28. கூத்தர் கொள்ளும் கோலம்

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 27 | Contents | அத்தியாயம் 29 | Home

கேரளதேசத்து கதகளி இன்று உலகப் புகழ் பெற்றுள்ள நாட்டியவகைகளில் ஒன்று. இந்த நாட்டிய மரபில் தனித்தன்மை வாய்ந்தவையாக அனைவருக்கும் உடனடியாக புலப்படுபவை தலையில் அணியும் மிகப்பெரிய கிரீடம், இரண்டாவது முகத்தில் பூசிக்கொள்ளும் வண்ணங்கள், மூன்றாவது அவர்களது ஆடைகள். இம்மூன்றும் நாட்டிய மரபில் வேஷம் அல்லது ஆஹார்யம் என்று அழைக்கப்படும். இது தவிர கேரளக் கதகளிக்கும் தமிழ்நாட்டு ஆடல்களுக்கும் சில நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. அவற்றைப்பற்றி இங்கு நாம் ஆயப்போவதில்லை. மிகவும் பெரிய விரிந்த முடியும் முகத்தில் வண்ணம் பூசுவதும் ஆடையும் எப்பெழுது தோன்றின? தமிழ் நாட்டில் இவை இருந்தனவா? என்பதை ஆயப் புகுந்தால் அதுவே ஒரு நூலாகிவிடும். அவற்றின் கூறுகளை மட்டும் கவனிப்போம். விரிந்த மிகப்பெரிய முடியை நாட்டியம் ஆடுபவர்கள் தரித்துக்கொள்வது கேரளத்தில் மட்டுமல்ல கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய தென்னகம் முழுமைக்கும் பொதுவானதுதான். இது போன்ற கிரீடங்களை கர்நாடக “யக்ஷகானம்” ஆடுவோரும் தமிழ்நாட்டில் தெருக்கூத்து ஆடுவோரும் அணிந்து கொள்வதை இன்றும் காணலாம். இவை எப்பொழுது தோன்றின என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் நமது சிற்பங்களையும் ஓவியங்களையும் தான் பார்க்க வேண்டும்.

28.1. இரு சிற்பங்கள்

இந்த இரண்டு படங்களைப் பார்த்தால் உண்மை புலப்படும். ஒன்று வீரபத்திரரின் சிற்பம் மதுரையில் உள்ளது, இரண்டாவது திருநெல்வேலியில் உள்ளது. மதுரையில் மீனாக்ஷி சுந்தரேசுவரர் சந்நிதியில் கம்பத்தடி மண்டபம் உள்ளது. அதன் அருகில் அக்னி வீரபத்திரர், ஊர்த்வ தாண்டவர், காளி என்னும் மிகப்பெரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றில் உள்ள ஒன்று தான் படத்தில் உள்ள சிற்பம். இதன் தலையில் உள்ள மகுடத்தைப் பார்த்தால் இப்பொழுது கேரள கதகளி ஆடுவோர் அணிவது போலவே இருக்கிறது அல்லவா? இந்த மண்டபத்தையும் சிற்பத்தையும் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வீரப்ப நாயக்கர் செய்து வைத்தார். இதே காலத்தில் அரிய நாயக முதலியாரின் மேற்பார்வையில் இங்கு ஆயிரம்கால் மண்டபம் கட்டப்பட்டது. ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்களிலும் இதே போன்ற முடி அணிகளைப் பார்கலாம். இதற்கு சில ஆண்டுகளுக்கு பின்னர் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் முன் மண்டபம் கட்டப்பட்டது. அங்குள்ள சற்பங்களில் ஒன்றுதான் இங்கு காணப்படுவது. இது போல் ஸ்ரீவில்லிப்புத்தூர், கிருஷ்ணாபுரம் முதலிய பல ஊர்களிலும் காணலாம். இது போன்ற அணிகள் தமிழ்நாட்டில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக வழங்கியிள்ளன என்பது வெளிப்படை. இதற்கு முன்னர் அதாவது 800 ஆண்டுகளுக்கும் முன்னர் அதாவது 13ம் நூற்றாண்டில் சென்னைக்கு அருகில் திருவொற்றியூரில் உள்ள கோயிலில் பாண்டிய மன்னன் கட்டிய மண்டபம் ஒன்று உள்ளது. அம் மண்டபத் தூண் ஒன்றில் இதுபோல் விரிந்த மகுடம் புனைந்த நாட்டியம்புரியும் ஒருவர் காணப்படுகிறார். முகத்தில் தாடி உள்ளது. ஆடை கதகளி ஆடைபோல் உள்ளது பக்கத்தில் ஒருவர் மத்தளம் வாசிக்கிறார். 13ம் நூற்றாண்டிலேயே இந்த மரபு இருந்தது என இதனால் அறிய முடிகிறது.

28.2. வாசிகை

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் சாந்திக்கூத்து என ஒருவகைக் கூத்தைக் குறிக்குமிடத்து ஒரு பாடலை மேற்கோள் காட்டுகிறார். வாசிகை பூண்டு மணித்தோடணந்து பூசிய சுண்ணம் முகத்தெழுதி தேசுடனே ஏந்து சுடர் வாள் பிடித்திட் டீசனுக்கும் காளிக்கும் சாந்திக் கூத்தாடத் தகும் என்பது அந்தப் பாடல். இதில் தலையில் அணியும் வட்ட முடியை “வாசிகை” என்றும், முகத்தில் வண்ணப் பொடிகள் பூசிக் கொள்ளும் மரபு உண்டு என்பதையும், வாள்பிடித்து சாந்திக்கூத்தர் ஆடுவர் என்றும் அறியலாம்.

28.3. பண்பட்ட நாட்டிய வகை

தமிழநாட்டில் தெருகூத்தாடுபவர்கள் இன்றும் கையில் மரத்தாலான வாள் வைத்து ஆடுவதைக் காணலாம். ஆதலின் அடியார்க்கு நல்லவர் காலத்திலேயே இது இருந்தது என்பது தெளிவாகிறது. இக்காலத்தில் நம் தெருக்கூத்தை கிராமிய நடனம் (folk dance) என்று அழைக்கிறார்கள். ஆனால் கதகளியை (classical dance) உயர்வகை கூத்து என்கின்றனர். நமது தெருக்கூத்து ஆயிரம் ஆண்டுக்ளுக்கும் முன்னர் சாந்திக்கூத்து என்று அழைக்கப்பட்டது. சாந்திக்கூத்து மிகவும் உயர்ந்த பண்பட்ட நாட்டிய வகையாகும். கேரளத்திலோ, தமிழ்நாட்டிலோ, கர்நாடகத்திலோ 12ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிற்பங்களில் மிகவும் பெரிய வாசிகைகள் முடிகள் காணப்படவில்லை. தெய்வ சிற்பங்களில் குறிப்பாக உத்ஸவ விக்ரஹஙகளில் கிரீடத்துக்குப் பின் ஜடவில்லைபோல் ஓர் அணி காணப்படும். இதை “சிரஸ் சக்கரம்” என்று கூறுவர். இது சூரியன் போல் ஒளியை உணர்த்தும் சின்னமாகும். ஜடைபில்லையும் இவ்வடிவில் தான் இருக்கும். இது கர்நாடகத்தில் மிகவும் பெரியதாக நுணுக்கமான வேலைப்பாடுடையதாக 12ம் நூற்றாண்டு முதல், குறிப்பாக போசளர் கலையில் காணப்படுகிறது. கேரள தேசக்கலை போசளர் கலையைப் பின்பற்றி வளர்ந்தது என்பதில் ஐயமில்லை. கர்நாடக சாம்ராஜ்ய அரசர்களான விஜயநகர அரசர்கள் தென்னிந்தியா முழுவதையும் ஒருகுடைக்கீழ் ஆண்டதால் எங்கும் அவர்களது சிற்பங்களில் இந்த மரபை அதிகம் காணமுடிகிறது.

28.4. நாட்டியமாட நிலம்

இராஜராஜ சோழன் காலத்தில் அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவிடைமருதூரில் நாட்டியம் ஆட நிலம் கொடுக்கப்பட்டது. இதைக் குறிக்கும் கல்வெட்டு முகத்தில் வண்ணம் பூசிக்கொள்ள மஞ்சள்பொடி மாவு முதலியன கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. நாட்டியம் ஆட முகத்தில் வண்ணம் பூசிக்கொள்ளுதல் விரிந்த வாசிகைப பூணுதல் ஆகிய மரபு தமிழ்நாட்டிலும் எறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது என்று இலக்கியமும் சிற்பங்களும் சான்று பகர்கின்றன. இதன் அடிப்படையில் தான் தெருக்கூத்து, யக்ஷகானம், கதகளி முதலிய நாட்டிய வகைகளை அறிந்து கொள்ளல் வேண்டும்.
அத்தியாயம் 27 | Contents | அத்தியாயம் 29 | Home