29. தெருக்கூத்து

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 28 | Contents | அத்தியாயம் 30 | Home

பங்குனி, சித்திரை மாதங்கள் பல வகைகளில் சிறப்பாக உள்ளன. குறிப்பாக கிராமத்தில் வாழும் மக்கள் சற்று ஓய்வாக இருப்பர். வானவெளி தூய்மையாக இருக்கும் காலம் வெயிலின் கடுமையால் வீடுகளின் உள்ளே கிடந்து புழுங்குவதை விட இரவு நேரங்களில் வெளியிலே காற்றாட அமர்ந்து களிக்கும் காலம். இந்த சூழ்நிலையில் கண்ணுக்கும் காதுக்கும் கருத்துக்கும் இனிமையாக நடத்தப்படுவதே தெருக் கூத்துக்களாகும். பல ஊர்களில் இக்கோடை காலத்தில் தெருக்கூத்துகள் இரவு முழுவதும் நடக்கின்றன. ஒரு நாள் அல்ல. பல நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதும் உண்டு. இதை ஊர் ஜனங்கள் மிகவும் ரசித்து வரவேற்கிறார்கள். வசதியாக உட்கார்ந்து கொண்டு காலை நீட்டிக் கொண்டு அல்லது படுத்துக் கொண்டு ஏன் தூங்கிக் கொண்டே கூட பார்க்கலாம். தூக்கம் எல்லோரையும் பிடித்துவிடும் போலிருந்தால் கூத்தர் தூக்கத்தை விரட்டுவது போல பலத்த சத்தத்துடன் தாளம் முழங்க மண்டலித்து ஆடி அனைவரையும் திடுக்கென்று எழுந்திருக்கச் செய்து வருவார். இதெல்லாமிருக்க ஏதோ பொழுது போக்குக்கு தெருக்கூத்து நடைபெறுகிறது என்று மக்கள் நினைப்பதில்லை. அதை தெய்வத்துக்கோ தம் மூதாதையருக்கோ எடுக்கும் விழாக்களில் நடைபெறும் ஒரு சாந்தியாக கருதுகிறார்கள். ஒரு காலத்தில் தெருக்கூத்து நடைபெறாத ஊர் இல்லை. ஆனால் இப்பொழுது இக்கூத்து ஒரு சில பகுதிகளிலேயே நடைபெறுகிறது. இதில் வல்லமை பெற்றவர்களும் மிகவும் குறைந்து விட்டார்கள். ஒருகாலத்தில் மிகவும் சிறப்பாக இருந்த இந்த கலையின் வரலாறு தான் என்ன? வெட்ட வெளியிலே காற்றோட்டமாக எல்லோரும் பார்க்கும் வகையில் மேடைகளை அமைத்து தெருக்களில் நடத்துவதால் இதை “தெருக்கூத்து” என்கிறார்கள். இது மிகவும் தொன்மையான கலை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் நிலவி வரும் கலை. ஆடல், கூத்து, நடம், நாடகம் என்று இதை பல பெயர்களால் பண்டைய மக்கள் அழைத்தார்கள். தமிழகத்தில் மலர்ந்த தேவாரப் பாடல்களில் நாடகமும், நாட்டியமும் புரியும் இடங்களை வீதியரங்கம், ஆடரங்கம், அம்பலம், ஆடகசாலை என்று குறிக்கின்றனர். இப்பொழுது தெருக்கூத்துக்களில் ஆண்கள் மட்டும் ஆடுகிறார்கள். முற்காலத்தில் பெண்களும் ஆடியிருக்கிறார்கள். “வீதித் தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே” என்கிறது தேவாரம். மாதர்பாணி, வரி குதிரை, அம்மானை என்பவை கூத்துகளில் பல வகை. கூத்துக்களை சாந்திக்கூத்து என்றும், விநோதக்கூத்து என்றும் பொதுவாக இருவகையாக பிரித்திருக்கிறார்கள். இதில் கதையைத் தழுவிவரும் நாடகம் என்பதும் சாந்திக்கூத்து என்பதன் பகுதியாகும். ஆதலின் இன்று தெருக்கூத்து என்று கூறுவது முற்காலத்தில் சாந்திக்கூத்து என்று பெயர் பெற்றிருந்தது. விழாக்காலத்தில் சாந்தியாக தெருக்கூத்து ஆடப்படுகிறது என்று முன்னரே கண்டோம். சித்திரை மாதம் கிராம தேவதைகளின் கோயில்களில் இவை நடைபெறுகின்றன. சிறப்பாக திரெளபதி அம்மன் கோயிலில் இதை விரும்பி நடத்துகின்றனர். பகல் நேரங்களில் மகாபாரதம் வாசிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பாரதக் கதைகளில் திரெளபதி சபதம், கர்ணன் மோக்ஷம், அரவான் கதை போன்றவை நடைபெறுகின்றன. சில ஊர்களில் மகாபாரதக்கூத்து 18 நாட்கள் நடைபெறுகின்றன. இறுதி நாள் விழாவில் துரியோதனன் வதமும், பாஞ்சாலி தனது கூந்தலை முடித்தலும் அப்படியே நடைபெறுவது போல் இடம் பெறுகின்றன. சுமார் 50 அடி நீளத்துக்கு மேல் துரியோதனன் உருவம் மண்ணால் பூமியில் கிடப்பது போல் செய்யப்படுகிறது. அதன் தொடையில் சிறிய குவளையில் கோழியின் இரத்தமும் பிறபொருள்களும் வைக்கப்படுகின்றன. பீமன் வேடம் போட்டு ஆடுபவரும், துரியோதனன் வேடம் போட்டவரும் ஆடல் பாடலுடன் அவ்வுருவத்தின் அருகில் வந்து சண்டை போடுவது போல் நடிப்பர். இறுதியில் துரியோதனன் விழுவது போல் நடித்தும், பீமன் வேடம் போட்டுக் கொண்டவர் கதையால் இரத்தக் குவளையை ஓங்கி அடித்து உடைப்பார். துரியோதனன் வீழ்ந்ததும் அராஜகம் அழிந்தது, திரெளபதி குளிர்ந்தாள், நிலம் குளிர்ந்தது, வளம் செழிக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆதலால் தான் இதை சாந்தியாக கருதுகிறார்கள். இது போல் தெய்வ விழாக்களில் மட்டுமின்றி தம் வீடுகளில் காதுகுத்துதல், குலதெய்வ பூஜை முதலிவற்றிற்கும் ஒருநாள் கூத்து நடத்துவது உண்டு. வீடுகளில் பெரியவர் யாராவது இறந்துவிட்டால் எட்டாம் நாள் இரவு தெருக்கூத்து நடத்துகிறார்கள். முக்கியமாக கர்ணன் மோக்ஷம் கூத்தாக நடத்துகிறார்கள். கர்ணன் எவ்வாறு மிகச்சிறந்த மோக்ஷம் அடைந்தானோ அதுபோல இறந்தவரும் மோக்ஷம் அடைந்தார் என கூத்தர் கூறி முடிப்பார். இதுபோன்ற நம்பிக்கைகளில் ஆடுபவர் வேறு பார்ப்பவர் வேறு என்று இல்லாமல் இருவருக்கும் ஒரு நெருங்கிய ஒருமை உணர்வு கூத்துக்களில் தென்படுகிறது. தெருக்கூத்து ஆடுவது என்பது ஏதோ எளிமையான செயல் என எண்ணக்கூடாது. பரதநாட்டியத்தில் கால் அடைவுகள், சுற்றுதல் மண்டலங்கள் முதலியன பாட்டுக்கும் தாளத்துக்கும் ஏற்ப எப்படி ஆடப்படுகிறதோ அவ்வளவும் கற்றிருக்க வேண்டும். அதே போன்று கை முத்திரைகள், கழுத்து அசைவுகள், பார்வைகள் எல்லாம் நாட்டிய சாத்திரத்தில் உள்ளபடியே கற்றிருக்க வேண்டும். கூத்தாடுபவர் பலராகங்களில் நன்கு பாடவல்லவராகவும் “மைக்” இல்லாத ஊர்களில் உரக்க வசனம் பேசத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நாட்டிய பயிற்சி நன்கு கற்றிருக்க வேண்டும். தெருக்கூத்துகளில் மத்தளம், குழல், முகவீணை, ஆர்மோனியம், கஞ்சிரா, கைத்தாளம் முதலியன இசைக்கப்படுகின்றன. பாடுபவரும் வாத்யம் வாசிப்பவர்களும் மேடையில் சற்று உயர்ந்த பெஞ்சிகளில் பின்னால் அமர்ந்து பாடுவர். பின்பாட்டு பாடுபவர் நாடகம் நடிப்பவருடன் பாடவும் இடை இடையே வாங்கிப் பாடுபவராகவும் விளங்குகிறார். பெரும் பாலும் தெருக்கூத்து நாடகங்கள் உயர்ந்த இலக்கியங்களும் எளிய மக்கள் பேசும் கொச்சை பேச்சு மொழியும் இணைந்த ஓர்வகை உன்னத படைப்பு. உதாரணமாக பாரதக் கதைகளில் பெரும்பாலும் வில்லிபுத்தூரார் எழுதியுள்ள மகாபாரதப் பாடல்கள் பெரிதும் இடம் பெறுகின்றன. இடை இடையே கொச்சை மொழியில் வசனங்களும் உண்டு. திரு விருத்தம், கண்டார்த்தம், வசனம் என்ற பகுதிகள் இவற்றில் முக்கிய இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் மேடையில் தோன்றும் போது ஒரு திரையை முன்னே பிடித்து ஆடுபவர் அதன் பின் ஆடி வருகிறார். அதை “திரை வருதல்” என்கிறார்கள். முதலில் கைமுத்திரைகள், பின்னர் கால் அடிகள், பின்னர் முகம், அதன் பின்னரே முழு உருவமும் காட்டுவது மரபு. இதனால் பார்ப்பவர்களுக்கு ஆடுபவரைப் பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகும். அவர் வெளிப்படுவதை “ரூபம்” என்கிறார்கள். அரச வேஷமாக இருந்தால் அதை “கம்பீர ரூபம்” என்றும் பெண் உருவமாக இருந்தால் “சிருங்கார ரூபம்” என்றும் கூறுகிறார்கள். தெருக்கூத்தில் கோமாளி உண்டு. கூத்தாடுபவர் சில சமயங்களில் உயர்ந்த இலக்கியங்களை பேசுவார். அதை ஜனங்களுக்கு தெரியும் வகையில் கோமாளியாக வருபவர் கொச்சை மொழியில் சொல்லுவார். சில இடங்களில் ஒரு சொல்லுக்கு பலபொருள்களும், ஒருபொருளுக்கு பல சொற்களும் கூறப்படும். எடுத்துக்காட்டாக கூத்தர் சூரியன் என்ற பொருளில் எத்தனை சொற்கள் உண்டோ அத்தனையும் கூறுவார். கோமாளி அதை எளிமையாக மக்களுக்கு எடுத்துச் சொல்லுவார். இது திவாகரம் முதலிய நிகண்டுகளில் உள்ளது. இலக்கியத்தைப் போல இவ்வாறு தெருக்கூத்தாடுவோர் இலக்கணங்களையும் மக்களுக்கு எடுத்து அள்ளி வீசுவர். ஆதலின் மிகச் சிறந்த படிப்பும், புலமையும், இசை வல்லமையும், நாட்டியமும், நகைச்சுவை மிகுதியும் பெற்றவரே தெருக்கூத்தராக இயலும். இது போல் தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்கூத்து ஆடும் பெரியோர் இருந்தனர். பெரும்பாலும் இவர்கள் விவசாயத் தொழில் புரிந்துவருவர். விழாக் காலங்களில் ஏற்ற வேடம் தரித்து இவர்கள் ஆடுவர். ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் தல வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கூத்தாட ஏற்றவிதமாக அந்தந்த ஊரில் வாழ்ந்த “தமிழ் ஐயா” க்கள் நாடகங்களை எழுதியுள்ளனர். இந்நாடகங்கள் எழுதியதற்காக அவர்களுக்கு ஊரார் நிலம் நெல் முதலியன கொடுத்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் இவ்வாறு இசையும் கூத்தும் திகழ்ந்த நாடு தமிழ்நாடு. கேரளாவில் கதகளியாட்டத்தில் எவ்வாறு முகத்துக்கு வண்ணம் பூசிக் கொள்கிறார்களோ அதேபோல் தெருக்கூத்திலும் முகத்துக்கு வண்ணம் பூசிக் கொள்கிறார்கள். நாடகத்தில் வரும் பாத்திரத்துக்கு ஏற்ப இவ்வண்ணங்கள் உள்ளன. இந்த வண்ணங்களைக் கூத்தாடுபவரே பூசிக் கொள்கிறார். சுருக்கமாகச் சொன்னால் கூத்தாடுபவரே தமக்கு “மேக்அப்” செய்து கொள்கிறார். முடி, மார்பு, தோள் பகுதிகளுக்கு மிகவும் வேலைப்பாடு செய்யப்பட்ட பலவித அணிகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இவ்வணிகள் மரத்தால் செய்யப்பட்டு கலர்க் கண்ணாடி புதைத்து பளபள என்று இருக்கும். இவைகளைச் செய்யும் கலைஞர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்வரை ஆங்காங்கே இருந்தார்கள். அந்தந்த ஊர்களில் இருந்த தச்சர்கள் இவற்றை செய்வது உண்டு. ஆனால் இவை செய்யும் கலை பெரும்பாலும் மறைந்தே போய்விட்டது. இப்பொழுது ஒரு ஊரிலிருந்து வாடகைக்கு வாங்கி கொள்கிறார்கள். இந்த முடிகளும் அணிகளும் கேரளாவில் உள்ள கதகளி கூடியாட்டக்காரர் உபயோகப்படுத்தும் அணிகள் போலவும் உள்ளன. இவை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றன. முடியை வாசிகை என்பார்கள். “வாசிகை பூண்டு மணித்தோடணி அணிந்து பூசிய சுண்ணம் முகத்து எழுதி” என ஒரு பழம் பாடல் உள்ளது. 290-400 ஆண்டுகளுக்கு முன் கோயில்களில் நடந்த கூத்துக்களில் இவை வழக்கில் இருந்தன. அங்குள்ள சிற்பங்களில் இவ்வாறு “வாசிகை” கள் உள்ளன. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் இவ்வாறுள்ள சிற்பங்கள் உள்ளன. இந்த தெருக்கூத்துக்களில் எவ்வாறு ஆண்கள் ஆடுகிறார்களோ அதுபோல பெண்கள் பெரும்பாலும் ஆடும் “குறவஞ்சி” கூத்துக்களும் தெருக்கூத்து வகையைச் சேர்ந்தவையே. தெருக்கூத்துக்களைப் போலவே குறவஞ்சிகளையும் “நாடகம்” என்றே அழைத்தனர். அவற்றிலும் தரு விருத்தம் கண்டார்த்தம் என்னும் அகவல் வசனம் முதலிய உள்ளன. உயர் இலக்கியமும், கொச்சை மொழியும் இவற்றில் வருவது காணலாம். உதாரணமாக ஒரு குறவஞ்சி நாடகத்தில் “அகோ வாரும் பெண்ணே குறவஞ்சி மோகினியே நீ சொன்ன நதிச் சிறப்புக் கேட்டு மகாசந் தோஷமாச்சுது. நீ யார் யாருக்கு குறி சொன்னாய் சொல்லடி குறத்தி". "அம்மம்மா, அம்மம்மா, எங்க அம்மா, நான் இதுவரை குறி சொன்னவர்களை சொல் என்றல்லோ கேட்கின்றாய் ஆனால் சொல்கிறேன் கேளடியம்மே” என்று வருகிறது. தெலுங்கு மொழி பேசும் நாயக்கர்களும், மராத்தி பேசுவோர்கலும் தமிழ் நாட்டுக்கு வந்து ஆட்சி செய்ய தொடங்கிய போது விநோதமாக அந்த மொழிகளும் நாடகங்களின் இடையில் சேர்ந்தன. 200 வருஷங்களுக்கு முந்திய ஒரு குறவஞ்சி நாடகத்தில் “மிக்க மந்திரவாதி மெய்குறி சொல்வாள் நீதி திக்கெங்கும் பிரக்யாதி தேன்மொழிச்சேதி சக்கனன் குருவாதி சரசபு பலகுவாதி எக்கு மிஞ்சின வாதி எந்தெந்தோ குலுகுலாதி” என்று உள்ளது. முதல் இரண்டு அடிகள் தமிழிலும் பின் இரண்டு அடிகள் தெலுங்கிலும் உள்ளன. இதுபோல் தெருக்கூத்துக்காரர்கள் தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடம், ஹிந்துஸ்தானி என்று ஐந்து மொழிகளைக் கூட பயன்படுத்தி மக்களை மகிழ்வித்திருக்கிறார்கள். தெருக்கூத்துக்களில் பெரும்பாலும் புராணக்கதைகள் நடிக்கப்படுகிறது என்று பார்த்தோம். அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளின் அடிப்படையிலும் கூத்துகள் இருந்தன. சுமார் 200 வருஷங்களுக்கு முன் சிதம்பரம் சீமையில் “சிவசிதம்பரம்” என்ற ஒரு “சுபையதார்” இருந்தார். அவர் மிகவும் நயவஞ்சகர். மக்களிடம் கொடுமையாக வரிவசூலித்தார். அதை தெருக்கூத்து நாடகமாக தில்லை விடங்கன் மாரிமுத்துபிள்ளை என்பவர் பாடி இருக்கிறார். இது அக்காலத்தில் சிதம்பரம் பகுதியில் கூத்தாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் தெருக்கூத்துக்கள் மிகவும் நடந்து வந்ததால் கலைஞர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தனர். அக்கலைஞர்களுக்கு தமிழ்நாடு ஆதரவு தந்தது. அவ்வாறு வந்தவர்கள் தஞ்சாவூர் சீமையில் மெலட்டூர் முதலிய கிராமங்களில் தங்கி நாடகங்கள் நடத்தினர். இவை “பாகவதமேளா” என்ற பெயரில் நடைபெற்றது. இன்றும் இவை தெருக்களில் நடைபெறும் கூத்துக்களாகவே உள்ளதைப் பார்க்கலாம். இப்பொழுது குச்சிபுடி என்று புகழ்பெற்று வரும் நாட்டியங்களும் இவ்வாறு வளர்ந்த தெருக்கூத்துக்கள்தாம். ஆந்திராவில் இவற்றை “வீதி நாடகம்” என்கிறார்கள். கர்னாடகத்தில் “யக்ஷகானம்” என்பது தெருக்கூத்தே. “கூடியாட்டம்” என்றும் “கதகளி” என்றும் கேரளாவில் கூறும் ஆட்டங்கள் தெருக்கூத்துக்களே. மக்களுக்கு எளிமையாகவும், சுவையாகவும் பாட்டும், வசனமும், ஆடலும் நிறைந்த இக்கூத்துக்கள் செய்து வரும் தொண்டு பெரும் தொண்டு.
அத்தியாயம் 28 | Contents | அத்தியாயம் 30 | Home