33. ருக்மணியைப் பாத்தீங்களா?

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 32 | Contents | அத்தியாயம் 34 | Home

அந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்து அவள் நினைவாகவே இருந்தது. அவ்வளவு அழகு அவள். வீட்டுக்குத் திரும்பி வந்தேன். பல நண்பர்களுக்கு போன் செய்தேன். உங்களுக்கு அவளைத் தெரியுமா என்று நண்பர்களைக் கேட்டேன். இரண்டு மூன்று நாட்களாக இதே வேலைதான். என் மனைவி என் பக்கத்தில் வந்து நின்றாள். நன்னாயிருக்கு மாடு மாடா இரண்டு பொண்கள் கல்யாணத்துக்கு இருக்கா. அவளைத் தெரியுமா? இவளைத் தெரியுமா? ன்னு கேக்கறேளே! யாராவது தப்பா நினைச்சுக் போறா பேசாம இருங்கோ என்றாள். அவள் சொன்னது என் காதில் விழுந்தால்தானே. நான் மீண்டும் அவளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். ஏன்? பரத நாட்டியத்தில் சிறந்த அழகும், புகழும் நிறைந்த ஒரு பெண்ணிடம் அவளது படத்தைக் காண்பித்தேன். ஆகா என்ன அழகு என்று அந்தப் பெண்ணே மலைத்துப் போனாள்! ஒரு பெண்ணே கண்டு மயங்குகிற அளவுக்கு அழகு வாய்ந்தவள் அவள் என்றால் கேட்க வேண்டுமா? அவள் யார் என்று கேட்கிறீர்களா? அவள்தான் திருவிடைமருதூர் ருக்குமணி. அவள் பெயரைக் கண்டுபிடிச்சிட்டேன். ஆனால்! அவள் பெயரைக் கண்டுபிடிச்சதே சுவையான செய்திதான். முதன்முதலில் அவளை அந்தக் கோயிலில் தான் பார்த்தேன். அவள் நிக்கற ஸ்டைலும் பாக்கிற பார்வையும் அவள் முகத்தில் இருக்கிற பொலிவும் கண்ணில் இருக்கிற வசீகரமும் அப்படியே நின்னுட்டேன். அந்தக் கோயிலில் இருந்தவங்க பலரைக் கேட்டேன். எல்லாம் இளவட்டங்கள் ஆனால் யாருக்ககுமே சரியாத் தெரியவில்லை. ஒரு வயசானவர் இருந்தார். பாலூன்னு பேரு. அவரிடம் கேட்டேன். அவளைப் பத்தி கிச்சாமிக்குத் தெரியும். அவனைக் கூட்டிண்டு வரச்சொல்லட்டுமா? என்று அவர் சொல்லிக் கொண்டு இருந்த போது கிச்சாமி வந்துட்டார். அவருக்கே 80 வயசிருக்கும். முதலில் அவருக்கு சரியாத் தெரியவில்லை. அந்த பொண்ணுக்கு பக்கத்தல் ஒருவர் தவுல் வாசிச்சிண்டிருந்தார். அவருக்கும் இளம் வயசு. முகத்தில நல்ல தேஜசு. பட்டை பட்டையா வீபுதி. கழுத்தலே நல்ல ஒரு ருத்ராட்சம் நல்ல அழகான குடுமி. தவுல் வாசிக்கற ஜோரர்லே குடுமி பறக்கிறது. வெறும் உடம்புதான். சட்டையெல்லாம் கிடையாது. வாசிக்கிற அவர் கைவிரலே பேசும் அப்படி அழகாக இருந்தது. அவர் புகழ்வாய்ந்த தவுல் வித்வான் அம்மாபேட்டை பக்கிரி என்று கிச்சாமி சொன்னார். அவர் பக்கத்தில் நாதசுரம் வாசிக்கிறவர் அவருக்கு கருகருன்னு சரீரம். நல்ல உருண்ட தலை. சின்னக் குடுமி. அம்மா பேட்டை பக்கிரியை விட கொஞ்சம் வயதில் மூத்தவர். அவர் யாருன்னு கேட்டேன். அவரும் பக்கிரிதான். மன்னார்குடி சின்ன பக்கிரின்னு பேரு. பெரிய நாதசுர வித்வான். அவருக்கு பக்கத்தில் நிக்கிறவர் உள்ளுர் வித்வான் வையாபுரி என்று கிச்சாமி சொன்னார். அவர்களைச்ச சுற்றி ஒரே கூட்டம். பெரும் தவுல் வித்வானும், நாதசுர வித்வானும் வசிக்கறதைக் கேக்கனும்னா குடுத்து வைச்சிருக்கனுமே. எல்லோர் முகத்திலும் ஒரே மகிழ்ச்சி. குறிப்பாக அந்தக் காட்சியில் அம்மாபட்டை பக்கிரி தவுல் வாசிக்கிற பாங்கு இருக்கே அடேயப்பா! ரொம்ப மார்வலஸ்! மறுபடியும் கிச்சாமியை கேட்டேன். அந்தப் பொண்ணு யாரு? பக்கத்தில் இருந்த பாலு சொன்னார் ஏண்டா கிச்சாமி யோசனை பண்ணி பாரேண்டா? அவர்தான் அவ்வளவு ஆசையா கேக்கிறாரே? என்றார். கிச்சாமிக்கு ஏதோ ஞாபகம் வந்தது. “எனக்கு இரண்டு பேரை ஞாபகம் வர்ரது. அம்மாசத்திரம் காணியாச்சி ஒத்தி, வழுவுர் கூத்தாடுவாச்சி மத்தவள்” என்றார் கிச்சாமி. அவா இரண்டு பேரையும் தான் எனக்கு தெரியுமே. நாம் ரெண்டு பேரும் தான் வீட்டுக்கு தெரியாம குதிச்சுக் குதிச்சுண்டு ஓடுவமே அவாளப் பாக்கறத்துக்கு என்றார் பாலு. அவர்கள் இருவர் முகத்தையும் பார்த்தேன். இரண்டு கிழவர்கள் முகத்திலும் நல்ல அசட்டு சிரிப்பு தெரிஞ்சது. ரெண்டு பேருமே சின்ன வயசுலே அந்தப் பெண்கள் ஆட்டத்தில் மயங்கிச் சொக்கிப் போனவங்கன்னு புரிஞ்சுண்டேன். கிச்சாமி சொன்னார், அந்தக் காலத்தில நாங்க சின்னப் பசங்களாயிருந்தபோது அம்மாசத்திரம் காணியாட்சியும், வழுவூர் கூத்தாடுவாச்சியும் ரொம்பப் பேர்போன நாட்டியக்காரிங்க. அவா ரெண்டு பேரும் வர்ராங்கன்னா சுத்து வட்டாரம் 18 ஊரும் ஓடி வந்துடும். பெட்ரோமாக்ஸ் லைட்டில்தான் பார்ப்போம். அவங்க அழகும் ஆட்டமும் அப்படியே அசந்துடுவோம். அதைத்தான் சொல்றான் இந்தப் பாலு. இன்ன ஒருத்தியும் இருந்தா. அவள் பேர் திருவிடைமருதூர் பவானி என்றார். இப்பொழுது அவருக்கு ஞாபகம் வந்துவிட்டது. இந்தப் பொண்ணு பேர் திருவிடைமருதூர் ருக்மணின்னு எங்க பெரியவாள் சொன்னது ஞாபகம் வந்துடுத்து. யாரு சார் இதெல்லாம் நினைக்கிறா. அந்தக் காலத்திலே ஊருக்கு ஊர் இந்த மாதிரி நாட்டியக் கச்சேரி வைப்பா. நாட்டியத்தை அப்போ சின்ன மேளம்னு சொல்வா. நாதசுரக் கச்சேரி இருக்கும். ஊர் ஜனங்களுக்கு எல்லாம் நல்ல சங்கீத ஞானம் இருந்தது. நாட்டியக் கலையை நன்னா அனுபவிக்கத் தெரியும். இப்பெல்லாம் உங்க மெட்ராஸ்லே சபாவிலே ஆடறது தான் நாட்டியம்னு நினைச்சுண்டு இருக்காங்க. நடுவில் அந்தப் பொண்ணு பாடுவா. அப்படியே சொக்கி உக்காந்திருவோம். எங்களுக்கெல்லாம் 50 - 60 வருஷமாச்சு. எல்லாம் மறந்து போச்சுன்னு கிச்சாமி சொல்லி முடிச்சபோது அதுலே எவ்வளவு உண்மை பொதஞ்சு இருக்குன்னு தெரிஞ்சுது. இதுவரையிலும் நான் சொல்லி வந்த திருவிடை மருதூர் ருக்மணி ஒரு நாட்டியப் பெண். அவள் இறந்து போய் 70 வருஷத்திற்கு மேலே இருக்கும். அந்த மாதிரி ஒருத்தி இருந்தாள் என்பதே மறந்து போயிருக்கும். அப்படியிருக்க அவளைக் கோயிலில் எப்படி பார்த்தேன் என்று கேட்கிறீர்களா? அந்தக் கோயிலில் இருக்கும் அழகான ஓவியத்தில் தான் அவளைப் பார்த்தேன். தஞ்சை மாவட்டம் கோணேரி ராஜபுரம் கோயிலில்தான் அந்த ஓவியம் இருக்கிறது. மணவாளநாதராக ஈசுவரர் உதஸவத்தில் உலாவரும் காட்சி. அதிலே திருவிடைமருதூர் ருக்குமணி நாட்டியத்தையும், அம்மாபேட்டை பக்கிரி தவுலும், மன்னார்குடி சின்னப்பக்கிரி நாதசுரம் வாசித்து வரும் காட்சியைத்தான் தீட்டியிருக்கிறான் அந்த ஓவியன். இந்த மாதிரி ஆடலும் பாட்டும் அழகும் நிறைந்த பெண்கள் ஆடல் கலைக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியாளாகத் திகழந்தவர்கள் தமிழ் நாட்டில் ஊர்கள் தோறும் இருந்தார்களே! கோயில்களில் நாட்டியம் புரிந்தார்களே! அப்பொழுது தமிழ் நாடு முழுவதும் அல்லவா நாட்டியக் கலையில் திளைத்திருந்தது. அப்பொழுது இக்கலை என்ன மகோன்னத நிலையில் இருந்தது என்று எண்ணிப் பார்த்தேன். அந்த ருக்மணியின் பெயர்தான் தெரிந்ததே யொழிய அவளைப் பற்றி பிற செய்திகள் கிடைக்கவில்லை. இன்னம் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அம்மாபேட்டை பக்கிரியைப் பற்றி நல்லவேளையாகச் செய்திகள் கிடைத்தன. புதுச்சேரியில் ஆல் இந்தியா ரேடியோவில் இசைத்துறையில் இருக்கும் பி. எம். சுந்தரம் நமது நாதசுர வித்வான்களைப் பற்றி நல்ல ஆராய்ச்சி செய்து வைத்துள்ளார். அம்மாபேட்டை பக்கிரியைப் பற்றி அவரிடம் கிடைத்த செய்திகளைப் பின்னர் காண்போம். எனக்குத் தெரியாத இந்த இசைக்கலைஞர்களையும் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியோடு மேலும் ஒரு மகிழ்ச்சியும் கிட்டியது. இவ்வளவு தத்ரூபமாக வரைந்திருக்கிறானே அந்த ஓவியன் யார் என்று தெரியுமா? என்று கிச்சாமியைக் கேட்டேன். அவர் சொன்னார். இந்த ஓவியத்தை 1916ல் திருவாரூர் வண்ணக்காரன் நடேசன் தீட்டியதாக என் தகப்பனார் சொல்வார். அதன்பிறகு 1935 இல் திருவாடுதுறை வர்ணக்காரர் மாசிலாமணி இந்த ஓவியங்களைத் தீட்டினார். அது எனக்கே நன்றாய் ஞாபகமிருக்கிறது என்றார். இப்பொழுதெல்லாம் ஒரு கோட்டை இழுத்துவிட்டு மாடர்ன் ஆர்ட் என்று பீற்றிக்கொள்கிறார்களே இந்த ஓவியத்தைப் நீங்களே போய்ப் பாருங்கள். கோனேரிராஜபுரம் கோயில் முன்மண்டபம் மேல் விதானத்தில் இந்த ஓவியம் இருக்கிறது. தமிழ் நாட்டில் 75 ஆண்டுகளுக்கும் முன் வாழந்த தலைசிறந்த ஓவியக் கலைஞன் இந்தத் திருவாரூர் வண்ணக்காரன் நடேசன் அன்று உடனடியாகப் புரிந்து கொள்வோம். நம் கலை வரலாற்றில் இடம் பெற வேண்டியவன் அவன். வண்ணக்காரன் நடேசன் இங்கு மட்டுமல்ல இன்னும் பல இடங்களில் ஆற்றியுள்ள கலைத் தொண்டை மேலும் காண்போம். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். உங்கள் ஊர்க் கோயிலில் கூட இது போல் ஏதாவது ஒரு ஓவியம் இருக்கலாம். அது புகையுண்டு மங்கிப் போயிருக்கலாம். யார் கண்டார்கள். நம்மிடையே வாழ்ந்து மறைந்துபோய்த் தெரியாத கலைஞர்களைப் பற்றியும் பெரியோர்களைப் பற்றியும் அந்த ஓவியம் நமக்கு எடுத்துக் கூறலாம். நாம் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
அத்தியாயம் 32 | Contents | அத்தியாயம் 34 | Home