34. அம்மாபேட்டை பக்கிரி தவுல்

[தவம் செய்த தவம்; இரா.நாகசாமி]
அத்தியாயம் 33 | Contents | அத்தியாயம் 35 | Home

அம்மாபேட்டை பக்கிரி பிள்ளை 70 ஆண்டுகளுக்கு முன் புகழ்வாய்ந்த தவுல் வித்வான்களில் ஒருவர். அவருடைய விரல்கள் அபரிமிதமாகப் பேசும் அறங்கை, புறங்கை பேசும் என்று இவரைத் தான் அக்காலத்தில் சொல்லுவார்கள். சுமார் 70 வருஷங்களுக்கு முன்னர்தான் வாழ்ந்தார் என்றாலும் அவருடைய புகைப்படம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் வரலாற்றை எழுதி அவர் படத்தை திறந்து வைக்க வேண்டும் என்றால் கோனேரிராஜபுரத்துக் கோயில் விமானத்தின் மேலே உள்ள அந்த ஓவியம் ஒன்றுதான் இருக்கிறது. ஓவியமாக இருந்தாலும் அதிலிருந்தே அவர் எப்பேர்பட்ட தவுல் வித்வான் என்று தெரிந்து கொள்ளலாம். அவ்வளவு லயித்து வாசிப்பதாக இந்த ஓவியம் இருக்கிறது. அம்மாபேட்டை பக்கிரி என்று பெயர் இருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்தது அம்மாபேட்டைக்கு பக்கத்தில் உள்ள தீபாம்பாள்புரத்தில்தான். 1874ல் குருமூர்த்தி பிள்ளை என்பவருக்கு பிறந்தவர் பக்கிரி. திருக்கருகாவூர் சிவகுருநாத பிள்ளை என்பவரிடம் முதலில் தவுல் கற்றுக் கொண்டார். இந்த சிவகுருநாத பிள்ளை பிற்காலததில் மெலட்டூர் பாகவதாவில் பரதம் நடேசய்யருக்கு மிருதங்கம் வாசித்தார். பின்னர் பத்மாசனிபாய் கதாகால க்ஷேபங்களிலும் வாசித்திருக்கிறார். அவரிடம் தவுல் கற்றுக் கொண்ட பக்கிரி திருப்பாம்புரம் நடராஜ சுந்தரம் பிள்ளை நாதசுரக் குழவில் சேர்ந்து தவுல் வாசித்தார். மிக விரைவில் தவுல் வித்வான்களிலேயே மிகச் சிறந்தவராக உயர்ந்த இவர் பின்னர் மன்னார்குடி சின்னபக்கிரிக்கு தவுல் வாசிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் நல்ல பெயர். தீடீரென்று இருவருக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டது. பல ரசிகர்களின் வறபுறுத்தலின் பேரில் இருவரும் ஒரே குழுவாக வாசித்தனர். இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை கிடையாது. ஒரே ஜாகையில் தங்க மாட்டார்கள். வணக்கம் கூடச் சொல்லிக் கொள்ளமாட்டார்கள். இவர் மன்னார்குடி கோபால முட்டுக்காரரின் மகள் செங்கம்மாளை 1897ல் மணந்து கொண்டார். இவருக்கு மூன்று பெண்கள். முதல் பெண்ணுக்கு ருக்குமணி என்று பெயர். திருவிடைமருதூர் ருக்குமணியை ஓவியத்தில் பார்த்தோமல்லவா (தினமணி 2.1.88) இருவரும் அந்த ஒவியத்தில் இருப்பதைப் பார்த்தால் ஒருகால் அந்தருக்மணியின் ஞாபகமாகத் தன் பெண்ணுக்கும் ருக்மணி என்று பெயர் வைத்தாரோ என எண்ணத் தோன்றுகிறது. பின்னர் அம்மாபேட்டை பக்கிரி நாதசுர வித்வான் திருவிடைமருதூர் வீராசுவாமிப் பிள்ளை கச்சேரிக்கு வாசித்தார். ஒரு சமயம் அவருடன் சங்கரநாராயணர் கோயிலுக்குக் கச்சேரி வாசிக்கப் போனார். அங்கே வைசூரி கண்டது. உடனே தன் ஊருக்குத் திரும்பினார். மறுநாளே சிவபதம் அடைந்துவிட்டார். இது நடந்தது 1920ல். பக்கிரி இறந்து போய் ஏறக்குறைய 70 வருடம் ஆனாலும் தஞ்சாவூர் கிராமப்புறங்களில் இன்னும் அவரது தவுல் ஒலி காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று கேட்டவர் சொல்கிறார்கள். ஆம் நாதசுர இசையை நல்ல சூழ்நிலையில் ஒருமுறை கேட்டாலே போதுமே! கிராமப்புறங்களிலே தென்னை மரங்களும் வாழைத்தோப்புகளும் நிறைந்த வீதிகளில் அமைதியான நேரத்தில் நல்ல நாதசுரக் கச்சேரியையும், தவுல் வாசிப்பையும் கேட்டால் அதை மறக்க முடியுமா? வாழ்நாள் முழுவதுமல்லவா நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். இப்பொழுது நல்ல வித்வான்கள் இருந்தாலும் நம் கிராமங்களில் இதை எங்கே அமைதியாகக் கேட்க முடிகிறது. பயங்கரமாக ஹொய் ஹொய் என்று சொல்லும் புரியாமல் ராகமும் இல்லாமல் பாட்டு என்ற பெயரிலே ரேடியோ அலறுகிறது. காலையில் இந்தப் பண் வாசிக்க வேண்டும், மாலையில் இந்தப் பண் வாசித்தால் மனதுக்கு இன்பம் அளிக்கும் என்று சங்க காலத்திலிருந்து நேற்றுவரை போற்றி வந்த தமிழ்நாடுதானே இது. நீங்களே வேண்டுமானால் நம் நாதசுர கச்சேரியை நல்ல அமைதியான சூழ்நிலையில் கேட்டுப்பாருங்களேன். அதன் இன்பமே தனி. அம்மாபேட்டை பக்கிரி அன்றைக்கு வாசித்த ஒலிதான் தென்னங்கீற்றுகளின் இடையே வீசும் காற்று அலைகளில் இன்றம் மிதந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் வரலாறுதான் வரலாறா? நேற்று நம்மிடையே வாழ்ந்து அற்புதக் கலைத் தொண்டாற்றிய அம்மாபேட்டை பக்கிரி போன்றவரிகளின் வரலாறும் நம் வரலாறுதானே. ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே. நாதசுரம் என்ற இசைக்கருவி இருக்கிறதே. அந்த நீண்ட குழல் வாத்தியம் எந்தக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது? அதன் பெயர் நாதசுரமா, நாகசுரமா என்று சர்ச்சை வேறு இருக்கிறது. சோழர் காலச்சிற்பங்களில் இந்த இசைக்கருவி காணப்படவில்லை. எத்தனையோ வகையான இசைக்கருவிகளை சிற்பங்களில் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். ஆனால் தமிழ்நாட்டுக்கே தனிப்பெருமை தருவதும், கல்யாணம் திருவிழா போன்ற அனைத்திற்கும் முதன்மையானதும், இன்றியமையாததுமான இந்த நாதசுரம் மட்டும் காணப்படவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சதிர் கச்சேரிகளிலும், நாட்டியங்களுக்கும், தெருக்கூத்துக்களிலும் குறுகிய குழல் ஒன்று பயன்பட்டது. அதை முகவீணை என்று கூறுகிறார்கள். அந்தக் குறுங்குழல் சிற்பங்களில் காணப்படுகிறது. ஆனால் நாதசுரம் மட்டும் காணப்படவில்லை. அப்படி என்றால் இந்த வாத்தியமே ஒரு 200-300 ஆண்டுகளுக்கும் உட்பட்டுத்தான் தோன்றியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. அது ஒரு சிறந்த ஆராய்ச்சியாக அமையுமாதலால் அதை இங்கு விடுவோம். அம்மாபேட்டை பக்கிரியின் உருவத்தைத் திருவாரூர் வண்ணக்காரன் நடேசன் கோனேரிராஜபுரத்தில் தத்ரூபமாக வரைந்திருக்கிறான் என்று ஏற்கனவே பார்த்தோம். அந்தத் திறன் மிகுந்த திருவாரூர் கலைஞனின் திறமையை இன்னும் சிறப்பாக அறிந்து கொள்ள வேண்டும். போற்ற வேண்டும் என்று திருவாரூக்குப் போனேன்.அங்கு அவன் தீட்டிய ஓவியத்தைப் தேடினேன். ஏமாற்றம் கிட்டியது. அவன் தீட்டிய ஓவியத்தின் மீது மீண்டும் வண்ணம் பூசிப் பிற்காலத்தில் மாற்றிவிட்டார்கள். ஆயினும் அவன் ஓவியம் திருச்சிராப்பள்ளியில் தாயுமான சுவாமி கோயிலிலும் இருக்கிறது என்றார்கள். அங்கு சென்றேன். அங்குக் கோயில் குருக்கள் கொஞ்சம் வயதானவராக இருந்தார். அவரைக் கேட்டேன். அவர் பதில் சொன்னார். 1912 வாக்கிலே இங்கே ஓவியம் தீட்டினான்னு சொல்லக் கேட்டிருக்கிறேன். சமீபத்தில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது அதன் மேலேயே மீண்டும் ஓவியம் தீட்டியிருக்கா என்றார். பகீர் என்றது. கோயிலைச் சுற்றிப் பார்த்தேன். வண்ணக்காரன் நடேசன் எழுதிய ஓவியம் அங்கே இப்போது இல்லை. யாரோ ஒரு அசட்டுச் சித்திரக்காரன் ஓவியம் என்ற பெயரிலே பூசியிருக்கிற காடி வண்ணங்கள் என்னைப் பார்த்துச் சிரித்த மாதிரி இருந்தது. எப்பேர்ப்பட்ட கலைஞனது படைப்பை இன்றைய சமுதாயம் அழித்துவிட்டது என்று வருத்தத்தோடு திரும்பினேன். இனி இருக்கின்ற ஓவியங்களையாவது நவீன விஞ்ஞான முறையில் காப்பற்றவேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் ஏற்பட இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
அத்தியாயம் 33 | Contents | அத்தியாயம் 35 | Home