது வழக்கத்திலிருந்தது. அத்தேவரை ஸ்ரீபலிதேவர் என்று உத்தமசோழர் காலத்திய கல்வெட்டு கூறுகிறது. தஞ்சை பெரிய கோயில் ஸ்ரீ ராஜராஜதேவர் கொடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கோளகைத் தேவர் ஒருவர் அத்துடன் கொடுத்த பத்மாசன ஸ்ரீபலிதாளம் ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருஆலத்தி தட்டுகளும், தூபத் தட்டுகளும், தூபத்தோடு காண்பிக்கும் தீபத்துக்கும், கற்பூரமும், பரிச்சின்னங்களும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களில் ஆலயங்களுக்கு நந்தாவிளக்கு எரிப்பதற்காக விட்ட பரிசுகளைப் பற்றி கூறுகின்றன. நந்தாவிளக்கு எரிக்கக் கொடுத்த பரிசாவது மற்ற எல்லா கைங்கர்யங்களையும் விட பெரிதாகவும் சிறந்ததாகவும் கருதப்பட்டது போலும்! இவ்விளக்குகள் நறுநெய்யால் எரிக்கப்பட்டனவென்றும் இதற்காக விடப்பட்ட ஆடுகள் சாவாமூவாப்பேராடு என்று அழைக்கப்பட்டன என்றும் அறிகிறோம். தீபமாலைகளும், நிலைவிளக்கு, கைவிளக்கு, குத்துவிளக்கு முதலியவையும் ஆங்காங்கே குறிக்கப்பட்டுள்ளன.
ஆலயங்களில் சந்தி தோறும் அக்கினிகாரியங்கள் நடைபெற்றன என்றும் பல சாசனங்களிலிருந்து அறிகிறோம். திருநெடுங்குளம் கோயிலிலுள்ள உத்தமசோழரின் கல்வெட்டு "இத்தேவருக்கு நிசதம் மூன்று சந்தியும் அக்கினி காரியத்துக்கு நிபந்தம் செய்த பரிசானது கொண்டு போது அரைப்படி நெய்யும் மேலெரியும் மற்றும் அக்கினி காரியத்துக்கு வேண்டுவது செய்விப்போம்" என்று கூறுகிறது.
தமிழ்நாட்டு மரபிலே ஆலயத்துறை தெய்வங்களை திருவிழாக்காலங்களில் வீதி உலாவாக எடுத்துச் செல்லுதல் என்பது பண்டைக் காலந்தொட்டு வழங்கிவந்த ஒரு பழக்கம். சங்ககால இலக்கியங்களும், தேவாரத் திருப்பதிகங்களும் திருவிழாக்களைப் பற்றித் தெள்ளன விளக்குகின்றன. கல்வெட்டுக்களிலிருந்து அறியப்படும் திருவிழாக்கள் பல உண்டு. இவற்றில் சில பொதுவான திருவிழாக்களும், சில சிறப்புத் திருவிழாக்களும் இருந்தன. இவற்றில் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்புடையதாகக் கூறப்படுகிறது. இது ஏழு நாட்கள் நடைபெற்றது என அறிகிறோம். பல்லவர் காலத்திற்கும் முன்பிருந்தே இத்திருவிழா பெருமை பெற்றிருந்தது என்பதற்கு சான்றாக லால்குடியில் நிருபதுங்க பல்லவமன்னனின் இரண்டாம் ஆண்டு சாசனம் ஒன்று சித்திரை விஷு திருவிழாவுக்கு தாயாரைச் சாத்திவைத்த பொன் ஆண்டாண்டு தோறும் சித்திரை திருவிழாவுக்கு நாராய நாழியால் ஏழுநாளைக்கும் என்றும் கூறுகிறது.
சென்னை அரசினர் பொருட்காட்சி சாலையில் உள்ள ஒரு செப்புச்சாசனம் "இத்தேவர் சித்திரை விழாவுக்கு நிபந்தம் செய்தபடி திருவிழா ஏழுநாளைக்கும்" என்று கூறுகிறது. காஞ்சிபுரத்தினருகே உள்ள வேப்பங்குளத்தில் உள்ள ராஜேந்திரசோழனின் சாசனம் "சித்திரை திருவாதிரை ஏழு நாளைக்கும்" என்று குறிப்பதிலிருந்து இத்திருவிழா ஏழு நாளைக்கு நடத்தப்பட்டது என அறிகிறோம். சித்திரை விஷு, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஐப்பசி கார்த்திகை, பரணி கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்பாக நடந்தன. கார்த்திகை திருநாள், பங்குனித்திருநாள் என்ற வழக்கு ராஜேந்திரசோழனின் காலத்திலேயே இருந்தது என்று அறிகிறோம். தஞ்சை கோயிலில் திருச்சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகைத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திருஉத்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் 34 நாள் என்று ராஜராஜனால் குறிக்கப்படுகிறது. திங்கள் தோறும் விஷுவயன சங்கராந்திகளில் திருவிழாக்கள் நடைபெற்றன. அரசர்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று விசேஷ திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டன.
திருவிழா எழுந்தருளும் திருமேனிகளுக்கு அன்றாட திருமஞ்சன நீராடலும் திரு அமிர்தமிடுதலும் திரு ஆபரணங்கள் சாத்துதலும் வழக்கத்திலிருந்து வந்ததது. திருவிழா எழுந்தவாரே திருமஞ்சன நீராடலும் திருஅமிர்து செய்தலும் தீர்த்தமாடுதலும் பஞ்சகெளவியம் ஆடுதலும் ஆங்காங்கே குறிக்கப்பட்டுள்ளன. திருக்கார்த்திகை திருநாளன்று திருவேட்டை எழுந்தருளுதல் பெரும் திருஅமுது செய்தல், அடியார்க்குச் சட்டிசோறு பிரசாதம் செய்தல் முதலிய முறைகளும் வழக்கத்திலிருந்தன. ஒரு சாஸனம் "இத்தேவர் உத்திரமயன சங்கரமத்திலும் சகஸ்ரகலசம் ஆடியருளவும் பெருந்திருவழுது செய்தருளவும்" எனக் கூறுகிறது.
திருவிழாக்களில் கொடி முதலில் ஏற்றப்பட்டது என்றும் அரசாங்க அதிகாரிகள் கொடியேற்றத்திற்கு வந்தனர் என்றும் அறிகிறோம். கொடியேற்று நாளன்று பறையறிவித்தலும், செப்புத் திருமேனிகள் உருவிலே தெய்வத்தை ஆலயத்தைச் சுற்றி வலமாக எடுத்துச் செல்லுவதும் சாசனங்களில் கூறப்பட்டுள்ளன. திருவிழாக்களில் ஒவ்வொரு நாளைக்கும் ஒருவர் கட்டளைக்காரராக இருந்தார். மிருத்சங்கிரஹனம் செய்தல், பாலிகை கிழட்டல் (அங்குரார்ப்பணம்) அப்பாலிகையின் அருகே இரவும் பகலும் விளக்கு எரித்தல், திருமஞ்சனத்திற்கென பல குடங்கள் வைத்தல், அவற்றின் நடுவில் சுண்ணாம்பு தடவிய கலசம் அமைத்தல், இவற்றைச் சுற்றி நூல் பட்டும் சுற்றல், முதலிய விவரங்கள் சாசனங்களில் கிடைக்கின்றன. சிதம்பரத்திலுள்ள ஒரு கல்வெட்டு தில்லை நாயகர் திருத்தேர் எழுந்தருளும் போது திருப்புறக் குடையிலே அத்தியயனம் பண்ணி சேவித்தலையும், ஸ்வஸ்தி சொல்லி சேவித்தலையும், திருமஞ்சன காலத்தில் அத்தியயனம் பண்ணி சேவித்தலையும், உத்ஸ்வங்களுக்கு திரு பாலிகை திருநாளுக்கு எழுந்தருளி நாள் மிருத்கிரஹணம் பண்ணி அருளும்போது ஸ்வஸ்தி சொல்லி சேவித்தலையும், திருப்பவனி எழுந்தருளும் போது திருக்கண்சாத்தி அருளுதலையும் குறிக்கிறது.
இவ்வாறு திருவிழாவில் எழுந்தருளுவதற்கு அநேகவிதமான செப்புத் திருமேனிகள் செய்து வைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் செம்பால் வார்க்கப்பட்டவை. தங்கத்தால் செய்யப்பட்ட திருமேனிகளும் வெள்ளியால் செய்யப்பட்ட ஓர் திருமேனியைப் பற்றியும் ராஜராஜன் காலத்திய கல்வெட்டு கூறுகிறது. இவ்விதம் தனித்தனி உலோகங்களால் செய்யப்பட்ட திருமேனிகளைப் பற்றி விவரங்கள் கிடைக்கின்றனவேயன்றி வெண்கலத்தாலோ பஞ்சலோகத்தாலோ ஆன திருமேனி பற்றி இதுவரை சான்று ஏதும் கிடைக்கவில்லை. அநேகமாக எல்லாத் திருமேனிகளும் "கனமாகச்" செய்யப்பட்டன என்றும் வாகனங்கள் "கனப்பொள்ளலாகச்" செய்யப்பட்டன என்றும் சாசனங்கள் கூறுகின்றன. கடவுளின் உருவங்களுக்கு "திருமேனிகள்" என்றும் நாயன்மார், அரசர்கள் முதலிய உருவங்களுக்கு செப்புப் "பிரதிமங்கள்" என்றும் பெயர் வழங்கிற்று. செப்புத் திருமேனிகளை "ரத்தினநியாசம்" செய்து பத்மபீடத்தில் வைப்பது பற்றியும் சாசனங்கள் கூறுகின்றன. தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய ராஜராஜன் காலத்தில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் அக்கோயிலுக்கு அளிக்கப்பட்டன என்று அறிகிறோம். இவ்வுருவங்களிலே சில உருவங்கள் சிறந்த உருவங்களாகவும் இன்று அநேகமாக கோயில்களிலே காணப்படாத உருவங்களாகவும் இருக்கின்றன. லிங்கபுராண தேவர், சண்டிகேஸ்வர அனுக்கிறஹமூர்த்தி, ஸ்ரீகண்டதேவர், பஞ்சதேஹ மூர்த்திகள், முதலிய உருவங்கள் பெரும்பாலான கோயில்களிலே உத்ஸவமூர்த்திகளாகக் காணப்படுவதில்லை.
ஆபரணங்களைப் பற்றியும், கோயில்களில் பாத்திரங்கள் பற்றியும், பணி புரிவோர் பற்றியும் சாசனங்களிலிருந்து அறிகிறோம். பல கோயில்களிலே பாரதம் வாசித்தல், மீமாம்சை வியாக்யானம் செய்தல், வியாகரணம் வியாக்யானம் செய்தல், சோமசித்தாந்தம் முதலிய சித்தாந்தங்களை விளக்கம் செய்தல், என்ற பணிகள் வழக்கிலிருந்தன என்றறிகிறோம். திருவிழாக்காலங்களிலே ஆரியத்திலும், தமிழிலும் கூத்துக்கள் நடைபெற்றன. சைவக் கோயில்களிலே பூஜை செய்த பெரியார்களை சிவப்பிராமணர்கள் என்று சாசனங்கள் கூறுகின்றன. ஓர் தாமிரசாஸனத்தில் வைணவக் கோயிலில் நம்பியைக் கொண்டு ஆராதனை செய்விக்கவும். நம்பியை பெறாவிடில் வேதமறிந்த பிராமணனை கொண்டு ஆராதிக்கவும் என்று கூறுவதிலிருந்து வழிபாட்டுமுறை தெரிந்த பெரியார்கள் கோயில் பூஜைக்கு அமர்த்தப் பட்டார்கள் என்று அறிகிறோம். இதுபோன்று சாஸனங்களிலிருந்து நாம் அறியும் செய்திகள் பல. இவற்றை ஆராய்ந்தறிந்து பார்க்கும்போது இன்று கோயில்களில் வழிபாட்டு முறை எவ்வாறு நடக்கின்றனவோ அதுபோலத் தான் ஆயிரத்து மூன்னூறு ஆண்டுகட்கு மேலாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது எனத் தெளியலாம்.