22. வீரமரணம் எய்தியோர்க்கு நட்ட கல்

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 21 | Contents | அத்தியாயம் 23 | Home

நட்ட கல்
மாற்றான் படை அவன் நாட்டின் மீது பாய்ந்தது. அதை எதிர்த்து நின்றான் அவ்வீர மகன். தன்னிடமிருந்து சரங்களை மாரியாகப் பொழிகிறான். உரையிலிருந்து அம்புகள் தீர்ந்துவிட்டன. எதிரிப்படை அவ்வளவு பெரியது. மலைத்தானா இல்லை. இடுப்பில் இருந்த குறுவாளை கையிலே உருவிக் கொண்டான். வெள்ளம் போன்ற மாற்றான் படை மீது பாய்ந்தான். அந்நிலையில் இறந்து பட்டான் அவ்வீரன் இந்நிகழ்ச்சியை அண்மையில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு கூறும் அழகைப் பாருங்கள். பாசாற்றூர் எருமைத் தொறு எயினாட் டார்கொள்ள பாசாற்றூர்ப் பூசல்லிட பூசல் சென்று கோவூர் நாட்டுச் சிற்றிடையாற்று முதுகொன்றை மூக்கின் மீமலை அயங்கயக் கரையில் சென்று முட்டி மலையநூருடைய செம்பர் மகன்னான காரிப்பெருமான் உரையில் அம்பு மாள எவ்வி பத்திரம் உருவி எதிரே சென்று பட்டான். என்று வருகிறது. இதில் பல இலக்கிய மரபுகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்தில் பூசல் மாற்று என்று வருவதுதான் இதில் பூசலிட என்று வந்துள்ளது. எவ்வி என்பது ஏவு என்னும் பொருளில் வந்துள்ளது. பத்திரம் என்பது சிறுவாள். காரிப்பெருமான் என்பது அப்பெரும் வீரனின் பெயர். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று அவ்வீரனின் கல்லைக் காணும்போது உடம்பு புல்லரிக்கிறது. இது போன்று வரலாறு குறிக்கும் பல நடுகற்களைத் தான் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அண்மையில் வடாற்காடு மாவட்டம் செங்கம் பகுதியில் படி எடுத்துள்ளது. தொன்மையான தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்திலும், புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும் மாற்றரசர்களோடு போரிட்டு வீர மரணம் அடைந்த மரவர்களுக்கு கல்லில் அவர் பெயரும் உருவமும் எழுதி கல்லை வணங்குவது பண்டை மரபு என்பது குறிக்கப்பட்டுள்ளது. மாற்றார் நாட்டுக்குள் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு போதல், கவர்ந்து செல்லும் ஆநிரைகளை மீட்டல், மாற்றார் கோட்டையைக் கொள்ளல், தன் கோட்டையைக் காத்தல், மாற்றார் மீது எழுந்து போர் தொடுத்தல், வருகின்ற படையை எதிர்த்து தாக்குதல் ஆகிய வேலைகளில் மறவர் ஈடுபடுவர். இவற்றில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு பூவின் பெயரை இட்டு அதை திணை என்று அழைப்பது தமிழ் மரபு. எடுத்துக்காட்டாக ஆநிரை கவர்ந்து கோடலுக்கு வெட்சித் திணை என்றும் மீட்டலுக்கு கரந்தைத் திணை என்றும் பெயர். இது இலக்கிய மரபு. இது வெறும் இலக்கிய மரபுதானா? அல்லது உண்மையிலேயே கற்கள் நாட்டியிருந்தனவா? இம்மரபு சங்க காலத்தில் இருந்ததா? அன்றி பிற்காலத்தும் வழக்கில் இருந்ததா? போன்று பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நடுகற்கள் தமிழகத்தில் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஆநிரைப் போரிலும், கோட்டைப் போரிலும், பறந்தலைப் போரிலும் மாண்ட வீரர்களுக்கு நடப்பட்ட கற்கள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள பல்வேறு திணைகளுக்குரிய நடுகற்களும் கிடைத்துள்ளதால் இவற்றை அறிவதால் தமிழ் இலக்கியத்தை தெளிவாக் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இக்கற்கள் அனைத்திலும் மாண்ட வீரனது உருவம் செதுக்கப் பட்டிருக்கும். வீரன் தன் கரத்தில் வில்லோ, வாளோ, அன்றி சூலமோ ஏந்தி வீரச் சமர் புரிவது போன்று அவன் உருவம் காணப்படும். அவன் அருகில் மங்கலச் சின்னங்கள் சிலவும் காணப்படும். பலசிலைகளில் வீரனின் உடலைப் பல அம்புகள் துளைத்து நிற்பதைக் காணலாம். உருவத்தின் மேலோ, பக்கத்திலோ, அன்றி கீழோ அப்பகுதியில் அன்று வழங்கிய எழுத்துகளில் செய்திகள் பொறிக்கப்பட்டிருக்கும். அன்று ஆண்ட மன்னனின் பெயர், அவன் ஆட்சி ஆண்டு, மாண்ட வீரனின் பெயர், அவன் எவ்வூரைச் சேர்ந்தவன், எக்காரணத்தால் இறந்தான், என்பதும் குறிக்கப்பட்டிருக்கும். இச் செய்திகள் வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படுபவை. இவற்றை வைத்துக் கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் ஒரு நாட்டுக்கும் மற்றைய நாட்டுக்கும் நடந்த போரையும் அதில் சிற்றரசர்கள் கொண்ட பங்கையும் போர் எவ்வளவு காலம் நீடித்தது என்பதையும், யார் இறுதியில் வெற்றி பெற்றனர் என்பதையும் தொகுத்துக் கூறுவர். இந்நடுகற்கள் எழுத்திலக்கணம் பொருள் இலக்கணம் ஆகியவற்றைப் வரலாற்று அடிப்படையில் அறிய பெரிதும் பயன்படுகின்றன. எழுத்துக்கள் சங்ககாலம் தொட்டு இன்றுவரை பல நிலைகளைப் பெற்று வளர்ந்து வந்திருக்கின்றன. அவற்றின் வளர்ச்சியில் இதுகாறும் தெளிவாகாத சில நிலைகள் அண்மையில் கிடைத்த நடுகற்களிலிருந்து தெரிகின்றன. அண்மையில் வடாற்காடு மாவட்டத்திலிருந்து சுமார் 15க்கும் மேற்பட்ட நடுகற்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பல்லவர் காலத்தவை. சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், நந்திவர்மன், கம்பவர்மன் காலத்தவை தவிர மற்றவை அனைத்தும் வட்டெழுத்தில் உள்ளன. இவற்றிலிருந்து வரலாற்றின் பல புதிய செய்திகள் கிடைத்துள்ளன. மகேந்திரனின் தந்தை சிம்மவிஷ்ணு 30 ஆண்டுகளுக்கு மேலும், மகேந்திரன் 60 ஆண்டுகளும் கோலோச்சி உள்ளனர் என்று அறிகிறோம். நரசிம்மவர்மன் என்று குறிக்கப்பட்டுள்ளது மட்டும் சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்ற வாதாபியைத் திகளடித்து மாமல்லன் என்று பெயர் பெற்றிருந்தானே அவனைக் குறிக்கிறதா அன்றி காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் உலகப் புகழ் வாய்ந்த கோவில்களைத் தோற்றுவித்தானே இரண்டாம் நரசிம்மன் அவனைக் குறிக்கிறதா என்றும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகாறும் இம்மூன்று மன்னர்களும் இவ்வளவு காலம் ஆண்டுள்ளனர் என்பது தெரியாது. வரலாற்று ஆசிரியர்கள் இவர்கள் குறைக்காலமே ஆண்டதாக குறித்துள்ளனர். இவர்கள் ஆட்சியில் காணும் மாற்றம் பல்லவ வரலாற்றையும், அதன் சமகாலத்து பாண்டியர், கங்கர் முதலியோர் வரலாற்றையும் மாற்றி எழுத வேண்டிய செய்திகளைத் தந்துள்ளன. பல்லவர்காலத்தில் நாடு எவ்வாறு பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது என்பதையும் சில கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. பல்லவர் தங்கள் கீழ் படிப்படியாகக் குறுநிலத் தலைவர்களை நியமித்து அவர்கள் மூலம் நாட்டை ஆண்டிருக்கின்றனர். கம்பவர்மனின் கீழ் வயிரமேகன் என்னும் வாண அரசன் குறுநில மன்னனாய் இருந்தார். அவர் வாணகோப்பாடியும், இலாடைப்பாடியும், மிலாடும், சோழ நாட்டுக் காவிரியின் வடகரையும் ஆண்டார். அவரின் கீழ் வெண்ணம் (இப்போது வீராணம்) என்ற ஊரையும், சாத்தனூரையும் நந்தியின் மகன் அக்கழிமல்லன் என்பவர் ஆண்டார். அவரின் கீழ் வெண்ணம் என்ற ஊருடைய தலைவனாக மோடப்பன் குறிக்கப்படுகிறார். இது பல்லவர் ஆட்சி முறையைத் தெளிவாக்குகிறது. இப்பொழுது ஒரு அணையால் புகழ் பெற்றுள்ள சாத்தனூரில் மலைக் குன்றுகள் நிறைந்த பகுதி மேலைப் பகுதியிலிருந்து கீழைப் பகுதிக்கு வரும் படைகள் இங்குள்ள இடை நிலப் பகுதி வழியாகத் தான் வரும். ஆகையால் இப்பகுதியில் பல வரலாற்றுச் சிறப்பு பெரும் போர்கள் நடந்துள்ளன என்று இப்போது அறிகிறோம். அது போன்ற போர் ஒன்றை மிக அழகாகக் குறிக்கின்றது ஒரு நடுகல். அக்கழி மல்லனார் வெண்ணமூஞ் சாத்தனூரும் ஆளா நிற்க பங்கள நாடுடைய மாதேவர் படை சாத்தனூர் ஏறிய வெண்ணமுடைய மழநாட்டு மோடப்பன் பின்பு சென்று பிணங்கி வேனாட்டுடெல்லையிற் சறுகளப்பட்டான் மழநாடர் கல் என்று குறிக்கின்றது. ஒரே சண்டை இரண்டு மூன்று இடங்களில் தொடர்ந்து நடந்த போது ஆங்காங்கே வீழ்ந்த வீரர்களுக்கு ஆங்காங்கே நடுகற்கள் காணப்படுவது ஒரு சிறப்பாக உள்ளது. நல்ல தமிழ் பாக்கள் உள்ள நடுகற்களும் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிரிகளை சாய்த்து வீழ்ந்த ஒரு வீரனின் நடுகல்லில் வாய்ந்த புகழ் மங்கலத்து வந்தெ திர்த்த மாற்றலரை சாய்த்த மகன் வென்றசயம் பெருக நிக்குவளம் கற்பொறிக்கப்பட்டான் கரைய குலச் சொக்கனேந்தலே உலகிற் காண் என்னும் அழகிய பாட்டுள்ளது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு நடுகல் மிகவும் அரிய செய்தியைத் தருகிறது. ஒரு வீரன் தன்னெருமைகளைத் காத்து நின்றான். அப்புறத்தே கள்வன் நுழைந்தான். வீரன் இறந்தான். அவனுடைய நாய் கள்வனைக் கடித்து தன் தலைவன் அருகே நின்றது. நன்றி மறவா இவ்விலங்கை அவ்வூரார் நன்றிக் கடனோடு நினைத்து அவ்வீரனுக்கு நட்ட நடுகல்லிலே அந்நாயின் உருவத்தையும் பொறித்து அதன் பெயரையும் குறித்துள்ளனர். இது 1300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மன் காலத்தில் நடந்தது. கோவிசைய மயிந்திர பருமற்கு ஐப்பத்து நான்காவது வானகோ அரசரு மருமக்கள் பொற் றொக்கையார் இளமகன் கருந் தேவக்கத்தி தன்னெருமைப்பு றத்தே வாடிப்பட்டான் கல் கோவிவன்னென்னுந் நாய் இரு கள்ளனைக் கடித்துக் காத்திரு ந்தவாறு என்று அக்கலவெட்டில் காணப்பட்டுள்ளது. அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த நாய்கள் எவ்வளவு வலிவுள்ளவையாக கண்டார் அஞ்சும் உருவம் உடையவையாய் உயர்ந்த ரகத்தைச் சார்ந்தவையாய் திகழ்ந்தன என்று இந்நாயின் உருவமே தெரிவிக்கின்றது. இது போன்ற பல அரும் செய்திகளைத் தரும் நடுகற்களை அப்பகுதி மக்கள் வேடியப்பன் என்று வழிபடுகின்றனர்.
அத்தியாயம் 21 | Contents | அத்தியாயம் 23 | Home