இறந்த கணவனுடன் அவன் மனைவி உடன்கட்டை ஏறுவதை ஸதி என்று கூறுவர். என்றும் நிலைத்திருப்பது உண்மையானது எனப் பொருள்படும் “ஸத்” என்ற வேர்ச் சொல்லில் இருந்து தோன்றியது ஸதி என்ற சொல். ஸத்யம் என்ற சொல்லும் இதிலிருந்து தோன்றிய சொல்தான். உண்மையான கணவனோடு இணைந்து வாழும் மனைவிக்குத் தான் “ஸதி” என்ற சொல் முதலில் பயன்பட்டது. கணவன் மனைவியை “ஸதிபதி” களாக வாழ வேண்டும் என்று ஆசி கூறும் மரபு உண்டல்லவா. சிவபெருமானின் தேவி அன்னை பார்வதிக்கு “ஸதி” என்று பெயர். தன் கணவரையும் தன்னையும் இகழ்ந்த தக்ஷனின் வேள்வித் தீயில் பாய்ந்து இறந்த தாக்ஷாயிணியை “ஸதி” என்போம். துர்க்கையையும் ஸதி என்று அழைக்கும் மரபு உண்டு. ஆதலின் உடன்கட்டை ஏறிய பத்தினிப்பெண்டே ஸதி என்ற கருத்து இருப்பின் அது தவறு.
உடன்கட்டை ஏறும் வழக்கை ஸதி என்பது காலத்தால் மிகவும் பிற்பட்டது. உடன்கட்டை ஏறுதலை “சஹமானம், சககமனம், அன்வாரோகனம்” என வடமொழி நூல்கள் கூறும். கணவன் இறக்க அவனை வேறு இடத்தில் எரிக்க அவனது மனைவி அவனது ஆடைகள் அல்லது பாதுகைகள் அல்லது ஏதும் இல்லாமலே வேறு இடத்தே எரிக்கப்பட்டால் அல்லது புதைக்கப்பட்டால் “அனுமரணம்” என்பர். இந்த மரபு ஒரு காட்டுமிராண்டி மரபு என்பதில் ஐயமில்லை. அதாவது மனிதன் காட்டுமிராண்டி நிலையிலிருந்தபோது பண்படாத நிலையில் வாழ்ந்தபோது தோன்றிய வழக்கம். இது இந்தியாவில் மட்டும் தான் இருந்தது. இந்துக்கள் தான் இதை பின்பற்றினார்கள் என்றோ கருதுவது தவறு. பண்டைய உலகில் பல்வேறு நாடுகளிலும் வழக்கில் இருந்தது இம்மரபு. எகிப்து, கிரேக்கம், ஜெர்மனி, சீனம் முதலிய பண்டைய நாடுகளில் இம்முறை இருந்துள்ளது.
இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் வேதங்களில் சககமனம் எங்கும் குறிக்கப்படவில்லை. அதற்குரிய எந்த மந்திரமும் இல்லை. மனித வாழ்க்கையை சிறப்பாகக் குறிக்கும் கிருஹ்ய சூத்ரங்களும் இதைப் பற்றி எங்கும் கூறவில்லை. மனு முதலிய தர்மசாஸ்திரங்களை இயற்றிய பெரியோர்களும் இதைப் பற்றி ஏதும் கூறவில்லை, விதிக்கவுமில்லை. தர்ம சாஸ்திரங்களின் வரலாறு எழுதியுள்ள பேரறிஞர் பி.வி. கானே கூறுகிறார். உடன்கட்டை ஏற விரும்பாத பெண்ணை குருமார்களோ ஆண்களோ அன்று கட்டாயப்படுத்தவில்லை. அதற்கு மாறாக பல பேரறிஞர்கள் இதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மனு நீதி நூலுக்குச் சிறந்த உரை எழுதியவர் மேத்யாதிதி என்பவர். அவர் இந்த அனுமரணத்தை ஒப்புக்கொண்ட ஆங்கிரஸ் என்பவரை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர். உடன்கட்டை ஏறுதல் தற்கொலைக்குச் சமானமாகும். பெண்கள் இவ்வாறு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உடன்கட்டை ஏறுவது அதர்மம் என்று கூறுகிறார் மேத்யாதிதி. மேலும் ஒரு பெண் தனக்கும் கணவனுக்கும் சுவர்க்கம் உடனே கிடைக்க வேண்டும் என்னும் பேராசையால் வேண்டுமானால் ஆங்கிரஸ் கூறுவது போல் உடன்கட்டை ஏறட்டும். ஆனால் சாஸ்திரத்துக்கு அது ஒவ்வாதது என்றும் சாடுகிறார். ஒருவர் எவ்வளவு காலம் இயற்கையாக உயிர் வாழ முடியுமோ அது வரை வாழ்தல் வேண்டும். இது வேதத்தின் கட்டளை என்பர். அதற்கு முன்னர் உயிரை மாய்த்துக் கொள்ளல் அந்யாயமானது.
ஆங்கிரஸ்ஸும், விஷ்ணு என்பவரும் வேண்டுமானால் சககமனத்தை ஏற்றுக் கொள்ளட்டும். ஆனால் கணவன் இறந்தால் கைம்மை நோன்பு மேற்கொண்டு தூயவளாக வாழ்பவளே உடன்கட்டை ஏறுபவளைக் காட்டிலும் சிறந்தவள் என்று ஸ்மிருதி சந்திரிகை என்ற நூலின் ஆசிரியர் கூறுகிறார். பச்சிளம் குழந்தையை உடைய பெண்ணும், கருவுற்றுள்ள பெண்களும், வயதுக்கு வராத பெண்களும் உடன்கட்டை ஏறுதல் கூடாது. உடன்கட்டை ஏறவிரும்பும் பெண் கடைசி நிமிடத்தில் கூட அதை மறுத்து விடலாம். பதிலாக பிராஜாபத்யம் என்ற தவம் மேற்கொண்டாலே போதுமானது என்று ஆபஸ்தம்பர் கூறுவார்.
உடன்கட்டை ஏறும் வழக்கத்தை வேதமோ, தர்ம சாஸ்திரங்களோ, அறிஞர்களோ அக்காலத்திலேயே ஏற்றுக் கொள்ளாத போதிலும் இங்கும் அங்குமாக கோடியில் ஒருத்தியாக சககமனம் செய்தவர்கள் இருந்திருக்கிறார்கள். முதன் முதலில் இது அரச குடும்பத்தில் மட்டும் இருந்திருக்கிறது. மாற்றரசன் கையில் அரச மாதேவியர் சிக்கிக் கொண்டால் படும் அவமானத்தையும் இழுக்கையும் அல்லலையும் எண்ணி நெஞ்சு பதறி இவ்வாறு அரச தேவியர் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். பின்னர் இது காலப்போக்கில் வீரத்தின் எடுத்துக்காட்டாக கருதப்பட்டது போலும். பிற்காலத்தில் பிராம்மணர்களின் மனைவியரும் உடன்கட்டை ஏறலாம் என்ற வழக்கு வந்தது. புராணங்கள் வாயிலாகவும் வரலாற்றின் வாயிலாகவும் உடன்கட்டை ஏறியோர் பலரைப் பற்றி அறிகிறோம்.
மகாபாரதத்தில் பாண்டுவின் மனைவி மாதரி என்பாள் தன் கணவனுடன் இறந்தாள். ஆனால் கெளரவர் இறந்தபோது யாரும் உடன் இறந்ததாகக் குறிப்பு இல்லை. விராடபர்வம் கீசகன் இறந்ததும் அவனுடன் அவன் மனைவியை எரித்ததைக் கூறுகிறது. தன் கணவன் திருதராஷ்டிரன் இறந்ததும் அவனுடன் காந்தாரி இறந்ததாக பாகவத புராணம் கூறும். புகழ் வாய்ந்த ஹர்ஷவர்த்தனரின் தந்தை பிரபாகவர்த்தனர் இறந்ததும் அவர் தேவி யசோமதி உடன் இறந்தாள் என்று ஹர்ஷசரிதம் என்ற நூல் கூறுகிறது. ஆனால் இதே பாணப்பட்டன் காதம்பரி என்னும் தான் எழுதிய மற்ற நூலில் அனுமரணத்தை மிகவும் ஆவேசமாக எதிர்த்து எழுதியுள்ளார்.
இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட வீரக்கற்களும் உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு எடுக்கப்பட்ட மாசதிக் கற்களும் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. வீரக்கற்களை நடுகற்கள் எனத் தமிழ் நூல்கள் கூறும். கிடைத்துள்ள வீரக் கற்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மிக மிகச் சிலவே உள்ளன எனலாம். இதுவே இவ்வழக்கம் அதிகம் போற்றப்படவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு. பல வீரக்கற்களில் வீரனின் இருபுறமும் இருபெண்கள் காட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இவர் அவனின் மனைவியர் அல்ல. போரில் வீர மரணம் எய்தியவனை அரம்பையர் சுவர்க்கத்துக்கு எடுத்துச் செல்வர் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வரம்பையர் உருவங்களே நடுகற்களில் காணப்படுகின்றன. ஒரு சில நடுகற்களில் அரம்பையர் தவிர அவ்வீரனுடன் உடன்கட்டை ஏறிய மனைவியையும் காணலாம்.
இது போன்ற மிகத் தொன்மையான கற்கள் ஆந்திரதேசத்தில் நாகார்ஜுன கொண்டாவில் கிடைத்துள்ளன. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த இவற்றைச் “சாயாக்கம்பங்கள்” என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ஒரு சாயாக்கம்பம் வாஸிஷ்டி புத்ர சாந்தமூலன் என்ற இக்ஷுவாகு அரசன் நினைவால் எடுக்கப்பட்டது. சாந்தமூலனின் தேவிமாராலும் அவன் மகன் வீரபுருஷதத்தனாலும், அவன் மனைவியராலும் இக்கம்பம் எடுக்கப்பட்டது. ஆதலின் சாந்தமூலனின் மனைவியர் உடன்கட்டை ஏறவில்லை என்பது தெளிவு. பல பகுதிகளிலும் காணப்படும் மாசதிக்கற்கள் பிற்காலத்தவை. இவற்றில் வளையணிந்த கரங்கள் காட்டப்பட்டிருக்கும் மேலே சந்திரனும் சூரியனும் காட்டப்பட்டிருக்கும். சந்திரனும் சூரியனும் உள்ளளவும் மாங்கல்யம் உடையவளாக வளையணிந்து வாழ்வாள் என்பது நம்பிக்கை.
தமிழ்நாட்டிலும் சதி அங்கும் இங்குமாக எங்கோ இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றுகள் உண்டு. ஒரு சில சதிக்கற்களும் உள்ளன. ஆந்திர மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் 4-5ஆம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் ஆம் நூற்றாண்டு வரை சதிக்கற்கள் ஒரு வேறுபாட்டுடன் காணப்படுகின்றன. சில கற்பலகையில் பல தெய்வ உருவங்களின் மத்தியில் கரங்களை கூப்பிய நிலையில் இரு ஆணும் பெண்ணும் காட்டப்படுகின்றனர். இது தவிர இரு கரங்கள் மட்டும் நடுவில் பெரியதாகக் காட்டப்படுகின்றன. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருத்தணி பகுதிகளில் இவை கிடைத்துள்ளன. தன் கணவருடன் உடன்கட்டை ஏறிய பெண்டிர் தெய்வங்களின் முன் சென்று என்றும் வணங்கி நிற்பர் என்பது கருத்து. சில ஆய்வாளர் கண்ணகியை ஸதி என்று அழைப்பார். பத்தினி என்ற பொருளில் இதைக் கொள்ளலாமே தவிர கண்ணகி தன் கணவனுடன் உடன்கட்டை ஏறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
ஸதியைப் பற்றிய பல பாடல்கள் தமிழில் உண்டு. அவற்றில் சில உள்ளத்தை தொடும் நெகிழ வைக்கும் பாடல்கள் உள. புறநானூற்றில் இருபாடல்கள் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகின்றன. பூதப்பாண்டியன் என்பவன் இறந்தான். அவனது தேவி பெருங்கோப்பெண்டு என்பவள் தீப்பாய்ந்தாள். அப்பொழுது அதைக் கண்ட மதுரைப் பேராலவாயர் என்ற புலவர் பாடினார். அவள் இளம் பெண். நனைந்த நீர்சொட்டும் அவளது கூந்தல் முதுகில் தாழ துன்பம் கண்களை உடையவளாய் தன் ஈமத்தீயை அடைந்தாள் என்பார். அப்பொழுது அங்கு கூடியிருந்த அனைவரும் அவளை ஈமத்தீயில் புகாதே எனத் தடுத்தனர். அப்பொழுது அந்த இளம்பெண்ணே கூறியதாக உள்ளது அப்பாட்டு. அப்பெண் கூறுவாள். பெரியோர்களே உன் கணவனோடு நீயும் செல் என்று சொல்லாமல் போகாதே போகாதே என்று தடுக்கிறீர்களே. நீங்கள் நல்லோர் அல்லர். நாங்கள் வெறும் தரையில் படுத்து எள்ளும் புளியும் அரைத்து விழுதுடன் வேக வைத்த இலையோடு நெய்யிடாது நீர்ச்சோற்றை உண்டு உழலும் கைம்மை நோன்பு இருக்கும் பெண்கள் அல்லோம். எம் கணவன் இறக்க அவனை எரிக்கும் தீயும் குளிர்ந்த தாமரை நிறைந்த பொய்கையும் எங்களுக்கு ஒன்றே என்று கூறி தீப்பாய்ந்து இறந்து போனாள். இந்த நயமான பாடலிருந்து பல செய்திகளை அறியலாம். தன் கணவனோடு தானும் இறக்க வேண்டும் என்றது அவளே எடுத்த முடிவு. ஊராரோ உறவினரோ எடுத்தது அல்ல. அது மட்டுமல்ல. அன்று ஊர் மக்கள் அதைத் தடுத்தனர். உடன் தீப்பாயும் பெண்ணை தடுத்து நிறுத்துவது ஊரார் கடமை என இத்தமிழ்பாட்டு வாயிலாக அறிகிறோம்.
பல பேரரசர்களின் தேவியர் தீப்பாயாமல் வாழ்ந்துள்ளனர். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழர். அவர் இறந்த பின்னர் அவரது செம்பியன் மாதேவியார் உடன் இறக்கவில்லை. அவருக்கு பின் முப்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார். தமிழகம் எங்கும் சென்று திருக்கோயில்களைப் புதுப்பித்தும், தெய்வீகக் கலைகளை வளர்த்து, நாட்டில் தெய்வீகப் பண்பை வளர்த்திருக்கிறார். கங்கைகொண்டசோழ ராஜேந்திர சோழனின் தேவி அவன் இறந்த பிறகு வாழ்ந்திருக்கிறார் என கலிங்கத்துப் பரணி மூலம் அறிகிறோம். ராணி மங்கம்மாள் தன் கணவருக்குப் பிறகு ஆட்சி புரிந்திருக்கிறார். உடன் இறந்தோரும் ஓரிருவர் இல்லாமல் இல்லை. தன் கணவன் மீது கொண்ட அன்பு பரிக்கொணாத சில பெண்கள் கணவன் இறந்தான் என்று கேட்டவுடன் அவர்கள் அச்சொல் இயலாது உடன் உயிர் நீத்திருக்கிறார்கள். அதனைப் புலவர் பெருமக்கள் சிறப்பாகப் பாடியுள்ளனர். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் தான் அளித்த தவறான தண்டனைக்கு வருந்தி அரியணையிலேயே உயிர் நீத்தான். அவன் அருகில் இருந்த பாண்டியன் மாதேவி தன் உயிர் கொண்டவன் உயிர் தேடினாள் போல பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. புறம்பொருள் வெண்பாமாலை என்னும் நூலும் கணவன் மனைவி இருவர் உயிரும் உடன் பிரிந்தது எனக் கூறும்.
“ஒருயிராக உணர்க உடன் கலந்தோர்க்குஒருயிர் என்பர் இடை தெரியார்போரில் விடன் ஏந்தும் வேலொற்கும் வெள் வளையினாட்கும்உடனே உவந்துயிர்" புறப்பொருள் வெண்பா.” 262
அதைக் காட்டிலும் சிறப்பாக கலிங்கத்துப் பரணியில் பழம்பாடல் ஒரு அழகிய காட்சியை சித்தரிக்கிறது. போர்க்களத்திலே வீரன் இறந்து விடுகிறான். அவன் இறந்து கீழே உடல் சாயும் போது அவனது உடலை வேறு ஒரு பெண்ணாகிய தரைமகள் தழுவி விடுவாளோ என்று அவன் மனைவி தன் கரத்தால் தாங்கினாள். அவனதுயிர் துறந்ததும் அரம்பையரான பெண்கள் அவன் உடலை தழுவி எடுத்துச் செல்லா வண்ணம் தானும் அவனை அணைத்தவாறே உயிர் துறந்தாள் என மிக அழகாகக் கூறும்.
தரைமகளும் தன்கொழுநன் உடலும் தன்னைத் தாங்காமல் தன் கரத்தால் தாங்கி விண்நாட்டுஅரமகளிர் அவ் உயிரைப் புணரா முன்னம்ஆவி ஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்
மொகலாய அரசர்களின் ஆட்சியில் ஒரு பெண் கணவனுடன் தீப்பாய விரும்பினால் அரசரிடம் இருந்து சிறப்பாக ஒரு லைசன்ஸ் பெற வேண்டும். விஜயநகரப் பேரரசர் காலத்தில் இங்கு வந்த போர்த்துக்கீசியர் பார்போஸா என்பவர் அக்காலத்து இருந்த சதியை விவரிக்கிறார். 1630 இல் இந்தியா வந்த பீட்டர் மூண்டி என்பவர் சூரத்தில் நடந்த ஒரு சதி நிகழ்ச்சியை நேர்முகமாக கண்டிருக்கிறார். அப்பெண் இறந்த தன் தலைமகனை தன் மடியில் வைத்துக் கொண்டு சிதையில் இருப்பதாக அவர் படம் வரைந்து இருக்கிறார்.
உடன் தீப்பாயும் வழக்கை இந்திய சிந்தனையாளர்கள் மிகத் தொன்று தொட்டே வெறுத்து வந்துள்ளனர். வன்மையாக கண்டித்தும் உள்ளனர் இருப்பினும் அங்கும் இங்கும் நடைபெற்ற நிகழ்ச்சியை 1829 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசு இதனை ஒழிக்க சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் முன்னுரையில் கீழ்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது. இறந்த கணவனுடன் மனைவியை எரிப்பது மனித உணர்வுக்கு இழுக்கானது. இதை இந்துக்களுடைய எந்த சாஸ்திரங்களும் இன்றியமையாதது என பரிந்துரைக்கவில்லை. அதற்கு மாறாக கணவனின் மறைவுக்குப் பின்னர் தூய்மையான தவவொழக்கம் மேற்கொள்ளுவதையே சிறப்பாக சாஸ்திரங்கள் போற்றுகின்றன. ஒருசிலரை தவிர மற்ற ஏனைய மக்கள் அனைவரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் அன்மைக்காலத்தில் நடைபெற்ற பெரும்பான்மையான சதி நிகழ்ச்சிகளில் பலாத்காரங்களும், தாங்கொனா கொடுமைகளும் செய்யப்பட்டுள்ளன. இவற்றை இந்துக்களே வன்மையாக எதிர்க்கிறார்கள். சதியே சட்ட விரோதமானது. அதர்மமானது கொடுமையானது என்று இந்துக்களே எதிர்க்கிறார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் சமயங்களில் தலையிடுவதில்லை என்று கோட்பாடுடையது. ஆயினும் இந்துக்களே அதை எதிர்ப்பதாலும் நீதியை நிறுத்தவும் மனித சமுதாயத்துக்கு ஒவ்வாதது ஆதலாலும் இந்தச் சட்டத்தை இயற்றுவது தேவை எனக் கருதுகிறது என்று முன்னுரையுடன் தொடங்குகிறது. ஆதலின் அன்று பொதுமக்களின் குறிப்பாக இந்துக்களிடத்தில் இருந்த சம்பவங்களிலிருந்து எதிர்ப்பின் அடிப்படையிலும் வெறுப்பினாலும் அக்கால அரசு அதை அழிக்கும் சட்டம் கொண்டு வந்தது என்பதை அச்சட்டத்தின் முன்னுரையே தெளிவாக்குகிறது. ஆதலின் இதை இந்துக்கள் எதிர்த்துள்ளனர்.