32. எடுத்த பாடல்

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 31 | Contents | அத்தியாயம் 33 | Home

இசையோடு பாடுவதை இசைத்தல் அல்லது பாடுதல் என்று கூறுகிறோம். கர்நாடக சங்கீதம் என்றும், தமிழிசை என்றும் கூறும் பாடல்களை இசைத்தல் என்ற வினைச்சொல்லால் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். “இசைபாடி” என்பார் ஞானசம்பந்தர். 1300 ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்ந்த இப்பெருமான் தமது தேவாரப் பதிகத்தில் சில இடங்களில் “எடுத்த பாடல்” அல்லது “பாடல் எடுத்தல்” என்றும் கூறுகிறார். மேலெழுந்த வாரியாக பார்த்தால் பாடுவதைத்தான் இவ்வாறு கூறுகிறார் என்று எண்ணத் தோன்றும். ஆனால் இசைக்கலை என்பது மிகப் பெரிய சாத்திரம். கடல்போல் விரிந்தது. பல நுண்மையான பிரிவுகளை உடையது. இசைக்கலையில் பயன்பட்ட சொற்களுக்கு நுட்பமான பொருள் உண்டு. இசைச் சொற்களுக்கு தனி அகராதியே உண்டு. ஆதலின் எடுத்த பாடல் என்று சம்பந்தர் கூறும் சொல்லுக்குத் தனிப்பொருள் உண்டா என்று நூல்களை ஆராய்ந்தேன். தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்களில் தலைசிறந்த மன்னன் விஜய ரகுநாத நாயக்கன் என்பவன். சுமார் 1600லிருந்து 1630 வரை ஆண்ட இம்மன்னன் இசைக்கலையிலும், நாட்டியக்கலையிலும் சிறந்திருந்தான். பல நூல்களை இயற்றியிருக்கிறான். இவனது அவையை அலங்கரித்தவர்களில் வேங்கடமகி என்பவர் குறிக்கத் தகுந்தவர். அவர் கர்நாடக இசைக்கு இலக்கண நூல் எழுதியிருக்கிறார். 72 மேளகர்த்தா இராகங்கள் என்று வகுத்தவர் இவர்தான். இன்றைய கர்நாடக சங்கீதத்துக்கு இவரையே தந்தை என்று கூறுவர். தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் போன்ற இசைமேதைகள் எல்லாம் இவரது மரபைத்தான் பின்பற்றினார்கள். இந்த வேங்கடமகி என்பவர் 1625ல் சதுர்தண்டி பிரகாசிகை என்ற ஒரு சிறந்த இசை நூல் சமஸ்கிருத மொழியில் இயற்றியிருக்கிறார். இவருக்கு முன்னர் திகழ்ந்த மரபுகளைத் திரட்டி இந்நூலில் வகைப்படுத்தியுள்ளார். இன்றைய கர்நாடக இசைக்கு அடித்தளமான நூல் இதுவே இதில் சுருதி ஸ்வரம் ராகம் கீதம் என்றால் என்ன? அவை எவ்வளவு வகைப்படும்? என்று தனித்தனி அத்யாயங்களில் விவரித்துள்ளார். இவற்றில் “ஆலாபம்” என்று ஒரு அத்யாயம் உள்ளது. ஆலாபனை என்பது என்ன? எப்படி செய்தல் வேண்டும்? அதன் உட்பிரிவுகள் என்ன? என விவரிப்பது இப்பகுதி. அதாவது ராகங்களை ஆலாபனை செய்யும் விதத்தைக் கூறுவது. இசைச் சொற்களை இவர் விளக்கும்போது உலகிலே மக்கள் இதை என்ன சொல்லி வருகிறார்கள் என்பதையும் இவர் குறிக்கிறார். இது ஒரு ஒப்பாரும் தொண்டு. ஆராச்சியாளருக்கு அமுதம் போன்றது. இவருக்கு முன் இருந்த மரபு இச்சொற்களில் இடம் பெறுகின்றன. அவ்வாறு “ஆயத்தம்” என்று ஒரு சொல் உள்ளது. ராகத்தை ஆலாபனை செய்ய தொடங்குவதற்கு “ஆயத்தம்” என்று சொல்வது உலக வழக்கு. இதற்கு “ஆக்ஷிப்திகை” என்றும் பெயர் என்கிறார் வேங்கடமதி. தத்ர ஆலாபேதி ஸ்மிருதா ஆக்ஷிப்திகா ஏவ லோகே அஸ்மின் ஆயத்தம் இதி கீயதே என்று கூறுகிறார். ஒரு ராகத்தை ஆலாபனைக்கு எடுத்துக் கொண்டதும் “ஆயத்தம்” செய்து படிப்படியாக அதை “விஸ்தாரம்” செய்து ராகத்தின் இயல்பை உணரும்படி பாடுதல் என்பது ராக ஆயத்தம் தொடங்கிய பிறகு படிப்படியாக வளர்க்க வேண்டும். அதற்கு ராகவர்த்தினி என்று பெயர். ராகவர்த்தினிக்கு மக்கள் வழக்கில் “எடுப்பு” என்று பெயர் என்று வேங்கடமதி கூறுகிறார். ஆக்ஷிப்திகா அனந்தரம்து கர்த்தவ்யா ராகவர்த்தினி இயம் ஏவ ஜனை லோகே எடுப்பு இதி அபிதீயதே என்று கூறுகிறார். ஆதலின் “எடுப்பு” என்பது ராக ஆலாபனையின் நூணுக்கமான இன்றியமையாத அரங்கம். எடுப்பு எடுத்தல் என்றால் இசை மரபில் இராக ஆலாபனை செய்தல் என்று பொருள். கர்நாடக இசையின் அடிப்படை நூலான இந்த வேங்கடமகியின் நூலில் “எடுப்பு” என்ற தமிழ்ச் சொல் அப்படியே எடுத்தாளப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. வேங்கடமகி தமிழ்நாட்டிலிருந்த இசை மரபை அப்படியே எடுத்துக்கொண்டு அதை தம் நூலில் வகுத்துள்ளார் என்பது இதனால் தெளிவு பெறுகிறது. சுருங்கச் சொன்னால் தமிழ் இசையின் மறு வடிவே கர்நாடக இசை என்பதற்கு இது ஒரு அடிப்படை சான்று எனலாம். திருஞானசம்பந்தர் “பாடல் எடுத்தல்” என்பதின் நூணுக்கம் இப்பொழுது தெளிவாகிறது. தாம் பாடக்கொண்ட பாடலின் இராகத்தை விரிவாக ஆலாபனை செய்வதையே எடுத்த பாடல் என்பதால் குறிக்கிறார். இதனால் இசை மரபில் “எடுத்தல்", "எடுப்பு” அல்லது “ராக ஆலாபனை” என்பது 1300 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழகத்தில் சிறந்திருந்தது என்று அறிகிறோம். ஞானசம்பந்தர் மதுரைப்பதியில் இவ்வாறு ராக ஆலாபனை செய்வதில் பெண்கள் சிறந்திருந்தார்கள் என “புணையிழையார் அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயில்” என்று கூறுகிறார். இசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் என்று பெயர் பெற்ற ஞானசம்பந்த பெருமான் “எடுத்த பாடல்” என்று கூறுவதற்கு இசை நூணுக்கமான பொருள் கொள்ளல் வேண்டும் என்று அறிந்து இன்புறலாம்.
அத்தியாயம் 31 | Contents | அத்தியாயம் 33 | Home