30. தமிழ் நாட்டியம்

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 29 | Contents | அத்தியாயம் 31 | Home

பரதநாட்டியம் என்று அழைக்கப்பெரும் நாட்டிய மரபு தமிழ் நாட்டில் வழங்கும் நாட்டியம் என உலகு முழுவதும் இன்று போற்றப்படுகிறது. இம்மரபு சுமார் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வளர்ந்து மலர்ந்துள்ளது எனத் திட்டவட்டமாக கூறலாம். குறிப்பாக சொல்லப்போனால் பரத முனவர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் நாட்டியம் சிறந்த கலையாகப் பரிணமித்திருந்தது எனப் பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்தே அறிகிறோம். தென்னாட்டவர்கள் தமது நாட்டியத்தில் லலிதமாகவும், இனிமையாகவும், அங்க அபிநயங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களது நாட்டியத்தில் நிருத்தமும் (அபிநயமில்லாது ஆடல் புரிவது), கீதமும் அதிகம் காணப்படும். இன்பச் சுவையும், சிருங்காரமும் அவர்களது ஆடலில் அதிகம் காணப்படுகிறது என்று தக்ஷிணாத்யாஸ் தாவத் பஹு நிருத்தகீத வாத்யா: கைசிகீ பிராயா: சதுர மதுர லலித அங்காபி நயாஸ்ச என்று பரதமுனிவர் கூறுகிறார். இன்று பரத நாட்டியத்தில் நிருத்தம் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம். மேலும் தென்னாட்டினர் அரங்கில் ஆட நுழையும் போது வலப்புறத்திலிருந்து வருவதை மரபாகக் கொண்டுள்ளனர் என்கிறார் பரதர். அவர்களது சொற்களில் “ன” காரம் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார். இதிலிருந்து பரதர் நாட்டிய சாஸ்திரம் இயற்றுவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் நாட்டியம் தனித்த மரபு கொண்டு வளர்ந்திருந்தது என்று விளங்குகிறது.

30.1. மார்க்கி - தேசி

பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஓர் ஈடிணையற்ற நாட்டிய இலக்கண நூலாக மலர்ந்தது. அது தோன்றிய பின்னர் அந்நூலில் உள்ள கருத்துக்களும் மரபுகளும் ஆடல் பாணிகளும் தமிழ் நாட்டியத்தைப் பெரிதும் வளம் படுத்தின. பரதர் மரபை மார்க்கி என்றும் அந்தந்தப் பகுதிகளிலே மலர்ந்த ஆடல்களைத் தேசி என்று அழைக்கும் மரபு வளர்ந்தது. ஆதலின் தமிழ் நாட்டியத்தை, தேசி நாட்டியம் என்றும் கூறுவர். தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாட்டியத்தைப் பற்றிய அரிய செய்திகள் அரங்கேற்றக் காதையிலும் பிற இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. அரசன் வீற்றிருந்த நாட்டிய அரங்கில் ஆடிய மாதவி முதலில் தேசி நாட்டியத்தை ஆடி பிறகு மார்க்கி நாட்டியத்தை ஆடினாள் என்று காண்கிறோம். எந்த மொழி பேசும் பகுதியில் நாட்டியம் ஆடுகிறார்களோ அப்பகுதி மக்கள் புரிந்து கொள்ளும் மொழியையும், நாட்டியத்தையும் முதலில் ஆடி பிறகு அனைத்திந்திய நாட்டியத்தை ஆடினர் என்பது இதனால் புலனாகிறது. நாட்டிய ஆசானுக்கும், ஆடுவோர்க்கும், இசை வாத்தியம் வாசிப்போருக்கும், தமிழ் மொழியும் மரபும் தெரிந்திருக்க வேண்டும் அத்துடன் சம்ஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம்.

30.2. தமிழில் நாட்டிய நூல்கள்

தமிழ்நாட்டில் எராளமான நாட்டிய நூல்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டன. தொல்காப்பியக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் நாட்டிய நூல்கள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உண்டு. நாட்டியத்தைக் குறிக்கும் சயந்த நூல், குணநூல், பரதசேனாபதியம், பஞ்சமரபு, செயிற்றியம், முதலிய நூல்கள் தமிழிலிருந்தன. சோழர் காலத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் மறைந்து போயின. கி.பி. 13ம் நூற்றாண்டில் “சங்கீத ரத்னாகரம்” என்ற நூல் சம்ஸ்கிருத மொழியில் சாரங்க தேவரால் இயற்றப் பட்டது. நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட “அபிநய தர்ப்பணம்” என்ற நூலும் தமிழ்மொழியில் 300 ஆண்டுகளுக்கு முன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அபிநய தர்பணம் என்னும் நூலை வீரராகவய்யன் என்பவர் தமிழ்ப்படுத்தியுள்ளார். சங்கீத ரத்னாகரத்தின் மொழிபெயர்ப்புகள் பல தமிழில் இருந்துள்ளன எனத் தெரிகிறது. இதில் ஒன்று டாக்டர் உ.வே. சாமிநாதைய்யரால் சேகரிக்கப்பட்டது. மஹாபரத சூளாமணி என்ற பெயரில் இந்த நூலும், அபிநய தர்பணமும் உ.வே.சா நூலகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இவ்விரு நூல்களில் இருந்தும் தமிழும், சம்ஸ்கிருதமும் ஒன்றோடொன்று இணைந்தே நமது நாட்டியக் கலையை வளர்த்துள்ளன என்று தெரிய வருகிறது. இவ்விரு நூல்களையும் பின்பற்றிய பல நட்டுவனார்கள் தமிழ்நாட்டில் பரத நாட்டியத்தைப் போதித்து வந்துள்ளனர். இன்று பரத நாட்டியம் என்று வழங்கும் மரபு தமிழ் நாட்டியமும், பரதர் நாட்டியமும் தமது தனித்தண்மை இழக்காது ஆனால் ஒன்றால் ஒன்று வளம் பெற்று சாரங்கத் தேவர் மரபையும் பின்பற்றி வந்துள்ள கலையே என்பதில் ஐயமில்லை.
அத்தியாயம் 29 | Contents | அத்தியாயம் 31 | Home