31. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நாட்டியங்கள்

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 30 | Contents | அத்தியாயம் 32 | Home

இந்திய நாட்டில் நாட்டியக் கலையின் இலக்கணங்களை வகுத்துக் கூறும் பண்டைய பெரும் நூல் பரதரது நாட்டிய சாஸ்திரமாகும். இந்நூல் எக்காலத்தில் இயற்றப்பட்டது என்பது குறித்து கருத்து வேறுபாடு உண்டு. கிறிஸ்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்துவுக்குப் பின்னர் 2ம் நூற்றாண்டு வரையில் பல்வேறு காலங்களை இந்நூலுக்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் இது இயற்றப்பட்டதெனில் அதே காலத்தில் தமிழில் மிகச் சிறந்த பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை சங்க இலக்கியம் என்று கூறுகிறோம். சுமார் 2300 பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியம் பத்துப்பாட்டு என்றும், எட்டுத் தொகை என்றும் இரண்டு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே பாடுவதற்கும் ஆடுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரப் பிரபந்தங்களை அரையர் என்போர் இன்றும் பாடி அபிநயித்து வருகிறார்கள். இது போல் தேவார, திருவாசக பதிகங்களும் நாட்டியமாக ஆடப்பட்டுள்ளன. இந்த மரபை பார்க்கும் போது பரதரது நாட்டிய சாஸ்திரம் இயற்றப்பட்ட அதே காலத்தில் சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்துமே நாட்டியமாக தமிழ் நாட்டில் ஆடப்பட்டன எனில் மிகையாகாது. சங்க இலக்கியங்களில் பத்து பாட்டு போன்ற பாடல்கள் மிகவும் நீளமானவை. பாரிபாடல் போன்றவை நடுத்தரமானவை. அகநானூறு, ஐங்குறுநூறு போன்றவை மிகவும் சிறியவை. ஆயினும் இவைகள் அனைத்துமே நாட்டியத்திற்கு பயன்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தெருக்கூத்து என்ற பண்டைய நாட்டிய முறை இன்றும் வழக்கில் உள்ளது. தெருக்கூத்தில் ஒரே கதை பல இரவுகளில் நடிக்கப் படுதல் உண்டு. அது போல சங்க கால பத்து பாடல்களும் பல இரவுகளில் நடிக்கப்பட்டு இருத்தல் கூடும். மேலும் தெருக்கூத்து ஆட்டத்தில் வெறும் பாடலாக சில பகுதியும் உள்ளன. அது போல சங்க இலக்கியத்தில் காணப்படும் பாடல்களில் சில இசைப்பதற்கும், அபிநயிப்பதற்கும் சில வாசகங்களாக நடிப்பதற்கும் பயன்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் 2300 பாடல்களில் 80 சதவீதத்திற்கு மேல் (அதாவது 1800 பாடல்கள்) சிருங்காரச்சுவையை அடிப்படையாகக் கொண்டவை. சிருங்காரத்தை இன்பம் என்றும் “அகம்” என்றும் கூறுவர். ஆதலின் இவை நடிப்பதற்கு மிகவும் சிறந்தவையாக கருதப்பட்டன. ஒரு வாழ்கின்ற வரலாற்றுத் தலைவனுடைய சிருங்காரத்தை வெளிப்படுத்தி ஆடினால் அவனது வாழ்நாளில் மட்டும் அது சிறப்புடையதாக காணப்படும். அவன் மறைந்த பிறகு பிறர் பார்த்து ரசிக்கக் கூடியதாக அது அமையாது. ஆதலின் கற்பனைப் பாத்திரமாகவோ அல்லது தெய்வ நாயகர்களாகவோ இருந்தாலே அனைவரும் பார்த்து ரசிக்க இயலும். இந்த உண்மையை நன்கு அறிந்த சங்கச் சான்றோர்கள் தாம் இயற்றும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வருவோராலும் ஆடவும் சுவைக்கும் வகையிலும் இயற்றியுள்ளனர். ஆதலால் தான் அகத்துறை பாடல்களில் தலைவனது பெயரையோ தலைவியினது பெயரையோ குறிக்கக் கூடாது என்பது இலக்கணம். ஆதலால் 2000 ஆண்டுகளாக இப்பாடல்கள் அழகிய இலக்கியங்களாக வாழ்ந்து வந்துள்ளன. சங்க இலக்கியங்களில் குறிப்பாக கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு தொகுதிகளையும் குறித்தல் வேண்டும். கலித் தொகையில் 150 பாடல்கள் உள்ளன. இவை அனைத்துமே சிருங்காரச் சுவையை முக்கியமாகக் கொண்டவை. கலி என்பது ஆடலின் ஒரு வகையாகும். இது முக்கியமாக துள்ளல் ஓசையை சிறப்பாகக் கொண்டது. “துள்ளல் ஓசை கலி என மொழிப” என்பார் தொல்காப்பியர். ஆதலின் துள்ளல் என்பது நாட்டியத்தை குறிக்கும். இன்றும் கேரளத்தில் ஒட்டந்துள்ளல் என்று ஒரு வகை நாட்டியத்தை கூறுகிறார்கள். கலி என்பதும் நாட்டியக் கூறு ஆகும். ஆதலின் கலித்தொகை பாடல்கள் அனைத்தும் சங்க காலத்தில் நாட்டியத்திற்காக எழுதப்பட்டவை எனலாம். இன்று கர்நாடக இசையில் பாடல்களுக்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று ஒரு இலக்கணம் உள்ளது போல் சங்க காலத்தில் கலிப் பாடல்கள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற 4 பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். பாடல்கள் விரிவாகும்போது கொச்சகம், அம்போதரங்கம் என்ற பகுதிகளும் சேர்த்துக் கொள்ளப் படும். அவ்வாறு அமைக்கப்பட்ட 150 பாடல்களையும் தொகுத்து கலித்தொகை என்று அமைத்துள்ளனர். இதற்கு கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் சிவபெருமானின் தாண்டவங்களை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. கொடுகொட்டி, பண்டரங்கம், காபாலம் என்ற மூன்று ரெளத்தர தாண்டவங்களும் இக்கடவுள் வாழ்த்தில் இடம் பெறுகின்றன. இவை ரெளத்ரச் சுவையை எடுத்து உரைத்த போதிலும் சிருங்காரச் சுவையே அடிப்படையாக இப்பாடலில் காண்கிறோம். உமை அருகில் அமர்ந்து பாணி, தூக்கு, சீர், என்று தாளம் இட்டு சிவபெருமானை அன்போடு பார்ப்பதாக இன்பச்சுவை மேலோங்க எழுதப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பகுதிகளாக திணைகளாக கலித்தொகை பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம், அங்கு வாழும் மக்கள், விலங்குகள், பறவைகள், பூக்கள் முதலியன பாடலிலே இடம்பெற்று அவை சிருங்காரச் சுவையை போதிப்பவையாக இயற்றப்பட்டுள்ளன. ஆதலின் குறவர்கள், வேடர்கள், உழவர்கள், மீனவர்கள் ஆகிய நாட்டுப்புற ஆடல்களையும் நாட்டியத்தில் கொண்டு வர இயலும். ஆதலின் கலித்தொகை பாடல்கள் புதிய புதிய கருத்துக்களில் அமைப்புக்களில் சிருங்காரச் சுவையை வெளிப்படுத்தி நாட்டியத்திற்கும் ஏற்ற மிக உயர்ந்த பாடல்களாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்கள் பெரும்பாலும் அரசர்களுடைய வெற்றி தோல்விகளையும், புற ஒழுக்கத்தையும் எடுத்துரைக்கும் பாடல்கள் ஆகும். இவற்றில் ஐந்து பாடல்கள் “குறுங்கலி” என்ற பெயரில் உள்ளன. வையாவிக்கோ பெரும்பேகன் என்ற வள்ளல் இளமையும் அழகும் நிறைந்த தன் மனைவியாம் கண்ணகியை துறந்து வேறு ஒருத்தியிடம் செல்கிறான். கண்ணகி பிரிவுக்கு வருந்துகிறாள். ஆதலின் புலவர்கள் பேகனை கண்ணகியின் துயரைப் போக்க கேட்கின்றனர். இப்பாடல்கள் சிருங்காரச் சுவையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. பிரிவினால் ஏற்படும் சிருங்காரத்தை “விப்ரலம்ப சிருங்காரம்” என்பர். அந்த அடிப்படையில் இவ்வைந்து பாடல்களும் அமைந்துள்ளன. இவற்றை நான்கு பெரும் புலவர்களான கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடி உள்ளனர். இவையும் நாட்டியத்திற்காக மிக அழகாக பயன்பட்டிருக்க வேண்டும். புறநானூற்றில் வரும் பேகன் கண்ணகயின் கதை பின்னர் சிலப்பதிகாரமாக மலர்ந்தது என்பர் சிலர். பரிபாடல் என்ற பாடல் வகையும் சிருங்கார சுவைக்கு முதலிடம் கொடுக்கும் என உரைகளிலிருந்து அறிகிறோம். 25 பாடல்கள் இப்போது பரிபாடல் தொகுப்பில் உள்ளன. இவற்றில் 15க்கு மேற்பட்டவை சிருங்காரச் சுவையே மேலோங்கி நிற்பவை. வைகை என்ற ஆற்றை பாடுகின்ற பாடல்கள் அனைத்துமே ஆற்றைப் பின்னணியாகக் கொண்டு சிருங்காரத்தை பாடி ஆட இயற்றப்பட்டவை. அதே போல் செவ்வேள் ஆகிய முருகனைப் பற்றிய பாடல்களும் இன்பச் சுவை மேலோங்கியவையாக இயற்றப் பட்டுள்ளதைக் காணலாம். தற்காலத்தில் சிருங்காரத்தை வெளிப்படுத்த கண்ணன் ஆய்ச்சியர் ஆகியோரை மையமாகக் கொண்டே பெரும்பாலும் ஆடுகின்றனர். ஆனால் சங்க காலத்தில் முருகனே சிருங்காரத்தின் தலைவனாகச் சித்தரிக்கப்பட்டு அவனை மையமாகக் கொண்டே இன்பச் சுவையை பாடவும் ஆடவும் பெற்றதைக் காண்கிறோம். பரிபாடல்களில் உள்ள முருகனைப் பற்றிய பாடல்களும் சிலப்பதிகாரத்து குன்றக் குரவை பாடல்களும் இதைத் தெளிவாக்குகின்றன. திருமாலோ தெய்வமாகவே சிறப்பாக போற்றப்படுகிறார். நாட்டியத்தில் இன்பச் சுவையே எல்லா மக்களாலும் கண்டு ரசிக்கக்கூடிய சுவையாகும். இப்போது நாட்டியத்திற்கு பயன்படும் பாடல்கள் பெரும்பாலும் கடந்த ஒரு 150 ஆண்டுகளுக்குள்ளாக இயற்றப்பட்ட பாடல்களாகும். பெரும்பாலான நாட்டியக் கலைஞர்கள் இந்த பாடல்களையே மீண்டும் மீண்டும் ஆடி வருகின்றனர். ஆனால் 2000 ஆண்டுகளுக்கும் முன்னர் இயற்றப்பட்ட அருமையான சுவையான தமிழ் பாடல்கள் உள்ளன. இவை இசைப்பதற்கும் ஆடுவதற்கும் இயற்றப்பட்டவை. நல்ல அழகிய இப்பாடல்கள் வாசனை மலர்கள் போல் நம்மிடத்தில் ஏராளமாக இருக்கின்றன. இப்பாடல்களைப் பயன்படுத்தி நமது மரபை கலையை வெளிப்படுத்த பெரும் வாய்ப்பு உள்ளது.
அத்தியாயம் 30 | Contents | அத்தியாயம் 32 | Home