அந்த கிராமத்து தெருவிலே நடந்து போய்க் கொண்டிருந்தேன். என்னுடன் வந்த ஒரு எழுட்டுப் பேராவது இருக்கும். ஒரு சின்னப்பையன் சிறிது தூரம் எங்களுடன் வந்து கொண்டிருந்தான். என் முன்னே வந்து மாட்டைப் பார்க்வரீங்களா என்று கேட்டான். எனக்கு அவன் கூட போக ஆசை. உடன் வந்தவர் அவர் மாட்டைப் பார்க்க வரல்லபோ! என்றார். நான் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. பையனோடு நடக்கத் தொடங்கினேன். உடன் கூட்டமும் என்னைப் பின்பற்றியது. ஒரு சந்து வழியாகச் சென்றான். அந்த சந்தின் கோடியில் ஒரு கீற்றுக் கொட்டகை. அங்குதான் அந்த பையன் எங்களை அழைத்துச் சென்றான். கொட்டகைக்குள் காட்டி இதோ மாடு இங்கிருந்து பாருங்க என்றான்.
35.1. கலைச்செல்வம்
அந்த கொட்டகைக்குள் இரண்டு சிவலிங்கங்கள் இருந்தன. ஆவுடையார் என்ற பீடம் இல்லை. அவற்றின் அருகில்தான் அந்த பையன் கூறிய மாடு இருந்தது. நான் அதைப் பார்த்து அசந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். அங்கு விளக்கு எற்றுவதால் ஏறியிருந்த கரி எண்ணை என் ஆடையில் ஒட்டிக் கொள்வதைக் கூட நான் கவனிக்கவில்லை. அந்த மாட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். உண்மையான மாடா அது? இல்லை கல்லிலே செதுக்கப்படிடருக்கும் சிலை. அதுவும் முழுமையாக இல்லை. ஆனால் அதன் வடிவில்தான் என்ன ஒரு உயிர்த்துடிப்பு, கண்களிலே ஒளி, அதன் மூக்கு, வாய், உதடுகள், கொம்பு ஒவ்வொன்றாக பார்த்தேன். அதன் அழகை கலைவண்ணத்தைச் சொல்லால் எழுதத் தெரியவில்லை. அதை வடித்த சிற்பி எவ்வளவு கலை ஆற்றல் மிகுந்தவன். இந்த சிலை முழுமையாக இருந்த போது எப்படி திகழ்ந்திருக்கும். அந்த வியப்பின் எல்லையில் இனம் தெரியாத வருத்தமும் மனத்தை உலுக்கியது. நந்தி சிலை தலைமட்டும் எஞ்சியிருக்கிறது.
மிக உன்னதமாக முழுமையாக திகழ்ந்த ஒரு கலைச் செல்வமல்லவா சிதைந்து கிடக்கிறது? இது ஏன் சிதைந்து கிடக்கிறது? இது ஏன் சிதைய வேண்டும்? எண்ணங்கள் இவ்வாறு அலைந்து கொண்டிருக்க. போட்டோ பிடிக்க வந்திருக்காங்க என்று ஒரு பெண் குரல் கேட்டதும்தான் போட்டோ எடுக்க மறந்து விட்டோமே என்று படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம். அந்த சிலையின் எழிலும், சிதைவும் என் மனதில் நிலைத்து நின்றுவிட்டன. மாட்டைப் பார்க வரீங்களா என்று அந்த பையன் சொன்னதில்தான் எவ்வளவு அற்தம் நிறம்பி நின்றது? வரலாறு கலை என்று சொல்பவர்களுக்கு அது சிலையாகத்தான் தோன்றும்! அந்த கிராமத்து பச்சை உள்ளம் கொண்ட பையனுக்கு அது உயிர்த்துடிப்புள்ளதாகத் தான் காணப்பட்டது. அதனால்தான் அவ்வாறு அழைத்திருக்கிறான். அந்தச் சொல்லே அல்லவா அதன் உண்மைப் பிம்பத்தை எடுத்துக் காட்டுகிறது. சிற்பங்களின் உண்மையான எழிலை அனுபவிக்க வேண்டுமென்றால் அந்த பையனைப் போல பச்சை உள்ளம் கொண்டவர்களாக இருந்தால் சிறப்பாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டே நடந்தேன்.
35.2. பல்வர்கால......
வைரங்காச்சி தோப்புக்கு போகலாமா? என்று ஒரு குரல் கேட்டது. இந்த ஊரில் எங்கு அழைத்தாலும் அங்கு சென்று பார்காமல் திரும்பக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. வைரங்காச்சி தோப்புக்கு சென்றோம். அங்கு வைரம் கிடைத்ததோ என்று எண்ணுகிறீர்களா? இல்லை அதைக்காட்டிலும் சிறந்த வேலைப்பாடமைந்த அம்மன் சிற்பம் ஒன்று அமர்ந்த நிலையில் இருந்தது. பல்லவர்காலச் சிற்பம். நான்கு கரங்கள் பெருமிதம் நிறைந்த தோற்றம். வாகீஸ்வரியாக அம்பாள் ஆனந்தம் மேலிட அமர்ந்திருந்தாள். அந்தச் சிற்பத்தின் வழிபாடே தனித்தன்மை வாய்ந்தது. அதைப் பற்றி ஒரு அத்தியாயமே எழுதலாம். அதன் அருகில் மேலும் இரண்டு சிலைகள் இருந்தன. இரண்டின் தலையும் சிதைந்து போய்விட்டன. இருப்பினும் அதே காலத்தில் செய்யப்பட்டவை. எழில் நிறைந்தவை. அதனருகில் பத்து லிங்கங்கள் கிடைத்தன. எங்களை அழைத்து வந்தவர் பக்கத்து வயலுக்கு அழைத்துச் சென்றார். செல்லும் போது வழியில் சொல்லிக் கொண்டே வந்தார் இந்தப் பகுதியில் நாங்கள் உழும்போது பல லிங்கங்கள் வெளிக்கிளம்புகின்றன. என்றும் ஒன்று போலவே உள்ளன. இங்கு பலர் அதை வயலுக்கு எல்லைக் கல்லாக நட்டிருக்கிறார்கள் என்றார். அவர் கூறியபடி அங்கு பல வயல்களில் சிவபெருமான் லிங்க வடிவில் எல்லைக் கல்லாகச் சமைந்து நின்ற காட்சியைக் காண முடிந்தது.
ஊருக்குள் பள்ளர்குளம் என்று ஒரு குளத்துக்கு அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் சிவலிங்கத்தின் பெரிய பீடம் இரண்டு பகுதிகளாக கிடந்தது. குளம் வறண்டு கிடந்தது. குளத்துக்குள் இரண்டு சிற்பங்கள் கிடந்தன. இரண்டும் சிதைந்து கிடந்தன. பல்லவர் காலத்தவை. தாமரை மலரில் அமர்ந்த சிவபெருமானின் சிற்பங்கள் ஒன்றுக்கு தலைய இல்லை. மற்றதற்கு இடுப்புவரை இல்லை. இருந்தாலும் சிற்ப அமைதியும் கலையமைப்பும் முன்னர் பார்த்தோமே மாடு அதேபோலத் திகழ்ந்தன. ஒரு பெருமூச்சோடு ஊருக்குள் நுழைந்தோம். சிறிய கோயில்தான். உள்ளே நுழைந்ததும் அப்படியே நின்றுவிட்டோம். ஒருபுரம் ஒன்று போலவே செதுக்கப்பட்ட சிவலிங்கங்கள் முன்னுறுக்குமேல் வரிசையாக திகழ்ந்தன. கோயிலில் நின்ற நிலையில் அழகே வடிவான துர்கை, சிவபெருமான், கணபதி சிற்பங்கள் இருந்தன.
35.3. கற்கோயில்
பக்கத்தில் பிள்ளையார் கோயில் இருக்கிறது. அங்கும் இதுபோல் 40 லிங்கங்கள் இருக்கின்றன என்றார்கள். தலை சுற்றியது. சிறிது நேரம் பேசவேயில்லை. திரும்பத் தொடங்கினோம். வீதி வந்ததும் அங்கு ஒரு வாய்க்கால். அதன்மேல் பாலம் கட்டியிருக்கிறார்கள். அந்த கட்டிடம் முழுவதும் ஒரு பெரிய கோயிலை அலங்கரித்த கருங்கற்களாலான கட்டிடப்பகுதிகள். இந்த சிறு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய கோயில் இருந்திருக்கிறது. அந்த கோயிலில்தான் நாங்கள் பார்த்த அனைத்துச் சிற்பங்களும் வழிபாட்டில் இருந்திருக்கின்றன. அக்கோயிலில் 1008 லிங்கங்கள் வழிபாட்டில் இருந்திருக்கின்றன போலும். ஆயிரத்தளி என்று இதைத்தான் சொன்னார்களோ?
இந்த கோயில் சிற்ப அமைதியைக் கொண்டு பார்க்கும் போது சைவ மரபில் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோயிலாக இது திகழ்ந்திருக்க வேண்டும். அந்தக் கோயில் ஏனோ சிதைந்து சிற்பங்கள் அங்குமிங்குமாக கிடக்கின்றனவே. அந்த கோயிலில் இருந்த நந்தியின் சிலைதான் அந்த மாடு. அந்த மாட்டின் சிதைந்த தலை மட்டு எஞ்சியது போல அவ்வூர்க் கோயிலும் சிதைந்த சிற்பங்களும் சிதைந்து கிடந்த போதும் எவ்வளவு பெரிய சிதைந்த வரலாற்றைக் கூறத்துடிக்கின்றன என்று எண்ணிக் கொண்டே திரும்பினேன்.
அடடே! ஏதோ நினைப்பில் அது எந்த ஊர் என்று நினைவில்லையே! தஞ்சாவூருக்கு அருகில் கண்டியூர் பக்கத்தில் உள்ளது. வீரசிங்கம் பேட்டை என்ற ஊர். அங்குதான் இந்த பெருங்கோயில் இருந்திருக்கிறது. உடன் வந்த குடவாயில் பாலு சார் இந்த ஊரில் சோழர் காலத்தில் ஓர் அரண்மனையே இருந்திருக்கிறது என்று கல்வெட்டிலிருந்து தெரிகிறது என்றார். தமிழில் மாடு என்றால் செல்வம் என்று பொருள் உண்டு. மாட்டைப் பார்க்க வாரீங்களா? என்று அந்தப் பையன் குறினானே அது வரலாற்றுச் செல்வத்தையும் கலைச் செல்வத்தையும் உண்மையிலேயே உயிருள்ள மாடு போல இருந்ததே அந்தச் சிலைச் செல்வத்தையும் ஒருங்கே பார்க்கத்தான் கூப்பிட்டான் போலத் தோன்றியது. ஆம்! நல்ல மாடுகளைப் பார்க்க வேண்டுமானால் நம் கிராமங்களுக்குச் சென்றால்தானே முடியும்.